அந்த ஒரு நாள்...
- எல்.முருகராஜ்
கடந்த வார நிஜக்கதை பகுதியை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துவிடமுடியாது.
முதல் நாள் அறிமுகமானவர் மறுநாள் காலை இறந்துபோவார் என்பதை யாருமே நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார்கள்.
திருவண்ணாமலை சிவ பக்தையும், பெண் துறவியுமான பாண்டிய லதாவின் மறைவு அனைவரையும் உலுக்கியெடுத்துவிட்டது, ஆனால் ஆதரவில்லாமல் அநாதை பிணம் என்று எரிக்கப்பட இருந்தவர் வாசகர்கள் எடுத்துக் கொண்ட அக்கறை காரணமாக திருவண்ணாமலையில் துறவியருக்கான சகல மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டார்.
அந்த ஒரு நாள் நடந்தது என்ன என்பதை சொல்லியே ஆக வேண்டும்.
தேனியைச் சேர்ந்தபாண்டியலதா, சிவன் மீது கொண்ட பக்தி காரணமாக துறவு வாழ்க்கையை மேற்கொண்டு திருவண்ணாமலை வந்தடைந்தார்.
இங்கு இருந்தபடி காசி, அமர்நாத் யாத்திரைகள் போய் வந்தவர் பெரும்பாலான சிவத்தலங்களை தரிசித்து விட்டார், திருக்கழுக்குன்றம் தாமோதரன் சுவாமிகள் நடத்தும் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி எங்கு நடந்தாலும் இவர் ஆஜராகிவிடுவார்.
சீர்காழியில் கடந்த மாதம் நடந்த முற்றோதல் நிகழ்ச்சிக்கு நிறைய ருத்ராட்ச மாலைகள் அணிந்தபடி வந்திருந்த இவரை பேட்டி எடுத்து பிரசுரித்தோம். கட்டுரையின் முடிவில் இவரது போன் எண்ணையும் குறிப்பிட்டு இருந்தோம்.
கட்டுரை கடந்த சனிக்கிழமை (31ம் தேதி) காலை 8 மணியளவில் வெளியானது.அதுவரை அவரிடம் நான் மட்டுமே பேசிக்கொண்டிருந்தேன், கட்டுரை வெளியானதும் பல்வேறு நாடுகளில் இருந்தும் அவரிடம் வாசகர்கள் அன்பொழுக போனில் பேசியிருக்கின்றனர்.
நம் மீது அன்பு பராட்டவும், விசாரிக்கவும் இவ்வளவு பேரா என்று வியந்து போய் இந்த நாள் என் வாழ்க்கையின் இனிய நாள் மறக்கவே முடியாத நாள் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை ஒசூர் சந்திரசூடர் கோவிலில் முற்றோதல் நிகழ்ச்சிக்கு சென்றவர் ஒரு இடத்தில் ரோட்டைக் கடக்கும் போது வேகமாக வந்த பஸ் மோதியதில் அந்த இடத்திலேயே இறந்துபோனார்.
அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் கிடத்தப்பட்ட அவரைப் பற்றிய விவரங்கள் அறிய முடியாத போலீசார் இரண்டு நாள் பார்ப்போம் யாரும் கேட்டுவராவிட்டால் அநாதை பிணம் கணக்கில் சேர்த்து எரித்துவிடுவோம் என்று முடிவு செய்திருக்கின்றனர்.
பிணமான நிலையில் இவரை ஆஸ்பத்திரியில் பார்த்த ஊழியர் ஒருவர் இணையதளத்தில் இவரைப் பற்றி முதல் நாள் வந்த செய்தியை படித்துள்ளார்.உடனடியாக கட்டுரையில் குறிப்பிட்ட பாண்டிய லதாவின் போன் எண்ணுக்கு அடித்துள்ளார்.
யாரோ ஒரு அடியார் கொடுத்த மொபைல் போன் அது,அந்த போனை அவர் பொருட்டாக மதிப்பது கிடையாது பெரும்பாலும் தெரிந்த திருவண்ணாமலை டீ கடைக்காரரிடம்தான் கொடுத்து வைத்திருப்பார். போனை எடுத்த டீகடைக்காரர் ஆறுமுகம் என்பவர் பாண்டியலதா ஒசூருக்கு போய் இருக்கும் விவரத்தை கூறியிருக்கிறார்.
இதன் மூலம் இறந்து போனது பாண்டியலதா என்பது உறுதியானதும் டீகடைகாரர் ஆறுமுகத்திடம் நடந்த விவரத்தை கூறியிருக்கிறார் பிறகு தினமலர் இணையதளம் பிரிவிற்கும் போன் செய்து கூறியுள்ளார். தகவல் எனக்கும் வந்து சேர்ந்தது, அதிர்ந்து போனேன்.
