- எல்.முருகராஜ்
வருகின்ற 4ம்தேதி கேன்சர் தினம்,
உலகம் முழுவதும் ரோஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
மருந்து மாத்திரைகளை விட அன்பும், அரவணைப்பும் அதிகம் தேவைப்படுவது இந்த புற்றுநோய்க்குதான்.
இந்த நோய் தானாக வருவதை விட புகையிலை, சிகரெட் போன்ற பழக்கங்களால் வலிய வரவழைத்துக் கொள்பவர்களே அதிகம்.
அதிலும் இளைஞர்கள் சிகரெட் பிடிக்கம் பழக்கத்தால் குரல்வளை புற்று நோய் வந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகக்கூடாது என்பதற்காக, அந்த நோயின் பிடியில் சிக்கி திரும்பிய ஒருவர் தனது வாழ்வின் லட்சியமே இளைஞர்களை சிகரெட் பிடிக்கும் பழக்கத்தில் இருந்து மீட்பதுதான் என்ற எண்ணத்தோடு எழுபது வயதிலும் இளைஞர்கள் இருக்குமிடமான கல்லூரி போன்ற இடங்களை தேடித்தேடிப்போய் பரப்புரை செய்துவருகிறார்.
அவரது பெயர் ஏ.சர்புதீன்.
சென்னை முகப்பேரைச் சேர்ந்தவர்.
மாநில அரசு ஊழியராக இருந்த போது அவர் சார்ந்திருந்த அமைப்பின் செயலாளராகவும் இருந்தார். இந்த பொறுப்புக்கு முக்கிய தேவையான பேச்சுக்கலையிலும் வல்லவர்.
இவருக்குள்ள ஒரே கெட்ட பழக்கம் சிகரெட் பிடிப்பதுதான். இவருக்கு பொழுது போகாத போதெல்லாம் சிகரெட் பிடிப்பார், நண்பர்கள் யாருக்கு பொழுது போகவில்லை என்றாலும் இவரிடம் வந்து சிகரெட் பிடித்து செல்வார்கள். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு பாக்கெட் சிகரெட் பிடிப்பது என்பது இவரது அன்றாட அலுவலில் சேர்ந்துவிட்டது. இப்படி பல ஆண்டுகள் தொடர்ந்த இவரது சிகரெட் பழக்கம் விபரீதமாக வெளிப்பட்டது.
ஒரு நாள் காலை படுக்கைவிட்டு எழுந்தவர் பேசமுடியாது திணறினார். பக்கத்தில் இருந்த மருத்துவ மனைக்கு சென்ற போது அவர்கள் காது மூக்கு தொண்டை நிபுணரை கலந்து ஆலோசிக்க சொன்னார்கள். அவர் கொடுத்த மருந்து மாத்திரைகளை சாப்பிட்டபோது அது ஒரு வாரம் வேலை செய்தது, அதன் பிறகு நிலமை இன்னும் மோசமாகியது.
பிரிதொரு மருத்துவ மனையின் ஆலோசனையின் பேரில் தொண்டை சதையை எடுத்து சோதனை செய்து பார்த்தபோதுதான், சர்புதீனுக்கு குரல்வளை புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.
மனிதர் ஆடிப்போய்விட்டார். குணப்படுத்த முடியுமா? என்று எங்கெங்கோ போய் முட்டி மோதி பார்த்தார். இனிமேல் சிகரெட்டை தொடவே மாட்டேன் என்று சூளுரைத்தார். இதெல்லாம் தாமதமான முடிவு. நீண்ட நாள் சிகரெட் குடித்ததன் பலனாக கிடைத்த இந்த குரல்வளை புற்றுநோய்க்கு பலியாகிவிடாமல் உங்களை காப்பாற்றுகிறோம் ஆனால் இனிமேல் பேசுவது என்பதும் சுவாசிப்பது என்பதும் முடிந்து போன விஷயம் என்றார்கள்.
அதன்படியே நடந்தது.
மூக்கு என்பது முகத்தின் ஒரு அங்கமாகத்தான் இன்று வரை இருக்கிறது, அதன் குணாதிசயமான நுகரும் தன்மை இழந்துவிட்டது. சுவாசம் தொண்டையில் போடப்பட்ட குழியின் வழியாகவே நடக்கிறது. இதெல்லாம் நடந்தது இவரது ஐம்பதாவது வயதில். விரக்தியான வாழ்க்கையில் இருந்த போதுதான் சென்னை அடையார் கேன்சர் இன்ஸ்டியூட் டாக்டர் விதுபாலாவின் அறிமுகம் கிடைத்தது.
