Sunday, 29 December 2013

நந்தினி என்றொரு வீரமங்கை...

- எல்.முருகராஜ்





இன்றைய தேதிக்கு உண்மையான விஷயம் என்றால் கூட அதை ஏன் உரக்க சொல்ல வேண்டும், பிறகு சிக்கலை சந்திக்கவேண்டும் என்று கிட்டத்தட்ட அனைவருமே பயந்து போய் அடக்கி வாசிக்கும் காலமிது.

ஆனால் ஒரு குரல் கடந்த சில நாட்களாக உரக்க ஒலித்துக்கொண்டு இருக்கிறது. அந்தக் குரலுக்கு சொந்தக்காரர் நந்தினி.

மதுரை சட்டக் கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவி.

குடியின் கொடிய பிடியில் சிக்கி முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தமிழ் சமுதாயம் வயது வித்தியாசமின்றி சீரழிந்துவருவது கண்டு கசிந்து கண்ணீர் பெருக்கியவர் ஒரு முடிவு எடுத்தார்.

இது சந்தேகமில்லாமல் போதைப் பொருள்தான், இதை அரசே விற்பது சட்ட விரோதம், இந்த தவறை இனியும் தொடர வேண்டாம் உடனே "டாஸ்மாக்' கடைகளை மூட நடவடிக்கை எடுங்கள் இது குறித்து மதுவினால் நாசமான நூறு குடும்பத்து மாணவர்களோடு வந்து உங்களை சந்தித்து பேசுகிறேன் என்று முதல்வருக்கு கடிதம் போட்டார்.

பல மாதங்களாக பதில் ஏதுமேயில்லை.

தனது கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை சட்டக் கல்லூரி முன்பாக உண்ணாவிரதம் இருந்தார். தொடர் உண்ணாவிரதம் காரணமாக உடல்நிலை மோசமடைந்தது. அதிகாரிகளும், காவல் துறையும் தலையிட்டு உங்களது கோரிக்கையை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்று கூறியதை அடுத்து உண்ணாவிரதத்தை கைவிட்டு படிப்பில் கவனம் செலுத்தினார்.

ஆனால் நாட்கள் பலவாகியும் கோரிக்கை பற்றி பதிலேதும் இல்லை, நந்தினிக்கு பாட புத்தகத்தை திறந்தால் ரோட்டில் குடித்துவிட்டு கிடக்கும் குடிமகன்களின் அலங்கோலமும் அவரைச் சுற்றி அழும் குடும்பத்தின் சோகங்களும்தான் ஓடியதே தவிர படிப்பு ஓடவில்லை.
பாலில் கலப்படம் செய்து விற்பவர்களுக்கு ஆயுள் தண்டனை தரவேண்டும் என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளது அந்த அளவிற்கு ஆரோக்கியமான சமுதாயத்தின் மீது நீதிமன்றத்திற்கு உள்ள அக்கறை ஏன் இந்த மக்கள் மன்றத்திற்கு இல்லை என்று வருத்தப்பட்டவர் இது தொடர்பாக சென்னையில் உள்ள முதல்வர் இல்லத்திற்கு முன்பாகவே உண்ணாவிரதம் இருப்பது என்ற முடிவுடன் அப்பா ஆனந்தனை துணைக்கு கூப்பிட்டுக் கொண்டு மோட்டார் சைக்கிளிலேயே பயணம் மேற்கொண்டார்.

இவரை சென்னை குரோம்பேட்டையில் வழிமறித்த போலீசார் முதல்வர் கோடநாட்டில் இருக்கிறார் ஆகவே நீங்கள் சென்னைக்கு நுழைவது கூடாது மதுரை திரும்பி போங்கள் என்று திருப்பிஅனுப்பினர்.

சரி மதுரை போகிறோம் என்று சொல்லி விட்டு கோடநாடு நோக்கி பயணத்தை மேற்கொண்டனர். பெருந்துறை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது ஒய்வு எடுத்த போது கையோடு கொண்டு போயிருந்த மதுவுக்கு எதிரான துண்டு பிரச்சாரங்களை மக்களிடம் விநியோகித்ததுடன் மதுவிற்கு எதிரான கோஷங்களையும் எழுப்பினர்.

தகவல் கேள்விப்பட்டு பறந்துவந்த போலீசார் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக குற்றம் சுமத்தி கைது செய்தனர். ஆனால் நந்தினி மதுரைவிட்டு புறப்படும்போதே உண்ணாவிரதத்தை மேற்கொண்டுவிட்டார் போலும் மிகவும் தளர்ந்து போய் மயக்க நிலையில் இருந்ததால் உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு குளுகோஸ் ஏற்றப்பட்டார்.

குளுகோஸ் ஏறி கொஞ்சம் தெம்பு வந்ததும் மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒப்படைக்க முடிவு செய்து அதன்படி ஒரு வேனில் ஏற்றிக் கொண்டு போய் மதுரை போலீஸ் கமிஷனரிடம் ஒப்படைத்தனர், அங்கு விசாரணை நடைபெற்றது. விசாரணைக்கு பிறகு நந்தினி விடுதலை செய்யப்பட்டார்.

