Saturday 26 October 2013

காடுவரை பிள்ளை,கடைசி வரை ஹரி...

- எல்.முருகராஜ்

கலைந்த தலை

செருப்பில்லாத கால்கள்.

அழுக்கு வேட்டி, சட்டை, வெள்ளந்தியான தோற்றம். இதுதான் ஹரியின் அடையாளம்.

யார் இந்த ஹரி.

மதுரை தத்தநேரி மயானத்தில் பிணங்களை எரிக்கவும், புதைக்கவும் செய்யக் கூடிய மயான உதவியாளராக பணியாற்றுபவர்.

சென்னையில் கடந்த வாரம் சுதேசி என்ற பருவ இதழ் நடத்திய சாதனையாளர்களுக்கான "துருவா விருது' வழங்கும் விழாவில் விருது பெறுவதற்காக உட்கார்ந்திருந்தார் அவர்.

தாய்,தந்தையை இழந்த நிலையில் வறுமையும், வாழ்க்கையும் விரட்ட இவர் 12 வயதில் தஞ்சம் அடைந்த இடம்தான் மதுரை தத்தநேரி மயானமாகும்.

பசிக்காக நேர்மையான எந்த வேலையும் செய்யத் தயராக இருந்த ஹரிக்கு அங்கிருந்த வெட்டியான் எனப்படும் மயான உதவியாளர்களின் உதவியாளாக இருக்கும் வேலை கிடைத்தது. வேலை கிடைத்தது என்பதோடு நேர, நேரத்திற்கு சாப்பாடு கிடைத்தது.

மயானம் இவருக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்தது, அதில் முக்கியமானது எதற்கும் ஆசைப்படாதே என்பதுதான்.

இதன் காரணமாக இவர் படிப்படியாக வளர்ந்து மயான உதவியாளராக மாறி கிட்டத்தட்ட நாற்பது வருட காலமாக இந்த வேலையை செய்த போதும், தனக்கு என்று எதுவும் சேர்த்து வைத்துக் கொள்ளாமல் தன் தேவைக்கு மேல் வருவது அனைத்தையும் சேவைக்காக செலவிட்டு வருகிறார்.

ஏழை மாணவ, மாணவியரை படிக்க வைப்பது, அரசு ஆஸ்பத்திரிகளுக்கு கட்டில் வாங்கிக் கொடுப்பது, உடல் ஊனமுற்றவர்களுக்கு மூன்று சக்கர சைக்கிள் வாங்கிக் கொடுப்பது, பார்வையற்றவர்களுக்கு ஊன்று கோல் வழங்குவது என்று ஏதாவது செய்து கொண்டே இருக்கிறார். கையில் கொஞ்சம் காசு இருந்துவிட்டால் தகுதியான ஆளை தேடிப் பிடித்து அவர்களுக்கு உதவி செய்ய இவர் கிளம்பி விடுவார்.

இதுவரை 2 லட்சத்து 88 ஆயிரம் சடலங்களை எரித்தும், புதைத்தும் உள்ளார். இதில் ஆயிரக்கணக்கான ஆதரவற்ற சடலங்களுக்கு இவரே உற்றமும், நட்புமாக இருந்து இறுதிச் சடங்கினை செய்துள்ளார்.

இந்த விஷயங்களை எல்லாம் கேள்விப்பட்டதன் அடிப்படையில்தான் அவருக்கு விருது வழங்கப்பட்டது. சுதேசி நிர்வாக ஆசிரியர் பத்மினி ரவிச்சந்திரன், முன்னாள் அமைச்சர் ஹண்டே, முன்னாள் போலீஸ் கமிஷனர் நந்தபாலன் உள்ளிட்டோர் ஒன்று சேர்ந்து வழங்கிய விருதினை வாங்கும்போது எழுந்த கைதட்டலின் சத்தத்தில் அரங்கம் அதிர்ந்தது.

எவ்வளவோ பேரின் சடலங்களை எரித்தும், புதைத்தும் வரும் ஹரியின் விருப்பம் என்ன தெரியுமா? தன் மரணத்திற்கு பிறகு தனது உடலை எரிக்கவோ, புதைக்கவோ கூடாது மாறாக மருத்துவ கல்லூரி மாணவர்கள் படிப்பதற்கு உதவியாக தனது உடலை மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கிவிட வேண்டும் என்பதுதான்.

ஹரியுடன் தொடர்பு கொள்ள: 7708375255.

C

மனித நேயத்திற்கு மற்றொரு பெயர் பாலன்...

- எல்.முருகராஜ்

தினமலர் இணையதளத்தில் சாதனை புரிய துடிக்கும் மாற்றுத் திறனாளிகள் குறித்து தொடர்ந்து கட்டுரைகள் வெளியாகி வருகிறது. இந்த கட்டுரைகள் வெளியான சில தினங்களில் சம்பந்தபட்ட மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து நமக்கு ஒரு தகவல் வரும்.

சார், சென்னையில் இருந்து மதுரா டிராவல் சர்வீஸ் தலைவர் வீ.கே.டி.பாலன் என்பவர் பேசினார், எல்லோரையும் போல பாராட்டுவதோடு நின்றுவிடாமல் என் தகுதிக்கேற்ற வேலையும் கொடுத்துள்ளார் என்று சொல்வார்கள்.
பசித்தவனுக்கு மீன் கொடுத்தால் அப்போதைக்கு அவனது ஒரு வேளை பசி மட்டுமே தீரும் ஆனால் அவனுக்கு மீன் பிடிக்க கற்றுக்கொடுத்தால் ஆயுளுக்கும் அவனது பசி தீரும்.

