Friday, 17 January 2014

அவரே மக்கள் திலகம் எம்ஜிஆர்....

- எல்.முருகராஜ்


ஜனவரி 17

 மக்கள் திலகம் எம்ஜிஆரின் பிறந்த நாள்.

இது தொடர்பாக முகநூல் பக்கத்தில் அவரைப்பற்றிய அபூர்வ படங்கள் உலாவந்து கொண்டிருக்கிறது.

1982ம் ஆண்டு மதுரை சர்க்யூட் ஹவுஸ்க்கு முதல்வராக வந்திருந்த எம்ஜிஆரை பார்க்க திரண்டு நின்ற கூட்டத்தை எம்ஜிஆர் நின்று கொண்டும், நாற்காலியில் உட்கார்ந்து கொண்டும் பார்ப்பது போன்ற படமும் அதில் ஒன்று. உண்மையில் அது தினமலர் பேப்பர் கட்டிங்.அதை இந்த அளவு பாதுகாத்து வைத்திருந்தவரை இந்த நேரத்தில் பாராட்டத்தான் வேண்டும்.

நான் எடுத்த அந்த படம் எங்கெங்கோ பயணித்து விட்டு கடைசியில் என் பார்வைக்கே வந்த  அந்த படத்தின் பின்னணி சுவராசியமானதாகும். காரணம் அன்று நடந்த சம்பவம் அப்படியே பசுமரத்தாணி போல பதிந்து போயிருப்பதுதான்.

"வழக்கமாக வருட பிறப்பு அன்று எம்ஜிஆர் சென்னையில்தான் இருப்பார் இப்போது மதுரையில் தங்கியுள்ளார், அவரை பார்க்க நிறைய பிரமுகர்கள் வருவார்கள். நம்மை உள்ளே விட மாட்டார்கள் அரசாங்க போட்டோகிராபரே எல்லா படமும் எடுத்து கொடுத்து விடுவார் எதற்கும் நீங்கள் அங்கே போய்விடுங்கள்" என்று என்னை அனுப்பியிருந்தனர்.

நான் போனபோது சர்க்யூட் ஹவுஸ் என்ற அந்த விருந்தினர் மாளிகை முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதிலும் சுற்றுப்பக்கம் உள்ள ஏழை, எளிய கிராம பெண்கள் திரளாக அதிகாலை முதலே வந்து காத்திருந்தனர். யாருக்கும் அனுமதியில்லை. எம்ஜிஆர் என்ன நினைப்பார் என்ன செய்வார் என்பது தெரியாத நிலையில் மக்களோடு மக்களாக நானும் நின்று கொண்டிருந்தேன்.

அறை எண் ஒன்றில் அவர் தங்கியிருந்தார், நேரமோ காலை 9 மணியிருக்கும். அறை வாசலில் அமைச்சர்கள், நகர பிரமுகர்கள், அதிகாரிகள் என்று வரிசையாக கோயில் பிரசாதம், மாலைகள், பூங்கொத்துகளுடன் நின்று கொண்டிருந்தனர். அந்த நீண்டு கிடந்த வரிசையைப் பார்த்தபோது இவர்கள் எல்லாம் ஒவ்வொருவராக உள்ளே போய் சாதாரணமாக பார்த்து விட்டு வந்தாலே மதியம் ஆகிவிடும் பாவம் இந்த கிராம மக்கள், இவர்கள் வெயிலில் காத்து கிடக்கிறார்கள், இப்படி இவர்கள் காத்து கிடப்பது பற்றிய தகவலாவது எம்ஜிஆருக்கு சொல்லப்பட்டு இருக்குமா? என்ற எண்ணத்துடன் நின்று கொண்டிருந்த எனக்கு அடுத்த சில நிமிடங்களில் ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது.

எம்ஜிஆரின் அறைக்கதவு திறந்தது. பிரமுகர்கள் தங்களை சரி செய்து கொண்டு உள்ளே போக தயரானபோது அவர்களை தடுத்த பாதுகாவலர் சிஎம் முதல்ல மக்களை பார்க்க வருகிறார் என்று சொல்லிவிட்டார்.

அவர் சொன்ன அடுத்த வினாடி சிரித்த முகத்துடன் கைகூப்பி வணங்கியபடி சவுக்கு கட்டை தடுப்பில் தேக்கி வைக்கப்பட்டிருந்த மக்களை நோக்கி வந்துவிட்டார். அப்போதுதான் எம்ஜிஆரை அவ்வளவு நெருக்கத்தில் நானும் பார்க்கிறேன்.

வந்தவர் சவுக்கு கட்டையின் மீது கையை வைத்துக் கொண்டு ஒவ்வொரு முகமாக பார்த்து சிரித்தபடி அவர்களது வாழ்த்தை பெற்றுக்கொண்டிருந்தார். இது எதிர்பாராத நிகழ்வு என்பதால் அரசு புகைப்படக்கலைஞர் உள்பட யாரும் அங்கு வரவில்லை.

வந்தவர் வழக்கமான தலைவர்கள் போல கையை காட்டிவிட்டு உள்ளே போய்விடுவார் என்று எண்ணினால் அப்படியே நின்றுவிட்டார். அங்கு இருந்த பல பெண்கள் சந்தோஷத்தில் அவரை நோக்கி கையை நீட்ட அவரும் கைகொடுத்து அவரை மகிழ்வித்தார். பிறகு என்ன நினைத்தாரோ உள்ளே இருந்த ஒரு நாற்காலியை கொண்டுவரச் செய்து அதில் உட்கார்ந்து கொண்டார்.

சில வினாடியாவது பார்க்க முடியுமா என்று எண்ணிய தங்கள் தலைவரை, இவ்வளவு நேரம் பார்க்க முடிந்ததே என எண்ணி பல பெண்கள் கண்ணீர்விட்டே அழுதேவிட்டனர். சவுக்கு கட்டையின் வழியாக தனது கரங்களை நீட்டி அவர்களின் கண்ணீர் துடைத்து தனது அன்பை வெளிப்படுத்தினார். அவர்கள் கூறிய குறைகளையும் கேட்டார், கொடுத்த மனுக்களையும் வாங்கிக் கொண்டார். இந்த காட்சிகள் அனைத்தையும் கறுப்பு, வெள்ளையில் (ஆர்வோ பிலிம்) அனைத்தையும் பதிவு செய்தேன். அதன் அபூர்வம் இப்போதுதான் தெரிகிறது.

இப்படியே அன்று வந்திருந்த பெரும்பாலான மக்கள் அவரை நெருங்கி வந்து பார்த்துவிட்டு சந்தோஷத்துடன் சென்றனர். அவர்களுக்கு எல்லாம் அது மறக்கமுடியாத புத்தாண்டாகும்.

இப்படி நீண்ட நேரம் மக்களுடன் இருந்துவிட்டு திரும்ப அறைக்கு சென்றார். அவர் ஏன் மக்கள் திலகம் என்று கொண்டாடப்படுகிறார் என்பதற்காக சரியான விடையும் அன்று கிடைத்தது.

No comments:

Post a Comment