Friday 12 September 2014

மேக்ரோ போட்டோ எடுக்க போறீங்களா?- 
டாக்டர் மயில்வாகனன் சொல்வதை கேளுங்கள்.

–எல்.முருகராஜ்

டாக்டர் மயில்வாகனன்.

சேலத்தை சேர்ந்தவர், பல் சீரமைப்பு நிபுணர்.

பல் மருத்துவம் இவரது தொழில் என்றால் புகைப்படம் எடுப்பது இவரது பொழுது போக்கு.

35 ஆண்டுகளாக புகைப்படம் எடுத்துவரும் இவரின் விருப்பம் மேக்ரோ போட்டோகிராபியாகும். மேக்ரோ போட்டோகிராபி என்பது சிறிய உயிரினங்களை மிக அருகில் சென்று படம் பிடிப்பதாகும்.

இவர் எடுத்த படங்களை வைத்து சமீபத்தில் சென்னையில் உள்ள மெட்ரோஸ் போட்டோகிராபி கிளப்பில் பேசினார், மேக்ரோ போட்டோ எடுக்க விருப்பம் உள்ளவர்களுக்கு தேவையான பல உபயோகமான தகவல்களை அப்போது குறிப்பிட்டார். அதன் சுருக்கமாவது:

முன்பு இருந்ததைவிட இப்போது புகைப்படம் எடுப்பதில் இளைஞர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். என்ன விலை என்றாலும் பராவாயில்லை என்று நவீன கேமிரா மற்றும் லென்ஸ்களை வாங்கிவிடுகின்றனர். ஆனால் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயத்தை விட்டுவிடுகின்றனர்.

காட்டுக்குள் இயற்கையாக இருக்கும் எந்த உயிரினமாக இருந்தாலும் அதனை கொஞ்சம் கூட தொந்திரவு செய்யாமல் அதன் இருப்பில், இயல்பில் படமெடுக்கவேண்டும்.

ஆனால் அப்படி செய்யாமல் பூவை அழகாக எடுப்பதற்காக சுற்றியுள்ள இலைகளை எல்லாம் கிள்ளி எறியக்கூடாது. ஒருவர் ஒரு விஷயத்தை எடுத்தால் ஒட்டு மொத்தமாக எல்லோரும் அதே போல எடுப்பதற்காக குவியும் போதும் தள்ளு முள்ளுவில் ஈடுபடும் போதும் அங்கு இருக்கும் இயற்கை பாழாகிவிடுகிறது, பசுமை துவம்சமாகிவிடுகிறது.

இதே போல உயிரினங்களை அநாவசியமாக கையில் தொடுவது, கூட்டுக்குள் இருக்கும் முட்டைகளை மாற்றுவது, உயிரினங்களின் கண்களுக்கு பக்கத்தில் பிளாஷ் லைட் அடிப்பது, சிறிய ஊயிரினங்களின் மீது மயக்கமருந்து அடித்து பின் அதனை மயக்கநிலையில் எடுப்பது உள்ளிட்ட எந்த தவறுகளையும் செய்துவிடக்கூடாது.

சின்னஞ்சிறிய உயிரினங்களை படம் எடுப்பது என்று முடிவு செய்தபிறகு அந்த உயிரினங்கள் பற்றி நன்றாக தெரிந்துகொண்டு படம் எடுக்க செல்லுங்கள். நிறைய பொறுமையை கற்றுக் கொள்ளுங்கள், இது தொடர்பான கருத்தரங்குகள் மற்றும் நேர்முக பயிற்சிக்கு சில முறையாவது சென்றபிறகு தனியாக மேக்ரோ போட்டோகிராபி பண்ணலாம்.

இப்படி கூறிய டாக்டர் மயில்வாகனன் இதுவரை ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு மேக்ரோ போட்டோகிராபி குறித்து வகுப்புகள் எடுத்துள்ளார் இப்போதும் எடுத்துவருகிறார்.

இவருக்கான தொடர்பு எண்: 9443234990.


நானே எனக்கு வழியானேன்...
ரமேஷ் குமார் வழிகாட்டுகிறார்
–எல்.முருகராஜ்.

பிறந்தது முதலே நடக்கமுடியாத ஒருவர், மற்றவர் சிரமமின்றி நடப்பதற்கான காலணி கடை வைத்து நியாயமான விலையில் விற்பது மட்டுமல்லாமல் யாரையும் சார்ந்திராமல் , யாருக்கும்பாராமாக இல்லாமல் வாழ்ந்து வருகிறார்.

கோவையைச் சேர்ந்த அவர் பெயர் ரமேஷ் குமார், வயது 34.வெங்கடாசலம், பழனியம்மாள் தம்பதியினரின் பிறந்த செல்ல மகன்.

பிறவியிலேயே இவருக்கு காலில் குறைபாடு உண்டு. ஆனால் அந்த குறை தெரியாதபடி பாசம் காட்டி வளர்த்தனர்.

படிக்கப்போன இடத்தில் கேலி கிண்டல் எழவே பள்ளிக்கூடம் போவதை விட்டு விட்டார், பரவாயில்லை என்று குடும்பத்தில் உள்ளவர்களே பாடம் எடுத்தனர். இதனால் தமிழ், கணிதம் ஆகியவை நன்றாக வரும்.

மகிழ்ச்சியாக சென்று கொண்டு இருந்த ரமேஷின் வாழ்க்கையில் முதல் இடி இறங்கியது, இவரது தாயும், தந்தையும் அடுத்தடுத்து இறந்த போதுதான்.

தாயும், தந்தையும் திடீரென இறந்துவிட, முதல் முறையாக தனிமைப்படுத்தப்பட்டார், முதல் முறையாக தவித்துப்போனார், முதல் முறையாக எதிர்காலத்தை எண்ணி மிரண்டு போனார்.
கலங்கி நின்ற இவரை மகேந்தினின் ஈரநெஞ்சம் அமைப்பினர் ஒரு காப்பகத்தில் சேர்த்து விட்டனர்.

காப்பகத்தில் தான் யாருக்கும் பிரயோசனமில்லாமல் இருப்பதும், இலவசமாக உணவு வாங்கி சாப்பிடுவதும் இவருக்கு நெருடலாகவே இருந்தது, நாம் இவர்களுக்கு பாராமாக இருக்கிறோமோ என்ற உணர்வு அடிக்கடி ஏற்பட ஏதாவது சொந்தமாக தொழில் செய்து பிழைக்க வேண்டும் என்று எண்ணினார்.

தந்தை தந்துவிட்டு போன பணத்தையும், உறவினர்கள் மற்றும் ஈர நெஞ்சம் அமைப்பு போன்றவர்கள் கொடுத்து உதவிய நன்கொடைகளையும் கொண்டு கோவை சாய்பாபா காலனி, செந்தில் நகர், கல்பனா திருமண மண்டபம் அருகே ஒரு செருப்பு கடையை துவக்கிவிட்டார். மறைந்த தாயார் பழனியம்மாள் என்றால் இவருக்கு உயிர் ஆகவே அவரது பெயரின் முதல் எழுத்தையும், இவரது பெயரின் முதல் எழுத்தையும் இணைத்து கடைக்கு பிஆர் டிரேடர்ஸ் என்று வைத்துவிட்டார்.

இவருக்கு அதுவரை செருப்பு வியாபாரம் பற்றியும் தெரியாது. ஆனாலும் துணிந்து உழைப்போம், இதைவைத்து பிழைப்போம் என்ற இவரது முயற்சிக்கு இப்போது நல்ல பலன் கிடைத்துள்ளது.

தன்னை கௌரவமாக காப்பாற்றி கொள்வதற்கு ஏற்றவாறு வருமானம் வருகிறது. இன்னும் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் ஊனமுற்ற இவர் கடையில் ஒரு உதவியாளரை வேலைக்கு நியமிக்கலாம் என்ற நிலை வந்தபோது தன்னைப்போலவே ஆதரவில்லாத கருணை இல்லத்து நண்பரையே வேலைக்கு வைத்துள்ளார்.