இப்படி ஒருவனது ஆயுட்காலத்திற்குமான பசியை போக்கும் விதத்தில் செயல்படும் பாலன் என்பவரை பார்த்து ஒரு நன்றி சொல்வதற்காக நேரம் ஒதுக்க கேட்டிருந்தேன்.

நான் சாதாரணமான ஆள் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம் இப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம் உடனே வாங்க என்றார்.

நான் போய் பார்த்த போதுதான் தெரிந்தது அவர் அவ்வளவு சாதாரணமான ஆள் இல்லை என்று.

இரண்டு ரூபாய் சம்பாதிப்பதற்காக அமெரிக்க தூதரக வாசலில் விடிய, விடிய கொட்டும் பணியில் கிடந்து தனது உழைப்பை ஆரம்பித்தவர் இன்று 20 கோடி ரூபாய்க்கும் மேலான வர்த்தகம் நடக்கும் மதுரை டிராவல் சர்வீஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

வருடத்தில் 365 நாளும் 24 மணி நேரமும் இயங்கும் இவரது நிறுவனம் சுற்றுலா தொடர்பான பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது. ஒரு போன் செய்தால் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் விமான டிக்கெட் தேடிவரக்கூடிய அளவிற்கு நிறுவனத்தை கணினிமயமாக்கியுள்ளார்.

கலைமாமணி விருது பெற்றுள்ளார், தமிழ் திரை இசைக் கலைஞர்களை ஒருங்கிணைத்து இவர் நிகழ்த்திய சாதனை இசைக் கச்சேரியை முறியடிக்க இன்னும் யாராலும்ம் முடியவில்லை.

 வருடத்திற்கு ஒரு முறை சாதனை படைப்பவர்களை தேடிப் பிடித்து பாராட்டு விழா நடத்தி ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து கவுரவித்து வருகிறார்.

வர்த்தகத்தை தாண்டி இவரிடம் மண்டிக் கிடக்கும் மனிதநேயம்தான் இவரைப்பற்றி பலரையும் பேச வைத்திருக்கிறது.

கதர் வேட்டி, சட்டை, ரப்பர் செருப்புடன் சிரித்த முகத்துடன் வரவேற்ற அவரது டேபிளில் இருந்த ஐபேட் சாதனத்தில் தினமலர் இணையதள செய்திகளை படித்துக் கொண்டிருந்தார்.

நான் "டி.வி.,' சினிமா பார்ப்பது கிடையாது பார்ப்பது எல்லாம் ஐபேடில் தினமலர் மட்டுமே அவ்வப்போது பார்த்து நான் என்னை எப்போதும் புதுப்பித்துக் கொள்கிறேன் என்றார்.

அப்படி அதில் படித்தபோதுதான் கம்ப்யூட்டரில் தேர்ச்சிபெற்ற கோவையில் உள்ள ஜெகதீஷ் என்ற மாற்றுத்திறனாளி இளைஞனை பற்றி படித்தேன், பேசினேன் இப்போது எங்கள் நிறுவனத்தின் வெப் சைட் டிசைனர் மற்றும் சூப்பர்வைசர் எல்லாம் அவர்தான் ஆன் லைனில் வேலை பார்க்கிறார். என் எதிர்பார்ப்பைவிட நன்றாக வேலை செய்கிறார்.
அது மட்டுமல்ல என் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் பலரும் மாற்றுத் திறனாளிகள்தான், அவர்களுக்கு தேவை எல்லாம் அனுதாபம் அல்ல ஒரு வாய்ப்புதான் அதை உணர்ந்து நான் வாய்ப்பு தருகிறேன் இப்போது நார்மலாக உள்ளவர்களை விட பிரமாதமாக வேலை செய்கிறார்கள்.

எல்லா இடங்களிலும் அரவாணிகள் நடந்து கொள்ளும் விதம் ஒருமாதிரியாக இருந்தால் பாலன் நிறுவனம் அமைந்துள்ள தெருவிற்குள் நுழையும் போதே அவர்களது அணுகுமுறை வேறாக இருக்கிறது. காரணம் அனைவரையும் ஒரு முறை அழைத்து பிரியாணி வாங்கிக் கொடுத்து தலைக்கு இருநூறு ரூபாய் கொடுத்ததுடன் உங்களுக்கு எல்லாம் இனிமே நான்தான் அப்பா, ஆகவே எங்கப்பாவா பார்க்க வந்திருக்கேன் என்று சொல்லி விட்டு வாருங்கள் வேண்டியதை கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார், சொல்லியபடியே செய்தும் வருகிறார், ஆகவே அரவாணிகளுக்கான அப்பாவாக இங்கே பாலன் இருக்கிறார்.

கையில், கழுத்தில், விரல்களில் எல்லாம் கிராம் கணக்கில் அல்ல கிலோ கணக்கில் தங்க ஆபரணங்களை அணிந்திருந்தவர் அன்னை தெரசாவை தரிசித்து திரும்பிய பிறகு அனைத்தையும் கழட்டிவிட்டு அன்றைய தினம் பூண்ட எளிமைக் கோலம்தான் இன்றைக்கும் தொடர்கிறது.

