- எல்.முருகராஜ்
அருண்
சென்னையைச் சேர்ந்தவர்
உலகின் மிகச்சிறந்த மென்பொருள் நிறுவனத்தில் கைநிறைய சம்பளம் வாங்கியவர்.
இவரது எட்டு ஆண்டு பணியை மெச்சி இவரை மாதம் இரண்டு லட்சம் ரூபாய் சம்பளத்தில் அமெரிக்காவிற்கு மாற்றல் கிடைத்தது. மனைவியோடு போய் செட்டிலாகிவிடுவார் என்று அனைவரும் நினைத்துக் கொண்டு இருக்கும்போது, அந்த வேலை வேண்டாம் என்று விட்டுவிட்டு 'விதை' இயற்கை அங்காடியை தொடங்கியவர் இவர்.
அனைவரும் இவரை ஏன் இப்படி என்று பார்த்தபோது, அப்படித்தான், இது என் ஐந்தாண்டு கால கனவு என்று பதில் தந்திருக்கிறார்.
மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரை பெரிதும் நேசித்த அருண் அவர் கூற்றின்படி ஆரோக்கியமான சமுதாயம் அமைய மேற்கொண்ட முதல்படியே தமது விதை இயற்கை அங்காடி என்கிறார்.
இவரது விதை அங்காடியில் தினை, சாமை, வரகு, குதிரைவாலி போன்ற சிறு தானியங்களும் அவற்றால் செய்யப்பட்ட மாவும் கிடைக்கிறது. இந்த மாவில் இட்லி, தோசை, பணியாரம் உள்ளிட்ட பலகாரங்கள் செய்து சாப்பிடலாம். இது போக சோளமாவு, பசுநெய், தேன், நல்ல எண்ணெய் போன்றவைகளும் மற்றும் 'ஆர்கானிக்' என்று இன்று பெரிதாக பேசப்படும் இயற்கை உரங்களால் விளைவிக்கப்பட்ட அரிசி போன்ற பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
பொதுவாக இது போன்ற இயற்கை அங்காடிகள் ஒரு நாட்டு மருந்துக்கடை போல முதியோர் மட்டுமே 'முடியாமல்' வந்து போகும் இடம் போல இருக்கும், ஆனால் விதை இயற்கை அங்காடி அப்படி இல்லாமல் சிறுவயது முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் வந்து வாங்கிப்போகும் படியான நவீனத்துடன் அமைந்துள்ளது. அது மட்டுமல்ல இங்குள்ள பொருட்களும் எல்லா வயதினரும் பயன்படுத்தும்படியான வடிவத்தில் காணப்படுகின்றது. உண்மையை சொல்லப் போனால் இந்த அங்காடியில் பார்த்தபிறகுதான் இயற்கை விவசாயத்தில் இத்தனை பொருட்கள் இருக்கிறது என்பதையே அறிந்து கொள்ளமுடிகிறது.
இந்த பொருட்களுக்கு கொஞ்சம் விலை கூடுதல் என்றாலும் சத்தான உணவை சாப்பிடும் திருப்தி நிச்சயம் இருக்கும், மேலும் எதிர்காலத்தில் மருத்துவர்களுக்கு தரப்போகும் பெரும் தொகை இப்போதிருந்தே மிச்சப்படும்.
நூறு சதவீதம் தரமான இயற்கை வழி விளைந்த பொருள்தானா என்று சோதித்து பார்த்த பிறகுதான் எந்த பொருளையும் அங்காடிக்குள் அனுமதிக்கிறார், இதற்காக தென்னிந்தியா முழுவதுமே இவரது தேடல் தொடர்கிறது.
நூறு சதவீதம் தரமான இயற்கை வழி விளைந்த பொருள்தானா என்று சோதித்து பார்த்த பிறகுதான் எந்த பொருளையும் அங்காடிக்குள் அனுமதிக்கிறார், இதற்காக தென்னிந்தியா முழுவதுமே இவரது தேடல் தொடர்கிறது.
தமிழ் ஸ்டூடியோ, படிமை, பேசாமொழி பதிப்பகம் என்று இவரது பன்முகப் பயணத்தில் விதை இயற்கை அங்காடி என்பது நனவான ஒரு இனிய இயற்கை கனவு என்பதால் இதில் எந்த தொய்வும் வந்துவிடக்கூடாது என்பதற்காக தினேஷ் என்பவரை இந்த இயற்கை அங்காடியின் பொறுப்பாளராக நியமித்துள்ளார்.
வாழ்க்கைக்கு பொருள் ஒரு ஆதாரமே தவிர பொருள் மட்டுமே ஆதாரம் இல்லை. மழையில் நனையாமல் ஒதுங்குவது என்பது அனைவருக்கும் இயல்பானதுதான் ஆனால் மழைதரும் அனுபவம், அதுதரும் பேரானந்தம், அதில் நனைவதனால் ஏற்படும் சுகம், அந்த துளிகள் தரும் பரவச அனுபவம் என்பது மகத்தானது, ஆகவே மழையில் நனையாவிட்டாலும் நனைய முன் வருபவர்களை ஆதரிக்கவேண்டும். அச்சடித்த காகிதங்களின் (பணத்தின்) பின்னால் பயணித்தால் முடிவில் ஒரு சராசரி உயிரினமாக மட்டுமே எஞ்சி நிற்கமுடியும் ஆனால் வாழ்க்கையின் அனுபவத்தை, அதுதரும் பரவசத்தை, இனிய பயணத்தை அந்த பயணம் தரும் பரவச தருணங்களை இழக்கவேண்டி நேரிடும் என்பது இவரது கருத்து.
இவரது பேச்சிலும் மூச்சிலும் இருக்கும் தரமும் ஆரோக்கியமும் சென்னை அடையாறில் உள்ள இவரது விதை அங்காடி முழுவதும் நிரம்பியிருக்கிறது.
விதை இயற்கை அங்காடி பற்றி மேலும் விவரத்திற்கு தொடர்பு கொள்ள: 9840698236.
No comments:
Post a Comment