Friday, 31 January 2014

சாய்பிரியாவின் உலகம் "ஒளி'மயமானது...

- எல்.முருகராஜ்

மாற்றம் செய்த நாள்

01பிப்
2014 
03:55
பதிவு செய்த நாள்
பிப் 01,2014 03:48
சாய்பிரியா

சென்னையை சேர்ந்தவர்

நன்கு படித்தவர், படிப்புக்கு ஏற்ற முறையில் கார்ப்பரேட் நிறுவனங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் பணியாற்றியவர்.

ஆனால் படிக்கிற காலம் தொட்டு புகைப்படக்கலையின் மீது ஆர்வம் இருந்துள்ளது. தந்தையின் சிறிய ரக கேமிராவில் எடுத்த படங்களுக்கு கிடைத்த வரவேற்பும், பாராட்டுகளும் பெரிய அளவில் புகைப்பட கலையில் சாதனை புரியவேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக டிஜிட்டல் எஸ்எல்ஆர் கேமிரா வாங்கியவர், தேடுதல் மூலமாக தானே புகைப்படக்கலையை கற்றுத்தேர்ந்தார். புகைப்படத்தின் எல்லா களங்கள் மீதும் இவர் கண் சென்றாலும் "டிராவல் போட்டோகிராபி' என்ற பயண படங்கள் எடுப்பதில்தான் இவருக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது.

வேலை பார்த்துக்கொண்டே பயண படங்கள் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது. ஏதாவது ஒரு விஷயத்தை சிரத்தையாக செய்யவேண்டும் என்று எண்ணியவர் பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டார்.

பிறகு கேமிராவும் கையுமாக இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் பயணம் செய்து படங்கள் எடுத்துள்ளார். இதில் வடமாநிலத்தில் சமீபத்தில் நடந்த கும்பமேளா போய்வந்த எடுத்த படங்கள் இவருக்கு பெரிதும் பராட்டுகளை பெற்றுத்தந்துள்ளது.

கங்கையில் குளிக்க இமயமலையில் இருந்து இறங்கிவந்த நிர்வாண சாதுக்கள் உண்மையில் "சாதுவானவர்கள்' கிடையாது மகாகோபக்காரர்கள் அவர்களுக்கு பிடிக்காத முதல் விஷயம் உடை என்றால் இரண்டாவது விஷயம் கேமிரா.
யாராவது தங்களை நெருங்கிவந்து படம் எடுத்தால் கையில் இருக்கும் சூலாயுதம் போன்ற கம்பிகளால் கேமிராவை அடித்துநொறுக்கிவிடுவார்கள், அவர்கள் சுபாவம் அப்படி என்பதால் அவர்களை எதுவும் சொல்லவும் முடியாது, செய்யவும் முடியாது.

இந்த நிலையில் காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரை ஒடும் கங்கை ஆற்று தண்ணீருக்குள் ஒரு தவம் போல கேமிராவில் நின்றபடி காத்திருந்த பிரியாவிற்கு சாதுக்களின் வரம் கிடைத்தது போல யாருக்கும் கிடைக்காத நிறைய படங்கள் கிடைத்தது, அது அவரது மனதிற்கு நிறைவான படங்களாகவும் அமைந்தது.

இதே போல புஷ்கர் ஒட்டகதிருவிழா, கேரள மாநிலத்தின் புகழ் பெற்ற மரவாடி எருது ஒட்டும் விழா, அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படங்கள் எடுத்துள்ளார். இது போன்ற விழா படங்கள் எடுக்க வெளியூர் போகாத நாட்களில் தொழில்முறை புகைப்படக் கலைஞராக இருக்கிறார்.

என் சந்தோஷம், என் விருப்பம், என் எதிர்காலம் எல்லாமே புகைப்படம் எடுப்பதுதான், புகைப்படத்தின் பிரதானமே ஒளிதான், அது போலவே என் உலகமும் ஒளிமயமானதுதான்என்று சொல்லும் சாய்பிரியாவிற்கு புகைப்படக்கலையில் இன்னும் நிறைய சாதிக்கவேண்டும், எடுத்த படங்களை கொண்டு புகைப்பட கண்காட்சி நடத்தவேண்டும் என்பது உள்ளிட்ட ஏராளமான கனவுகள் உண்டு, அவை விரைவில் நனவாக வாழ்த்துக்கள்.வாழ்த்த விரும்புபவர்களுக்கு அவரது போன் எண்: 9003073730.


ப்ளீஸ்...ப்ளீஸ்... சிகரெட் குடிக்காதீங்க...

- எல்.முருகராஜ்



வருகின்ற 4ம்தேதி கேன்சர் தினம்,

 உலகம் முழுவதும் ரோஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

 மருந்து மாத்திரைகளை விட அன்பும், அரவணைப்பும் அதிகம் தேவைப்படுவது இந்த புற்றுநோய்க்குதான். 

இந்த நோய் தானாக வருவதை விட புகையிலை, சிகரெட் போன்ற பழக்கங்களால் வலிய வரவழைத்துக் கொள்பவர்களே அதிகம்.

அதிலும் இளைஞர்கள் சிகரெட் பிடிக்கம் பழக்கத்தால் குரல்வளை புற்று நோய் வந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகக்கூடாது என்பதற்காக, அந்த நோயின் பிடியில் சிக்கி திரும்பிய ஒருவர் தனது வாழ்வின் லட்சியமே இளைஞர்களை சிகரெட் பிடிக்கும் பழக்கத்தில் இருந்து மீட்பதுதான் என்ற எண்ணத்தோடு எழுபது வயதிலும் இளைஞர்கள் இருக்குமிடமான கல்லூரி போன்ற இடங்களை தேடித்தேடிப்போய் பரப்புரை செய்துவருகிறார்.

அவரது பெயர் ஏ.சர்புதீன்.

சென்னை முகப்பேரைச் சேர்ந்தவர்.

மாநில அரசு ஊழியராக இருந்த போது அவர் சார்ந்திருந்த அமைப்பின் செயலாளராகவும் இருந்தார். இந்த பொறுப்புக்கு முக்கிய தேவையான பேச்சுக்கலையிலும் வல்லவர்.

இவருக்குள்ள ஒரே கெட்ட பழக்கம் சிகரெட் பிடிப்பதுதான். இவருக்கு பொழுது போகாத போதெல்லாம் சிகரெட் பிடிப்பார், நண்பர்கள் யாருக்கு பொழுது போகவில்லை என்றாலும் இவரிடம் வந்து சிகரெட் பிடித்து செல்வார்கள். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு பாக்கெட் சிகரெட் பிடிப்பது என்பது இவரது அன்றாட அலுவலில் சேர்ந்துவிட்டது. இப்படி பல ஆண்டுகள் தொடர்ந்த இவரது சிகரெட் பழக்கம் விபரீதமாக வெளிப்பட்டது.

ஒரு நாள் காலை படுக்கைவிட்டு எழுந்தவர் பேசமுடியாது திணறினார். பக்கத்தில் இருந்த மருத்துவ மனைக்கு சென்ற போது அவர்கள் காது மூக்கு தொண்டை நிபுணரை கலந்து ஆலோசிக்க சொன்னார்கள். அவர் கொடுத்த மருந்து மாத்திரைகளை சாப்பிட்டபோது அது ஒரு வாரம் வேலை செய்தது, அதன் பிறகு நிலமை இன்னும் மோசமாகியது.

பிரிதொரு மருத்துவ மனையின் ஆலோசனையின் பேரில் தொண்டை சதையை எடுத்து சோதனை செய்து பார்த்தபோதுதான், சர்புதீனுக்கு குரல்வளை புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.

மனிதர் ஆடிப்போய்விட்டார். குணப்படுத்த முடியுமா? என்று எங்கெங்கோ போய் முட்டி மோதி பார்த்தார். இனிமேல் சிகரெட்டை தொடவே மாட்டேன் என்று சூளுரைத்தார். இதெல்லாம் தாமதமான முடிவு. நீண்ட நாள் சிகரெட் குடித்ததன் பலனாக கிடைத்த இந்த குரல்வளை புற்றுநோய்க்கு பலியாகிவிடாமல் உங்களை காப்பாற்றுகிறோம் ஆனால் இனிமேல் பேசுவது என்பதும் சுவாசிப்பது என்பதும் முடிந்து போன விஷயம் என்றார்கள்.

 அதன்படியே நடந்தது. 

