Saturday, 27 July 2013

உடும்பை சாப்பிட்ட ராஜநாகம்...

உடும்பை சாப்பிட்ட ராஜநாகம்...
- எல்.முருகராஜ்இன்றைக்கு பிரபலமாக பேசப்படும் "வைல்டு லைப் போட்டோகிராபி' துறையில், எல்லோருக்கும், எதிர்பார்க்கும் எல்லாமே எப்போதுமே கிடைத்துவிடாது, அந்த வகையில் ஒரு ஐம்பது வருட தேடுதலுக்கு பிறகு கிடைத்த ஒரு அபூர்வ படம் பற்றிய பதிவு இது.

ராஜேஷ் பேடி.

டில்லியை சேர்ந்தவர், வைல்டு லைப் போட்டோகிராபியில் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகாலமாக இருப்பவர், சர்வதேச புகழ் பெற்றவர்.

உத்தர்கண்ட் மாநிலத்தில் உள்ள கார்பெட் நேஷனல் பார்க்கிற்கு கடந்த ஜூன் மாதம் சென்றிருந்தார். இவர் போனபோது கடுமையான மழை. மழை பெய்தால் எந்த மிருகமும் வெளியில் வராது என்பதுடன் புகைப்படம் எடுப்பதும் சிரமம் என்பதால் அறையிலேயே இருந்தார். இரண்டாவது நாளும், மூன்றாவது நாளும் கூட மழை நின்றபாடில்லை.

எவ்வளவு நேரம்தான் ரூமிலேயே அடைபட்டு கிடப்பது, மிருகங்கள் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் பராவாயில்லை என்ற எண்ணத்துடன் பலர் காட்டுக்குள் புகைப்படக் கருவியுடன் சென்றுவிட்டனர்.
நிச்சயம் மிருகங்கள் கிடைக்கப்போவது இல்லை என்ன செய்யலாம் என ராஜேஷ் பேடி அங்கு இருந்த கிராம மக்களிடம் பேசிக்கொண்டிருந்தார், அப்போதுதான் அவர்கள் ஒரு விஷயத்தை ‌சொன்னார்கள்.
இவ்வளவு மழை பெய்தால் ராஜநாகம் வெளியே வரும் என்பதுதான் அந்த தகவல்.

உலகிலேயே மிக நீளமானதும் (12 அடி), கொடிய விஷம் கொண்டதுமான ராஜநாகம் சிறிது தொலைவில் இருக்கிறது என்பது தெரிந்ததும் சரி ராஜநாகத்தை படம் எடுப்போம் என்று முடிவு செய்து குறிப்பிட்ட இடத்திற்கு போய் மறைவில் காத்திருந்தார்.

நீண்ட நேரமாகியும் ராஜநாகம் கிடைக்கவில்லை.

பிறகு மறுநாளும் சென்றார், அப்போதும் நீண்ட நேரம் காத்திருப்பு தொடர்ந்தது, ராஜநாகம் வரவில்லை, பொறுமையை கைவிடாமல் மீண்டும் காத்திருந்தார்.

அந்த நேரம் உடும்பு ஒன்று அந்த பகுதியில் ஊர்ந்து வந்தது, அதே நேரம் எதிர்திசையில் திடீர் சல, சலப்பு பார்த்தால் ராஜநாகம்.

சரி ஏதோ ஒரு பெரிய விஷயம் நடக்கப்போகிறது என்பதை எதிர்பார்த்து மூச்சுவிடும் சத்தம் கூட கேட்காமல் கேமிராவை ஆன் செய்து காத்திருந்தார்.

ராஜநாகம் எதிராளியை எந்த இடத்தில் கடித்தாலும், அல்லது கொத்தினாலும் சில வினாடிகளில் அதன் விஷம் மூளை நரம்பை தாக்கி இதயத்தை செயலிழக்கச் செய்துவிடும், அடுத்த சில விநாடியில் மரணம் சம்பவித்துவிடும்.

இந்த நிலையில் ராஜநாகம் சடாரென தனது விஸ்வரூப பாய்ச்சலை காண்பித்து உடும்பின் இடுப்பில் கொத்தியது, ஆனால் உடும்பிற்கு எதுவும் நடக்கவில்லை, இது உடும்பின் கனத்த தோலின் காரணமாககூட இருக்கலாம், ஆனால் அடுத்த நொடியே உடும்பு தப்பிவிடாதபடி நேர் எதிரே நின்று சட்டென்று தனது வாயால் உடும்பின் தலையை முழுமையாக கவ்வியது. உடும்பு எவ்வளவோ பேராடிப்பார்த்ததும் தப்ப முடியவில்லை, சில விநாடிகள்தான் இந்த முறை விஷம் சரியாக பாய்ச்சப்பட்டது போலும் உடும்பின் துடிப்பு அடங்கியது.
உடும்பின் உடலோடு பின் மறைவிடத்திற்கு ராஜநாகம் சென்றுவிட்டது.

மறைவிடத்தில் இருந்து வெளியே வந்த ராஜேஷ் பேடி தனது கேமிராவின் மானிட்டரை இயக்கிப் பார்த்தபோது காட்சிகள் பலவும் தத்ரூபமாக கேமிராவில் பதிவாகியிருந்தது.

ராஜநாகத்தை படமெடுக்க வந்து சற்றும் எதிர்பாராதவிதமாக ராஜநாகம் உடும்பை கொல்லும் காட்சியை படமெடுத்த நிலையில், எடுத்த படத்தை அங்குள்ள வார்டன் பிஜேந்திர சிங்கிடம் போட்டுக் காண்பித்தார், அவர் இது உண்மையிலேயே அபூர்வமான படம் என்று சொல்லி பாராட்டியுள்ளார்.

ராஜநாகத்தை படமெடுக்க வேண்டும் என்ற கடந்த ஐம்பது வருட கனவு கூடுதல் சிறப்புடன் நனவான மகிழ்ச்சியில் தற்போது ராஜேஷ் பேடி உள்ளார். அவரது துணிச்சலும், பொறுமையும் நிச்சயம் பாராட்டுதலுக்கு உரியதுதான்.