வாரத்தின் ஏழு நாளும் கடை உண்டு காலை ஏழு மணிக்கு கடைக்கு வந்தால் இரவு 9 மணி வரை கடையில்தான் இருப்பார். இவரது நேர்மையான வியாபாரம் பலருக்கு பிடித்து போனதால் இப்போது நிறைய வாடிக்கையாளர்கள் வருகின்றனர்.

வருகிறவர்கள் ஷூ மற்றும் கொஞ்சம் காஸ்ட்லியான பிராண்டில் காலணிகள் கேட்டால் கொடுக்கமுடியாத சூழ்நிலையில் உள்ளார். பாங்க் உதவி கிடைத்தால் தொழிலையும்,கடையையும் விரிவு பண்ணி வியாபாரத்தை பெருக்க வேண்டும்.

வரும் வருமானத்தை கொண்டு நிறைய தொண்டு செய்யவேண்டும் என்று எண்ணியுள்ளார். இவரது எண்ணம் ஈடேற வாழ்த்துவோம்.

இவரது தொடர்பு எண்: 9944871680.

Tuesday 2 September 2014

மரங்களின் சகோதரி திம்மக்கா–13/11/2011
–எல்.முருகராஜ்கர்நாடகா மாநிலம் பெங்களுரூவில் இருந்து தும்கூர் போகும் வழியில் 25 வது கிலோமீட்டரில் வருகிறது கூதூர் கிராமம்.
அதுவரை வறண்டு வெப்பமாகக் காணப்பட்ட பூமி குளிர்ந்து காணப்படுகிறது, அதற்கு காரணமான ஆயிரத்திற்கும் அதிகமான ஆலமரங்கள் அழகு காட்டி சாலையின் இருபக்கங்களிலும் இருந்து காற்றை வீசி வரவேற்கிறது. மரங்களில் உள்ள பல்வேறுவித பறவைகள் தங்கள் மொழியால் கீதம் பாடி வரவேற்கின்றன, மொத்தத்தில் மரங்கள் அடர்ந்த அந்த திடீர் சோலைவனம் மனதை சிக்கென பறிக்கிறது.
எங்கும் இல்லாத அளவிற்கு, எங்கு இருந்து வந்தன இத்தனை ஆலமரங்கள், யார் கொண்டுவந்தது நட்டது, அதைவிட யார் இவ்வளவு சிரத்தை எடுத்து பராமரித்தது என்ற பல கேள்விக்கு எல்லாம் விடைதான் , எழுதப்படிக்கத்தெரியாத திம்மக்கா.
யார் இந்த திம்மக்கா என்பதை அறிய சில வருடங்கள் பின்னோக்கி பயணிக்கவேண்டும்
சாதாரண கிராமத்து ஏழைப்பெண்ணான திம்மக்கா வாக்கப்பட்ட கிராமம்தான் கூதூர்.
சிக்கண்ணா என்ற விவசாய தொழிலாளியின் வாழ்க்கைத் துணையான திம்மக்காவிற்கு குழந்தை பாக்கியம் இல்லாது போனது, இதை காரணமாக்காட்டி உற்றமும், சுற்றமும் கொட்டிய வார்த்தைகளால் திம்மக்கா ரொம்பவே காயப்பட்டுவிட்டார். இரவுகளை தூக்கம் இல்லாமலும், பகல்களை உணவு இல்லாமலும் கழித்தார். ஆனாலும் எதுவும் ஆறுதலாக இல்லை மேலும், மேலும் துக்கம் துரத்திட, இப்படியே பத்து வருடங்கள் ஒடிப்போனது. இப்போது 80 வயதாகும் திம்மக்காவிற்கு அப்போது வயது 28.
பெற்று வளர்த்தால்தான் பிள்ளைகளா, உயிரும்,உணர்வும் உள்ள மரங்கள் பிள்ளைகள் இல்லையா, பெற்ற பிள்ளை கூட தாயை மட்டும்தான் கவனிக்கும், ஆனால் பெறாத பிள்ளைகளான மரங்கள், சுயநலமின்றி ஊரையே கவனித்துக்கொள்ளுமே என்றெல்லாம் யோசித்த திம்மக்கா மரம் நடுவது அதுவும் ஆலமரங்களை தொடர்ச்சியாக நடுவது என்று முடிவெடுத்தார்.
இவ்வளவு யோசித்த திம்மக்கா அந்த ஊரின் தண்ணீர் பஞ்சத்தை பற்றி யோசிக்க மறந்துவிட்டார், ஆனாலும் முன்வைத்து காலை பின்வைக்கப்போவது இல்லை என்ற முடிவுடன் நாலு கிலோமீட்டர் தூரம் நடந்துசென்று தண்ணீர் கொண்டுவந்து ஆலமரங்களுக்கு தண்ணீர் விட்டார்.
ஆரம்பத்தில் இது என்ன பைத்தியக்காரத்தனம் என்று கேலி செய்த கணவர் சிக்கண்ணா கூட ஆலமரசெடி இலைகளும், தலைகளும் விட்டு உருவாகி வருவதைப் பார்த்து தானும் திம்மக்காவிற்கு உதவலானார்.
வயல்காட்டில் வேலை செய்த நேரம் போக எப்போதும் ஆலமரம் நடுவது, நட்ட மரங்களை பேணி பாதுகாத்து வளர்ப்பது, வளர்ந்த மரங்களிடம் அன்பும், பாசமுமாகப் பேசுவது என்று மரங்களை தனது குழந்தைகளுக்கும் மேலாக வளர்த்தார்.
மரங்களை வளர்ப்பதற்காக ஊரில் நிறைய குட்டைகளை உருவாக்கினார், அதில் மழைக்காலத்தில் பெய்யும் தண்ணீரை தேக்கிவைத்து வெய்யில் காலத்தில் மரங்களுக்கு ஊற்றி பயன்படுத்தினார்.
அப்படியும் தண்ணீர் பற்றாமல் போகும்போது சிரமம் பாரமால் தலையிலும், இடுப்பிலும் குடங்களை சுமந்துகொண்டு தண்ணீர் சேகரிக்க புறப்பட்டு விடுவார். ஒரு சமயம் நாலுகிலோ மீட்டர் தூரம் போய் தண்ணீர் கொண்டுவந்தவர், மரங்களுக்கு அருகில் வரும்போது கால் தடுக்கி முள்ளில் விழுந்துவிட்டார். கை,கால்களில் ரத்தம். ஒ...வென்று அழுகை.பதறி ஒடிவந்த சிக்கண்ணா,‘ என்னம்மா ரொம்ப வலிக்குதா’ என்று கேட்டபோது, ‘வலிக்காக அழலீங்க...கொண்டுவந்த தண்ணீர் கொட்டிப் போச்சுங்க...அதான் அழறேன்’ என்று கூறியிருக்கிறார்.
இப்படியாக திம்மக்கா மரம் வளர்க்க ஆரம்பித்து 50 ஆண்டுகளுக்கு மேலாகிறது. திம்மக்காவின் பேச்சுப்படி சொல்லப்போனால் அவரது மூத்த பிள்ளைக்கு இப்போது வயது 52 ஆகிறது. விளையாட்டுப்போல வளர்த்த மரங்கள் இன்று கூதூர் மக்களை குளு, குளு என வைத்தபடி திகு, திகுவென வளர்ந்து நாட்டிற்கு பயன்தரும் வகையில் வளர்ந்து நிற்கின்றது.
சுற்றுச்சுழலின் நண்பர் என்ற உயரிய விருதினை அமெரிக்கா அளித்து கவுரவித்தது வரை திம்மக்கா வாங்கியிருக்கும் விருதுகள் பலப்பல.
இன்றைய தேதிக்கு திம்மக்கா வளர்த்துள்ள மரங்களின் மதிப்பு பல கோடி ரூபாயாகும். அத்தனையும் இப்போது அரசாங்கத்தின் சொத்து.பதிலுக்கு அரசாங்கம் திம்மக்காவிற்கு மாதம் 500 ரூபாய் முதியோர் உதவித் தொகையும், வசிப்பதற்கு பெங்களுரூவில் ஒரு வீடும் வழங்கியது.
என் எசமான் (சிக்கண்ணா) இறந்த பிறகு, என் பிள்ளைகள்தான் (மரங்கள்) என் உலகம். இவைளை விட்டு நான் எங்கேயும் வரலை என்று சொல்லிவிட்டு பெங்களுரூ வீட்டை திருப்பிக் கொடுத்து விட்ட திம்மக்கா கூதூரிலேயே 500 ரூபாய் ஒய்வு ஊதியத்தில் தன் ‘பிள்ளைகளுடன் ’வாழ்ந்து வருகிறார். வீட்டில் இருக்கும் நேரத்தைவிட மரங்களுடன் செலவழிக்கும் நேரமே அதிகம்.
எண்பது வயதைத் தாண்டிவிட்ட திம்மக்கா தொடர்ந்து தொலைதூரம் சென்று தண்ணீர் சுமந்துவர முடியாத சூழ்நிலையில், புதிதாக மரமேதும் வளர்க்கவில்லை, ஏற்கனவே வைத்து, வளர்த்த மரங்களை மட்டும் பாதுகாத்து வருகிறார். வளர்ந்த மரங்களும் திம்மக்கா தங்கள் பக்கம்வரும்போது குளிர்ந்த காற்றை வீசியபடியும், ‘அம்மா எங்கள விட்டு எங்கேயும் போயிடாதீங்கம்மா’பேசியபடியும் காணப்படுகின்றன. 