மூக்கு என்பது முகத்தின் ஒரு அங்கமாகத்தான் இன்று வரை இருக்கிறது, அதன் குணாதிசயமான நுகரும் தன்மை இழந்துவிட்டது. சுவாசம் தொண்டையில் போடப்பட்ட குழியின் வழியாகவே நடக்கிறது. இதெல்லாம் நடந்தது இவரது ஐம்பதாவது வயதில். விரக்தியான வாழ்க்கையில் இருந்த போதுதான் சென்னை அடையார் கேன்சர் இன்ஸ்டியூட் டாக்டர் விதுபாலாவின் அறிமுகம் கிடைத்தது.

 அவர் இவரிடம் நிறைய பேசி நம்பிக்கையை வளர்த்தார். சிகரெட் பிடிக்கும் பழக்கத்தால் உங்களுக்கு ஏற்பட்ட குரல்வளை புற்று நோய் நமது இளைஞர்கள் யாருக்கும் ஏற்படக்கூடாது என்பதற்காக நீங்கள் ஏன் பள்ளி, கல்லூரி போன்ற இடங்களிலும் இளைஞர் கூடுமிடங்களிலும் பேசக்கூடாது என்று சொன்ன போது நான் எப்படி பேச முடியும் என்றார்.

முயற்சித்தால் எல்லாம் முடியும் என்று சொன்னதுடன் இது தொடர்பாக சிறப்பு பயிற்சி கொடுத்தனர். பின்னர் "எலக்ட்டோ ஸ்பீச் 'என்ற சிறிய கைக்கடக்கமான கருவியை கொடுத்தனர். பேட்டரியால் இயங்கும் இந்த கருவியை தொண்டையில் வைத்துக்கொண்டு இவர் பேசும்போது ரோபா என சொல்லப்படும் எந்திர மனிதன் பேசுவது போல பேச்சு வந்தது.

சர்புதீனுக்கு பெரிதும் சந்தோஷம் தனது தேவைகளை காலம் காலமாக பக்கம் பக்கமாக எழுதி காண்பித்த நிலைமைக்கு விடுதலை கிடைத்தது. இவர் பேசுவது முதலில் புரியாதது போல இருக்கும், சிறிது நேரம் கவனம் செலுத்தினால் பிறகு எளிதான புரிந்து விடும். முதன் முதலாக இவருடன் மொபைல் போனில் பேசும் போது ஒரு மெஷின் பேசுவது போலத்தான் உணருவார்கள் ஆனால் பிறகு போகப்போக இவரது பேச்சு பிடிபட்டுவிடும்.

யார் சொல்லியும் சிகரெட் பழக்கத்தை விடாத பல இளைஞர்கள் இவர் மைக்கில் பேசுவதைக் கேட்டு அந்த நிமிடமே சிகரெட்டை தூக்கி எறிந்திருக்கின்றனர். இப்படி ஒருவரல்ல இருவரல்ல பல ஆயிரம் பேரை சிகரெட் பழக்கத்தில் இருந்து மீட்டு இருக்கிறார் மீட்டு வருகிறார்.

 இவரது இந்த தன்னலமற்ற சேவையை பாராட்டி பலர் பாராட்டி விருதுகள் கொடுத்த போதும், எம்புள்ளைய சிகரெட் பழக்கத்தில் இருந்து மீட்டுக்கொடுத்த ஐயா நீங்க நல்லா இருக்கணும் என்று சொல்லும் ஏழை பெற்றோர்களின் வாழ்த்தையே பெரிதாக எண்ணுகிறார்.

இவரது போன் எண்: 9445170464. மீண்டும் சொல்கிறேன் இவரிடம் முதல் முறையாக பேசும்போது ஒரு எந்திரத்திடம் பேசுவது போலத்தான் இருக்கும். கொஞ்சம் புரிபடாது கவனத்தை சிதறவிடாமல் பேசினால் புரியும். 

உங்கள் பகுதி பள்ளி, கல்லூரியில் ஏதேனும் விழா நடக்கும் போது இவரை ஒரு பதினைந்து நிமிடம் பேசுவதற்காக வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் சிகரெட் பிடிக்கும் இளைஞர்கள் மீட்டு எடுக்கப்படுவார்கள்.
வயதை மீறி தனது நோயைத்தாண்டி ஆரோக்கிய சமுதாயம் அமைய தனது வாழ்க்கை தொண்டுள்ளத்துடன் அர்ப்பணித்துக்கொண்டுள்ள சர்பபுதீனின் சேவைக்காகவாவது இறைவன் இவருக்கு நீண்ட ஆயுளை தந்தருளட்டும்.
Click Here

Tuesday, 28 January 2014

பத்மாவதியின் வாசிப்பும்,நேசிப்பும்..

- எல்.முருகராஜ்

எழு நூறு அரங்குகள்
ஐந்து லட்சம் தலைப்புகள்
பத்து லட்சம் பார்வையாளர்கள்
இருபது லட்சம் வாசகர்கள்
லட்சக்கணக்கில் புத்தகங்கள்

கோடிக்கணக்கில் விற்பனை என்று சென்னையின் 37வது புத்தகதிருவிழா விமரிசையாக நடந்து முடிந்திருக்கிறது. இந்த வெற்றி, புத்தகத்தை படிக்கும் மக்கள் இன்னமும் குறைவின்றி இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. இந்த நேரத்தில் வாசிப்பின் மீது நேசிப்பு கொண்ட ஒருவரை புத்தகதிருவிழாவில் பார்த்ததன் காரணமாக ஏற்பட்ட பதிவு இது.

நேர்மைக்கும், உண்மைக்கும், கடுமையான உழைப்பிற்கும், எளிமைக்கும் இலக்கணமாய் தொலை தொடர்பு துறையில் பணியாற்றி, பணியில் இருந்து ஒய்வு பெற்றாலும், படிப்பதில் இருந்து ஒய்வு பெறாத அவரின் பெயர் கே.பத்மாவதி கிருஷ்ணமூர்த்தி. பத்மகிருஷ் அறக்கட்டளை மூலமாக சத்தமில்லாமல் ஏழை, எளிய மாணவர்களுக்கான உதவிகளை செய்து வருபவர்.

" சென்னை விளாச்சேரியில் உள்ள என் வீட்டிற்கு வாருங்கள் எனது புத்தக சேகரிப்புகளை பாருங்கள் அதற்கு பிறகு நாம் பேசலாம்" என்றார் அதன்படி அவரது வீட்டிற்கு போனபோது ஏற்பட்ட பல ஆச்சர்யங்களில் ஒன்று அவரிடம் இருந்த புத்தகங்கள்.

பல வருடங்களுக்கு முன் வந்த புத்தகங்களில் இடம் பெற்றிருந்த கதைகள், கட்டுரைகளை தனித்தனியாக தொகுத்து கையால் தைத்து பைண்டிங் செய்து வைத்துள்ளார். இப்போதும் மெருகு குறையாத அந்த புத்தக புதையலில் அதிகம் இடம் பெற்றிருந்தவை தினமலர், வாரமலர், சிறுவர் மலர் சம்பந்தபட்டவையே.
இது போக கலைக்கதிர், மஞ்சரி, கல்கி, கலைமகள் போன்ற பல புத்தகங்களின் தொகுப்புகள் நிறைந்து கிடந்தன.
" என்னைப்பற்றி சொல்வதற்கு முன் என் பாட்டி சஞ்சீவியம்மாள் பற்றி சொல்லியாக வேண்டும் அவர்தான் எங்களது அறிவின் ஆசான். புதுச்சேரியில் வாழ்ந்த அவர் நான்கு மொழிகள் படிக்கவும், எழுதவும் தெரிந்த திறமைசாலி. நிறைய படிப்பார், படித்ததை சுவராசியமாக சொல்வார். படிப்பு மட்டுமே நம்மை பண்படுத்தும், உயர்த்தும், உன்னதம் தரும் என்று திரும்ப, திரும்ப சொல்வார்.

" நாங்கள் செஞ்சி ஆலம்பூண்டி கிராமத்தில் இருந்தபோது எங்களை பார்க்க வரும்போது பாட்டி நிறைய புத்தகங்களை கொண்டுவந்து கொடுத்து எல்லோரையும் படிக்க சொன்னார். அப்போது மின்சாரம் கிடையாது ஊரில் ஒருவர் அல்லது இருவர் வீட்டில் டிரான்சிஸ்டர் ரேடியோ இருக்கும், அவர்கள் எல்லாம் வசதியானவர்கள் பட்டியலில் இருந்தனர். பேப்பர் எல்லாம் பெரிய நகரங்களில் மட்டுமே கிடைக்கும்.