இவர் எடுத்த ராஜநாகம் தொடர்பான மேலும் சில படங்களை பார்வையிட சிவப்பு பட்டையில் உள்ள போட்டோ கேலரி பகுதியை கிளிக் செய்யவும்.


நான் தென்காசி சந்தோஷ் பேசுகிறேன்...

நான் தென்காசி சந்தோஷ் பேசுகிறேன்...
- எல்.முருகராஜ்
சந்தோஷ் என்கின்ற பழநி மாரியப்பன்.

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியைச் சேர்ந்தவர், இருபத்தியொரு வயதாகும் இவருக்கு சிறுவயதில் ஏற்பட்ட பார்வைக்கோளாறு படிப்படியாக அதிகமாகி தற்போது பார்வையை முழுமையாக இழந்துள்ளார், மேலும் கேட்கும் சக்தியும் குறைவு, இத்துடன் சிறுவயதில் ஏற்பட்ட சர்க்கரை நோய் காரணமாக தினமும் இரண்டு முறை இன்சுலின் போடவேண்டும்.

இவ்வளவு பிரச்னை உள்ளவர் எப்படி இருப்பார், எப்போதும் வீட்டில் முடங்கிக் கிடப்பார் என்றுதான் யாருக்கும் எண்ணத்தோன்றும், ஆனால் உண்மையில் அப்படியில்லை கவலைப்படுவதால் குறைகள் குறையப்போவதில்லை என்ற யதார்தத்தை உணர்ந்து, தான் என்ன செய்ய முடியும் என்பதை புரிந்துகொண்டு தற்போது பல துறைகளில் சாதனை புரிந்தவராக உள்ளார்.

தென்காசி அருகே உள்ள ஆயக்குடி ஜெபி கல்லூரியில் பிஎட் படித்துவரும் இவரை முதலில் கல்லூரி நிர்வாகம் கல்லூரியில் சேர்ப்பதற்கு தயக்கம் காட்டியது. காரணம் சாதாரணமாக உள்ள கல்லூரி மாணவர்களோடு கலந்து அவர்கள் வேகத்திற்கு படிக்க முடியாதே என்பதால், ஆனால் கல்லூரியின் செல்லப்பிள்ளையே இப்போது சந்தோஷ்தான்.

காரணம் கல்லூரியின் சார்பில் நடைபெறும் பேச்சுப்போட்டி, வினாடி வினா போன்ற பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு கல்லூரிக்கு பெருமை சேர்த்து வருகிறார். கல்லூரியின் முதல்வர் முதல் வாயில் காப்பாளர் வரை சந்தோஷ் என்றால் இப்போது எல்லாம் தனி கவனம்தான், கவனிப்புதான்.

சந்தோஷ்க்கு மேலும் பல திறமைகள் உண்டு, நமக்கெல்லாம் இப்போதும் குடும்பத்தில் உள்ளவர்களின் போன் எண்ணைக் கேட்டால் மொபைலில் பார்த்துதான் சொல்வோம், ஆனால் சந்தோஷிடம் ஒருமுறை உங்கள் போன் எண்ணையும் பெயரையும் கூறிவிட்டு பிறகு எப்போது உங்கள் பெயரைச் சொன்னாலும் உங்கள் மொபைல் போன் எண்ணை உடனே சொல்லிவிடுவார்.

அடுத்ததாக ஒரு ஏதாவது ஒரு தலைப்பு கொடுத்து பேசுங்க தம்பி என்று சொன்னால் போதும் அடுத்த சில நிமிடங்களிலேயே நல்ல தமிழில் கொடுத்த தலைப்பில் சரளமாக பேசக்கூடிய வல்லமை உண்டு. இவரது தந்தை அம்பலவாணன் ஒரு பள்ளி ஆசிரியர், தன் பிள்ளையின் சந்தோஷத்திற்காக எதையும் செய்யக்கூடியவர், தலையை அடகு வைத்தாவது அவன் விருப்பத்தை நிறைவேற்றும் பாசக்கார தந்தை. இவரை ரோல் மாடலாகக் கொண்டு தானும் ஒரு ஆசிரியராக வரவேண்டும் என்பது சந்தோஷின் விருப்பம். இவரது விருப்பத்தை நிறைவேற்ற இவரது தந்தையும், தாய் சண்முகமாலதியும், தம்பி சச்சின் பிரபாகரனும் நிறையவே துணை நிற்கின்றனர். இவர்களைத் தாண்டி இவர்களது உறவினர் அலங்கார் ரிசார்ட்ஸ் சின்னவர் ஈஸ்வர்ராஜ், சந்தோஷை சந்தோஷப்படுத்தவும், மேடையேற்றி பிரபலப்படுத்தவும் நிறைய பாடுபட்டு வருகிறார்.

அதிலும் தாய் சண்முகமாலதியின் பங்கு அலாதியானது தனது மகனுக்கு பார்வை கிடைக்க வேண்டும் என்பதற்காக எந்த அளவிற்கும் தன்னை வருத்திக் கொள்ளத் தயங்காதவர், மருத்துவ செலவை சரிக்கட்ட வேண்டும் என்பதற்காக வீட்டு உபயோக பொருட்கள் வியாபாரம் செய்து வருகிறார். சந்தோஷ்க்கு தாய்க்கு தாயாக மட்டுமின்றி, நல்ல தோழனாக, நல்ல ஆசிரியராக, நல்ல குருவாக என்று எல்லாமாக இருந்து வழிகாட்டி வருகிறார். இப்போது கூட பார்வை இல்லாதவர்களுக்கு பயன்படும் வகையில் வெளிநாட்டில் வாய்ஸ் கம்ப்யூட்டர் இருப்பதாக அறிந்து அந்த கம்ப்யூட்டரை தனது மகனுக்கு எப்படியாவது தருவித்து கொடுக்க வேண்டும் என்று முயற்சித்து வருகிறார், தெரிந்த வாசகர்கள் வழிகாட்டி உதவலாம். சண்முகமாலதியின் எண்: 9865664016.