-எல்.முருகராஜ். 
நான் வாழணும்,வாழ்ந்தே ஆகணும்...
- வானவன் மாதேவி
 
- எல்.முருகராஜ்
சென்னையில் மத்திய அரசு அலுவலகம் ஒன்றின் உயரதிகாரியாக இருப்பவர் கீதா இளங்கோவன். 'மாதவிடாய்' என்ற குறும்படத்தை எடுத்து பலரது மனதில் உயர்ந்த இடத்தை பிடித்தவர்.

இவரது வாழ்க்கையும்,வார்த்தையும், எழுத்தும், எண்ணமும் எப்போதும் ஏழை, எளிய பெண்களின் முன்னேற்றம் குறித்தே இருக்கும்.

சமீபத்தில் இவரை சந்தித்து 'மாதவிடாய்' படத்திற்கு கிடைத்த விருது குறித்து பாராட்டிய போது நான் ஒண்ணுமே செய்யலீங்க, சேலத்தில் தசைச்சிதைவு என்ற உயிர்கொல்லி நோயுடன் போராடிக்கொண்டே வானவன் மாதேவி என்ற பெண் செய்துவரும் சேவைகளுக்கு முன் நானெல்லாம் மிகச்சாதாரணம் ஆகவே அவரைப்பற்றிய ஒரு பதிவு போடுங்கள் என்றார்.

வானவன் மாதேவியைப்பற்றி சொல்வதற்கு முன் தசைச்சிதைவு நோய் பற்றி தெரியாதவர்களுக்கு ஒரு சில வார்த்தை 'மஸ்குலர் டிஸ்ட்ரோபி' என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த தசைச்சிதைவு நோய் யாருக்கும் எந்த வயதிலும் வரலாம்.

எல்லா மனிதர்களுக்கும் உடலில் உள்ள செல்கள் அழிந்து புதிய செல்கள் உருவாகும். ஆனால், தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பழைய செல்கள் அழியும். புதிய செல்கள் உருவாகாது. அதன் காரணமாக உடலில் உள்ள தசைகள், மெள்ள மெள்ளத் தனது செயல்பாட்டை இழக்கத் தொடங்கும். அதாவது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழக்கத் துவங்கி அவர்கள் உடல் முடங்கிவிடும், முடிவில் ஒரு நாள் இதயமும் செயல் இழந்து விடும்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டுவிட்டார்கள் என்று தெரிந்ததும், இதற்கு மருந்து கிடையாது அதிக பட்சம் பத்து வருடங்கள் வாழலாம். ஆனால் அந்த வாழ்க்கையே பெரும் சுமையாகவும் வலியாகவும் போராட்டமாகவும் இருக்கும் என்று சொல்லி நிஜம் சொல்கிறோம் என்ற பெயரில் அவர்களை பாதி நடைப்பிணமாக்கி வருகின்றன மருத்துவமனைகள்.

சேலத்தை சேர்ந்த வெகு சாதாரண குடும்பத்தில் பிறந்த வானவன் மாதேவிக்கு பள்ளிக்கு போகும் போது நடப்பதில், படிஏறுவதில் சிரமம் ஏற்பட்டது. மருத்துவர்களிடம் சென்ற போது வானவன் மாதேவிக்கு தசைச்சிதைவு நோய் என்று சொல்லிவிட்டனர்.

கொஞ்சம் கொஞ்சமாக தசைச்சிதைவு நோய்க்கு தன்னை தின்னக்கொடுத்ததன் காரணமாக மழையில் நனைந்த கோழிக்குஞ்சு போலானது உடம்பு, விடாமல் படிக்க நினைத்தாலும் உடல் ஒத்துழைக்காததால் டிப்ளமோவோடு நிறுத்திக்கொண்டார்.

"என்னால் எதையும் தன்னிச்சையாக செய்ய முடியாது, என்னை ஒருவர் தூக்கி உட்கார வைக்க வேண்டும், நடக்க முடியாது. நடந்தால் விழுந்து விடுவேன். விழுந்தால் எழ முடியாது, டாய்லெட் போவதற்கு ஒருவர் துணை வேண்டும்.போன் பேச வேண்டும் என்றால் கூட யாராவது காதருகே போனை வைக்க வேண்டும். பேசிக் கொண்டிருக்கும் போது கழுத்து சாய்ந்து பின்பக்கமாக போய்விடும், உடம்பு என்னுடையதுதான் ஆனால் அதன் கட்டுபாடு என்னுடையதல்ல", நோயின் தாக்கம் குறித்து சிரித்துக்கொண்டே விவரிக்கிறார்.

ஆனால் இதெல்லாவற்றையும் விட எனக்கு வலியை தந்தது இந்த நோய் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் நிறைய சின்ன சின்ன குழந்தைகள் எல்லாம் இதன் பாதிப்பிற்கு உள்ளாகிவருவதுதான்.

இரண்டாவதாக இவர்களை பார்க்க முடியாமல் பராமரிக்க முடியாமல் ஏழை எளிய பெற்றோர்கள் படும் வேதனை

இந்த இரண்டிற்கு யாராவது தீர்வு காண்பார்களா என்று தேடுவதைவிட நாமே ஏன் தீர்வு காணக்கூடாது என்று முடிவு செய்து களத்தில் இறங்கினேன்.

நீண்ட வலியான பயணத்தின் நிறைவாக நண்பர்கள் நல்ல இதயம் உள்ளவர்கள் ஆதரவுடன் சேலத்தில் 'ஆதவ் அறக்கட்டளை' துவங்கினேன்.அதன் சார்பாக தசைசிதைவு நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கான இல்லம் நடத்திவருகிறேன்.இங்கு அவர்களுக்கு மருந்து மாத்திரைகளை விட அன்பும் ஆதரவும் தரப்படுகிறது, ஒத்த கருத்தோடு கூடியவர்களுடன் அவர்களால் பேசமுடிகிறது, தொலைந்து போன சிரிப்பை தேடிக்கண்டுபிடித்து தரமுடிகிறது , எப்போது சாவோம் என்ற மனநிலையில் இருந்து இன்னும் கொஞ்ச நாள்தான் வாழ்வோமே என்று நம்பிக்கை கீற்று வெளிப்படுகிறது.