பிறகு அடுத்த கட்ட வேலைகளில் இறங்கினேன். இதற்குள் பாண்டியலதா உபயோகித்த போன் அவர் அடிக்கடி செல்லக்கூடிய திரு அருட்பால் குகைஆஸ்ரமத்தின் நிர்வாகியான சிவ சீனிவாசசுவாமிகளிடம் போய்ச் சேசர்ந்தது. அவர் அவரது உதவியாளர் பிரபுவிடம் கொடுத்து வைத்திருந்தார்.
இறந்து போனது பெண் அடியார் அவரை உரிய முறையில் மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தனர் ஆனால் அதை எப்படி செயல்படுத்துவது என்பது தெரியவில்லை. இந்த சந்தர்ப்பத்தில்தான் நான் அவர்களுடன் பேசினேன்.
பெண துறவியின் உடலை எந்தவித பிரச்னையும் இல்லாமல் பெற்று ஆம்புலன்சில் ஏற்றி விடுகிறோம் நீங்கள் அடக்கம் செய்வதற்கான வேலைகளை பாருங்கள் என்றதும் ஒரு பத்திரிகை நிறுவனம் ஒரு அடியவர்க்கு பின்புலமாக நிற்பதை அறிந்ததும் அவர்களும் புதுதெம்பு வரப்பெற்றவர்களானார்கள்.
தர்மபுரி நிருபரின் உதவியுடன் மாவட்ட போலீஸ் எஸ்பியுடன் பேசி விவரம் சொன்னதும் பிறகு காரியங்கள் மடமடவென்று நடந்தது. இலவசமாக ஆம்புலன்சில் அவரது உடலை திருவண்ணாமலை கொண்டு போய் ஒப்படைக்கும் ஏற்பாடுகளும் நடந்தது.
ஓசூர் பகுதி பத்திரிகையாளர்கள் ஒன்று திரண்டு ஆஸ்பத்திரி சென்று மாலை அணிவித்து மரியாதை செய்ததும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் இறந்தவர் நாம் நினைத்தது போல யாருமில்லாத ஆதரவில்லாதவர் அல்ல, மிக முக்கியமானவர் என்பதை உணர்ந்து அதற்கேற்ற மரியாதை கொடுத்தனர்.
ஆஸ்ரம நண்பர் கிருஷ்ணன் என்பவர் உடலை வாங்கிக்கொண்டு திருவண்ணாமலை வந்தார். இதற்குள் அவர் பேட்டியின் போது ஒரு இடத்தில் எனது பூர்வீகம் பெரியகுளம் என்றும் கணவர் குழந்தைகள் இருக்கின்றனர் என்றும் சொல்லியிருந்தார்.அந்த ஒரு வரியை வைத்து தேடி இறந்த பாண்டிய லதாவின் கணவர், இரண்டு பெண்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கும் தகவல் தரப்பட்டு காரில் திருவண்ணாமலை நோக்கி வந்தனர்.
இரவு 9 மணியளவில் திருவண்ணாமலை இடுகாட்டிற்கு பாண்டியலதாவின் உடல் கொண்டு வரப்பட்ட போது சிவனடியார்கள் கூட்டம் திரண்டு இருந்தது. எண்பது கிலோவிற்கு பூவாங்கி அதில் படுக்கவைக்கப்பட்டார், சந்தனம், மஞ்சள், பன்னீர், இளநீர் காசி தீர்த்தம், கபில தீர்த்தம் போன்றவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டார். சுற்றிலும் சூடம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டது. ஏற்கனவே வந்து சேர்ந்திருந்த அவரது குடும்பத்தினரும் தங்களது சார்பில் இறுதி மரியாதை வழங்கினர்.
பின்னர் அனைவரது கண்களும் கலங்க பூவால் நிரப்பட்ட குழியினுள் அடக்கம் செய்யப்பட்டார்.
அதுவரை அமைதியாக சூழ்ந்திருந்த மழை மேகம் இப்போது பன்னீராய் மழையை தெளித்தது.
அந்த ஒரு நாள் அவரோடு பேசி அவரை ஆனந்தத்தின் எல்லைக்கு அழைத்துச் சென்றதுடன் இறந்ததும் அந்த ஆன்மா அமைதியடைய பதிவும் போட்டு அன்பே சிவம் என்பதை உணர செய்த வாசகர்கள் அனைவருக்கும் கண்ணில் நீர் பெருக நன்றி கூறிக்கொள்கிறோம்.