சந்தோஷைப் பற்றி நிறைவாக சொல்ல வேண்டும் என்றால் அவர் தனது குறைகளைப்பற்றி ஒரு போதும் கவலைப்பட்டவர் கிடையாது. தானும் சந்தோஷமாக இருக்க வேண்டும் தன்னால் இந்த சமூகமும் சந்தோஷமாக இருக்கவேண்டும், நல்ல ஆசிரியராகி அடுத்த தலைமுறைக்கான அற்புதமான மாணவர்களை உருவாக்கவேண்டும் என்பதை லட்சியமாக கொண்டுள்ளார் அவரிடம் பேசுவற்கான எண்: 9659294079. இவர் போனை எடுக்கவில்லை என்றால் கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கிறார் என்று அர்த்தம் ஆகவே இரவு ஏழு மணிக்கு மேல் பேசவும், பேசுபவர்கள் சந்தோஷ்க்கு கொஞ்சம் காதிலும் பிரச்னை என்பதை புரிந்து கொள்ளவும். நன்றி!


இயற்கை குடிகொண்டுள்ள இனிய பொக்கிஷம் குற்றாலம்

இயற்கை குடிகொண்டுள்ள இனிய பொக்கிஷம் குற்றாலம்
- எல்.முருகராஜ்குற்றாலம்.

 இயற்கை தந்துள்ள இணையில்லா நன்கொடை

ரியல் எஸ்டேட்காரர்களின் பிடியில் சிக்கி அதிகம் சீரழியாத தண்ணீர் தேசம்.

நெல்லை மாவட்டம் தென்காசி வட்டத்தில் தமிழகத்தின் எல்லையாக இருக்கும், அகத்தியர் வாசம் செய்த பொதிகை மலையில் பிறப்பெடுத்து வரும் ஐந்தருவி, மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி, செண்பகா அருவி, புலியருவி என்று பல்வேறு அருவிகளைக் கொண்டுள்ள அற்புதமான இடம்.

ஏழை,எளிய மக்களுக்கு இறையும், இயற்கையும் கொடுத்த வரப்பிரசாதம்.

அதிகம் செலவில்லாமல் குடும்பத்துடன் குதூகலிப்பதற்கு ஏற்ற ஒப்பற்ற தலம்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகு இந்த வருடம்தான், சீசன் துவங்கியது முதல் எல்லா அருவிகளிலும் தண்ணீர் வற்றாது கொட்டிவருகிறது. இங்குள்ள மலைகளுக்குள் பெய்யும் மழையானது மூலிகை செடிகளின் வழியாக அருவியாக விழுவதால் எவ்வளவு நேரம் குளித்தாலும் அலுக்காது.

தீம் பார்க்குளில் தேக்கிவைக்கப்பட்ட தண்ணீரை மோட்டார் மூலம் சிறிது உயரத்திற்கு எடுத்துச் சென்று செயற்கையாக உருவாக்கப்பட்ட அருவியாக விடுவார்கள், பத்து நிமிடம் குளிப்பதற்கு நிறைய கட்டணம் உண்டு தவிர நிறைய மின்சார சக்தியும் செலவிட வேண்டும், பலர் குளித்த தண்ணீரேயே திரும்ப, திரும்ப குளிக்கவேண்டிய சுகாதார கேடான சூழ்நிலையும் கூட.

ஆனால் சுத்தமான, சுகாதாரமான அற்புதமான இந்த மூலிகை தண்ணீரில் குளிக்க எந்த கட்டணமும் கிடையாது, இதற்கு இணையாக செயற்கையாக எந்த அருவியும் உருவாக்க முடியாது, இது போல இனி உருவாக்க நினைத்து கூட பார்க்கமுடியாது.

இப்படிப்பட்ட புனிதமான அருவி தண்ணீரை போற்றி வணங்காவிட்டாலும் பரவாயில்லை குடித்துவிட்டு அருவிக்கு குளிக்கவராதீர்கள், தாயை பழித்தாலும் தண்ணீரை பழிக்காதே என்று சொல்லியுள்ளனர், அந்த அளவிற்கு தாயினும் மேலான அருவியை தெய்வமாக வணங்கும் நிலையில் அருவிக்கு வாருங்கள் என்பதுதான் வேண்டுகோள்.

அதே போல இந்த அருவி தண்ணீர்தான் பல கிராமங்களின் விவசாயத்திற்கும், குடிநீர் உபயோகத்திற்கும் செல்கிறது, ஆகவே ஷாம்பு, சோப்பு போட்டு குளிக்க வேண்டாம். ஷாம்புவின் ரசாயனத்தன்மை நச்சுத்தன்மையாக மாறி குடிநீரைக் கெடுத்துவிடும் என்கிறார்கள். யாரும் கேட்பதாக இல்லை, தயவு செய்து கேளுங்கள்.

இதுவரை குற்றாலம் போகாதவர்கள் இந்த சீசனுக்கு போய் அருவிகளில் குளித்து பாருங்கள் ஆனந்தம், மகிழ்ச்சி, ஜாலி, உவகை என்ற எல்லா வார்த்தைக்கும் ஒரே அர்த்தம் குற்றாலம் என்பது தெரியவரும்.
குற்றாலம் தொடர்பான படங்களை பார்க்க சிவப்பு பட்டையில் உள்ள போட்டோ கேலரி பகுதியை கிளிக் செய்யவும்.

முதுகுத்தண்டு வட பிரச்னையால் துவண்டுவிடாதே தோழா-ஞானபாரதி

முதுகுத்தண்டு வட பிரச்னையால் துவண்டுவிடாதே தோழா-ஞானபாரதி
- எல்.முருகராஜ்
சக்கர நாற்காலியில் உட்கார்ந்து இருக்கும் பலரை நீங்கள் கடைத் தெருவில், ரோட்டில், ஆஸ்பத்திரி வாசலில், கல்வி கூடங்களில், அரசு அலுவலகங்களில் என்று பல இடங்களிலும் பார்த்து இருப்பீர்கள்.