சாதி, மதம், அரசியலுக்கு அப்பாற்பட்டு சுற்றுலா, மனிதம் என்ற இரண்டிற்கு மட்டுமே முன்னுரிமை தரும் இவரின் வணக்கத்திர்க்குரியவர் தென்காசி அமர் சேவா நிறுவனர் ராமகிருஷ்ணன் மட்டுமே.

பள்ளி படிப்பை முடிக்காத இவரை இன்றைய தினம் கல்லூரிகள் போட்டி போட்டுக் கொண்டு பேச அழைக்கின்றன அந்த அளவு பேச்சாற்றல் மிக்கவர், அதே போல மனித நேய எழுத்தாளரும் கூட. இவர் தொகுத்து எழுதிய சொல்ல துடிக்குது மனசு எழுத்தாளர்களாலயே பெரிதும் வரவேற்று வாசிக்கப்பட்ட நூலாகும்.

பல பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் கையில் தவழும் காமராஜர் பற்றிய புத்தகம் இவரது முயற்சியில் வெளிவந்ததாகும்.,அடுத்ததாக செவி வழியாகவே பேசப்பட்டுவரும் நேர்மையின் சின்னமாய் வாழ்ந்து மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கன் பற்றிய ஒரு அற்புத பதிவை வெளிக் கொணரும் முயற்சியில் இருக்கிறார்.

நிறைவாக ஒன்று சொல்கிறேன் இந்த உலகில் யாரும், யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல அதிலும் ஊனமுற்றவர்கள் ஒரு போதும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல அதை நான் நன்கு உணர்ந்திருக்கிறேன் அவர்களுக்கு தேவை எல்லாம் ஒரு வாய்ப்பே.அந்த வாய்ப்பை தர நான் தயராக இருக்கிறேன் அதைப்பெற மாற்றுத் திறனாளிகள் தயராக இருக்கவேண்டும் அவ்வளவுதான்.

மனிதநேயத்தின் மறு உருவமாக தெரிந்த மதுரா டிராவல்ஸ் வி.கே.டி.பாலனுடன் தொடர்பு கொண்டு பேச: 9841078674.

Saturday 19 October 2013

வெள்ளையம்மா நம்மிடம் இப்போது இல்லையம்மா...

-எல்.முருகராஜ்

கடந்த ஒரு மாதமாக தஞ்சை பெரிய கோயிலின் உள்ளே உள்ள அந்த யானை மண்டபம் வெறிச்சோடிக் காணப்படுகிறது.

பழக்க தோஷத்தில் வரும் பக்தர்கள் பலரும் அந்த யானை மண்டபத்தை நோக்கி போவதும் பின்னர் மண்டபம் வெறுமையாக இருப்பதை பார்த்ததும்தான் ஞாபகம் வந்தவர்களாய் கண்களில் கண்ணீர் திரள சில நொடிகள் அந்த இடத்தில் நின்றுவிட்டு திரும்புவதுமாக இருக்கின்றனர்.

அந்த பக்தர்களின் கண்ணீருக்கு காரணம் சமீபத்தில் இறந்த பெரிய கோயில் யானை வெள்ளையம்மாள்.

நாட்டிலேயே அதிக வயதான யானைகளில் ஒன்று என்று பலராலும் பிரமிப்புடனும், பக்தியுடனும், பாசத்துடனும் பார்க்கப்பட்ட வெள்ளையம்மாள் யாரும் எதிர்பாராத ஒரு வேளையில் அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தி சென்று விட்டது.

வீரபாண்டிய கட்டபொம்மன் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடியதை அடுத்து அந்த ஆண்டு (1960) தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு நடிகர் திலகம் சிவாஜிகணேசன் ஒரு பத்து வயது பெண் யானையை பரிசாக கொடுத்தார். 

கட்டபொம்மன் படத்தில் சிவாஜிக்கு அடுத்தபடியாக அதிகம் பேசப்பட்ட பாத்திரம் வெள்ளையம்மாளாகும். "அஞ்சாத சிங்கம் என் காளை.. பஞ்சாய் பறக்கவிடும் ஆளை' என்று அந்த பாத்திரமாகவே மாறி நடித்தவர் நடிகை பத்மினி. அந்த பெயரையே யானைக்கும் வைத்துவிட்டார்.

தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் கோயிலில் இருந்து கடந்த 85ம் ஆண்டு பெரிய கோவிலுக்கு வெள்ளையம்மாள் நிரந்தரமாக இடம் பெயர்ந்தது. அதன்பிறகு கோயில் தொடர்பாக நடைபெறும் அனைத்து விழாக்களுமே வெள்ளையம்மாள் இல்லாமல் நடைபெறாது. நாள் தவறாமல் யானை வெள்ளையம்மாளிடம் வந்து வணங்கியும் ஆசீர்வாதமும் பெற்றுச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டேதான் சென்றது.

பொதுவாகவே யானைகள் ஐம்பது வயதைத் தாண்டினாலே கால்களின் எலும்பு மூட்டில் தேய்மானம் ஏற்பட்டு படுக்கமுடியாத நிலை ஏற்பட்டுவிடும், இந்த பிரச்னை உள்ள யானைகள் காட்டில் உள்ள மரங்களின் மீதோ, மலை அல்லது பாறைகளின் மீதோ சாய்ந்து கொண்டுதான் தூங்கும்.