ஆரம்பத்திலேயே இந்த நோய் பற்றி தெரிந்து கொண்டால் சிகிச்சை எளிது என்பதால் ஊர் ஊராக போய் மருத்துவ முகாம் நடத்திவருகிறேன்.உங்களால் பார்க்க முடியாத பராமரிக்க முடியாதவர்களை என்னிடம் அனுப்புங்கள் என்று வரவழைத்து பார்த்து வருகிறேன்.

இந்த ஆதரவு இல்லத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டும் வெறும் மருத்துவமனையாக இல்லாமல் ஆராய்ச்சி மருத்துவமனையாக மாற்றவேண்டும். இந்த தசைச்சிதைவு நோய் வராமல் தடுக்கப்பட வேண்டும், வந்தவர்களை முற்றாக குணப்படுத்த வேண்டும்.

எனக்கு டாக்டர்கள் கொடுத்த கெடுவை தாண்டி பத்து வருடமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். கிட்டத்தட்ட என் உடலின் எல்லா தசைகளுமே தன் செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டுவிட்டது என்றே சொல்லலாம், எப்போது வேண்டுமானாலும் இதயம் அதன் செயல்பாடை நிறுத்திக்கொள்ளலாம். ஆனால் அப்படி நிகழ்ந்துவிடக்கூடாது, தான் வாழணும் இந்த தசைசிதைவு நோய்க்கு ஒரு முடிவு காணும்வரை வாழ்ந்தே ஆகணும் என்ற உறுதி கொண்டுள்ள வானவன் மாதேவியின் தொடர்பு எண் : 99763 99403.

( போனை எடுத்து, அருகில் இருந்து பொறுமையாக பிடித்துக்கொள்ள ஆள் இல்லாத போது வானவன் மாதேவிக்கு உங்களுடன் பேசுவதில் சிறிது இடையூறு ஏற்படலாம், பொறுமை காத்துக் கொள்ளுங்கள் நன்றி)

நன்றி:தினமலர்.காம்/நிஜக்கதை
http://www.dinamalar.com/news_detail.asp?id=1058971
 — with Vanavan Madevi.

Monday 31 March 2014

பாரதியார் வாழ்ந்த காசி வீட்டில் ஒரு நாள்..

பாரதியார் வாழ்ந்த காசி வீட்டில் ஒரு நாள்..
- எல்.முருகராஜ்

"இன்னது நீர்க்கங்கை யாறு எங்கள் ஆறே
இங்கிதன் மாண்பினுக்கு எதிரெது வேறே''
இது கங்கைக்குத் தங்கக் கவிதா மகுடம் சூட்டி பாரதி பாடிய வரிகள்.

இதன் மூலம் அவர் காசியையும், கங்கையையும் எந்த அளவு நேசித்திருப்பார் என்று சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

39 வயது வரை வாழ்ந்த உலக மகா கவி பாரதியின் தன் வாழ்க்கையின் இளமைப் பிராயமான 16 வயதில் இருந்து 21 வயது வரை (1898-1903) காசியில் தங்கி கல்வி கற்றதுதுடன் கலை கலாச்சார பொது அறிவு விஷயங்களையும் பெற்றார்.

1898ம் ஆண்டு ஜூன் மாதம் பாரதியின் தந்தை சின்னச்சாமி காலமான பின்னர், குடும்பச் சூழல் மாறியது. வறுமை விரட்டியது. காசியில் இருந்த அத்தை குப்பம்மாளும், அவர் கணவர் கிருஷ்ணசிவனும் பாரதியை காசிக்கு அழைக்கவே மறு பேச்சு பேசாமல் அங்கு போய்விட்டார்.

காசியில் கங்கை கரையோரம் உள்ள வீட்டில் அத்தை மாமாவோடு தங்கலானார். பின்னர் காசி மிஷன் கல்லூரியிலும், ஜெய்நாராயண் கல்லூரியிலும் படித்தார். ஹிந்தி, சம்ஸ்கிருதம் கற்றுத் தேர்ந்தார். அலகாபாத் சர்வ கலாசாலை பிரவேசப் பரீட்சையில் முதல் வகுப்பில் தேறி, பலரும் பாராட்டும் நிலை அடைந்தார். பாரதியின் உச்சரிப்புத் தெளிவையும் அதன் தன்மையையும் காசிப் பண்டிதர்கள் கண்டு அப்போதே வியந்தார்கள்.

கொஞ்ச காலம், பள்ளி ஒன்றில் ஆசிரியர் பணியிலும் இருந்தார். காசி வாசம், பாரதி உள்ளத்தில் ஒரு புதிய இனம் தெரியாத பரவசத்தை ஊட்டிற்று. காசி நகரில், பல இடங்களுக்கும் சென்று வருவது அவருக்கு வழக்கமாயிற்று. நடந்தேதான் செல்வார்.

வீடு என்று இருந்தால் வரி கட்ட வேண்டும் அதுவே மடம் என்று இருந்தால் வரி விலக்கு உண்டு. இது அப்போதைய பிரிட்டிஷ் அரசின் சட்டம்.இந்த சட்டத்திற்காக பாரதியின் மாமா தனது வீட்டை சிவ மடம் என்றாக்கினார். நிறைய பண்டிதர்கள் வந்து போவார்கள். பண்டிதர்களிடையே பாரதி எப்போதுமே தீவிரமாக பேசுவார் அதிலும் குறிப்பாக பெண் விடுதலை, பெண் கல்வி குறித்து காரசாரமாக விவாதிப்பார். இவர் ஒரு ஞானவான் என்பதை மட்டும் உணர்ந்தவர்கள் அதற்கு மேல் இவரை உயர்த்த முடியாததால் பின் அங்கு இருந்து கிளம்பி மீண்டும் எட்டயபுரம் வந்தார்.

பாரதி தனது உடையிலும் தோற்றத்திலும் மாற்றத்தை உருவாக்கி கொண்டது காசியில்தான். இப்போதும் கூட இங்குள்ள பனாரஸ் இந்து யுனிவர்சிட்டியில் உள்ள பேராசிரியர்கள் வேட்டி கோட் தலைப்பாகை அணிந்து இருப்பதை பார்க்கலாம். இந்த பழக்கம்தான் பாரதிக்கு பிற்பாடு எங்கு சென்றாலும் தொடர்ந்திருக்கலாம். ஒருமுறை அல்ல ஒரு நாளின் பலமுறை பாரதி கங்கையில் நீராடுவதும் கரையில் இருந்தபடி காளிதாசர், ஷெல்லி, கீட்ஸ் கவிதைகளை படிப்பதுமாக இருப்பார். கங்கை கரை படிக்கட்டுகளில் அமர்ந்து படிப்பது அவருக்கு மிகவும் பிடித்த விஷயம்.

இப்படி பாரதியின் நெஞ்சுக்குள் பாய்ந்து ஒடிக்கொண்டிருந்த தொன்மையான கங்கையையும் அவர் நேசித்த காசியையும் பற்றி நிறைய முறை கேள்விப்பட்ட எனக்கு கடந்த வாரம் அவர் வாழ்ந்த அந்த காசியின் வீட்டை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது.

வாரணாசி ரயில் நிலையத்தில் இருந்து அனுமான் காட் என்றால் நூறு ரூபாய் கட்டணத்தில் ஆட்டோ ரிக்ஷாவில் கொண்டு போய் இறக்கிவிடுவர். அங்குள்ள காஞ்சி மடத்திற்கு நேர் எதிராக சிவ மடம் என்று தமிழிலும் இந்தியிலும் எழுதப்பட்ட பழங்கால வீடு ஒன்று உள்ளது.

மாட்டின் எச்சமும், குப்பை கூளமும் நிறைந்த நெரிசலான சந்துக்குள் அமைந்திருக்கும் அந்த பழைய வீட்டிற்கு எப்படி பார்த்தாலும் இருநூறு வயதிருக்கும்.

