- எல்.முருகராஜ்
எழு நூறு அரங்குகள்
ஐந்து லட்சம் தலைப்புகள்
பத்து லட்சம் பார்வையாளர்கள்
இருபது லட்சம் வாசகர்கள்
லட்சக்கணக்கில் புத்தகங்கள்
ஐந்து லட்சம் தலைப்புகள்
பத்து லட்சம் பார்வையாளர்கள்
இருபது லட்சம் வாசகர்கள்
லட்சக்கணக்கில் புத்தகங்கள்
கோடிக்கணக்கில் விற்பனை என்று சென்னையின் 37வது புத்தகதிருவிழா விமரிசையாக நடந்து முடிந்திருக்கிறது. இந்த வெற்றி, புத்தகத்தை படிக்கும் மக்கள் இன்னமும் குறைவின்றி இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. இந்த நேரத்தில் வாசிப்பின் மீது நேசிப்பு கொண்ட ஒருவரை புத்தகதிருவிழாவில் பார்த்ததன் காரணமாக ஏற்பட்ட பதிவு இது.
நேர்மைக்கும், உண்மைக்கும், கடுமையான உழைப்பிற்கும், எளிமைக்கும் இலக்கணமாய் தொலை தொடர்பு துறையில் பணியாற்றி, பணியில் இருந்து ஒய்வு பெற்றாலும், படிப்பதில் இருந்து ஒய்வு பெறாத அவரின் பெயர் கே.பத்மாவதி கிருஷ்ணமூர்த்தி. பத்மகிருஷ் அறக்கட்டளை மூலமாக சத்தமில்லாமல் ஏழை, எளிய மாணவர்களுக்கான உதவிகளை செய்து வருபவர்.
" சென்னை விளாச்சேரியில் உள்ள என் வீட்டிற்கு வாருங்கள் எனது புத்தக சேகரிப்புகளை பாருங்கள் அதற்கு பிறகு நாம் பேசலாம்" என்றார் அதன்படி அவரது வீட்டிற்கு போனபோது ஏற்பட்ட பல ஆச்சர்யங்களில் ஒன்று அவரிடம் இருந்த புத்தகங்கள்.
பல வருடங்களுக்கு முன் வந்த புத்தகங்களில் இடம் பெற்றிருந்த கதைகள், கட்டுரைகளை தனித்தனியாக தொகுத்து கையால் தைத்து பைண்டிங் செய்து வைத்துள்ளார். இப்போதும் மெருகு குறையாத அந்த புத்தக புதையலில் அதிகம் இடம் பெற்றிருந்தவை தினமலர், வாரமலர், சிறுவர் மலர் சம்பந்தபட்டவையே.
இது போக கலைக்கதிர், மஞ்சரி, கல்கி, கலைமகள் போன்ற பல புத்தகங்களின் தொகுப்புகள் நிறைந்து கிடந்தன.
" என்னைப்பற்றி சொல்வதற்கு முன் என் பாட்டி சஞ்சீவியம்மாள் பற்றி சொல்லியாக வேண்டும் அவர்தான் எங்களது அறிவின் ஆசான். புதுச்சேரியில் வாழ்ந்த அவர் நான்கு மொழிகள் படிக்கவும், எழுதவும் தெரிந்த திறமைசாலி. நிறைய படிப்பார், படித்ததை சுவராசியமாக சொல்வார். படிப்பு மட்டுமே நம்மை பண்படுத்தும், உயர்த்தும், உன்னதம் தரும் என்று திரும்ப, திரும்ப சொல்வார்.
" என்னைப்பற்றி சொல்வதற்கு முன் என் பாட்டி சஞ்சீவியம்மாள் பற்றி சொல்லியாக வேண்டும் அவர்தான் எங்களது அறிவின் ஆசான். புதுச்சேரியில் வாழ்ந்த அவர் நான்கு மொழிகள் படிக்கவும், எழுதவும் தெரிந்த திறமைசாலி. நிறைய படிப்பார், படித்ததை சுவராசியமாக சொல்வார். படிப்பு மட்டுமே நம்மை பண்படுத்தும், உயர்த்தும், உன்னதம் தரும் என்று திரும்ப, திரும்ப சொல்வார்.
" நாங்கள் செஞ்சி ஆலம்பூண்டி கிராமத்தில் இருந்தபோது எங்களை பார்க்க வரும்போது பாட்டி நிறைய புத்தகங்களை கொண்டுவந்து கொடுத்து எல்லோரையும் படிக்க சொன்னார். அப்போது மின்சாரம் கிடையாது ஊரில் ஒருவர் அல்லது இருவர் வீட்டில் டிரான்சிஸ்டர் ரேடியோ இருக்கும், அவர்கள் எல்லாம் வசதியானவர்கள் பட்டியலில் இருந்தனர். பேப்பர் எல்லாம் பெரிய நகரங்களில் மட்டுமே கிடைக்கும்.