" இந்த நிலையில் சூரிய வெளிச்சத்தை மையமாக வைத்துதான் எங்களது வாழ்க்கை இயற்கையாக இனிதாக கழிந்தது.மாலை 6 மணிக்கெல்லாம் அனைவரும் சாப்பிட்டு முடித்து விடுவோம் இதற்கு இரண்டு காரணம் இருட்டிவிட்டால் சாப்பிடமுடியாது என்பது ஒன்று, இரண்டாவதாக விறகு அடுப்பை அணைத்துவிட்டால் திரும்ப இரவில் பற்ற வைக்க மாட்டார்கள் .மாலை 6 மணிக்கு சாப்பிட்டு முடித்த பிறகு தூங்கும் வரை பாட்டியும், தாத்தாக்களும் சொல்லும் சுவராசியமான கதைகள்தான் பொழுதுபோக்கே. அப்பா, அம்மா, அண்ணன், தங்கை, அத்தை, சித்தி என்று அனைத்து உறவுகளையும் அருகே உட்கார வைத்து நட்பாகவும், அன்பாகவும் பேசிய பொற்காலம் அது.

" என் கல்யாணத்திற்கு பாட்டி புத்தகங்கள்தான் பரிசாக கொடுத்தார், அவரது வீட்டிற்கு விருந்திற்கு போயிருந்தபோதும் இந்தாருங்கள் மாப்பிள்ளை என்று என் கணவருக்கும் புத்தகமே பரிசாக கொடுத்தார்.
" புத்தகம் என்றால் இப்போது வருவது போல விதம், விதமான அட்டையோடு வண்ணத்தில் வருவது அல்ல பத்திரிகைகளில் வந்ததை பகுதி வாரியாக பிரித்து தொகுத்து அவரே புத்தகமாக்கி வைத்திருப்பார்.

" அந்த பழக்கம்தான் என்னையும் தொற்றிக்கொண்டது. பாட்டியைப் போலவே நானும் பிள்ளைகளுக்கு புத்தக பசியை உருவாக்கியதில் இப்போது என் மகள்கள் இருவரும், மகன் ஒருவரும் உயர்ந்த நிலையில் வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் இருக்கின்றனர்.

ஆரம்பம் முதலே எனக்கு நகைகள் மீது ஈடுபாடு கிடையாது. வீட்டு வேலைக்கு ஆட்கள் வைத்து கொண்டது கிடையாது எல்லா வேலைகளையும் நானேதான் செய்வேன் வீட்டு தோட்டத்தில் விளைந்த செம்பருத்தி, பவளமல்லி பூக்களைத்தான் பூஜை அறைக்கு பயன்படுத்துவேன்.

நான் டெலிபோன் துறையில் இருந்த போது, போனில் நம்பரை கேட்டு வாங்கி நாங்கள் கனெக்ஷன் கொடுத்தபிறகுதான் பேசுவார்கள் ஆகவே நிறைய ஞாபகசக்தி இதன் மூலம் வளர்ந்தது, இதன் காரணமாக அப்போது படித்த புத்தகங்கள் பலவும் இப்போதும் நினைவில் இருக்கிறது.

" இப்போதும் நான் நிறைய புத்தகங்கள் படித்து கொண்டுதான் இருக்கிறேன்.மகன். மகளை பார்க்க அமெரிக்கா போய்விட்டால் தினமலர்.காம் மூலம் அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்வேன்.

" காலத்திற்கு ஏற்ப மாற்றம் வேண்டும் என்பதால் இப்போது நான் எனது சமூக வலைத் தளங்களின் ஊடாக நிறைய படிக்கிறேன், படித்த விஷயங்களை எனது பிளாக் வழியாக மற்றவர்களும் பயன்பெறும் வகையில் பதிவு செய்கிறேன்.

" புத்தகம் எனக்கு அறிவை கொடுத்தது, புத்தகம் எனக்கு நல்ல வாழ்க்கை துணை கொடுத்தது, புத்தகம் எனக்கு எளிமையாக வாழ சொல்லிக் கொடுத்தது, புத்தகம் எனக்கு இனிமையாக பழக சொல்லிக் கொடுத்தது, புத்தகம் எனக்கு உண்மையாக இருப்பதன் உன்னதத்தை சொல்லிக் கொடுத்தது, இப்படி புத்தகம்தான் எனக்கு எல்லாமும் தந்தது, தந்தும் வருகிறது.

நீங்களும் வாசிப்பை நேசித்து பாருங்கள் உங்களுக்கும் இது எல்லாம் கிடைக்கும், இதைவிட கூடுதலாகவும் கிடைக்கும்" என்று சொல்லி அடுத்த புத்தகத்தில் வாசிப்பில் இறங்கினார்.



Thursday, 23 January 2014

வானம் எனக்கு ஒரு போதிமரம்...பாடல்களாக மட்டுமல்ல படங்களாகவும்&இளையராஜாவின் புகைப்பட கண்காட்சி

- எல்.முருகராஜ்


















இசைஞானி இளையராஜா.

பல ஆயிரம் சாகவாரம் பெற்ற பாடல்களை தந்தவர், தந்து வருபவர்.

பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கும் காற்றையும், கேட்கும் காதுகளையும் சங்கீதத்தால் அல்ல சந்தோஷத்தால் நிரப்புவர்.

விதையாய் இருந்த எத்தனையோ கவிஞர்களை விருட்சமாக்கியவர்.

குடத்தினுள் இருந்த பாடகர்கள் பலரை குன்றின் மேல் வைத்தவர்.

தனது மெட்டுக்களால் நாற்று நடும் பெண்களையும் "ஆயிரம் தாமரை மொட்டுக்களே' என் முணுமுணுக்கச் செசய்தவர்.

"வானம் எனக்கு ஒரு போதிமரம்' என்று இசையால் சொன்னவர், இப்போது அதே வார்த்தைகளுக்கு தனது புகைப்படங்களால் உயிர்கொடுத்து இருக்கிறார்.

ஆம்....இளையராஜாவின் இன்னனொரு இனிய முகம் புகைப்படக்கலைஞராகும்.

முதன் முறையாக சென்னை போயஸ் தோட்டத்தை அடுத்துள்ள கஸ்தூரி ரங்கன் சாலை ஆர்ட் ஹவுசில் இளையராஜாவின் 101 புகைப்படங்கள் கொண்டு "நான் பார்த்தபடி' என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சி நடந்துவருகிறது.

இளையராஜா தனது புகைப்பட கண்காட்சியின் துவக்கவிழாவில் உற்சாகமாக கலந்து கொண்டதுடன், ஊடக நண்பர்களிடம் தான் எடுத்த புகைப்படங்கள் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

" எல்லோருக்கும் எனது பாடல்கள் ரிலாக்ஸ் தரும் என்றால் எனக்கு ரிலாக்ஸ் தருவது புகைப்படங்கள் எடுப்பதே.
" கடந்த 1978ம் ஆண்டு முதல் படமெடுத்து வருகிறேன் ஆனால் போட்டோகிராபி எப்போது டிஜிட்டலுக்கு மாறியதோ அப்போது முதல் படமெடுப்பதை விட்டுவிட்டேன், காரணம் பிலிமில் படமெடுத்த போது இருந்த ஆழம், நிறம் போன்றவை டிஜிட்டலில் இல்லை என்பது எனது கருத்து. ஆகவே பிலிமில் எடுத்து பிரின்ட் போட்ட படங்கள் தரும் உணர்வை டிஜிட்டல் தரவில்லை என்பதே உண்மை.

" ஆனால் இப்போது சினிமாவே டிஜிட்டலில்தான் எடுக்கப்படுகிறது, என்ன செய்வது கைநழுவிப்போகும் எத்தனையோ நல்ல விஷயங்களில் இதுவும் ஒன்று என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

" இதுவரை 5000 படங்கள் எடுத்து இருப்பேன் அதில் இருந்து 101 படங்களை மட்டும் இங்கே கண்காட்சியாக வைத்துள்ளேன். இதில் வைக்கப்பட்டுள்ள படங்கள் எல்லாம் சிறந்த படங்களா என்றால் இல்லை என்றே சொல்வேன் அப்படியானால் எது சிறந்த படங்கள் என்றால் நான் எடுக்க தவறிய படங்களே சிறந்த படங்கள்.