கணக்கிலடங்காத அளவிற்கு போலீசாரின் எச்சரிக்கைகள், மிரட்டல்கள், ஆலோசனைகளை கேட்டால் யாருக்குமே போதும் போராடியது என்ற எண்ணம் வரும். ஆனால் நந்தினிக்கு அப்படி ஒரு எண்ணமே வரவில்லை இன்னும் சொல்லப் போனால் இப்போதுதான் போராட்டத்தை வேகப்படுத்தும் தீரம் கூடுதலாக வந்ததுள்ளது.

மதுரை வைகை ஆற்றில் அழகர் இறங்கும் இடத்தில் அப்பா ஆனந்தன்,தங்கை ரஞ்சனாவுடன் வெட்ட வெளியில் வெயிலில் மீண்டும் மதுவிற்கு எதிரான தனது உண்ணாவிரதத்தை துவக்கினார். வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட நந்தினி மீண்டும் உண்ணாவிரத பேராட்டம் மேற்கொண்டதை கேள்விப்பட்ட போலீசார் நந்தினியை கைது செய்தனர், நந்தினி உடல் பலவீனமாக இருக்கவே ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

என் படிப்பை விட நான் சார்ந்துள்ள தமிழ் சமுதாயம் முக்கியமானது இந்த இனிய சமுதாயம் குடிக்கு அடிமையாகும் கொடுமையை என்னால் தாங்க முடியவில்லை. இதற்கு காரணமான டாஸ்மாக் கடைகளை மூடுவது குறித்த உத்தரவு வரும் வரை எனது போராட்டங்கள் தொடரும் என்ற நிலையை எடுத்துள்ள நந்தினிக்கு கொஞ்சம் சுயநினைவு வந்தால் போதும் யாரும் மது குடிக்கக் கூடாது, கடையை மூடணும் வாங்க போராடலாம் என்று ஈனஸ்வரத்தில் முனங்குகிறார். உடல் நலத்தை விஞ்சி நிற்கிறது இவரது மனபலம்.
 
இன்று நந்தினியின் கோரிக்கையும்,போராட்டமும் கோமாளித்தனமாக இருக்கலாம் ஆனால் இன்று இல்லாவிட்டால் நாளை நிச்சயம் நந்தினியின் கோரிக்கை நிறைவேறும், மது போதையற்ற சமுதாயம் அமைந்தே தீரும்.


Sunday, 22 December 2013

இதில் கிடைக்கும் சந்தோஷமே தனி...- ராஜசேகர்

- எல்.முருகராஜ்









இப்போது அமெரிக்காவின் முன்னணி நிறுவனம் ஒன்றின் ஆலோசகராக இருப்பவரான ராஜசேகர் பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாம் சென்னையில்தான்.

படிக்கும் போது ஓவியத்தில் ஆர்வம், அந்த ஆர்வம் கடந்த 2006ம் ஆண்டு போட்டோகிராபி மீது திரும்பியது. படம் எடுக்க, எடுக்க அதனால் கிடைத்த ஆனந்தமும் மனதிருப்தியும் அளவிட முடியாததாக இருந்தது. இதனால் பொழுது போகாத போது கேமிராவை கையில் எடுத்தவர் இப்போது நல்லபடியாக பொழுதை போக்க வேண்டும் என்பதற்காகவே கேமிரா எடுத்துச் செல்கிறார்.

கேமிரா தொழில்நுட்பம் எல்லாம் இணையதளம் மூலம் கற்றுக் கொண்டதுதான். இணைய தளத்தில் வரும் புகைப்பட போட்டிகளில் கலந்து கொண்ட பிறகுதான் புகைப்படங்களின் சகல நுட்பமும் புரிய ஆரம்பித்தது.
போர்ட்ரய்ட், லேண்ட்ஸ்கேப் படங்களில் ஆர்வம் அதிகம். இப்போது குடும்பத்தினரின் ஆதரவும் கிடைத்துள்ளதால் நிறைய படங்கள் எடுக்கிறார்.

இதுவரை இவரது படங்களின் ரசிகர்கள் இவரும் இவரது குடும்பத்தினர்களும் மட்டுமே. தினமலர்.காம் பொக்கிஷம் பகுதி பற்றி கேள்விப்பட்டு முதன் முறையாக நமக்கு அவர் அனுப்பி வைத்த படங்கள் இங்கே இடம் பெற்றுள்ளன.

ராஜசேகரின் படங்களை பார்வையிட சிவப்பு பட்டடையில் உள்ள போட்டோ கேலரி என்ற பகுதியை கிளிக் செய்யவும். அவருடன் தொடர்பு கொண்டு பேசுவதற்கான அமெரிக்கா எண்: +1309836463.


நான் சகாயம் பேசுகிறேன்....

- எல்.முருகராஜ்


நாட்டில் எத்தனையோ அதிகாரிகள் இருக்கிறார்கள் ஆனால் நேர்மைக்கு எடுத்துக்காட்டாக சில அதிகாரிகள்தான் இருக்கிறார்கள் அவர்களில் முதன்மையானவராக தெரிபவர் சகாயம்தான்.