" இந்த நிலையில் சூரிய வெளிச்சத்தை மையமாக வைத்துதான் எங்களது வாழ்க்கை இயற்கையாக இனிதாக கழிந்தது.மாலை 6 மணிக்கெல்லாம் அனைவரும் சாப்பிட்டு முடித்து விடுவோம் இதற்கு இரண்டு காரணம் இருட்டிவிட்டால் சாப்பிடமுடியாது என்பது ஒன்று, இரண்டாவதாக விறகு அடுப்பை அணைத்துவிட்டால் திரும்ப இரவில் பற்ற வைக்க மாட்டார்கள் .மாலை 6 மணிக்கு சாப்பிட்டு முடித்த பிறகு தூங்கும் வரை பாட்டியும், தாத்தாக்களும் சொல்லும் சுவராசியமான கதைகள்தான் பொழுதுபோக்கே. அப்பா, அம்மா, அண்ணன், தங்கை, அத்தை, சித்தி என்று அனைத்து உறவுகளையும் அருகே உட்கார வைத்து நட்பாகவும், அன்பாகவும் பேசிய பொற்காலம் அது.
" என் கல்யாணத்திற்கு பாட்டி புத்தகங்கள்தான் பரிசாக கொடுத்தார், அவரது வீட்டிற்கு விருந்திற்கு போயிருந்தபோதும் இந்தாருங்கள் மாப்பிள்ளை என்று என் கணவருக்கும் புத்தகமே பரிசாக கொடுத்தார்.
" புத்தகம் என்றால் இப்போது வருவது போல விதம், விதமான அட்டையோடு வண்ணத்தில் வருவது அல்ல பத்திரிகைகளில் வந்ததை பகுதி வாரியாக பிரித்து தொகுத்து அவரே புத்தகமாக்கி வைத்திருப்பார்.
" அந்த பழக்கம்தான் என்னையும் தொற்றிக்கொண்டது. பாட்டியைப் போலவே நானும் பிள்ளைகளுக்கு புத்தக பசியை உருவாக்கியதில் இப்போது என் மகள்கள் இருவரும், மகன் ஒருவரும் உயர்ந்த நிலையில் வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் இருக்கின்றனர்.
ஆரம்பம் முதலே எனக்கு நகைகள் மீது ஈடுபாடு கிடையாது. வீட்டு வேலைக்கு ஆட்கள் வைத்து கொண்டது கிடையாது எல்லா வேலைகளையும் நானேதான் செய்வேன் வீட்டு தோட்டத்தில் விளைந்த செம்பருத்தி, பவளமல்லி பூக்களைத்தான் பூஜை அறைக்கு பயன்படுத்துவேன்.
நான் டெலிபோன் துறையில் இருந்த போது, போனில் நம்பரை கேட்டு வாங்கி நாங்கள் கனெக்ஷன் கொடுத்தபிறகுதான் பேசுவார்கள் ஆகவே நிறைய ஞாபகசக்தி இதன் மூலம் வளர்ந்தது, இதன் காரணமாக அப்போது படித்த புத்தகங்கள் பலவும் இப்போதும் நினைவில் இருக்கிறது.
" இப்போதும் நான் நிறைய புத்தகங்கள் படித்து கொண்டுதான் இருக்கிறேன்.மகன். மகளை பார்க்க அமெரிக்கா போய்விட்டால் தினமலர்.காம் மூலம் அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்வேன்.
" காலத்திற்கு ஏற்ப மாற்றம் வேண்டும் என்பதால் இப்போது நான் எனது சமூக வலைத் தளங்களின் ஊடாக நிறைய படிக்கிறேன், படித்த விஷயங்களை எனது பிளாக் வழியாக மற்றவர்களும் பயன்பெறும் வகையில் பதிவு செய்கிறேன்.
" புத்தகம் எனக்கு அறிவை கொடுத்தது, புத்தகம் எனக்கு நல்ல வாழ்க்கை துணை கொடுத்தது, புத்தகம் எனக்கு எளிமையாக வாழ சொல்லிக் கொடுத்தது, புத்தகம் எனக்கு இனிமையாக பழக சொல்லிக் கொடுத்தது, புத்தகம் எனக்கு உண்மையாக இருப்பதன் உன்னதத்தை சொல்லிக் கொடுத்தது, இப்படி புத்தகம்தான் எனக்கு எல்லாமும் தந்தது, தந்தும் வருகிறது.
நீங்களும் வாசிப்பை நேசித்து பாருங்கள் உங்களுக்கும் இது எல்லாம் கிடைக்கும், இதைவிட கூடுதலாகவும் கிடைக்கும்" என்று சொல்லி அடுத்த புத்தகத்தில் வாசிப்பில் இறங்கினார்.
No comments:
Post a Comment