இதில் பலரை சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிக் கொண்டு செல்வார்கள், சிலர் தாங்களே சக்கர நாற்காலியை உருட்டிக்கொண்டோ, அல்லது எரிபொருளின் உதவியுடன் உருளும்படி செய்தோ செல்வார்கள்.

சக்கர நாற்காலியில் இருப்பவர்கள் எல்லாம் இளம்பிள்ளை வாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்றே நம்மில் பலரும் எண்ணிக்கொண்டு இருக்கிறோம்.

ஆனால் உண்மை அதுவல்ல.

அவர்களில் பெரும்பாலோனார் முதுகுதண்டு வட பாதிப்பு அடைந்தவர்கள்.

முதுகு தண்டு வட பாதிப்பு என்பது கடுமையான விஷயமாகும்.

தலைக்கு பின் பக்கம் மூளையில் இருந்து ஆரம்பிக்கும் முதுகு தண்டு வடத்தினுள் செல்லும் நரம்புகள்தான் உடம்பின் ஒட்டு மொத்த செயல்பாடுகளையும் இயக்குகிறது, கட்டுக்குள் வைக்கிறது. மூளையிடும் உத்திரவை இந்த நரம்புகள்தான் செயல்படுத்துகிறது.

இந்த நிலையில் முதுகு தண்டு வடத்தில் அடிபடும் போது எந்த இடத்தில் அடிபடுகிறதோ, அந்த பகுதியில் இருந்து அதன் செயல்பாடுகள் நின்று போகும். 

முதுகுதண்டு வடம் எப்படி பாதிக்கும்:


உயரமான இடத்தில் இருந்து கீழே விழும்போது, விபத்தில் சிக்கும்போது என பல்வேறு காரணங்களால் முதுகுதண்டு வடம் பாதிக்கும்.

முதுகு தண்டு வட பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு தன் உடல் உறுப்புகளை இயக்குவது என்பது மிக கடினமான ஒன்று, மூளை சொல்வதை நரம்புகள் எடுத்துச் செல்லாது, இதன் காரணமாக கையை யாராவது கத்தியைக் கொண்டு அறுத்தாலும் வலி என்கின்ற உணர்வு மூளைக்கு செல்லாது.

மிகவும் பாதிப்பு என்பது சிறுநீர் போவதும், மலம் கழிப்பதும்தான், இந்த இரண்டு பிரதான விஷயங்களுமே இவர்கள் கட்டுப்பாட்டில் இருக்காது என்பதால், என்னதான் சமாதானம் செய்துகொண்டாலும், இவர்களைப் பொறுத்தவரை அன்றாடம் தங்கள் வாழ்க்கையை ஒரு நரகமான வாழ்க்கையாகவே நினைக்கின்றனர்.

பிறகு படுக்கை புண் வரும். கொசு கடித்தால் கூட யாரையாவது கூப்பிட்டுதான் அடிக்கச் சொல்ல வேண்டும், படுக்கை அல்லது சக்கர நாற்காலியிலேயே வாழ்க்கையை கழிக்கவேண்டி இருக்கும். தொற்று நோய் எளிதில் பரவும்.

இரண்டாவது உலகப்போரின் போதுதான் முதுகு தண்டு வட பிரச்னைக்கு ஆளானவர்கள் அதிகம் பேர் இருந்தனர், இவர்கள் அதிகபட்சமாக அடிபட்டு ஆறுமாத காலம்தான் இருந்தார்கள் பிறகு தொற்று காரணமாக இறந்தனர். அதன்பிறகுதான் மருத்துவ உலகம் விழித்துக் கொண்டு இவர்களுக்கான மருந்து மாத்திரைகளை கண்டு பிடித்தது, கண்டுபிடித்துக் கொண்டு இருக்கிறது. ஆனாலும் இதுவரை திருப்தியான தீர்வு என்பது கிடைக்கவில்லை.

இதன் காரணமாக இறந்து போகும் நாள் தள்ளிப்போனதே தவிர இழப்பை எந்த விதத்திலும் இன்றைக்கு வரை ஈடு செய்யமுடியவில்லை.

நமது நாட்டைப் பொறுத்தவரை முதுகு தண்டு வடத்திற்கான சிகிச்சை மையம் போதுமானதாக இல்லை.

சென்னை கிண்டியில் உள்ள மத்திய அரசு அலுவலகத்தில் உயர்பதவியில் இருப்பவர் ஞானபாரதி. சில வருடங்களுக்கு முன் ஏற்பட்ட ரயில் விபத்தால் முதுகு தண்டு வட பிரச்னைக்கு உள்ளானவர். தனக்கு இந்த பிரச்னை வந்த பிறகு இவர் நிறையவே அனுபவப்பட்டுவிட்டார். அந்த அனுபவங்கள் எல்லாம் மிக வேதனையானவை.

தனது வேதனையை தீர்க்க நிறைய இடங்களுக்கு பயணப்பட்டார், நிறைய தேடல்களில் ஈடுபட்டார்.

இந்த பிரச்னையில் இருந்து தீர்வு கிடைக்க வேண்டும் என்றால் இப்போதும் ஒரே வழி சீக்கிரமாக செத்துப் போவதுதான் அவ்வளவு கொடுமையான விஷயமாக இருக்கிறது. இதில் இந்த நோய்க்கொடுமை ஒரு பக்கம் என்றால் இந்த நோயாளிகளை அரசும், மருத்துவர்களும் அணுகும் முறையும் கொடுமையாக இருக்கிறது என்கிறார்.