" என் சூழல் அப்படி ஒரு பிரபலமாக இருப்பதால் காட்சியை ரசித்து படமெடுக்க முடியாது காரைவிட்டு இறங்கினாலே கூட்டம் கூடிவிடும் பிறகு எங்கே படமெடுப்பது ஆகவே காருக்குள் இருந்தபடி எனக்கு பிடித்த காட்சிகளை மட்டும் படமாக்கியுள்ளேன்.

" இவை பெரும்பாலும் வானம், மரம், கடல் போன்ற இயற்கை காட்சிகளே

" நான் எடுத்த படங்களை கலர் கரெக்ஷன் செய்யாமல், படத்தின் ஆழ அகலத்தை குறைக்காமல் (கிராப் செய்யாமல்) அப்படியே பிரின்ட் செய்யவேண்டும் என்பது என்னுடைய விருப்பம் அதன்படியே இங்குள்ள படங்கள் பிரின்ட் செய்யப்பட்டு உள்ளன.

" கர்நாடகா மாநிலத்தில் பயணம் செய்த போது தெருவில் பிச்சை கேட்ட குழந்தை ஒன்று மனதை பாதித்தது, அந்த குழந்தையை இரண்டு படமெடுத்தேன். காரை கொஞ்சம் தள்ளி நிறுத்தச் சொல்லி விட்டு அந்த குழந்தைக்கு பணம் கொடுக்கலாம் என்று திரும்பி பார்த்தால் அந்த குழந்தையை அங்கு காணோம். நானும் எனது உதவியாளர்களும் அந்த பகுதியில் நீண்ட நேரம் தேடியும் அந்த குழந்தையை கண்டுபிடிக்கமுடியவில்லை. முதலில் அந்த குழந்தைக்கு பண உதவி செய்திருக்கலாமோ என்று என் மனதில் இப்போதும் அந்த வலி உண்டு."

இப்படி தன் மனதில் பட்டதை இளையராஜா பேசியது போலவே படங்களும் அவர் மனதில் பட்டபடியே பதிவாகியுள்ளது. இந்த படங்கள் சிறப்பானதா?, பார்க்கும்படி இருக்குமா?, நம் மனதை பாதிக்கும்படி இருக்குமா? என்ற கேள்விகளுக்கு எல்லாம் விடை அவரவர் பார்க்கும் பார்வையில்தான் இருக்கிறது.

இளையராஜா என்ற மிகப்பெரிய இசை ஆளுமை புகைப்படக்கலையின் மீது காதல் கொண்டதும், அதற்காக நேரம் செலவிட்டு படங்கள் எடுத்ததும், அதனை தொகுத்ததும், இது குறித்து பெருமைப்பட பேசுவதும் உண்மையிலேயே புகைப்படக்கலைக்கும் புகைப்படக் கலைஞர்களுக்கும் பெருமை சேர்க்கும் செயலே.

வருகின்ற 26ம்தேதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் இளையராஜாவின் புகைப்பட கண்காட்சி தொடர்பாக மேலும் விவரம் தேவை எனில் தொடர்பு கொள்ளவும்: 9092861461.


Monday, 20 January 2014

மறந்தால்தானே நினைப்பதற்கு...

- எல்.முருகராஜ்


மயிலாடுதுறை சு.உதயமூர்த்தி என்றால் ரொம்ப பேருக்கு தெரியாது; அதே நேரம் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி என்றால் எல்லோருக்குமே தெரியும்.

அவர் இறந்து (21/01/13) ஓராண்டாகிறது. சென்னை திருவான்மியூரில் கடந்த வருடம் அவர் இறந்த போது அவருக்கு வயது 80.

"உன்னால் முடியும் தம்பி" என்ற தாரக மந்திரத்தைச் சொல்லி இளைஞர்களின் இதயத்தில் தன்னம்பிக்கைப் பயிரை விதைத்து வளர்த்தவர். செம்பனார்கோயில் பகுதிகளில் இருக்கும் வற்றிய நீர்நிலைகளில் தொண்டர்களுடன் சேர்ந்து தூர்வாரி நீர்வளத்தைப் பெருக்கிக் காட்டியவர்.

இதன் மூலம் சாமான்ய மக்கள் ஒன்று சேர்ந்தால் எதையும் சாதிக்கமுடியும் என்பதற்கு சான்றாக விளங்கியவர். இவரது இந்த செயலுக்கு பிறகுதான் பல கிராமங்களில் மக்கள் அரசைச எதிர்பார்க்காமல் தாங்களே தங்களது கிராமத்திற்கான பாதையை போட்டுக் கொண்டனர்; ரோட்டை சீரமைத்துக் கொண்டனர்.

கோவையில் வற்றிப்போய் பிளாஸ்டிக் எனும் விஷக்கிடங்காக மாறியிருந்த குளங்களை மக்களே ஒன்று சேர்ந்து தூர் வாரியதெல்லாம் இந்த மக்கள் சக்தி இயக்குனரின் கனவு மெய்ப்படலே.

எண்ணங்கள்,
 பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது எப்படி,
 உயர்மனிதனை உருவாக்கும் சிந்தனைகள், 
உன்னால் முடியும் தம்பி என்பது உள்ளிட்ட எத்தனையோ நூல்கள் எழுதி இளைஞர்களை நல்வழிப்படுத்தியவர்.

25 ஆண்டு கால அமெரிக்க தொழில் அதிபர் வாழ்க்கையை உதறி தள்ளிவிட்டு நாட்டு பற்று காரணமாக தாயகம் திரும்பியவர், நதிகளை இணைப்பதன் மூலம் நாட்டை வளம் கொழிக்க செய்யலாம் என்று விரும்பியவர்.

பல ஆண்டுகளுக்கு முன்பாகவே ஒரு கெஜ்ரிவால் போலவும், அன்னா ஹசாரே போலவும் தூய்மையான அரசியலுக்கு அடிகோலியவர் ஆனால் இங்கு உள்ள அரசியல் வியாதிகளின் நரி தந்திரத்தின் காரணமாகவும், மூளை மழுங்கடிக்கப்பட்ட கட்சி தொண்டர்கள் மற்றும் வாக்காளர்களால் புறக்கணிக்கப்பட்டு விட்டார். இன்று உள்ள இந்த விழிப்புணர்வு அன்று இருந்திருந்தால் இவருக்கு பின்னால் தமிழகம் அணிதிரண்டிருக்கும்.

நாளைய இந்தியா இளைஞர்கள் கையில் என்று நம்பியவர். இளைஞர்களை தவறான திசையில் செல்லாமல் நெறிப்படுத்த எழுத்து மூலமும் பேச்சு மூலமும் அவர் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியவை. பல சுய முன்னேற்ற நூலாசிரியர்களுக்கு சந்தேகமே இல்லாமல் இவரே முன்னோடியாவார். "ஐயாவின் நூல்தான் என்னை வழிநடத்தியவை" என்று இன்றைக்கும் பலர் நெஞ்சார கூறுவதை கேட்கமுடியும்.

இயக்குனர் பாலசந்தர் உதயமூர்த்தியின் மேல் உள்ள அபிமானத்தினால் உன்னால் முடியும் தம்பி என்கிற படத்தை எடுத்ததுடன் படத்தின் நாயகனுக்கு உதயமூர்த்தி என்றும் பெயரிட்டார்.

எம்ஜிஆரால் அழைத்து பாராட்டப்பெற்றவர், தமிழக அரசால் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டவர்.
அன்பானவர், மென்மையானவர், பழகுவதற்கு இனிமையானவர்.

மதுரை மத்திய தொகுதியில் மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் வேட்பாளராக நின்றபோது இவரது தேர்தல் பிரச்சாரத்தை பற்றி செய்தி சேகரிக்க சென்றிருந்தேன், அப்போது அவரது ஜீப்பிலேயே என்னையும் ஏற்றிக் கொண்டு ஒரு நாள் முழுவதும் பயணித்தவர்.

"என்னிடம் நிறைய பணம் இருக்கிறது ஆகவே மக்கள் பணத்தை தொடமாட்டேன், என்னிடம் உள்ள ஆற்றலை, அறிவை உங்களுக்கு செலவிட சட்டமன்ற உறுப்பினர் என்ற அதிகாரம் தேவை. என்னைத் தேர்ந்து எடுப்பதன் மூலம் ஒரு நேர்மையாளனை தேர்ந்து எடுக்கிறீர்கள், என்னை தேர்ந்து எடுப்பதன் மூலம் நதிகளை தேசியமயமாக்கவேண்டும் என்ற குரலை வலுப்படுத்துகிறீர்கள், என்னை தேர்ந்து எடுப்பதன் மூலம் இந்த நாட்டிற்கு நல்ல பல இளைஞர்களை வருவதற்கான பாதையை அமைத்து தருகிறீர்கள்" என்று எதார்த்தமாக பேசினார்.