இந்த பிரச்னை வெள்ளையம்மாளுக்கும் அறுபது வயதில் ஏற்பட்டது. கேரளா ஆயுர்வேத சிகிச்சை உள்பட அனைத்து சிகிச்சைகளும் வழங்கப்பட்டாலும் படுக்கமுடியால் நின்று கொண்டேதான் வெள்ளையம்மாள் நீண்ட காலம் தூங்கியது. ஆனால் தனது வேதனையை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தன்னை பார்க்கவரும் பக்தர்களை சந்தோஷத்துடன் ஆசீர்வாதம் செய்து கொண்டுதான் இருந்தது.

திடீரென சில நாட்களுக்கு முன் நிற்கவும் முடியாமல் படுத்தது, பின் வலிதாங்க முடியாமல் பெருங்குரலெடுத்து பிளிறியது. கால்நடை டாக்டர்கள், பாகன்கள், கோவில் ஊழியர்கள், பக்தர்கள் அனைவரும் ஒன்று திரண்டு நிற்க அனைவரையும் பார்த்த யானை வெள்ளையம்மாள் தனது துதிக்கையை தூக்கி ஆசீர்வாதம் செய்ய முயற்சித்து, அது முடியாமல் போகவே கண்களின் ஓரம் நீரை வழியவிட்ட நிலையில் தனது உயிரைவிட்டது. பார்த்துக் கொண்டு இருந்த அனைவரது கண்களிலும் கண்ணீர், நெஞ்சில் சொல்லமுடியாத சோகம்.

யானை மண்டபத்தின் பின் பகுதியில் குழி தோண்டி நூறு கிலோ விபூதி பத்து கிலோ உப்பு மற்றும் அபிஷேகப்பொருட்களை இட்டு நிரப்பி சிறப்பு பூஜை செய்தபிறகு யானையை அடக்கம் செய்தனர். தஞ்சை பெரிய கோவிலின் ஒரு அங்கமாகவே மாறியிருந்த வெள்ளையம்மாளை கடைசி முறையாக பார்க்கிறோம் என்ற எண்ணம் எல்லோர் முகத்திலும் எதிரொலிக்க பலர் பெருங்குரலெடுத்து அழுதனர்.

யானை வெள்ளையம்மாள் இறந்து நாட்கள் வாரங்களாகிவிட்டன அது மாதங்களே ஆனாலும் மனதைவிட்டு அகலாது என்பதே நிஜம்.

ஓவிய வடிவில் திருக்குறள் தந்துள்ள ஓவியர் நடராஜன்

- எல்.முருகராஜ்

லகின் மூத்த, இனிய, ஒப்புவமையற்ற மொழியான தமிழ் மொழியில் எண்ணற்ற காப்பியங்கள் இயற்றப்பட்டுள்ளன. இவைகளில் தனிச்சிறப்பு கொண்டது திருக்குறள்.

வாழ்க்கைக்கு தேவையான அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பாலையும் 1330 குறளில் வடித்திட்ட வள்ளுவனின் வார்த்தைகள் இன்றைய காலகட்டத்திற்கும் ஒத்துவருவதுதான் மிகப் பெரிய விஷயம்.

இதன் காரணமாகவே திருக்குறள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உலக பொதுமறையாக போற்றப்படுகிறது. இரண்டாயிரம் வருடங்களை தாண்டியும் இப்போதும் திருக்குறளுக்கு உரை பலரும் எழுதிக் கொண்டுதான் இருக்கின்றனர்.

ஆனால் ஒரே ஒருவர் மட்டும் 1330 குறளுக்கும் ஏற்ப ஓவியம் வரைந்துள்ளார்.

அவர் பெயர் நடராஜன், திருப்பூர் பக்கம் உள்ள நல்லூர் விஜயாபுரத்தில் குடியிருக்கும் இவர் ஒரு நல்லாசிரியர் விருது பெற்ற ஓவிய ஆசிரியராவார். இப்போது பணி ஓய்வு பெற்றுவிட்டாலும் ஓவியப்பணியில் இருந்து ஓய்வு பெறாமல் எப்போதும் தூரிகையும், கையுமாகவே இருப்பவர். பித்தன் சித்ர கூடம் அமைத்து இலவசமாக ஓவிய பயிற்சியளித்து வருபவர்.

சிறு வயது முதலே இயற்கை காட்சிகள், சாமி படங்கள், தேசிய தலைவர்கள், மனித நேயமிக்கவர்களை ஓவியங்களாக வரைந்தவர், யாரும் செய்திடாத ஒரு சாதனையை படைத்திட எண்ணினார்.
அப்போதுதான் இவரை பெரிதும் ஈர்த்திட்ட திருக்குறளை ஏன் ஓவியமாக வரைந்திடக்கூடாது என்று முடிவு செய்து களமிறங்கினார். 

1ஒவ்வொரு குறளுக்கும் ஏ3 பேப்பரில் தத்ரூபமாக குறளுக்கு ஏற்ப ஓவியம் வரைய ஆரம்பித்தார்.
இது பற்றி ஓவியர் நடராஜன் கூறுகையில், "அதிகாலை மூன்று மணிக்கு ஓவியம் வரைய ஆரம்பித்தேன். குறளின் அர்த்தத்தை நன்றாக உள்வாங்கி அதே நேரத்தில் எளிமைப்படுத்தும் விதத்தில் வரைந்தேன். வரைந்தேன் என்பதை விட வள்ளுவரோடு ஓரு வருட காலத்திற்கு மேல் வாழ்ந்தேன் என்றே சொல்லலாம். அதிலும் 250 குறள் மட்டுமே உள்ள இன்பத்து பாலை வரையும்போது அதிகம் கவனம் எடுத்துக்கொண்டேன் காரணம் கோடு கொஞ்சம் மாறினாலும் தவறான அர்த்தத்தையும் கொடுத்து விடுமே. ஆனால் எல்லாம் நல்லபடியாகவே முடிந்தது, காரணம் முன்பே சொன்னது போல வள்ளுவர் துணை நின்றதால்'' என்று சந்தோஷத்துடன் குறிப்பிட்டார்.