சரியான வழிகாட்டுதல் இல்லாமல் நிறைய பேர் வேதனையின் உச்சத்தில் உள்ளனர். நான் பட்ட அனுபவங்கள் மற்றும் தேடுதலை பகிர்ந்து கொள்வதன் மூலம் முதுகு தண்டு வட பிரச்னை உள்ளவர்களுக்கு உதவிக்கொண்டு இருக்கிறேன். இவர்களை எல்லாம் ஒருங்கிணைக்கும் முயற்சியில் நண்பர்கள் துணையோடு செயல்பட்டுக் கொண்டு இருக்கிறேன். மத்திய, மாநில அரசிடமும், மருத்துவத்துறையிடமும் நிறைய கேட்க வேண்டியிருக்கிறது.என் வாழ்க்கையில் பெரும் பங்கினை இதற்காகவே செலவழித்தாலும் பராவாயில்லை ஆனாலும் இந்த பிரச்னைக்கு ஒரு சரியான தீர்வு காண வேண்டும். போக வேண்டிய தூரம் அதிகம் என்றாலும் பயணத்தை துவக்கி விட்டேன் என்று ‌சொல்லும் ஞானபாரதியிடம் தொடர்பு கொள்ள: 9962528232.

Sunday, 14 July 2013

சோமனூர் பொக்கிஷம் சூர்யகுமார்

சோமனூர் பொக்கிஷம் சூர்யகுமார்
- எல்.முருகராஜ்


கோவைக்கு பக்கத்தில் உள்ள சோமனூர் பஸ் நிலையம் அருகே மருந்துக்கடை வைத்திருக்கும் சூர்யகுமார் வெளியில் இருந்து பார்ப்பதற்கு பழுத்த ஆன்மிகவாதியாக காணப்படுகிறார், ஆனால் அவருள் இறங்கி பார்க்கும் போது ஒரு அற்புதமான நகைச்சுவை உணர்வு கொண்டவர் என்பதும் மென்மையான உள்ளத்துக்கு சொந்தக்காரர் என்பதும் எல்லாவற்றையும் விட பழம் பொருளை பாதுகாப்பவர் என்பதும் தெரியவந்தது.

அதிலும் தினமலர் பத்திரிகையின் ஒவ்வொரு பகுதியையும் பிரித்து தனித்தனியாக அவர் ஒரு தொகுப்பை போட்டுள்ளார். உதாரணத்திற்கு தினமலர் ஆன்மிக மலர் பகுதியில் அவ்வப்போது வந்த கேரளா கோயில்கள் பற்றி கட்டுரைகளை எல்லாம் இவர் கேரளா கோயில்கள் என்று தொகுத்து வைத்துள்ளார். 

அந்த தொகுப்பை வைத்துக்கொண்டு கேரளா கோயில்கள் முழுவதையும் எளிமையாக போய் பார்த்துவிட்டு வந்துவிடலாம்.

இதே போல வீடு வாங்கப்போகிறீர்களா ஆரம்பம் முதல் கடைசி வரை என்ன செய்யவேண்டும் என்பதை தினமலர் தொகுப்பாக வைத்துள்ளார். இப்படி ரேஷன் கார்டு வாங்குவது முதல் சாதி சான்றிதழ் பெறுவது வரை என்ன என்ன செய்யவேண்டும் என்பதை தொகுப்பாக வைத்துள்ளார். இதனை ஊர்க்காரர்கள் அனைவரும் பார்த்து பயன்பெற வேண்டும் என்பதற்காக தனது வீட்டின் ஒரு அறையையே ஒதுக்கி கொடுத்தள்ளார்.

பழைய காலத்து பிரௌனி கேமிராவை வைத்திருப்பதுடன் அதில் எடுத்த படங்களையும் வைத்துள்ளார். இவர் சுற்றுலா விரும்பி என்பதுடன் புகைப்பட பிரியரும் என்பதால் நிறைய ஊர்களின் படங்கள் இவரிடம் குவிந்துள்ளன.
இருப்பதிலேயே நல்ல சுவை நகைச்சுவைதான் ஆனால் ஏனோ மனிதன் சிரிக்க மறந்து எப்போதும் இப்போதெல்லாம் உர்ரென்றே இருக்கிறார்கள் இதற்காக நான் ஒரு நகைச்சுவை மன்றம் ஆரம்பித்து நடத்திவருகிறேன். குழந்தைகளை கூட்டிவந்து சிரிக்கவைக்கும் போது நாமும் ஒரு குழந்தையாகிவிடுகிறோம் என்கிறார். எனது எல்லா காரியத்திற்கு என் மனைவி இந்திராமணியின் அன்பும், ஆதரவும் முக்கிய காரணம் என்பதையும் மறக்காமல் குறிப்பிடக் கேட்டுக்கொள்கிறார்.

கொங்கு தமிழில் அன்பொழுக அவர் பேசுவதை கேட்பதே ஒரு ஆனந்தமான அனுபவம், அந்த அனுபவத்தை பெற நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9786890816.


பழநி அம்மா...பழம் நீயே அம்மா!

பழநி அம்மா...பழம் நீயே அம்மா!
- எல்.முருகராஜ்கடந்த 12ம் தேதி வெள்ளிக்கிழமை பழநி  பெரியநாயகி அம்மன் கோயிலில் திருவாசகம் தந்த மாணிக்கவாசகர் தொடர்பான விழா.

அலங்கரிக்கப்பட்ட மாணிக்கவாசகர் முன் திருவாசகம் பாடப்படுகிறது.அந்த பாடலில் மனம் உருகியபடி நின்ற பக்தர்களில் ஒருவர் வித்தியாசமாக காணப்பட்டார்.

சுமார் 80 வயதை தொட்ட தோற்றத்துடன் காவி உடையை போர்த்திக்கொண்டு தன்னை மறந்து திருவாசகத்தை கண்ணில் நீர் பெருக உருகி, உருகி பாடிக்கொண்டிருந்தார்.

யார் இவர் என்ற கேள்விக்கு விடை தஞ்சை குடவாசலில் இருந்து ஆரம்பிக்கிறது.

ஊருக்கே சோறுபோடும் தஞ்சை தரணியில் குடவாசலில் பிறந்திட்ட ராஜம்மாளுக்கு அவரது தந்தையும், தாயும் சோறு ஊட்டும்போது, கூடவே தேசபக்தியையும், தெய்வ பக்தியையும் சேர்த்தே ஊட்டினர்.
விளைவு தேசபக்தி மிகுந்த வீரமங்கையாய் வளர்ந்தார்.