அவர் இவரிடம் நிறைய பேசி நம்பிக்கையை வளர்த்தார். சிகரெட் பிடிக்கும் பழக்கத்தால் உங்களுக்கு ஏற்பட்ட குரல்வளை புற்று நோய் நமது இளைஞர்கள் யாருக்கும் ஏற்படக்கூடாது என்பதற்காக நீங்கள் ஏன் பள்ளி, கல்லூரி போன்ற இடங்களிலும் இளைஞர் கூடுமிடங்களிலும் பேசக்கூடாது என்று சொன்ன போது நான் எப்படி பேச முடியும் என்றார்.
முயற்சித்தால் எல்லாம் முடியும் என்று சொன்னதுடன் இது தொடர்பாக சிறப்பு பயிற்சி கொடுத்தனர். பின்னர் "எலக்ட்டோ ஸ்பீச் 'என்ற சிறிய கைக்கடக்கமான கருவியை கொடுத்தனர். பேட்டரியால் இயங்கும் இந்த கருவியை தொண்டையில் வைத்துக்கொண்டு இவர் பேசும்போது ரோபா என சொல்லப்படும் எந்திர மனிதன் பேசுவது போல பேச்சு வந்தது.
சர்புதீனுக்கு பெரிதும் சந்தோஷம் தனது தேவைகளை காலம் காலமாக பக்கம் பக்கமாக எழுதி காண்பித்த நிலைமைக்கு விடுதலை கிடைத்தது. இவர் பேசுவது முதலில் புரியாதது போல இருக்கும், சிறிது நேரம் கவனம் செலுத்தினால் பிறகு எளிதான புரிந்து விடும். முதன் முதலாக இவருடன் மொபைல் போனில் பேசும் போது ஒரு மெஷின் பேசுவது போலத்தான் உணருவார்கள் ஆனால் பிறகு போகப்போக இவரது பேச்சு பிடிபட்டுவிடும்.
யார் சொல்லியும் சிகரெட் பழக்கத்தை விடாத பல இளைஞர்கள் இவர் மைக்கில் பேசுவதைக் கேட்டு அந்த நிமிடமே சிகரெட்டை தூக்கி எறிந்திருக்கின்றனர். இப்படி ஒருவரல்ல இருவரல்ல பல ஆயிரம் பேரை சிகரெட் பழக்கத்தில் இருந்து மீட்டு இருக்கிறார் மீட்டு வருகிறார்.
இவரது இந்த தன்னலமற்ற சேவையை பாராட்டி பலர் பாராட்டி விருதுகள் கொடுத்த போதும், எம்புள்ளைய சிகரெட் பழக்கத்தில் இருந்து மீட்டுக்கொடுத்த ஐயா நீங்க நல்லா இருக்கணும் என்று சொல்லும் ஏழை பெற்றோர்களின் வாழ்த்தையே பெரிதாக எண்ணுகிறார்.
இவரது போன் எண்: 9445170464. மீண்டும் சொல்கிறேன் இவரிடம் முதல் முறையாக பேசும்போது ஒரு எந்திரத்திடம் பேசுவது போலத்தான் இருக்கும். கொஞ்சம் புரிபடாது கவனத்தை சிதறவிடாமல் பேசினால் புரியும்.
உங்கள் பகுதி பள்ளி, கல்லூரியில் ஏதேனும் விழா நடக்கும் போது இவரை ஒரு பதினைந்து நிமிடம் பேசுவதற்காக வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் சிகரெட் பிடிக்கும் இளைஞர்கள் மீட்டு எடுக்கப்படுவார்கள்.
வயதை மீறி தனது நோயைத்தாண்டி ஆரோக்கிய சமுதாயம் அமைய தனது வாழ்க்கை தொண்டுள்ளத்துடன் அர்ப்பணித்துக்கொண்டுள்ள சர்பபுதீனின் சேவைக்காகவாவது இறைவன் இவருக்கு நீண்ட ஆயுளை தந்தருளட்டும்.
வயதை மீறி தனது நோயைத்தாண்டி ஆரோக்கிய சமுதாயம் அமைய தனது வாழ்க்கை தொண்டுள்ளத்துடன் அர்ப்பணித்துக்கொண்டுள்ள சர்பபுதீனின் சேவைக்காகவாவது இறைவன் இவருக்கு நீண்ட ஆயுளை தந்தருளட்டும்.
No comments:
Post a Comment