அதிர்ந்து பேசினாலே வீட்டின் காரை சுவர்கள் உதிர்ந்துவிடுமோ என்கிற அளவிற்கு பழமை மாறாமல் அப்படியேதான் பல இடங்களும் உள்ளது.

அந்த வீட்டில் பலர் இருந்தாலும் நின்று பேச நேரமில்லாமல் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருக்கின்றனர்.
அந்த வீட்டில் பாரதியின் பெருமைகளையும்,நினைவுகளையும் சுமந்து கொண்டு இருக்கும் ஒரே ஜீவன் கே.வி.கிருஷ்ணன் என்பவர்தான். பாரதியாரின் அப்பாவுடன் பிறந்த குப்பம்மாள் மகள் வழி பையனான இவருக்கு இப்போது வயது 88 ஆகிறது. பாரதி இங்கு இருந்த போது அவர் பிறக்கவேயில்லை.

காசியில் பிறந்து வளர்ந்தவரான இவர் இங்குள்ள புகழ்பெற்ற வாரணாசி இந்து பல்கலையில் பணியாற்றி ஒய்வு பெற்றவராவார். எளிமையான வாழ்க்கை, தமிழைவிட இந்தியில் திறமை அதிகம்.இசையிலும் புலமை உண்டு.
பிற்பாடு பாரதியார் தன் மாமா என்பதை அறிந்து அவர் மீது மிகுந்த பற்று கொண்டு அவர் எழுதிய கவிதைகளை எல்லாம் இந்தி மொழியில் மொழிமாற்றம் செய்து பாரதியை இந்தி பேசும் மக்களிடையே கொண்டு போய் சேர்த்தார். இதன் காரணமாக அங்குள்ள மக்கள் உதவியுடன் பாரதிக்கு சிலை அமைக்கவும் செய்தார்.

பாரதியின் மாப்பிள்ளை என்பதே என் பாக்கியம் அதைவிட வேறு எதுவும் வேண்டாம் என்ற நிலையில் உள்ளவர்.தற்போது மிகவும் தளர்ந்து போய் உள்ளார். கேட்கும் திறனும் குறைந்து விட்டது.

ஆனாலும் இரண்டாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து ஒருவன் பாரதி வாழ்ந்த வீட்டை பார்வையிட வந்துள்ளானே என்ற ஆர்வம் காரணமாக சிரமப்பட்டு எழுந்து பாரதி உலாவிய இடங்கள் இவை, அவர் உபயோகித்த பொருட்கள் இவை என்று பழுதடைந்து, பாழடைந்த கிடந்த நாற்காலி மேஜை போன்றவைகளை தூசு தட்டி காண்பித்த போது அந்த இடம் பாரதி வாழ்ந்த இடமாக அல்ல இப்போதும் வாழும் இடமாகவே பட்டது.
முன்பு காரைச்சுவர்களுக்குள் இருந்தார் இப்போது இவரது இதய சுவர்களுக்குள் இருக்கிறார்.


சையத்தின் மேக்ரோ போட்டோகிராபி
- எல்.முருகராஜ்

புதியவர்களுக்கு குலாம் சையத் அலி பழகியவர்களுக்கு கபீர்.

மதுரையில் பிறந்தவர் திருச்சியில் வளர்ந்தவர். 

ராட்சத பாய்லர்கள் உள்ளிட்ட பெரிய இரும்பு சாதனங்கள் துருப்பிடிக்காமல் இருக்க ஒருவித பெயின்ட் பூசுவார்கள். இந்த பெயின்ட் பூச்சு என்பது சரியான கலவை மற்றும் சரியான அளவில் இருக்க வேண்டும். இதை கண்காணிப்பதற்கென பிரேத்யேக படிப்பு உண்டு. அந்த படிப்பை படித்து விட்டு வெளிநாடுகளில் வேலை பார்த்தவர் சமீபத்தில் தாயகம் திரும்பியிருக்கிறார்.

நீண்டகாலம் வெளிநாடுகளில் வேலை பார்த்ததால் ஏற்பட்ட களைப்பு நீங்கும் வகையில் தற்போது திருச்சியில் இருக்கும் சையத்தின் மனதை இலகுவாக்கும் விஷயங்களில் ஒன்று கேமிராவில் படம் எடுப்பது.

இதற்காக கேனன் சிறிய ரக கேமிரா ஒன்றை வாங்கியவர் தன் வீட்டைச் சுற்றிலும் உள்ள விஷயங்களை படமாக்க ஆரம்பித்தார். இந்த படங்களை பார்த்த உறவினர்களும், நண்பர்களும் பாராட்டுகளை வழங்கினர்.

மேலும் படங்கள் எடுக்கும் போதும் எடுத்த படங்களை பார்க்கும் போதும் ஏற்படும் சந்தோஷம் தனக்கு அளவிடமுடியாததாக இருக்கிறது. அதிலும் இவருக்கு " மேக்ரோ போட்டோகிராபி 'என்று சொல்லக்கூடிய குளோசப் போட்டோகிராபி எடுப்பது பிடித்து போனது.

என்னிடம் உள்ள சிறிய ரக கேமிராவில் இதற்காக ஸ்பெஷல் மேக்ரோ லென்ஸ் எல்லாம் போடமுடியாது, கேமிராவில் உள்ள மேக்ரோ பிரிவை தேர்வு செய்து அதன் சக்திக்கேற்ப மேக்ரோ படங்கள் எடுத்துவருகிறேன்.

தினமலர்.காம் பகுதியில் பொக்கிஷம் புகைப்பட பிரிவை விடாமல் பார்த்து ரசிக்கக்கூடியவன் நான். என்னைப் போன்ற சாதாரண புகைப்பட கலைஞர்களை கூட பராட்டி அவர்களைப் பற்றி கட்டுரை வெளியாகும்போது எனக்கும் ஆர்வம் ஏற்படும். நாமும் நம்மைபற்றி சொல்லலாமா? வேண்டாமா? என யோசித்து கடைசியில் அனுப்பி விடுவோம் என்ற முடிவுடன் இந்த படங்களை அனுப்பியுள்ளேன் என்ற குறிப்புடன் சையத் அனுப்பிய படங்கள் இந்த வார பொக்கிஷம் பகுதியில் இடம் பெறுகிறது.

இவரைப் பொறுத்தவரை பாராட்ட வேண்டிய விஷயம் என்னவென்றால் ஏழாயிரம் ரூபாய் மதிப்புள்ள சிறிய ரக கேமிரா என்றாலும் அதில் தன்னால் என்ன செய்யமுடியும் என்று முயற்சித்து இருக்கிறார் பாருங்கள், அந்த முயற்சியை பாராட்டுவதே இந்த கட்டுரையின் நோக்கம்.

சையத்தை பாராட்ட நினைப்பவர்களுக்காக அவரது எண்: 9791031770.


Friday 7 March 2014

மகளிர் தினத்தில் ஒரு தைரிய லட்சுமி...
- எல்.முருகராஜ்

"...என் முகத்தில் ஆசிட் வீசிய போது சிதைந்து போனது என் முகம் மட்டுமல்ல, என் கனவுகளும்தான், இனிமேலாவது காதலிப்பவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் இதயத்தை அன்பால் நிரப்ப பாருங்கள், ஆசிட்டால் அல்ல... என்று அந்த இளம் பெண் தனது உருக்குலைந்த முகத்துடனும், உருக்கமான வார்த்தைகளாலும் பேசியதை கேட்ட போது மேடையில் இருந்த அனைவரின் கண்களிலும் கண்ணீர்.

ஆனால் கண்ணீரைப் பெறவோ, யாருடைய கருணையையும் பெறவோ அவர் வரவுமில்லை பேசவுமில்லை.

காரணம் அவர் ஒரு சாதாரணமான பெண் அல்ல, மனதில் வீரம் மிகக்கொண்ட தைரிய லட்சுமி.