அப்போது சுதந்திர போராட்ட காலமாகும், போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு தகவல் தொடர்பு மிகக்கடினமாக இருந்தது. ஆற்றாங்கரையில் நாணலோடு நாணலாக பல மணி நேரம் காத்திருக்கும் வீரர்கள் அடுத்த கட்ட செயலுக்கான கடிதத்திற்கு காத்திருப்பார்கள், இவர்களையும் இவர்களிடம் தொடர்பு கொள்பவர்களையும் பிரிட்டிஷ் போலீசார் கடுமையாக தண்டிப்பார்கள்.

அந்த தண்டனைக்கெல்லாம் பயப்படாமல் தலைவர்களுக்கும், வீரர்களுக்குமான கடித போக்குவரத்திற்கு துணையாக இருந்தவர் இவர். அந்தக் காலத்தில் எம்.ஏ தமிழ் இலக்கியம் படித்தவர். பிறகும் தொடர்ந்து படித்து மூன்று எம்.ஏ.,பட்டம் பெற்றவர்.

எத்தனையோ வேலை வந்தபோதும் கணவர், குழந்தைகள் பார்ப்பதற்காக எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்தார். நான்கு பெண், ஒரு மகன் அரசு அதிகாரியான கணவர் என்று குடும்பம் சந்தோஷமாக போய்க்கொண்டிருந்தது. யாரும் எதிர்பாராதவிதமாக திடீரென ராஜம்மாளின் கணவர் இறந்து விட பித்துப்பிடித்தது போலாகிவிட்டார்.

ஆனாலும் பிள்ளைகளுக்காக வாழவேண்டுமே என்பதற்காக ஒரு வைராக்கியத்துடன் கணவரது அலுவலகத்தில் அரசு வேலையை வாரிசு அடிப்படையில் தொடர்ந்தவர் தன் படிப்பு காரணமாக அந்த வேலையில் மேலும் உயர்வு பெற்றார். பிள்ளைகளை பிரமாதமாக படிக்கவைத்து நல்ல வேலையில் சேர்த்தார் மகன் வெளிநாட்டில் இருக்கிறான், எல்லோரும் வேலை, குடும்பம் என்று செட்டிலாகிவிட்டனர்.

அனைவரையும் நல்ல படியாக கரை சேர்த்தாகிவிட்டது இனி நாம் என்ன செய்யலாம் என்று யோசித்த போது சிறு வயது முதலே அவருக்குள் ஈர்ப்பினை ஏற்படுத்திய திருவாசகத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொள்வது என முடிவு செய்தார்.

கணவரது பென்ஷன்.தனது பென்ஷன், மகன் வெளிநாட்டில் இருந்து அனுப்பும் பணம் என்று வரக்கூடிய, பெறக்கூடிய வருமானம் அனைத்தையும் திருவாசகத்தின் உயர்வுக்கே வழங்கி வருகிறார்.

ஆங்கில கலப்பு இல்லாமல் அழகாக சொற்பொழிவு ஆற்றும் திறன் கொண்ட ராஜம்மாள் திருவாசகம் பற்றி யார் எங்கு பேசக்கூப்பிட்டாலும் போய் இலவசமாக பேசிவிட்டு வருவார், யாரைப் பார்த்தாலும் அழகிய திருவாசகம் புத்தகம் ஒன்றை பரிசளிப்பார்.

திருவாசகத்தில் என்ன இல்லை ஒரே ஓரு முறை படித்துப்பாருங்கள் உங்கள் வாழ்க்கை முறையே மாறும் என்று சொல்லும் ராஜம்மாள் இதற்காக தனது வீட்டையே திருவாசக முற்றோதல் இல்லமாக மாற்றியுள்ளார்.
ஒரு நாளைக்கு ஒரு வேளை சாப்பாடு அதுவும் எளியவர்கள், அடியவர்கள் யாருடனாவது பகிர்ந்து கொள்கிறார், தனக்கான உணவை தானே தயாரித்துக் கொள்கிறார். மேடையில் அமர்ந்து திருவாசகம் சொல்ல ஆரம்பித்தால் சப்பணமிட்டு போட்ட காலைக்கூட பிரிக்காமல் 13 மணி நேரம் எப்படி உட்கார்ந்தாரோ அதே நிலையிலேயே பேசிமுடிக்கும் தெம்பும், திராணியும் உள்ள இவருக்கு தற்போது எண்பது வயதாகிறது.ஆனாலும் ஒரு கணமும் சோர்ந்து இருக்காது சுறு,சுறுவென ஏதாவது செய்து கொண்டே இருக்கிறார்.

பழுத்த சிவப்பழம் போல காட்சி தரும் ராஜம்மாளை ஒரு பெண் துறவியாகவே கருதி பழநியில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இவர் மீது மிகுந்த மதிப்பு கொண்டு "பழநி அம்மா' என்றே வணங்கி அழைக்கின்றனர்.
இந்த வயதில் இவர் இப்போது ஒரு பெரிய விஷயத்தை தனது தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டு உள்ளார். கேட்டால் நானா செய்கிறேன் இறைவன் செய்கிறான் நானொரு கருவி என்கிறார் எளிமையாக.

 அது என்ன காரியம் என்கிறீர்களா.
வருகின்ற 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பழநியில் திருவாசகத்தை முழுவதும் ஓதும் திருவாசக முற்றோதல் என்ற பெரிய விழாவினை நடத்த உள்ளார். சுமார் பத்து லட்சம் ரூபாய் மதிப்பில் பிரம்மாண்டமாக இந்த விழாவினை நடத்த எண்ணியுள்ளார். இந்த விழாவில் சிவ.தாமோதரன் கலந்து கொள்கிறார். மேலும் பல்வேறு துறவிகளும் ஆன்மிக பெரியவர்களும், அடிகளார்களும் கலந்து கொள்கின்றனர். திருவாசகத்தை பல்வேறு வடிவத்தில் முற்றோதல் செய்வது நடைபெறும். திருவாசகத்தை முழுமையாக நுகர இது ஒரு அற்புதமான வாய்ப்பு. மாணவர்களும், இளைஞர்களும் பெரிய அளவில் கலந்து கொள்ளவேண்டும் என்று எண்ணியுள்ளார்.
இந்த மாநாடு பற்றி மேலும் விரிவாக அறிந்து கொள்ளவும், துறவி ராஜம்மாளிடம் திருவாசகம் பற்றி பேசவும் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 9486637345, 9443023212.