ஓரு நல்லவர், வல்லவர் அரசியலில் கலந்து கெட்டுப்போய்விடக்கூடாது என்று மக்கள் நினைத்ததாலோ என்னவோ அவரால் அந்த தேர்தலில் ஜெயிக்கமுடியவில்லை.

ஆனாலும் தோற்றபின் முதல் ஆளாக தொகுதியில் வலம்வந்து நன்றி கூறினார்.

இன்று அவர் நம்முடன் இல்லாவிட்டாலும் அவரது சிந்தனைகளும், எழுத்துகளும் நம்மோடுதான் இருக்கிறது, இயக்குகிறது.

டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தியின் புகழ் ஓங்கி ஒலிக்கட்டும் இன்றைக்கும், என்றைக்கும்.


Friday, 17 January 2014

அவரே மக்கள் திலகம் எம்ஜிஆர்....

- எல்.முருகராஜ்


ஜனவரி 17

 மக்கள் திலகம் எம்ஜிஆரின் பிறந்த நாள்.

இது தொடர்பாக முகநூல் பக்கத்தில் அவரைப்பற்றிய அபூர்வ படங்கள் உலாவந்து கொண்டிருக்கிறது.

1982ம் ஆண்டு மதுரை சர்க்யூட் ஹவுஸ்க்கு முதல்வராக வந்திருந்த எம்ஜிஆரை பார்க்க திரண்டு நின்ற கூட்டத்தை எம்ஜிஆர் நின்று கொண்டும், நாற்காலியில் உட்கார்ந்து கொண்டும் பார்ப்பது போன்ற படமும் அதில் ஒன்று. உண்மையில் அது தினமலர் பேப்பர் கட்டிங்.அதை இந்த அளவு பாதுகாத்து வைத்திருந்தவரை இந்த நேரத்தில் பாராட்டத்தான் வேண்டும்.

நான் எடுத்த அந்த படம் எங்கெங்கோ பயணித்து விட்டு கடைசியில் என் பார்வைக்கே வந்த  அந்த படத்தின் பின்னணி சுவராசியமானதாகும். காரணம் அன்று நடந்த சம்பவம் அப்படியே பசுமரத்தாணி போல பதிந்து போயிருப்பதுதான்.

"வழக்கமாக வருட பிறப்பு அன்று எம்ஜிஆர் சென்னையில்தான் இருப்பார் இப்போது மதுரையில் தங்கியுள்ளார், அவரை பார்க்க நிறைய பிரமுகர்கள் வருவார்கள். நம்மை உள்ளே விட மாட்டார்கள் அரசாங்க போட்டோகிராபரே எல்லா படமும் எடுத்து கொடுத்து விடுவார் எதற்கும் நீங்கள் அங்கே போய்விடுங்கள்" என்று என்னை அனுப்பியிருந்தனர்.

நான் போனபோது சர்க்யூட் ஹவுஸ் என்ற அந்த விருந்தினர் மாளிகை முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அதிலும் சுற்றுப்பக்கம் உள்ள ஏழை, எளிய கிராம பெண்கள் திரளாக அதிகாலை முதலே வந்து காத்திருந்தனர். யாருக்கும் அனுமதியில்லை. எம்ஜிஆர் என்ன நினைப்பார் என்ன செய்வார் என்பது தெரியாத நிலையில் மக்களோடு மக்களாக நானும் நின்று கொண்டிருந்தேன்.

அறை எண் ஒன்றில் அவர் தங்கியிருந்தார், நேரமோ காலை 9 மணியிருக்கும். அறை வாசலில் அமைச்சர்கள், நகர பிரமுகர்கள், அதிகாரிகள் என்று வரிசையாக கோயில் பிரசாதம், மாலைகள், பூங்கொத்துகளுடன் நின்று கொண்டிருந்தனர். அந்த நீண்டு கிடந்த வரிசையைப் பார்த்தபோது இவர்கள் எல்லாம் ஒவ்வொருவராக உள்ளே போய் சாதாரணமாக பார்த்து விட்டு வந்தாலே மதியம் ஆகிவிடும் பாவம் இந்த கிராம மக்கள், இவர்கள் வெயிலில் காத்து கிடக்கிறார்கள், இப்படி இவர்கள் காத்து கிடப்பது பற்றிய தகவலாவது எம்ஜிஆருக்கு சொல்லப்பட்டு இருக்குமா? என்ற எண்ணத்துடன் நின்று கொண்டிருந்த எனக்கு அடுத்த சில நிமிடங்களில் ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது.

எம்ஜிஆரின் அறைக்கதவு திறந்தது. பிரமுகர்கள் தங்களை சரி செய்து கொண்டு உள்ளே போக தயரானபோது அவர்களை தடுத்த பாதுகாவலர் சிஎம் முதல்ல மக்களை பார்க்க வருகிறார் என்று சொல்லிவிட்டார்.

அவர் சொன்ன அடுத்த வினாடி சிரித்த முகத்துடன் கைகூப்பி வணங்கியபடி சவுக்கு கட்டை தடுப்பில் தேக்கி வைக்கப்பட்டிருந்த மக்களை நோக்கி வந்துவிட்டார். அப்போதுதான் எம்ஜிஆரை அவ்வளவு நெருக்கத்தில் நானும் பார்க்கிறேன்.

வந்தவர் சவுக்கு கட்டையின் மீது கையை வைத்துக் கொண்டு ஒவ்வொரு முகமாக பார்த்து சிரித்தபடி அவர்களது வாழ்த்தை பெற்றுக்கொண்டிருந்தார். இது எதிர்பாராத நிகழ்வு என்பதால் அரசு புகைப்படக்கலைஞர் உள்பட யாரும் அங்கு வரவில்லை.

வந்தவர் வழக்கமான தலைவர்கள் போல கையை காட்டிவிட்டு உள்ளே போய்விடுவார் என்று எண்ணினால் அப்படியே நின்றுவிட்டார். அங்கு இருந்த பல பெண்கள் சந்தோஷத்தில் அவரை நோக்கி கையை நீட்ட அவரும் கைகொடுத்து அவரை மகிழ்வித்தார். பிறகு என்ன நினைத்தாரோ உள்ளே இருந்த ஒரு நாற்காலியை கொண்டுவரச் செய்து அதில் உட்கார்ந்து கொண்டார்.

சில வினாடியாவது பார்க்க முடியுமா என்று எண்ணிய தங்கள் தலைவரை, இவ்வளவு நேரம் பார்க்க முடிந்ததே என எண்ணி பல பெண்கள் கண்ணீர்விட்டே அழுதேவிட்டனர். சவுக்கு கட்டையின் வழியாக தனது கரங்களை நீட்டி அவர்களின் கண்ணீர் துடைத்து தனது அன்பை வெளிப்படுத்தினார். அவர்கள் கூறிய குறைகளையும் கேட்டார், கொடுத்த மனுக்களையும் வாங்கிக் கொண்டார். இந்த காட்சிகள் அனைத்தையும் கறுப்பு, வெள்ளையில் (ஆர்வோ பிலிம்) அனைத்தையும் பதிவு செய்தேன். அதன் அபூர்வம் இப்போதுதான் தெரிகிறது.

இப்படியே அன்று வந்திருந்த பெரும்பாலான மக்கள் அவரை நெருங்கி வந்து பார்த்துவிட்டு சந்தோஷத்துடன் சென்றனர். அவர்களுக்கு எல்லாம் அது மறக்கமுடியாத புத்தாண்டாகும்.

இப்படி நீண்ட நேரம் மக்களுடன் இருந்துவிட்டு திரும்ப அறைக்கு சென்றார். அவர் ஏன் மக்கள் திலகம் என்று கொண்டாடப்படுகிறார் என்பதற்காக சரியான விடையும் அன்று கிடைத்தது.

Monday, 13 January 2014

அருணின் அற்புத 'விதை'




- எல்.முருகராஜ்

அருண்

சென்னையைச் சேர்ந்தவர்

உலகின் மிகச்சிறந்த மென்பொருள் நிறுவனத்தில் கைநிறைய சம்பளம் வாங்கியவர்.