இந்த ஆண்டிற்கான உலகின் தைரியமான பெண்ணிற்கான விருதை கடந்த சில தினங்களுக்கு முன் பெற்றவர். இதற்காக அமெரிக்காவில் அதன் வெளிவிவகாரத்துறை சார்பில் வாஷிங்டன் மாகாண சபையில் நடந்த மாபெரும் விழாவில், நாட்டின் பிரமுகர்கள் பலரும் கூடியிருந்த மேடையில், அந்நாட்டின் முதல் பெண்மணி மிக்கேல் ஒபாமா கையால் விருது பெற்றார்.

விருது பெற்ற கையோடு அவர் பேசிய வார்த்தைகள்தான் மேலே சொன்னது. அவர் பேசிய மேலும் சில வார்த்தைகள் பலரை யோசிக்கவைத்தது. அவை என்ன வார்த்தைகள் என்பதை பார்ப்பதற்கு முன்னால் அவர் யார் என்பதை பார்த்துவிடலாம்.

டில்லியை சேர்ந்தவர் பள்ளிக்கு துள்ளியபடி சென்று வந்தவர் படிப்பில், விளையாட்டில் இன்ன பிற துறைகளிலும் ஆர்வமும் திறமையும் கொண்டவர் கூடுதலாக அழகும் மிக்கவர்.

ஒரு சின்ன நந்தவனம் போல இருந்தவரை, தந்தையின் ஸ்தானத்தில் இருந்து பார்த்து பெருமைப்பட வேண்டிய வயதைக்கொண்ட உறவினர் ஒருவர் வயதையும், தகுதியையும் மீறி லட்சுமியிடம் மோகம் கொள்ள லட்சுமி மிரட்டி, விரட்டி இருக்கிறார்.

அப்படியே போயிருக்க வேண்டிய அந்த ஆண் என்ற நாகம் உடம்பெல்லாம் பொறாமை தீ பற்றி எரிய விஷத்தை கக்க, தக்க தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தது.

அந்த நாளும் வந்தது அனைவருக்கும் அது வியாழன் என்றால் லட்சுமிக்கு மட்டும் மறக்கமுடியாத ஒரு கறுப்பு நாள் அது.

கல்விக்கூடம் செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்று இருந்தவரை விசாரிப்பது போல நெருங்கிவந்த அந்த உறவுக்கார மிருகம் கண்ணிமைக்கும் நேரத்தில் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை லட்சுமியின் முகத்தில் வீசிவிட்டு ஓடிவிட்டது.

இந்த சம்பவம் நடந்த ஆண்டு 2005 ஆகும், அப்போது லட்சுமிக்கு வயது 16.

முகமும், உடலும் பற்றி எரிய வேதனையால் துடிதுடித்து உருண்டு புரண்ட அந்த பதினாறு வயது சின்னஞ்சிறுமியை மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு ஓடிய போது அங்கே உயிரைக் காப்பாற்ற முடிந்தது ஆனால் அழகான முகத்தை காப்பாற்ற முடியாமல் போனது.

இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் ஒன்று ஒளிந்து மறைந்தே தனது வாழ்க்கையை நடத்துவார்கள், வெளியில் வர அவமானப்பட்டு இருட்டிலும் தனிமையிலும் ஒடுங்கிக் கிடப்பார்கள், ஒரு நடைப்பிணமாக வாழ்வார்கள் அதுவும் முடியாத போது தற்கொலை செய்து கொள்வார்கள்.

இதுதான் இந்தியாவில் ஆசிட் வீச்சுக்கு உள்ளாகும் சராசரி பெண்களின் நிலமை.

ஆனால் லட்சுமி இந்த நிலையை உடைத்தெறிய முடிவெடுத்தார். தனது கோரமான முகத்துடன் எல்லா இடங்களுக்கும் போய்வந்தார். காரணம் ஆசிட் வீச்சின் கொடூரம் எப்படி இருக்கும் என்று எல்லோருக்கும் தெரியட்டும் என்பதற்காக.

கத்தி துப்பாக்கியைவிட கொடூரமான இந்த ஆசிட்டை சாதாரணமாக யார் வேண்டுமானாலும் வாங்கலாம் என்ற நிலையை மாற்ற மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்பதற்காக 27 ஆயிரம் பேரிடம் கையெழுத்து வாங்கி உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்தார், அதன் அடிப்படையில் நீதிமன்றம் இது பற்றிய ஒழுங்கு நடவடிக்கைக்கு உத்தரவிட்டது.

மேலும் ஆசிட் வீச்சுக்கு உள்ளான பெண்கள் ஏதோ தப்பு செய்தவர்கள் போல ஒளிந்து வாழும் நிலமை மாற வேண்டும் அவர்களுக்கு உரிய இழப்பீடு, அரசு வேலை, சமூக அங்கீகாரம், சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை என்பதை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்தியதன் மூலம் வெற்றியும் பெற்றார். முதல் கட்டமாக தன் மீது ஆசிட் வீசியவரை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத்தந்தார்.

இப்போது 24 வயதாகும் லட்சுமி தன்னைப் போல பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஒரு அரணாக இருந்து வருகிறார், இனியும் இப்படி ஒரு சம்பவம் நம் நாட்டில் நடந்துவிடக்கூடாது என்பதற்காக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இதையெல்லாம் பார்த்த பிறகுதான் இந்த ஆண்டிற்கான உலகின் தைரியமான பெண் என்ற விருதினை இவருக்கு வழங்கி அமெரிக்கா தன்னை கவுரவித்துக் கொண்டுள்ளது.

எனக்கு விருதை விட இது தரும் வெளிச்சம் பிடித்திருக்கிறது காரணம் எனக்கு ஏற்பட்ட வலியும், வேதனையும் வேறு யாருக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று நான் மேற்கொண்டுள்ள விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு இந்த நிகழ்வு உதவும் என்பதால்.

பேசிவிட்டு இறங்கிய லட்சுமியை அனைவரும் ஓடிப்போய் கைகுலுக்கி பாராட்டினார்கள், பெண்கள் கட்டி அனைத்து முத்தமிட்டு பாராட்டினார்கள்.

அப்போது அந்த அவையிலேயே அழகான முகமாய் பிரகாசித்தது நமது தைரிய லட்சுமியின் முகம்தான்.

-நன்றி:தினமலர்.காம்/நிஜக்கதை பகுதிFriday 28 February 2014

"தெய்வமகன்" ஓம் பிரகாஷ் யாதவ்...
- எல்.முருகராஜ்

தெய்வமகன் சிவாஜி போல வெந்து போன கன்னத்தழும்புகளுடன் நிஜமாகவே ஒரு சிறுவன் உபியில் இருக்கிறான், அவனைப்பற்றிய புகைப்படத்தை பார்த்ததும் ஏனோ அந்தச் சிறுவனைப்பற்றி விசாரிக்க தோன்றியது.

தோன்றியதை செய்துமுடித்தபோது மனதிற்குள் நல்லதொரு சிறுவனை அறிமுகப்படுத்திய மனநிறைவு ஏற்பட்டது.

சிறுவனின் பெயர் ஒம்பிரகாஷ் யாதவ்.

உத்திர பிரதேச மாநில விவசாயி ஒருவரது மகன்.ஏழாவது படிக்கும் சிறுவன்.

சக நண்பர்களுடன் பள்ளிக்கு மாருதி வேனில் சிரித்து பேசியபடி பள்ளிக்கு போய்க்கொண்டு இருந்தான்.

நன்றாக போய்க் கொண்டிருந்த வேன் திடீரென தீபிடித்தது. வேன் டிரைவர் வேனில் இருக்கும் பள்ளி சிறுவர்களைப் பற்றி கவலைப்படாமல் தான் மட்டும் உயிர்பிழைத்தால் போதும் என்ற எண்ணத்துடன் கதவை திறந்து கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

அதே போல வேனில் இன்னொரு புற கதவருகே இருந்த ஓம்பிரகாஷ் நினைத்திருந்தால் டிரைவரைப் போல கதவைத்திறந்து கொண்டு ஓடி தப்பியிருக்கலாம்,ஆனால் அப்படி செய்யவில்லை. பயத்தில் அழுது அரற்றிய நண்பர்களை காப்பாற்ற கதவை உடைத்து திறந்தவன் ஒவ்வொரு மாணவனாக காப்பாற்ற துவங்கினான்.