அகர முதல எழுத்தெல்லாம் எனும் முதல் குறளில் துவங்கி 1330 குறளுக்கும் ஓவியம் வரைந்து முடித்திட்ட போது அது 13 தொகுதிகளை கொண்டிருந்தது. இதற்கு திருக்குறளோவிய மத நல்லிணக்க தேசிய ஒருமைப்பாட்டு ஓவியப்பேழை' என்ற தலைப்பிட்டுள்ளார்.

இந்த குறளோவிய பேழையை போட்டோ பிரின்ட் மூலமாக கையடக்க புத்தகமாகவும், சிடியாகவும் மாற்றி முதல்வர் மூலமாக வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளார். இந்த முயற்சி வெற்றி பெறுவதை அடுத்து பாரதியார் கவிதைகள் துவங்கி இனியவை நாற்பது வரையிலான பல்வேறு தமிழ இலக்கியங்களையும் ஓவியமாக படைத்திட எண்ணியுள்ளார்.

இவரது எண்ணமும், எழுத்தோவியமும் வெற்றி பெறட்டும்.

இவருடன் தொடர்பு கொள்ள: 99762 55579, 0421-2375124.Friday 11 October 2013

கை வலிக்குதே...

உயரதிகாரிகள் தங்களுக்கு வேலை செய்ய நியமிக்கப்பட்ட‘ டவாலிகளை’ தங்களது குடும்பத்திற்கும் வேலை செய்ய நிர்ப்பந்திக்கும் கொடுமை  எல்லா இடங்களிலுமே நடப்பது சகஜம்தான் போலும்.இங்கே தான் பெற்ற பிள்ளையை பொது இடத்தில் ‘ டவாலியிடம்’ கொடுத்துவிட்டு குழந்தைக்கு உரியவர் கோவிலுக்கள் போய்விட்டார்.அவர் எப்போது வந்து, பிள்ளையை வாங்கி தன் கைவலி தீர்ப்பாரோ என்ற ஆதங்கத்துடன் காத்து நிற்கிறார்.

இடம்:திருமைல
படம்:முருகராஜ்
நன்றி:தினமலர்.காம்

Thursday 10 October 2013

நாங்களும் ஆடுவோம்ல...

பாரத்தவரல்லாம் ஆடலாம்,
பக்திபரசவத்தோடு பாடலாம்...

இடம்:திருமலை
படம்:முருகராஜ்
நன்றி:தினமலர்.காம்

Wednesday 9 October 2013

கூட்டம் கண்ணைக்கட்டுதா ராகவேந்திரா...

இடம்:திருமலை
படம்:முருகராஜ்

நன்றி:தினமலர்.காம்

ஆழம் விழுதினைப்போல உறவு 
ஆயிரம் இருந்து என்ன?
வேர் என நீ இருந்தாய்
நான் வீழ்ந்துவிடாதிருந்தேன்...

தரிசனம்காண வந்த மூத்த தம்பதியர்.

இடம்:திருமலை
படம்:முருகராஜ்
நன்றி:தினமலர்.காம்
Tuesday 8 October 2013

நான் கடவுள் இல்லை - நீதிபதி சந்துரு

- எல்.முருகராஜ்
நான் கடவுள் இல்லை அப்புறம் எதற்கு மாலை போடுகிறீர்கள்.

எனக்கு குளிரவில்லை அப்புறம் எதற்கு சால்வை போற்றுகிறீர்கள்.

எனக்கு பசியில்லை அப்புறம் எதற்கு பழங்கள் கொண்டுவருகிறீர்கள்.

இப்படி இந்த நாட்டில் இன்றைய தினம் ஒருவரால் "தில்'லாக பேசமுடியும் என்றால் அது முன்னாள் ஐகோர்ட் நீதிபதி சந்துரு ஓருவரால்தான் முடியும்.

அவரை பேட்டிக்காக சந்திக்க சென்றபோது அசந்துவிட்டேன், காரணம் பலரது வீட்டிற்குள் நூலகம் இருக்கும், ஆனால் அவரது வீடே நூலகத்திற்குள்தான் இருந்தது, அந்த அளவிற்கு வீட்டில் திரும்பிய திசைகளில் எல்லாம் புத்தகங்கள், புத்தகங்கள், புத்தகங்கள்தான். அந்த புத்தகங்களில் பெரும்பாலானவை சட்டம் சம்பந்தபட்ட புத்தகங்களே.

எத்தனையோ நீதிபதிகள் ஓய்வு பெறுகிறார்கள் ஆனால் இப்படி ஒரு நீதிபதி ஓய்வு பெறப்போகிறாரே என்ற ஆத்மார்த்தமான கவலையுடன் ஒருவரது ஓய்வு நாளை ஊடகங்கள் பெரிதாக படம்பிடித்தன என்றால் அது இவர் ஒருவரது ஓய்வு நாளாகத்தான் இருக்கும்.