இவரது எட்டு ஆண்டு பணியை மெச்சி இவரை மாதம் இரண்டு லட்சம் ரூபாய் சம்பளத்தில் அமெரிக்காவிற்கு மாற்றல் கிடைத்தது. மனைவியோடு போய் செட்டிலாகிவிடுவார் என்று அனைவரும் நினைத்துக் கொண்டு இருக்கும்போது, அந்த வேலை வேண்டாம் என்று விட்டுவிட்டு 'விதை' இயற்கை அங்காடியை தொடங்கியவர் இவர்.

அனைவரும் இவரை ஏன் இப்படி என்று பார்த்தபோது, அப்படித்தான், இது என் ஐந்தாண்டு கால கனவு என்று பதில் தந்திருக்கிறார்.

மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரை பெரிதும் நேசித்த அருண் அவர் கூற்றின்படி ஆரோக்கியமான சமுதாயம் அமைய மேற்கொண்ட முதல்படியே தமது விதை இயற்கை அங்காடி என்கிறார்.
இவரது விதை அங்காடியில் தினை, சாமை, வரகு, குதிரைவாலி போன்ற சிறு தானியங்களும் அவற்றால் செய்யப்பட்ட மாவும் கிடைக்கிறது. இந்த மாவில் இட்லி, தோசை, பணியாரம் உள்ளிட்ட பலகாரங்கள் செய்து சாப்பிடலாம். இது போக சோளமாவு, பசுநெய், தேன், நல்ல எண்ணெய் போன்றவைகளும் மற்றும் 'ஆர்கானிக்' என்று இன்று பெரிதாக பேசப்படும் இயற்கை உரங்களால் விளைவிக்கப்பட்ட அரிசி போன்ற பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

பொதுவாக இது போன்ற இயற்கை அங்காடிகள் ஒரு நாட்டு மருந்துக்கடை போல முதியோர் மட்டுமே 'முடியாமல்' வந்து போகும் இடம் போல இருக்கும், ஆனால் விதை இயற்கை அங்காடி அப்படி இல்லாமல் சிறுவயது முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் வந்து வாங்கிப்போகும் படியான நவீனத்துடன் அமைந்துள்ளது. அது மட்டுமல்ல இங்குள்ள பொருட்களும் எல்லா வயதினரும் பயன்படுத்தும்படியான வடிவத்தில் காணப்படுகின்றது. உண்மையை சொல்லப் போனால் இந்த அங்காடியில் பார்த்தபிறகுதான் இயற்கை விவசாயத்தில் இத்தனை பொருட்கள் இருக்கிறது என்பதையே அறிந்து கொள்ளமுடிகிறது.

இந்த பொருட்களுக்கு கொஞ்சம் விலை கூடுதல் என்றாலும் சத்தான உணவை சாப்பிடும் திருப்தி நிச்சயம் இருக்கும், மேலும் எதிர்காலத்தில் மருத்துவர்களுக்கு தரப்போகும் பெரும் தொகை இப்போதிருந்தே மிச்சப்படும்.
நூறு சதவீதம் தரமான இயற்கை வழி விளைந்த பொருள்தானா என்று சோதித்து பார்த்த பிறகுதான் எந்த பொருளையும் அங்காடிக்குள் அனுமதிக்கிறார், இதற்காக தென்னிந்தியா முழுவதுமே இவரது தேடல் தொடர்கிறது.

தமிழ் ஸ்டூடியோ, படிமை, பேசாமொழி பதிப்பகம் என்று இவரது பன்முகப் பயணத்தில் விதை இயற்கை அங்காடி என்பது நனவான ஒரு இனிய இயற்கை கனவு என்பதால் இதில் எந்த தொய்வும் வந்துவிடக்கூடாது என்பதற்காக தினேஷ் என்பவரை இந்த இயற்கை அங்காடியின் பொறுப்பாளராக நியமித்துள்ளார்.

வாழ்க்கைக்கு பொருள் ஒரு ஆதாரமே தவிர பொருள் மட்டுமே ஆதாரம் இல்லை. மழையில் நனையாமல் ஒதுங்குவது என்பது அனைவருக்கும் இயல்பானதுதான் ஆனால் மழைதரும் அனுபவம், அதுதரும் பேரானந்தம், அதில் நனைவதனால் ஏற்படும் சுகம், அந்த துளிகள் தரும் பரவச அனுபவம் என்பது மகத்தானது, ஆகவே மழையில் நனையாவிட்டாலும் நனைய முன் வருபவர்களை ஆதரிக்கவேண்டும். அச்சடித்த காகிதங்களின் (பணத்தின்) பின்னால் பயணித்தால் முடிவில் ஒரு சராசரி உயிரினமாக மட்டுமே எஞ்சி நிற்கமுடியும் ஆனால் வாழ்க்கையின் அனுபவத்தை, அதுதரும் பரவசத்தை, இனிய பயணத்தை அந்த பயணம் தரும் பரவச தருணங்களை இழக்கவேண்டி நேரிடும் என்பது இவரது கருத்து.

இவரது பேச்சிலும் மூச்சிலும் இருக்கும் தரமும் ஆரோக்கியமும் சென்னை அடையாறில் உள்ள இவரது விதை அங்காடி முழுவதும் நிரம்பியிருக்கிறது.

விதை இயற்கை அங்காடி பற்றி மேலும் விவரத்திற்கு தொடர்பு கொள்ள: 9840698236.

Click Here

இசையே எங்கள் பொக்கிஷம்....


பதிவு செய்த நாள்

12ஜன
2014 
17:53






- எல்.முருகராஜ்









சென்னை மைலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண உண்டி உறைவிட பள்ளியில் ஒரு நிகழ்ச்சி.

கம்ப்யூட்டரை எளிய முறையில் புரிந்து கொள்வதுடன், அதில் கற்று தேர்ந்து பார்வையற்றவர்களுக்கு அதனை எப்படி எல்லாம் புரிய வைக்கலாம் என்பதற்காக "சாப்ட் வேர்' குறித்து புரியவைக்கும் நிகழ்ச்சி.

ஆறாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் கூடியிருந்தனர், இந்த மாணவர்களில் பெரும்பாலோனார் அப்பா, அம்மா இல்லாதவர்கள் என்பதுடன் அவர்களை ஆதரிக்கவோ எடுத்து படிக்க வைக்கவோ ஆள் இல்லாத, பொருளாதார சூழ்நிலையில் மிகவும் பின்தங்கியவர்களாக உள்ளவர்களே ஆவார்கள்.

இந்த மாதிரி மாணவர்களை தமிழகம் முழுவதும் தேடிப்பிடித்து அவர்களுக்கு உயர்தரமான கல்வி, உணவு, உறைவிடம் கொடுத்து படிக்கவைத்து ஆளாக்குவதே இந்த ராமகிருஷ்ண பள்ளியின் மகத்தான பணி.

இந்த மாதிரி மாணவர்களிடம் தனது கம்ப்யூட்டர் அறிவை கொண்டு செல்வதையே பெருந்தொண்டாக கொண்டு செயல்பட்டுவருபவர் காம்கேர் புவனேஸ்வரி.

இந்த நிகழ்ச்சியை சிறப்பித்த பலருக்கு பரிசுகள் வழங்கும்போது மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவர் சிரமப்பட்டு நடந்து வந்தார். அவரைப் பற்றி குறிப்பிடும்போது இவர் பள்ளியில் உருவாக்கி வைத்துள்ள பேண்டு வாசிக்கும் மாணவர்களின் இசைக்குழு ஜனாதிபதியாக இருந்த அப்துல்காலாமால் பாராட்டப் பெற்றவர்கள் என்றனர். அப்போது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பார்வையற்ற பேராசிரியர் ஜெயச்சந்திரன் இப்போது என்னால் அந்த இசையை கேட்க முடியுமா? என்றார்.

அவரைப்போலவே அரங்கத்தில் இருந்த அனைவருக்கும் மாணவர்களின் பேண்டு இசையை கேட்கும் ஆர்வம் எழுந்தது. கொஞ்சமும் தயக்கமின்றி உடனே மாணவர்கள் ஓடிப்போய் தத்தமது இசைக்கருவியுடன் வந்து நின்று பேண்டு வாத்திய இசையை எழுப்ப தயராகிவிட்டனர்.