ஓம் பிரகாஷையும் சேர்த்து மொத்தம் ஒன்பது பேர் பயணித்த அந்த வேனில் இருந்து ஆறு பேர்களை காப்பாற்றிவிட்டான். அதற்கு மேல் தீ மளமளவென பிடித்து எரியத்துவங்கியது, ஆனாலும் கவலைபடாமல் வேனிற்குள் நுழைந்து மீதம் இருந்த இரு சிறுவர்களையும் காப்பாற்றினான்.

இந்த கடைசி நேர முயற்சியின் போது கார் கதவின் ரப்பரில் இருந்த தீ ஓம்பிரகாஷின் கன்னத்திலும், முதுகிலும் பட்டு பயங்கரமாக எரிந்தது, ஆனால் அந்த எரிச்சலையும், வலியையும், வேதனையையும் விட தன் நண்பர்கள் உயிரே பெரிதென நினைத்த ஓம்பிரகாஷ் இருவரையும் காப்பாற்றி வெளியே வரவும், வேன் முழுமையாக எரிந்து நாசமானது.

சில நிமிடங்கள் தாமதித்து ஓம் பிரகாஷ் செயல்பட்டு இருந்தாலோ அல்லது தனக்கு தீக்காயம் ஏற்பட்டவுடன் பயந்து போய் பாதியிலேயே தனது முயற்சியை கைவிட்டு இருந்தாலோ நிச்சயம் ஒன்றிரண்டு மாணவர்களை தீக்கு பலி கொடுக்கவேண்டி இருந்திருக்கும். கேஸ் சிலிண்டரில் ஓடும் வேன் என்பதால் எந்த நேரமும் வெடித்து சிதறும் அபாயமும் இருந்தது.

இதையெல்லாம் பொருட்படுத்தாமல் சிறு காயங்களுடன் தனது நண்பர்களை காப்பாற்றி விட்ட பெருமிதத்துடன் நின்ற ஓம்பிரகாஷ்க்கு அப்போதுதான் முகத்தில் ஏற்பட்ட தீவிபத்தின் கொடூரம் புரிய ஆரம்பித்தது. இதற்குள் அக்கம், பக்கத்தில் இருந்து திரண்டு விட்ட மக்கள் அவனை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.

நீண்ட சிகிச்சைக்கு பிறகு ஓம் பிரகாஷ் உயிருக்கு ஆபத்தின்றி பிழைத்துக்கொண்டாலும், நடந்த சம்பவம் காரணமாக ஏற்பட்ட வடு அழிக்கமுடியாத அளவிற்கு அவனது முகத்தை சிதைத்து இருந்தது.

ஆனால் அதைப்பற்றி கவலைப்படவில்லை தன்னால் உயிர் பிழைத்த நண்பர்களும், அவரது பெற்றோர்களும், உறவினர்களும் மற்றுமுள்ள பள்ளி நண்பர்களும், ஆசிரியர்களும் பூங்கொத்துடன் தன்னை சந்தித்து வாழ்த்து கூறியதையும், கண்ணீருடன் நன்றியை பகிர்ந்து கொண்டதையுமே பெருமையாக நினைத்தான்.

இவனைப் பெற்றவர்கள் பெருமையாக நினைத்தார்கள், இதையும் தாண்டி சிறுவர்களுக்காக வழங்கப்படும் நாட்டின் வீரதீர சாகச செயலுக்கான (நேஷனல் பிரேவரி அவார்டு) விருதினை ஜனாதிபதி வழங்கி கவுரவித்தார்.

இப்போது பள்ளிக்கு வரும் ஓம்பிரகாஷ் யாதவின் முகத்தை பார்க்கும் யாரும் அந்த முகத்தில் உள்ள வடுவை பெருமையாக கருதி அந்த வடு உள்ள முகத்திலேயே முத்தமழை பொழிந்து சந்தோஷப்படுகிறார்கள்.

ஓம் பிரகாஷ் யாதவ் இதெல்லாம் புரிந்தவன் போலவும், புரியாதவன் போலவும் சின்ன புன்னகையுடன் கடந்து செல்கிறான்.


உங்களைத் தேடி இஸ்ரோ...
- எல்.முருகராஜ்

விண்வெளி தொழில்நுட்பத்தில் மேம்பாடுகளை ஆராய்வதற்கும்,அவற்றை நாட்டு நலனிற்கு பயன்படுத்தவும் அமைக்கப்பட்டதுதான் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இந்தியன் ஸ்பேஸ் ரீசர்ச் ஆர்கனைசேஷன்- இஸ்ரோ).

1969ம் வருடம் உருவாக்கப்பட்ட இஸ்ரோவானது பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு நாடு முழுவதும் ஆராய்ச்சி மையங்களையும், ஏவுதளங்களையும் கொண்டுள்ளது. மொத்தத்தில் 16 ஆயிரம் பேர் ஆராய்ச்சி பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். தற்போது இதன் தலைவராக இருப்பவர் கே.ராதாகிருஷ்ணன்.

உலகில் உள்ள மிகப்பெரும் விண்வெளி ஆய்வு மையங்களில் நமது இஸ்ரோ ஆறாவது இடத்தில் உள்ளது.

கடந்த 1975ம் ஆண்டு இந்தியா தனது முதல் செயற்கை கோளான ஆர்யபட்டாவை சோவியத் நாட்டின் உதவியோடு அங்கு இருந்தே ஏவியது.

1990ம் ஆண்டு எஸ்எல்வி 3 என்ற ரோகிணி ஏவுகலம் (ராக்கெட்) இந்தியாவில் இருந்தே ஏவியது.

அதன்பிறகு பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி போன்ற ஏவுகலங்கள் வெற்றிகரமாக ஏவப்பட்டன.

கடந்த 2008ம் ஆண்டு நிலவை நோக்கி ஏவப்பட்ட சந்திராயன்-1 ஏவுகலம் தற்போது உலக அரங்கில் இந்தியாவை பிரமிப்புடன் பார்க்கும் நிலையை உருவாக்கியுள்ளது.

ஆரம்பத்தில் சோவியத் நாட்டின் உதவியோடு அவர்களது தொழில் நுட்பம் மற்றும் உபகரணங்களுடன் சோவியத் நாட்டின் ஏவுதளத்தில் இருந்தே ஏவுகலத்தை அனுப்பிய இந்தியா, தற்போது இந்தியா தொழில் நுட்பத்தில் இந்திய உபகரணங்களுடன் இந்தியாவில் இருந்தே பல ஏவுகலங்களை ஏவிவிட்டுள்ளது.

இன்னும் சொல்லப்போனால் மற்ற நாட்டின் ஏவுகலங்களையும், துணைக்கோள்களையும் நமது ஏவுகலத்தின் துணையோடு அனுப்பிவைத்து வருகிறது.

கடந்த வாரம் ஒரு பெருமைப்படத் தக்க செய்தி வெளியானது. அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் நமது இஸ்ரோ மையத்துடன் இணைந்து தண்ணீர் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபடப்போகிறது என்பதுதான்.

இப்படி உலக அரங்கில் பெருமையுடன் பீடு நடைபோடும் இஸ்ரோவிற்கு நாடு முழுவதும் உள்ள மையங்களில் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தின் எல்லையில் உள்ள மகேந்திரகிரி மலையடிவாரத்தில் உள்ள மகேந்திரகிரி மையமும் ஒன்றாகும்.

இது திரவ இயக்க அமைப்பு மையமாகும்.