ஓய்வு பெறும் நாளன்றும் வேலை பார்த்தார், வழியனுப்பு விழா என்ற சம்பிரதாயம் எல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு அன்று மாலையே அரசாங்கம் தனக்கு வழங்கிய காரை ஒப்படைத்துவிட்டு, மின்சார ரயிலேறி வீட்டிற்கு வந்தவர். முன்கூட்டியே தனது சொத்து விவரங்களை தலைமை நீதிபதியிடம் ஒப்படைத்தார்.

எளிமையும், நேர்மையும் பலரிடம் இருக்கும் இத்துடன் திறமையும் இவர் ஒருவரிடம்தான் கொட்டிக்கிடக்கிறது, அத்துடன் யாரிடமும், எதையும் எதிர்பார்க்காத தன்மை கொண்டவர்.

இவர் வழங்கிய தீர்ப்புகள்தான் இனி வருங்காலத்தின் சட்ட மேற்கோளாக காட்டப்பட இருக்கின்றது, அந்த அளவு ஆழமான சட்ட அறிவுடனும், சமூக சிந்தனையுடனும், அற்புதமான மேற்கோள்களுடனும் கூறப்பட்டவையாகும்.

பெண் கடவுளாக இருக்கும்போது ஒரு பெண் பூசாரியாக இருக்கக்கூடாதா? எந்த ஆகம விதிகளிலும், புத்தகத்திலும் அப்படி பெண் பூசாரி கூடாது என்று கூறப்படவில்லை என்பதை ஆதாரமாக பூர்வமாக சொல்லி பெண் பூசாரிகள் நியமனத்திற்கு வழிகண்டவர்.

தலித் பெண் சமைத்து சாப்பிடுவதா என்று அவரை வேலையைவிட்டு ஒரு பள்ளி நிர்வாகம் தூக்கியது. சம்பந்தபட்ட பெண்ணின் வழக்கு இவரிடம் வந்தது. பல்வேறு உதாரணங்களுடன் இவருக்கு வேலை வழங்கவேண்டும் என்று இவர் வழங்கிய தீர்ப்பு காரணமாக அவசர அரசாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டு இவரால் தமிழகத்தில் இன்று 22 ஆயிரம் தலித் பெண்கள் சமையல் வேலை பார்த்து வருகின்றனர்.

கதர் உடை அணிந்து வந்ததற்காக வேலை நீக்கம் செய்யப்பட்ட விமானநிலைய பெண் அதிகாரியின் வழக்கில் இவர் சொன்ன தீர்ப்பு காரணமாக இழந்த வேலை கிடைத்ததுடன் கதர் குறித்த பார்வையே மாற்றி அமைத்தது.

தனி சுடுகாடு வேண்டும் என்று கேட்டு வந்த வழக்கில் இவர் தீர்ப்பு அளிக்கும்போது சொன்ன மேற்கொள்களால் தமிழக சுடுகாடுகளில் இப்போது சமரசம் உலாவுகிறது.

மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று சொல்லி வேலையை விட்டு நீக்கப்பட்ட ஒருவருக்கான வழக்கில் தீர்ப்பு சொல்லும் பொறுப்பில் இருந்தபோது அவர் மனநலம் சரியாக இருக்கிறது என்பதை அழகாக நிரூபித்தது மட்டுமின்றி அரசாங்க வேலை பார்ப்போருக்கு உரிய பணிப் பாதுகாப்பு குறித்தும் ஒரு வரையறை செய்தவர்.

எதைப்பற்றி பேசினாலும் அதற்கான ஆதாரத்தை எடுத்துகாட்டுகிறார். நான் போனபோது அவருக்கு என்று எந்த உதவியாளரும் இல்லை, அவரே ஒவ்வொரு அறையாக போய் அதற்கான புத்தகங்கள், கோப்புகளை எடுத்துவந்து புள்ளிவிவரங்களை தந்தார். இடையிடையே பிளாஸ்கில் கொண்டு வந்திருக்கும் காபி மற்றும் சுண்டல் போன்றவைகளை சாப்பிடுகிறார் மறக்காமல் நமக்கும் கொடுக்கிறார்.

சட்டத்தின்படியான ஆட்சி நடக்கும் நம்நாட்டில் சட்ட அறிவு என்பது மக்களிடம் குறைவாக இருப்பது வருத்தத்தை தருகிறது, ஒன்று தெரியுமா எனக்கு சட்டம் தெரியாது என்று சொல்லி எந்த குற்றத்தில் இருந்தும் தப்பமுடியாது, சட்டத்தில் இருந்து விலக்கும் பெறமுடியாது என்கிறார்.

ஆயுள் தண்டனை பற்றிய கேள்விக்கு அது பதினான்கு ஆண்டுகளுக்கான தண்டனை என்று இங்கும், மேற்குவங்கத்தில் அது இருபது ஆண்டுகள் என்றும் வைத்திருக்கிறார்கள் உண்மையில் ஆயுள் தண்டனை என்றால் அது ஆயுளுக்குமான தண்டனைதான். கைதியின் நன்னடத்தை அரசாங்க விதி, சலுகை, கொள்கை என்று சொல்லி முன்கூட்டியே விடுவிப்பது வேறுவிஷயம்.

பொதுவாக வழக்குகள் தாமதப்படுகிறது என்ற கேள்விக்கு அழுத பிள்ளைக்குதான் பால் என்ற கதை கோர்ட்களிலும் இருப்பது வேதனைதான் வரக்கூடிய நெருக்கடிகளின் அடிப்படையில்தான் வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன இந்த நிலைமாறிட வேண்டும்தான் என்றார்.