உரிய குறிப்புகள் கிடைத்ததும் அவர்கள் எழுப்பிய இசை அற்புதமாக இருந்தது. பேக் பைபர், ட்ரம்பட், எம்போனியம், பேரிடோன், பியூகல், சாக்ஸாபோன், தாளம் உள்ளிட்ட பல்வேறு வித இசைக் கருவிகளுடன் அவர்கள் இசைத்த இசைக்கு தலையை அசைக்காதவர்களே கிடையாது அதுவும் கடைசியாக "ஜாரே ஜாகனே அச்சா' இசைத்து முடித்தபோது ஒட்டுமொத்த அரங்கமே எழுந்து நின்று கைதட்டியது.

டேனியல் நம்மிடம் பேசும் போது, பெரும்பாலான பள்ளிகளில் பேண்டு இசைக்குழு இருக்கும் ஆனால் எங்கள் பள்ளி மாணவர்களின் பேண்டு இசைக்குழு ம்ட்டும் பிரதானமாக பேசப்பட காரணம் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம்தான். அவர் ஜனாதிபதியாக இருக்கும்போது இங்கு வந்திருந்தார், அவரை வரவேற்று இங்கிருந்த மாணவர்கள் பேண்டு இசை வாசித்தனர். கேட்டுவிட்டு மைக்கில் பேசும்போது இந்த இசை என்னை ரொம்பவே ஈர்த்துவிட்டது, மிகவும் தொழில் ரீதியாக டில்லி பரேடின்போது வாசிக்கும்போது கேட்ட உணர்வு எனக்கு ஏற்படுகிறது என்றார்.

அப்போது முதலே எங்கள் பள்ளி பேண்டு இசைக்குழுவிற்கு பாராட்டு கிடைத்து வருகிறது என்றாலும் மாணவர்களின் ஈடுபாடும் இதற்கு ஒரு காரணம். இந்த மாணவர்கள் இங்கேயே தங்கியிருப்பதால் படிப்பு போக மீதம் இருக்கும் நேரம் எல்லாம் இதை வாசித்து, வாசித்து தங்களது வாசிப்பை செதுக்கிக்கொள்கின்றனர்.

அம்மா, அப்பா, அண்ணன், அக்காவாக இருந்து ஆதரவில்லாத இந்த மாணவர்களுக்கு நீங்கள் தரும் பாராட்டும் ஒருபக்கம் அவர்களுக்கு உற்சாகமும் உத்வேகமும், தந்து தங்களது திறமையில் உச்சம் அடைய வைக்கிறது என்று கூறிய மாஸ்டர் டேனியலிடம், கூடுதல் விவரம் பெற பேசலாம். தொடர்பு எண்: 9566211705.

Click Here

Monday, 6 January 2014

சுவாமி விவேகானந்தரின் புகைப்பட புத்தகம்...

- எல்.முருகராஜ்











பத்தொன்பதாம் நூற்றாண்டு பல புதிய கண்டுபிடிப்புகளின் காலமாகத் திகழ்ந்தது.அவற்றுள் ஒன்றுதான் புகைப்படக்கலை.

ஓவியர்கள் கண்டும், கற்பனையிலும் வரைந்த ஓவியங்களின் மூலமே முந்தையகால மேதைகளையும், மகான்களையும் நம்மால் உணர நேரிட்டது. ஆனால் புகைப்படக்கலை வந்த பிறகு அந்த மேதைகளின் உருவங்களை உள்ளது உள்ளபடியே காண நம்மால் முடிந்தது.

அந்த வகையில் அப்போது அறிமுகமான புகைப்படக்கலையால் நாட்டின் பெருமைமிகு வீரத்துறவியான விவேகானந்தரின் பல்வேறுவிதமான புகைப்படங்களை காணும் பாக்கியம் கிடைத்துள்ளது.

நாட்டின் பெருமையை உலகிற்கு பறைசாற்றிய அதே வேகத்தில் நாட்டின் சிறுமை கண்டு பொங்கியவர் இவர் ஒருவரே.

விவேகானந்தரின் கண்கள் வறட்டு ஞானியின் கண்களைப்போல அல்லாமல் பக்தனின் கருணைக் கண்களாக உள்ளன என்று அவரது குருவான ராமகிருஷ்ணராலேயே குறிப்பிட்டு பாராட்டப்பட்ட அவருடைய கண்களின் காந்த சக்தியை புகைப்படங்கள் மூலமாகவே உணரலாம்.

வாழ்ந்த காலம் சிறிது (39 வயது) என்றாலும் ஐநூறு வருடங்கள் வாழ்ந்த அனுபவங்களை சொல்லிச் சென்றுள்ளார் அவர்.

விவேகானந்தர் தொடர்பாக கிடைத்த 95 படங்கள்தான் இன்று நம்மை சுற்றி சுற்றி வருகின்றன. படங்கள் யாவும் 1886க்கு பிறகு எடுக்கப்பட்டவை. விவேகானந்தர், இந்தியாவில் எடுக்கப்பட்ட படங்களில் மழித்த தலை, கைத்தடி, கமண்டலத்துடன் ஒரு சாதாரண துறவியாக காட்சி தருகிறார். வெளிநாட்டில் எடுக்கப்பட்ட படங்கள் வகிடு எடுத்து வாரிய தலையுடனும், தலைப்பாகை கோட்டுடன் சீமானுக்குரிய தோற்றத்துடன் காணப்படுகிறார். இந்த படங்களைக் கொண்டும், இவற்றுடன் இவரது வாழ்க்கையிலிருந்து சில சம்பவங்கள், அவரைப் பற்றி மேதைகள் கூறிய கருத்துக்கள்,அவரது சிந்தனைச் சிதறல்கள் ஆகியவற்றை சேர்த்து சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் ஒரு அருமையான தமிழ் நூலை வெளியிட்டுள்ளது.

விவேகானந்தரைப் பற்றி எழுதும்போது நான் ஆனந்தப் பரவசங்களில் ஆழ்கிறேன். அதைத் தடுக்க முடியாது... அவரது ஆளுமை பொலிவு மிக்கது,ஆழமானது, விளைவைப் பற்றி சிந்திக்காத தியாகம், ஓய்வற்ற செயல்பாடு, எல்லையற்ற அன்பு, ஆழமானதும் பரந்து பட்டதுமான அறிவு, பொங்கிப் பெருகும் உணர்ச்சிகள், குழந்தை போல களங்கமற்றவர், நமது உலகில் அபூர்வமானவர். நாடி நரம்புகளில் ரத்தம் கொதித்துப் பாய்கின்ற ஆண்மகன் அவர். எதற்கும் விட்டுக்கொடுக்காமல், சளைக்காமல் போரிடுகின்ற போராளி அவர் என்று வீரர் நேதாஜி போன்றவர்கள் சொல்லிய வார்த்தைகளும் இந்த நூலில் ஆங்காங்கே அழகுற இடம் பெற்றுள்ளன.

சுவாமி ஆசுதோஷானந்தர் தொகுத்துள்ள இந்த புத்தகம் நூறு ரூபாய் விலையில் "சுவாமி விவேகானந்தரின் புகைப்படங்கள்' என்ற தலைப்பில் அருமையாக வெளிவந்துள்ளது. விவேகானந்தரின் 150வது ஆண்டு விழாவினை முன்னிட்டு சிறப்பு விலையில் வெளியிடப்பட்டுள்ள இந்த புத்தகம் விவேகானந்தரை வாசிப்பவர்களிடம் மட்டுமின்றி புகைப்படக்கலையை நேசிப்பவர்களிடம் அவசியம் இருக்கவேண்டிய பொக்கிஷமாகும்.

இன்னும் சுருக்கமாக சொல்வதானால் இது விவேகானந்தர் பற்றிய வெறும் பட புத்தகம் மட்டுமல்ல பல்வேறு தகவல்களையும் படிப்பவருக்கு எளிமையாக சொல்லும் பாட புத்தகமும் கூட.

இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ள சில புகைப்படங்கள் இந்த பொக்கிஷம் பகுதியில் இடம் பெற்றுள்ளது. 

சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான வருகின்ற 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை ராமகிருஷ்ண மடத்தில் சிறப்பு விழா நடைபெற உள்ளது. விழாவில் பிரதானமாக விவேகானந்தப் பயிற்சி என்ற புத்தகமும் வெளியிடப்பட உள்ளது. இந்த புத்தகம் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
விவேகானந்தரின் புகைப்படங்கள், விவேகானந்தர் பிறந்த நாள் நிகழ்ச்சி, விவேகானந்தப் பயிற்சி புத்தகம் தொடர்பான கூடுதல் விவரத்திற்கு தொடர்பு கொள்ள வேண்டியவர் திலீப்- 9444696591.


