பதிவு செய்த நாள்
12ஜன2014
17:53
- எல்.முருகராஜ்
சென்னை மைலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண உண்டி உறைவிட பள்ளியில் ஒரு நிகழ்ச்சி.
கம்ப்யூட்டரை எளிய முறையில் புரிந்து கொள்வதுடன், அதில் கற்று தேர்ந்து பார்வையற்றவர்களுக்கு அதனை எப்படி எல்லாம் புரிய வைக்கலாம் என்பதற்காக "சாப்ட் வேர்' குறித்து புரியவைக்கும் நிகழ்ச்சி.
ஆறாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் கூடியிருந்தனர், இந்த மாணவர்களில் பெரும்பாலோனார் அப்பா, அம்மா இல்லாதவர்கள் என்பதுடன் அவர்களை ஆதரிக்கவோ எடுத்து படிக்க வைக்கவோ ஆள் இல்லாத, பொருளாதார சூழ்நிலையில் மிகவும் பின்தங்கியவர்களாக உள்ளவர்களே ஆவார்கள்.
இந்த மாதிரி மாணவர்களை தமிழகம் முழுவதும் தேடிப்பிடித்து அவர்களுக்கு உயர்தரமான கல்வி, உணவு, உறைவிடம் கொடுத்து படிக்கவைத்து ஆளாக்குவதே இந்த ராமகிருஷ்ண பள்ளியின் மகத்தான பணி.
இந்த மாதிரி மாணவர்களிடம் தனது கம்ப்யூட்டர் அறிவை கொண்டு செல்வதையே பெருந்தொண்டாக கொண்டு செயல்பட்டுவருபவர் காம்கேர் புவனேஸ்வரி.
இந்த நிகழ்ச்சியை சிறப்பித்த பலருக்கு பரிசுகள் வழங்கும்போது மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவர் சிரமப்பட்டு நடந்து வந்தார். அவரைப் பற்றி குறிப்பிடும்போது இவர் பள்ளியில் உருவாக்கி வைத்துள்ள பேண்டு வாசிக்கும் மாணவர்களின் இசைக்குழு ஜனாதிபதியாக இருந்த அப்துல்காலாமால் பாராட்டப் பெற்றவர்கள் என்றனர். அப்போது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பார்வையற்ற பேராசிரியர் ஜெயச்சந்திரன் இப்போது என்னால் அந்த இசையை கேட்க முடியுமா? என்றார்.
அவரைப்போலவே அரங்கத்தில் இருந்த அனைவருக்கும் மாணவர்களின் பேண்டு இசையை கேட்கும் ஆர்வம் எழுந்தது. கொஞ்சமும் தயக்கமின்றி உடனே மாணவர்கள் ஓடிப்போய் தத்தமது இசைக்கருவியுடன் வந்து நின்று பேண்டு வாத்திய இசையை எழுப்ப தயராகிவிட்டனர்.
உரிய குறிப்புகள் கிடைத்ததும் அவர்கள் எழுப்பிய இசை அற்புதமாக இருந்தது. பேக் பைபர், ட்ரம்பட், எம்போனியம், பேரிடோன், பியூகல், சாக்ஸாபோன், தாளம் உள்ளிட்ட பல்வேறு வித இசைக் கருவிகளுடன் அவர்கள் இசைத்த இசைக்கு தலையை அசைக்காதவர்களே கிடையாது அதுவும் கடைசியாக "ஜாரே ஜாகனே அச்சா' இசைத்து முடித்தபோது ஒட்டுமொத்த அரங்கமே எழுந்து நின்று கைதட்டியது.
டேனியல் நம்மிடம் பேசும் போது, பெரும்பாலான பள்ளிகளில் பேண்டு இசைக்குழு இருக்கும் ஆனால் எங்கள் பள்ளி மாணவர்களின் பேண்டு இசைக்குழு ம்ட்டும் பிரதானமாக பேசப்பட காரணம் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம்தான். அவர் ஜனாதிபதியாக இருக்கும்போது இங்கு வந்திருந்தார், அவரை வரவேற்று இங்கிருந்த மாணவர்கள் பேண்டு இசை வாசித்தனர். கேட்டுவிட்டு மைக்கில் பேசும்போது இந்த இசை என்னை ரொம்பவே ஈர்த்துவிட்டது, மிகவும் தொழில் ரீதியாக டில்லி பரேடின்போது வாசிக்கும்போது கேட்ட உணர்வு எனக்கு ஏற்படுகிறது என்றார்.
அப்போது முதலே எங்கள் பள்ளி பேண்டு இசைக்குழுவிற்கு பாராட்டு கிடைத்து வருகிறது என்றாலும் மாணவர்களின் ஈடுபாடும் இதற்கு ஒரு காரணம். இந்த மாணவர்கள் இங்கேயே தங்கியிருப்பதால் படிப்பு போக மீதம் இருக்கும் நேரம் எல்லாம் இதை வாசித்து, வாசித்து தங்களது வாசிப்பை செதுக்கிக்கொள்கின்றனர்.
அம்மா, அப்பா, அண்ணன், அக்காவாக இருந்து ஆதரவில்லாத இந்த மாணவர்களுக்கு நீங்கள் தரும் பாராட்டும் ஒருபக்கம் அவர்களுக்கு உற்சாகமும் உத்வேகமும், தந்து தங்களது திறமையில் உச்சம் அடைய வைக்கிறது என்று கூறிய மாஸ்டர் டேனியலிடம், கூடுதல் விவரம் பெற பேசலாம். தொடர்பு எண்: 9566211705.
No comments:
Post a Comment