பொதுவாக ராக்கெட்டின் கூரான தலைப்பகுதியில்தான் சேட்டிலைட் எனப்படும் ஆராய்ச்சி செய்யும் கருவிகள் அடங்கி இருக்கும். இந்த சேட்டிலைட்டை கொண்டு செல்ல பயன்படும் ராக்கெட் ஒவ்வொரு கட்டத்திலும் ஒருவிதமான எரிபொருளைக்கொண்டு மேலே உந்தி செல்லும், கடைசி உந்துதல் திரவ எரிபொருளால் செயல்படும்.

இந்த திரவ எரிபொருளின் உந்து சக்தி தொடர்பான ஆராய்ச்சி மற்றும் அது தொடர்பான வேலைகள் மகேந்திரகிரியில் நடைபெறுகின்றது. இங்கு நிரந்தரமாக 600 பேரும் ஒப்பந்த தொழிலாளர்களாக 1000 பேரும் பணியாற்றுகின்றனர்.

இந்த மகேந்திரகிரிக்குள் ஒரு அருமையான கண்காட்சி கூடம் உள்ளது.

இந்த கண்காட்சிக்குள் நுழைந்து வெளியே வரும் போது ராக்கெட்டால் (ஏவுகலம்) மக்களுக்கு என்ன பயன், மகேந்திரகிரியில் நடைபெறும் வேலைகள் என்ன, உங்கள் எடை பூமியில் ஒரு மாதிரியும் மற்ற கிரகங்களில் வேறு மாதிரியும் இருப்பதன் காரணம் என்ன என்பது போன்ற நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கு விடை கிடைக்கிறது. விடைகளுக்கு சான்றாக நிறைய ராக்கெட் மாதிரிகள் அது தொடர்பான சார்ட்டுகள் இடம் பெற்றுள்ளன.

ஒரு சின்ன உதாரணம் கடலுக்குள் மீன் பிடிக்க செசல்லும் மீனவர்கள் முன்பெல்லாம் மனம் போன போக்கில் மீன்களை தேடிப்போவார்கள், இப்போது அப்படி இல்லை விண்ணில் வலம்வரும் இந்திய செயற்கை கோளானது எங்கே மீன்கள் இருக்கிறது என்பதை துல்லியமாக சொல்லிவிடும் மீனவர்கள் நேரடியாக அங்கு சென்றால் போதும். தவிர இன்றைய மொபைல் போன் டெக்னாலாஜி உள்ளிட்ட பல்வேறு தொலை தொடர்பு ஆச்சர்யங்கள் எல்லாம் செயற்கை கோள்களின் துணையால்தான்.

இப்படி நமது ராக்கெட் சாதனைகளை சொல்லிக் கொண்டே போகிறது மகேந்திரகிரி இயக்க அமைப்பு மைய மைய கண்காட்சி கூடம்.

இவ்வளது சிறப்பு வாய்ந்த இந்த கண்காட்சி கூடத்தை மக்கள் இருக்கும் இடத்திற்கே கொண்டு போய் சேர்த்தால் என்ன என்று தினமலர் வழிகாட்டி குழுவினர் எண்ணினர்.

இந்த எண்ணம் முதன் முறையாக இப்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

பிளஸ் டூ முடித்த மாணவ, மாணவியருக்கான வழிகாட்டி நிகழ்ச்சி மதுரையில் வருகின்ற மார்ச் மாதம் 26,27,28; கோவையில் 28,29.30; திண்டுக்கல்லில் 30,31; புதுச்சேரியில் ஏப்ரல் 4,5,6; சென்னையில் 4,5,6; ஆகிய தேதிகளிலும் நடைபெற உள்ளது.

இந்த வழிகாட்டி அரங்கின் வளாகத்தினுள் இஸ்ரோவின் மகேந்திரகிரி மையத்தின் கண்காட்சி அரங்கம் தனியாக இடம் பெற உள்ளது. வழிகாட்டி நடைபெறும் நாட்களில் மையத்தின் விஞ்ஞானிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு கண்காட்சி பற்றி விளக்கங்கள் தர இருக்கின்றனர்.

ஆகவே இந்த முறை மாணவ, மாணவியர் மட்டுமல்லாது அவர்களது பெற்றோர்களும், உறவினர்களும், நண்பர்களும் கூட வழிகாட்டி நிகழ்ச்சிக்கு மறக்காமல் அவசியம் வாருங்கள் ,நமது நாட்டின் பெருமையை பாருங்கள், இதை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

இது தொடர்பாக மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவேண்டிய எண்: 9944309655.நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்...
- எல்.முருகராஜ்

முகமது ரபி.

கன்னியாகுமரியில் புகைப்பட பிரியன் நடத்திய புகைப்பட கருதரங்கு தொடர்பான போட்டோ வாக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கன்னியாகுமரி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை வித்தியாசமான முறையில் படமாக்கியவர்களில் இவரும் ஒருவர்.

எனது படங்கள் காப்பி ரைட் சட்டத்திற்கு உள்பட்டது என்று சொல்லக்கூடிய இந்தக் காலத்தில் சிரமப்பட்டு பணம் செலவழித்து எடுத்த தனது படங்களை அரசு விரும்பினால் இலவசமாக சுற்றுலா மேம்பாட்டிற்கு உபயோகித்துக் கொள்ளலாம் என்று அறிவித்தவர்.

கலைச்செல்வங்கள் அனைவருக்கும் போய்ச்சேர வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டவர்.

வடலூரில் பிறந்து, நெய்வேலியில் படித்து வளர்ந்தவர். தற்போது புதுச்சேரியில் உள்ள "ஹாங்கர் 17 'என்ற நிறுவனத்தில் கம்ப்யூட்டர் வரைகலை நிபுணராக உள்ளார். இவருக்கு சிறு வயது முதலே புகைப்படங்கள் மீது காதல் உண்டு.

நண்பர்கள் வைத்திருக்கும் கேமிராக்களைக் கொண்டு அவ்வப்போது படங்கள் எடுத்துவந்தார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்தான் சொந்தமாக "கேனன் கேமிரா செட்' வாங்கினார்.

அதன்பிறகு விடுமுறை விட்டால் போதும் கேமிராவை எடுத்துக்கொண்டு படம் எடுக்க கிளம்பி விடுவார். புகைப்படம் எடுப்பது இவருக்கு பொழுதுபோக்கு மட்டுமே.

கொஞ்ச காலம் போட்டோ ஆல்பம் டிசைனராக பணிபுரிந்ததில், வித்தியாசமான புகைப்படங்களைப்பற்றி தெரிந்து கொண்டார், மேலும் "கலர் கரெக்ஷன்' பற்றியும் புரிந்து கொண்டார்.

இதன் காரணமாக இவர் எடுக்கும் படங்களில் தேவைக்கு ஏற்ப, இவர் செய்யும் சின்ன, சின்ன கரெக்ஷன் காரணமாக படங்கள் தனித்துவம் பெற்று நிற்கின்றது.

"புதுச்சேரி போட்டோகிராபி கிளப் 'என்ற அமைப்பின் மூலம் குழுவாக சென்று படம் எடுப்பது, எடுத்த படங்களை பற்றி விவாதிப்பது, பின் அந்த படங்களை "முகநூலில்' பகிர்ந்து கொள்வது என்று எப்போதும் சுறு,சுறுப்பாக இயங்கிக் கொண்டு இருக்கிறார்.

நாம் கண்ணால் காணும் உலகம் வேறு, கேமிராவின் மூலம் காணும் உலகம் வேறு என்பதை புரிந்து கொண்டபின், எனது புகைப்படங்களை எப்படி வித்தியாசப்படுத்துவது என்பதில் தீவிரமாய் இருக்கிறேன்.

சர்வதேச அளவில் புகைப்படம் தொடர்பான சமூக வலைத்தளத்தில் இவரது படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது, இன்னமும் நிறைய படங்கள் எடுக்கவேண்டும், நிறைய சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ளார், வாழ்த்துக்கள்.

முகமது ரபியுடன் தொடர்பு கொண்டு பேச: 9843576850.