Sunday, 7 July 2013

யானைகளை அதன் போக்கில் வாழவிடுங்கள் ...


யானைகளை அதன் போக்கில் வாழவிடுங்கள் ... 
- எல்.முருகராஜ்

சுமார் 12 வருடங்களாக மலையாள மாத்ருபூமியின் புகைப்படக்கலைஞராக இருந்துவிட்டு தற்போது திருவனந்தபுரத்தில் புகைப்பட பயிற்சி பள்ளி வைத்து நடத்துகிறார்.
பத்திரிகை புகைப்படக்காரராக இவர் பணியாற்றிய காலத்தில் இவர் அதிகம் ரசித்து படமெடுத்தது யானைகளை மட்டுமே, இதற்காக ரொம்பவே அலைந்து படங்களை பதிவு செய்துள்ளார். இதனால் இவருக்கு "யானை' சந்திரகுமார் என்றும் பட்டப்பெயரும் உண்டு.
நான் பார்த்தவரையில், பழகிய வரையில் யானைகள் சாதுவானவைதான். அவைகளை பழக்குகிறோம் என்ற பெயரில் மனிதர்கள் செய்யும் கொடுமைகளால்தான் அவைகளுக்கு மதம் பிடிப்பதும் மனிதர்களை தாக்குவதும் நடக்கிறது என்றவர் மேலும் கூறிய சுவராசியமான தகவல்களாவது:
யானைகள் ஒரு இடத்தில் நிரந்தரமாக நிற்காது. தட்பவெப்ப சூழலுக்கு ஏற்பவும், உணவு தண்ணீர் தேவைகளுக்காகவும் எங்கிருந்தாவது எங்கேயாவது நடமாடிக் கொண்டு இருக்கும்.
யானைகளுக்கு இடையே ஒழுங்கு உண்டு. தெளிவான தகவல் பரிமாற்றங்கள் உண்டு. அதிகமான பாசம் உண்டு, மனிதர்களை அவர்களிடம் இருந்து வரும் வாசனையை வைத்து அடையாளம் கண்டு கொள்ளும், எவ்வளவு ஆண்டுகள் பிரிந்துவிட்டு வந்தாலும் பாகன்களை அடையாளம் கண்டு அவர்களிடம் மிக பாசமாக இருக்க காரணம் பழகிய அவர்களின் வாசனை தான்.
காட்டுப் பகுதிக்குள் சுதந்திரமாக திரிந்த யானைகள், தங்கள் மீது அலங்காரம் என்ற பெயரில் ஜரிகை சார்ந்த துணிகளை போர்த்துவதையும், கூட்டத்தில் நெருக்கியடித்து நிற்க வைப்பதையும், பட்டாசு வெடிச்சத்தத்தையும் சுத்தமாக வெறுக்கின்றன, கடும் எரிச்சல் அடைகின்றன, இவ்வளவு பெரிய உருவத்தை லாரியில் ஏற்றிச் செல்வது இன்னும் கொடுமையான விஷயம். இதனால்தான் கோபம் கொண்டு மனிதர்களை தாக்குகின்றன.
மேலும் இதன் பாதப்பகுதிகள் காட்டுக்குள் நடப்பதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது, காட்டுப்பகுதியில் எவ்வளவு தூரம் நடந்தாலும் எதுவும் ஆகாது. ஆனால் மாறாக நகர்பகுதியில் கொதிக்கும் தார்ரோட்டில், அது வெளிப்படுத்தும் சூட்டில் நடக்கும் போது அதன் பாதங்கள் தாங்குவது இல்லை. இது எத்தனை பேருக்கு புரிகிறது.
உண்மையில் யானைகள் இருப்பது வன உயிர்ச்சுழல் பாதுகாப்புக்கு முக்கியமான விஷயம், எவ்வளவு தூரம் யானைகள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும், சந்தோஷமாகவும் காட்டில் இருக்கிறதோ, அந்த அளவிற்கு நாடு நன்றாக இருக்கும். ஆகவே யானைகளை அதன் காட்டுப்பகுதியில் அதன் போக்கில் வாழவிடுங்கள், இதைவிட நல்ல காரியம் எதுவும் நீங்கள் யானைகளுக்கு செய்துவிட முடியாது என்று சொல்லி முடித்தார்.| சாகருக்கு கிடைத்த புது வாழ்வு Dinamalar

| சாகருக்கு கிடைத்த புது வாழ்வு 
- எல்.முருகராஜ்சாகர்.

நேப்பாள் நாட்டுக்காரர், எழுத, படிக்க, தெரியாத இளம் விவசாயி.

பெற்றோர் மற்றும் மனைவியுடன் கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்தவருக்கு விவசாயம் கை கொடுக்காமல் போகவே வீட்டில் வறுமை சூழ்ந்தது, வெளியூர் போய் கைநிறைய சம்பாதித்துக் கொண்டு வீடு திரும்பவேண்டும் என்ற வைராக்கியம் காரணமாக யாரிடமும் சொல்லாமல், கொள்ளாமல் ஒரு விரக்தியுடன் வீட்டைவிட்டு புறப்பட்டார்.

வீட்டைவிட்டு கிளம்பிவிட்டாரே தவிர, எங்கு போவது என்ன செய்வது என்று தெரியவில்லை, கிடைத்த பஸ், ரயில் என்று பயணப்பட்டவர் கடைசியில் கையில் இருந்த காசெல்லாம் செலவான நிலையில், கந்தலான உடையுடனும், பசியுடனும் கோவை ரயில் நிலையம் வந்தடைந்தார்.