Click Here

Friday, 3 January 2014

நம்மோடு வாழ்வார் நம்மாழ்வார்...

- எல்.முருகராஜ்


ஐயாயிரம் கோடி கடன் வாங்கியவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை... அவருக்கு கடன் கொடுத்த வங்கிகாரனுங்க எவனும் தற்கொலை பண்ணிக்கல.. அந்த கடனைக் கொடுக்கச் சொன்ன நிதியமைச்சர் தற்கொலை பண்ணிக்கல.. ஆனால் நமக்கெல்லாம் சோறு போடும்.. எங்கள் ஏழை உழவன்.. சில ஆயிரம் கடனை திருப்பிக்கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறான்.. ஏனென்றால் இவனுக்கு மானம் தான் பெரிது.. --இப்படி விவசாயிகளுக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் இன்று நம்மிடையே இல்லை.

வேளாண் துறையில் இளம் அறிவியல் பட்டம் பெற்றவர். ஆனாலும், படித்து கற்றுக்கொண்டதை நிராகரித்துவிட்டு, இயற்கையிடமிருந்து கற்றுக் கொண்ட உண்மைகளை மட்டுமே தன் வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தார். 

அரசு வேளாண் ஆய்வு நிலையத்தில் மேலாளராகப் பணியாற்றிய நம்மாழ்வார் அப் பணியை உதறித் தள்ளினார். "இங்கே செய்யப்படுபவை எல்லாம், விவசாயிகளுக்குப் பயன் தராத ஆராய்ச்சிகள். அதனால்தான், இந்த வேலையிலிருந்து விலகுகிறேன்' என்று வெளிப்படையாக அறிவித்தவர் .

பின்னர், கிருஷ்ணகிரி மலைப் பகுதி கிராமங்களில் தன்னார்வப் பணிகள் செய்தார். "இந்த மக்களிடம் பழகிய பின்னர்தான், தான் கற்றவை எல்லாம் அறிவே அல்ல. உண்மையான அறிவு மக்களிடம்தான் இருக்கிறது' என்றுணர்ந்து அந்த மக்களிடம் இருந்து தான் கற்ற விவசாய நுட்பங்களை சமூகம் முழுமைக்கும் பரப்பியவர்.

ரசாயன வேளாண்மை மட்டுமே பரவலாக செய்யப்பட்ட காலத்தில், நம்மாழ்வார் இயற்கை வேளாண்மைக்கு ஆதரவாக களம் இறங்கினார். ஏறத்தாழ முப்பத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர். நம்மாழ்வார் கூறிய இயற்கை வேளாண்மை முறைகள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. ஆனாலும், மனம் தளராமல் அவர் கிராமம் கிராமமாகப் பயணம் செய்து பணியாற்றினார். விளைவாக, இன்று தமிழகம் முழுவதும் பல்லாயிரம் ஏக்கர் விளைநிலங்கள் இயற்கை வேளாண்மைக்கு மாறியுள்ளன. அவரது இயற்கை வேளாண் தொழில்நுட்பங்களைக் கற்றுத் தரும் பயிற்சி மையங்கள் நூற்றுக் கணக்கில் உருவாகியுள்ளன.

நாகை, கடலூர் மாவட்டங்களில் சுனாமியால் பாதிக்கப்பட்ட நிலங்கள் வேளாண்மைக்குப் பயன்படாதவை என ஒதுக்கப்பட்டன. நம்மாழ்வார், அந்த நிலங்களை வேளாண் நிலங்களாக மாற்ற முடியும் என்று கூறினார். பேசியதுமட்டுமல்ல, மூன்றே மாதங்களில் அந்த நிலங்களை விளை நிலங்களாக மாற்றியும் காட்டினார் . தமது பணிகளுக்கென பலருடைய ஒத்துழைப்போடு உருவாக்கிய பண்ணையம்தான் வானகம் இன்றைக்கு இயற்கையை நேசிக்கும் ஆயிரக் கணக்கானோரின் ஆலயம்போல விளங்குகிறது.

வாழ்நாள் முழுதும் சூழலையும் மரபு வளங்களையும் பாதுகாப்பதற்காகப் பணியாற்றியவர் நம்மாழ்வார். நம் முன்னோராவது வாடிய பயிருக்காக வாடியதோடு நின்றனர், ஆனால் பயிர் வாடக் காரணம் என்ன, பயிரை பெற்றெடுக்கும் மண் மலடாகாமல் காக்க வழி என்ன என்பதை அறிவியல் ரீதியில் ஆராய்ந்து எந்ந மாதிரியான விவசாயம், உழவு, உண்ணும் உயிரினங்களுக்கும் அதை உற்பத்தி செய்யும் மண்ணுக்கும் ஏற்றது என்பதை அனைவருக்கும் புரிய வைத்து, அந்த மாதிரியான விவசாயத்தை செய்து காட்டி வெற்றியும் பெற்றவர் .

நஞ்சுகளே இல்லாத வேளாண்மை முறையை, இயற்கை வழி வேளாண் முறையை வாழ்க்கையாக்குவோம். இயற்கை ஒருபோதும் தவறு செய்யாது. இயற்கையின் அங்கமான மனித உடலும் தவறு செய்யாது. ஆகவே, இயற்கை வழி வாழ்வியலின் மூலம் மருந்தே இல்லாத மருத்துவ முறைகளைக் கடைப்பிடிப்போம். மருந்தில்லா மருத்துவமுறையை வாழ்க்கையாக்குவோம். இயற்கை வளங்களையும் மனித ஆற்றலையும் சுரண்டுவதற்காகத்தான் இன்றைய கல்விமுறை உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மனிதரும் தமக்குள் இருக்கும் சுய தன்மையை உணருவதே உண்மையான கல்வி. "தொட்டனைத் தூறும் மணற்கேணி'' என்பதுபோல தமக்குள் ஆழ்ந்து சிந்திப்பவர்களுக்கே, அறிவு ஊற்றெடுக்கிறது. இதுவே இயற்கை நியதி. சுய ஆற்றலை மேம்படுத்தும் கல்வி முறையை உருவாக்குவோம், கடைபிடிப்போம்.

இயற்கை எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. இயற்கை எல்லா உயிர்களின் தாய். மனித குலம் தம் அறிவைக் கொண்டு இயற்கையைச் சுரண்டி, கொள்ளையடிக்கிறது. பெரும் நிறுவனங்களின் வணிகத்திற்காகவும் சில முதலாளிகளின் லாபத்துக்காகவும் இயற்கை அன்னை துன்புறுத்தப்படுகிறாள்.இயற்கை வளங்களைச் சூறையாடும் எந்தத் திட்டத்தையும் நாம் எதிர்க்க வேண்டும். மனிதர்களின் வாழ்க்கைத் தேவைகளை இயற்கை வழியில் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.

இயற்கையின் உண்மையான பிள்ளைகளாக நாம் வாழ வேண்டுமெனில் இயற்கைக்கு எதிரான திட்டங்களை எதிர்த்துப் போராடித்தான் தீர வேண்டும் என்று வாழ்நாளெல்லாம் முழங்கிய நம்மாழ்வாருக்கு நாம் செலுத்தும் அஞ்சலி என்பது அவர்வழி நிற்பதாகும். 

இயற்கை விவசாயத்திற்காக வாழ்ந்த ஒரு உயிர் இயற்கையோடு கலந்துவிட்டது... காற்றாக...மழையாக...வெயிலாக... அவர் நம்மோடு இருப்பார்... அவர் நம்மோடு விதைப்பார்.. அவர் நம்மோடு நாற்று நடுவார்... அவர் நம்மோடு களை எடுப்பார்.. அவர் நம்மோடு அறுவடை செய்வார்...

எண்டோ சல்பான் தெளிப்பா
மீத்தேன் குழாய் புதைப்பா
ஆற்று மணல் கொள்ளையடிப்பா
பிடி கத்தரிக்காய் விளைவிப்பா
வால்மார்ட்க்கு வரவேற்பா
எங்கும் எதிர்ப்பார் நம்மாழ்வர்

நெளியும் மண்புழுவில்
உருண்டோடும் ஆற்றுநீரில்
பறக்கும் சிட்டுக்குருவியில்
எருவாகும் தழைச்சசத்தில்
என்றும் வாழ்வார்
நம்மாழ்வார்..

Click Here