இப்போது சினிமா பார்த்துவிட்டு என்கவுன்டரில் குற்றவாளி துப்பாக்கியால் சுட்டுக்கொல்வதை நியாயப்படுத்துகிறார்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் மூலமாகவே தண்டிக்கப்பட வேண்டும்.

ஹெல்மெட்டை அணியாமல் வாகனம் ஓட்டுவது, சில ஊர்களில் குற்றம் என்கிறார்கள் சில ஊர்களில் குற்றம் இல்லை என்கிறார்கள் என்ற கேள்விக்கு அது குற்றமா இல்லையா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும் உங்கள் மனதின் பக்கத்தில் நின்று அது பாதுகாப்பானாதா இல்லையா என்று பதில் தேடுங்கள் விடைகிடைக்கும் என்கிறார்.

இப்படி பல்வேறு வழக்குகளின் தீர்ப்புகள் குறித்து ஆழஅகலத்துடன் விவரித்து எந்த கேள்விக்கும் சட்டத்தின் வாயிலாக அவர் சொன்னவிதம் பல நாட்களுக்கு மனதில் நிற்கும். இங்கே சுருக்கமாக சொல்லியிருக்கிறோம் மற்றபடி ஒவ்வொரு தீர்ப்பு மற்றும் அதன் பின்னணியை வைத்து ஒரு புத்தகமே போடலாம்.

விடைபெறும்போது வாசல்வரை வந்து வழியனுப்பி வைத்த விதம் அவரது உயரத்தை இன்னும் கூட்டியது.
ஆயிரம்தான் மேல்நாட்டு நடனங்கள் ஆடப்பட்டாலும்,குத்தாட்டம் கும்மாளமிட்டாலும் நமது பராம்பரியமிக்க நாட்டுப்புற நடனத்தின் அழகே தனி

இடம்:திருமலை
படம்:முருகராஜ்
நன்றி:தினமலர்.காம்

Sunday 6 October 2013

திருமலை மலர்க்கண்காட்சியில்

- எல்.முருகராஜ்

திருமலையில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வண்ணமிகு மலர்கண்காட்சி பார்ப்போர் மனதை கவர்ந்துவருகிறது.

வெளிநாட்டில் இருந்து தருவிக்கப்பட்ட மலர்கள் உள்பட பல்வேறு மலர்களின் அழகு கண்ணைப் பறிக்கிறது.

இயல்பாகவே திருமலையில் நிலவும் குளிரான சீதோஷ்ண சூழ்நிலை காரணமாக மலர்கள் புத்தம் புதிதாக பொலிவு குறையாமல் காணப்படும்.அந்த மலர்களுக்கு விடாமல் தண்ணீர் தெளித்து வருவதால் கூடுதல் பசுமையுடன், கூடுதல் அழகுடன் காணப்படுகிறது. 

துதிக்கையை ஆட்டும் யானை, பறக்கும் பட்டாம்பூச்சி போன்றவை மிகவும் அழகாக இருக்கிறது.

இது போக ஸ்ரீவிஷ்ணுவின் பல்வேறு திருவிளையாடல்கள் சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பரந்தாமனின் பாற்கடல், திரௌபதியின் கவுரம் காத்த படலம் போன்றவைகளும் அழகுற அமைந்துள்ளது.

இன்னும் பழமையான பல விஷயங்களுடன் திருமலைக்கு வரும் பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தும் விதத்தில் உள்ள இந்த மலர்கண்காட்சி பிரம்மோற்சவம் முடியும்வரை (13/10/13) நடைபெறும். திருமலைக்கு வருபவர்கள் கட்டாயம் இந்த மலர்க் கண்காட்சியை பார்த்து செல்லவும் அல்லது இந்த மலர்க்கண்காட்சியை பார்ப்பதற்காகவது திருமலைக்கு வந்து செல்லவும்.

Thursday 3 October 2013

நெசவாளர் பானுமூர்த்திக்கு லட்சத்தைவிட மகிழ்ச்சி தருவது எது?
- எல்.முருகராஜ்புதிய கண்டுபிடிப்புகளுக்கான முதல் பரிசை பெறுபவர் வேலூர் மாவட்டம் ஆரணியை அடுத்துள்ள துருகம் பகுதியைச் சேர்ந்த நெசவாளி பானுமூர்த்தி என்று அறிவித்து ,ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கிய போது கோவை கொடீசியாவில் திரண்டிருந்த மொத்த கூட்டமும் எழுந்து நின்று ஆர்ப்பரித்து கைதட்டி மகிழ்ந்தது.

யார் இந்த பானுமூர்த்தி, இவரது கண்டுபிடிப்புதான் என்ன.?

கைத்தறி தொழிலும்,அந்த தொழிலில் ஈடுபட்டுள்ள நெசவாளர்களும் செழிப்புடன் காணப்படும் துருகம் பகுதியைச் சேர்ந்தவர் பானுமூர்த்தி. பத்தாவது படிக்கும்போது எதிர்பாராதவிதமாக இவரது தாய் இறந்துவிட, பெரியவன் என்ற முறையில் குடும்ப பாரத்தை தந்தையுடன் பகிர்ந்து கொள்ளும் பொருட்டு பதினான்கு வயதில் கைத்தறி தொழிலில் இறங்கினார்.