பசியும், தூக்கமின்மையும் அவரை மனம் பேதலிக்க செய்ய தனக்குதானே பேசியபடி பரிதாபமாக கிடந்தவரை மனிதாபிமானம் கொண்டோர் போலீசார் துணையுடன் கோவையில் உள்ள மாநகராட்சி மனநல காப்பகத்தில் அடையாளம் தெரியாத மனநோயாளி என்ற "அடையாளத்துடன்' கொண்டுபோய் சேர்த்தனர்.

இது நடந்து இரண்டு வருடமாகிவிட்டது. இந்த இரண்டு வருட இடைவெளியில் சாகர் முழுமையாக குணம் அடைந்ததுடன், கொஞ்சம், கொஞ்சமாய் தமிழ் பேசவும், பேசுவதை புரிந்து கொள்ளவும் கற்றுக்கொண்டார். அந்த காப்பகத்தில் உள்ளவர்களுக்கு உதவி செய்வதும், காப்பகத்தின் கதவை திறந்து மூடுவதும்தான் சாகரின் பிரதான வேலையாகவும் போய்விட்டது.

இந்த நிலையில் கோவை ஈர நெஞ்சம் அமைப்பின் மகேந்திரன், அந்த காப்பகத்திற்கு ஆதரவற்ற மனநலம் குன்றியவர்களை அழைத்து வருவதையும், பின் அவர்கள் குணமானதும் உறவினர்களை அழைத்து ஒப்படைப்பதையும் பார்த்ததும் சாகருக்கு தன் குடும்ப நினைவுகள் வந்து வாட்டத் துவங்கியது.
தன்னையும் தனது குடும்பத்துடன் சேர்த்து வைக்குமாறு கேட்டார் என்பதை விட கெஞ்சினார் என்பதே பொருத்தமாக இருக்கும்.

சாகரை அவரது குடும்பத்தோடு சேர்க்க வேண்டும் என்றால் அவரது உறவினர்கள் யாராவது நேப்பாளில் இருந்து தகுந்த ஆதாரங்களுடன் வந்தால் அனுப்பி வைக்கலாம் என்ற சூழல் ஏற்பட்டது.

உடனே சாகர் பற்றிய குறிப்புகளை படத்துடன் "முகநூலில்' வெளியிட அதனைப்பார்த்து ஒருவர் பின் ஓருவர் என்று பலரும் தங்களது முகநூலில் சாகரைப்பற்றி பகிர்ந்து கொண்டனர்.

இந்த நிலையில் திடீரென நேப்பாளில் இருந்து ஒரு போலீஸ் அதிகாரி பேசியதும் மகிழ்ச்சி ஏற்பட்டது, சாகரின் உறவினர்கள் பற்றிய தகவல் கிடைத்தது.

சாகருக்கு எங்கே தான் தனிமையில் இருந்தே செத்துப் போய்விடுவோமோ என்ற கவலை இருந்தது, அது சமீபகாலமாக அதிகரித்தும் வந்தது, அவர் வாட்ச்மேன் போல காப்பகத்தில் செயல்பட்டும் வந்தார், நினைத்திருந்தால் எப்போது வேண்டுமானாலும் காப்பகத்தைவிட்டு தப்பியோடியிருக்க முடியும், ஆனால் அப்படியொரு எண்ணமே இல்லாமல் எப்படியாவது முறைப்படி தன் ஊர் போகவேண்டும், உறவுகளை பார்க்கவேண்டும் என்றே எண்ணியிருந்தார்.

இந்த நிலையில் சாகரின் அண்ணன் போனில் பேசியதும் சாகருக்கு தான் ஊர் போய்விடுவோம் என்ற நம்பிக்கை மீண்டும் துளிர்த்தது, அதே நேரம் சோகத்திற்கும் உள்ளானார், காரணம் இந்த இடைவெளியில் சாகரின் அப்பா இவரது பிரிவின் காரணமாக இறந்து போனாராம். இரண்டாவதாக இவர் இனி வரமாட்டார் என எண்ணி இவரது மனைவிக்கு மறுமணம் செய்து வைக்கும் ஏற்பாடும் நடந்து கொண்டிருந்ததாம்.

இதன் காரணமாக நேப்பாள் செல்லும் நாளை ஒவ்வொரு விநாடியும் எதிர்பார்த்தார்.

சாகர் நேபாள் போகவேண்டும் என்பதில் சாகருக்கு இணையாக துடித்தவர் "ஈரநெஞ்சம்' மகேந்திரன்தான், காரணம் ஒவ்வொரு முறை காப்பகத்திற்கு போகும் போதும், வரும்போதும் சாகரின் கண்களில் தெரியும் ஏக்கத்திற்கு நல்ல பதில் சொல்ல வேண்டும் என்பதற்காக தனது தூக்கத்தையும் துறந்தார்.

இவரது முயற்சி வீண் போகவில்லை, அந்த ஒரு நாளும் வந்தது. சாகரின் அண்ணன் உரிய ஆதாரங்களுடன் காப்பகத்தில் நுழைந்ததும், சாகர் ஒடிப்போய் கட்டிப் பிடித்துக் கொள்ள, அண்ணனோ தம்பியை கட்டிப்பிடித்து அழ வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத உணர்வுகளின் பகிர்வு அங்கே நிகழ்ந்தது.

கடைசியில் தான் விரும்பியபடி தன் சொந்த மண்ணிற்கு போகப்போகிறோம் என்றதும் மகேந்திரனை கட்டிப்பிடித்து சாகர் முத்தமழை பொழிந்துவிட்டார்.

அடுத்த அடுத்த நிகழ்வுகள் சுபமாக நடந்தேற சாகர் தன் சகோதரருடன் பிரியாவிடை பெற்று தன் சொந்தமண்ணிற்கு சென்று தன் சொந்தங்களுடன் சேர்ந்துவிட்டார்.

காசு, பணத்தை விட சொந்தம் பந்தமே மேல் என்பதை சாகர் இப்போது நன்கு புரிந்து கொண்டார்.
இதை புரிந்து கொள்ளாத ஆயிரக்கணக்கான சாகர்கள் இன்னமும் நம்மிடமே இருக்கின்றனர்தானே.