கொஞ்சம், கொஞ்சமாக இந்த தொழிலின் நுணுக்கத்தை கற்றுத் தேர்ந்தார். தறியில் நெய்த புடவைகளை கொண்டு போய் கொடுக்கப்போகும் போது, கொஞ்சம் புது டிசைனில் நெய்ய வேண்டும் ஆனா அது உங்களால முடியுமா? என்று சொல்லியிருக்கின்றனர். இவருக்கு "சுருக்'கென்று பட்டது . என்னால் நிச்சயமாக முடியும் என்று சொல்லி ஆர்டரை கேட்டு வாங்கி வந்து நெய்து கொடுத்துள்ளார்.

 இதன் காரணமாக பாராட்டும், ஆர்டர்களும் குவிந்தன.

இதற்கு பிறகு மேலும் மேலும் தொழிலில் பல நுணுக்கங்களை கற்றவர் கடைசியாக ஒரு புதிய விஷயத்தை கண்டுபிடித்து இந்த கைத்தறி தொழிலில் புகுத்தினார்.

இந்த புதிய கண்டுபிடிப்பை தறியில் அமல்படுத்த சின்ன,சின்ன மாற்றங்கள் செய்தால் போதும், இதற்கு ஐநூறு ரூபாய் வரைமட்டுமே செலவாகும்.ஒரு அரைமணி நேர பயிற்சி வேண்டும். அவ்வளவுதான்.
இதன் மூலம் ஒருவர் இரண்டு மணிநேரம் நெய்வதை ஒரு மணி நேரத்தில் நெய்து விடலாம், இரண்டு ஆள் செய்வதை ஒரு ஆளே செய்துவிடலாம். நூலிழை கம்பிகளின் உறுதியும் ஐம்பது சதவீதம் அதிகரிக்கும். விருப்பப்பட்ட டிசைன்களை எளிதில் வடிவமைக்கலாம். குழந்தை தொழிலாளர் முறை அடியோடு ஒழியும்.

இந்த கண்டுபிடிப்பின் மூலம் இவரது தொழில் பெருகியது. இதன் மூலம் இவர் மட்டுமே பயன்பெற விரும்பவில்லை, மாறாக தான் சார்ந்த நெசவாள சமுதாயமே பயன்பெற வேண்டும் என்று விரும்பினார்.
ஆனால் பத்தாவது படிப்பைக்கூட தாண்டாத என்னால் இந்த கண்டுபிடிப்பை எப்படி வெளியே கொண்டு செல்வது என்று நினைத்த போதுதான், தினமலர் செய்தியை பார்த்த சேவா தொண்டு நிறுவன விவேகானந்தன் என்பவர் முயற்சியால், கோவை கொடீசியாவில் நடைபெறும் ஐ3 எக்ஸ்போவில் எனது கண்டுபிடிப்பை இடம் பெறச்செய்யும் வாய்ப்பை பெற்றேன் என்கிறார் பானுமூர்த்தி.

அவர் மேலும் பேசுகையில் நெசவு தொழிலை நேசித்து செய்பவர்கள் வாழ்க்கையில் என்றும் வளம்தான். என்னுடன் மகன் சீனிவாசன், மகள் வனிதா ஆகியோர் இந்த நெசவு தொழில் செய்துவருவதை பெருமையாக கருதுகிறேன். என் தந்தையும் குருவுமான லட்சுமணன் 83 வயது வரை நெசவு செய்து ஆரோக்யமாக இருந்தார் என்று சந்தோஷத்துடன் குறிப்பிட்டார்.

கோவையின் சுற்றுப்புற பகுதியில் நிறைய நெசவாளர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு நிச்சயம் இந்த கண்டுபிடிப்பு பயன்படும் என்ற நோக்கில்தான் நான் இங்கு அரங்கம் அமைத்தேன். கிட்டத்தட்ட ஐநூறு பேர் அரங்கம் அமைத்திருந்தும், சமுதாயத்திற்கு பயன்படக்கூடிய அருமையான கண்டுபிடிப்பு என்று, அறிஞர்கள் கூடி எனது கண்டுபிடிப்பை அங்கீகரித்து முதல் பரிசு வழங்கி கவுரவித்திருக்கிறார்கள், மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்றவர், பரிசு பெறும் போது, " மேடையேறி பேசி பழக்கம் இல்லை இருந்தாலும் ஒரு வார்த்தை சொல்லிக் கொள்கிறேன், இந்த கண்டுபிடிப்பை கத்துக்கிட்டு ஓரு நூறு நெசவாளிகளாவது பயன் பெற்றார்கள் என்றால் அது இப்ப எனக்கு கிடைச்ச ஒரு லட்ச ரூபாய் பரிசைவிட மகிழ்ச்சிதரும்' என்றார்.

தனக்கு கிடைத்த பரிசு பணத்தை வைத்து தனது கண்டுபிடிப்பை எளிமையாக வீடியோ சி.டி போன்ற ஊடகங்கள் மூலமாக மக்களிடம் கொண்டு போக எண்ணியுள்ளார். நெய்யும் தொழிலை தெய்வமாக போற்றி அதில் தான் உயர்ந்தால் போதாது தன்னைப்போல பிறரும் உயர வேண்டும், வளர வேண்டும், நன்றாக வாழவேண்டும் என்று எண்ணம் கொண்டுள்ள அபூர்வ மனிதர் பானுமூர்த்தியுடன் தொடர்பு கொண்டு பேசுவதற்கான எண்: 99944 66498.