காரணம் மிகவும் எளிது.,

லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்ற வார்த்தையின் வடிவமாக
நேர்மைக்கு மிகவும் நெருக்கமானவராக
துணிவுக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாதவராக
நியாயத்தின் பக்கமே எப்போது நிற்பவராக
உண்மையைச் சொல்ல தயங்காதவராக
பொய்யான புகழுக்கு மயங்காதவராக
தவறுக்கு எப்போதும் துணை போகாதவாரக இருப்பவர் இன்றைய தேதிக்கு இவர் ஒருவர்தான் நீண்ட தொலைவிற்கு தட்டுப்படுகிறார்.

கோ- ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனராக தற்போது இருந்துவரும் சகாயம் கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் தொலைபேசி மையத்தினை துவக்கிவைத்து பேசினார்.

வார்த்தைக்கு வார்த்தை என் தேசம் என் தமிழ் மக்கள் என்று உணர்ச்சி பெருக்கோடு எளிய தமிழில் அவர் பேசிய பேச்சில் இருந்த பல "நிஜக்கதைகள்தான்' இங்கே அவரைப்பற்றிய பதிவுக்கு காரணம்.

இதோ சகாயம் உங்களுடன் இதயம் திறந்து பேசுகிறார்... உங்கள் இதயத்தோடு பேசுகிறார்.

என்னைப் பற்றி சமீபத்தில் பத்திரிகையில் ஒரு செய்தி வந்திருந்தது. அந்த செய்தியில் நானும் (கெஜ்ரிவால் போல) ஒரு அரசியல் இயக்கம் தொடங்குவேனா? என்று கேட்டு எழுதியிருந்தது.

நிச்சயமாக இல்லை காரணம் நான் விரும்புவது வெறும் அரசியல் மாற்றம் அல்ல, லஞ்சமும், நேர்மையும் அற்ற, முழு சமுதாயமும் நேர்மையாக மாறக்கூடிய மனமாற்றமே.

லஞ்சத்தையும், ஊழலையும் கூட ஒழித்து விடலாம் ஆனால் மதுவை ஒழிக்கமுடியுமா என்பதுதான் எனது இன்றைய சந்தேகம். காரணம் நான் மதுரையில் ஆட்சித்தலைவராக இருந்த போது நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு ஒரு போன் வந்தது போன் செய்தவர் "ஐயா கலெக்டரா' என்று கேட்டு உறுதி செய்து கொண்டார். ஏதோ ஒரு முக்கியமான விஷயம் சொல்லப் போகிறார் என்ற ஆர்வத்துடன் எதிர்முனையின் குரலை எதிர்பார்த்தபோது " உசிலம்பட்டி பஸ் நிலையம் பக்கத்துல இருக்கிற டாஸ்மாக் கடையில் விற்கப்படும் ரம்மில் முன்பு போல கிக்கே இல்லை, ஏதோ தப்பு நடக்கிறது நடவடிக்கை எடுங்கள்' என்றார்.

பகலில் கூட குடிநீர் பிரச்னையை சொல்ல முன்வராத என் தமிழ் சமூகம் "குடிப்பதில்' ஒரு பிரச்னை என்றதும் நள்ளிரவு என்று கூட பாராது பேசுகிறதே என வேதனைப்பட்டேன்.

இதே போல தனியார் வசம் மதுக்கடைகள் இருந்த காலத்தில் நான் கோவையில் பணியாற்றினேன். அப்போது குறிப்பிட்ட இலக்கை எட்டமுடியாத கடைக்காரரிடம் விசாரணை செய்த போது அடுத்த மாதம் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகம் விற்றுவிடுவோம் என்றார் எப்படி என்று கேட்டபோது அடுத்த மாதம் இந்த பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியை திறந்து விடுவார்கள் பிறகு விற்பனை சூடு பிடித்துவிடும் என்றார். அவர் இதை சாதாரணமாகவே சொன்னார், ஆனால் நான் பெரிதும் நம்பிக்கை வைத்துள்ள என் தேசத்தின் எதிர்கால லட்சியத்தை அல்லவா அவர் அசைத்து பார்த்து விட்டார், கனத்த இதயத்தோடு அங்கு இருந்து அகன்றேன்.

ஜெயங்கொண்டம் என்ற ஊரில் சிவக்கொழுந்து என்று ஒரு 90 வயது நெசவாளர் இருக்கிறார். ஒரு நாளைக்கு 19 ஆயிரம் முறை அவரது அங்கங்களை அசைத்து, அசைத்து நாள் முழுவதும் வேலை செய்து ஒரு சேலை நெய்தால் அவருக்கு கிடைக்கும் ஊதியம் 75 ரூபாய்தான். நெசவாளர்கள் முன்னேற்றத்திற்காக உள்ள அலுவலகத்தின் கடைநிலை ஊழியரின் ஊதியம் கூட 500 ரூபாயாகும். இந்த ஊதியம் ஆளாளுக்கு மாறுபட்டு 3000 வரை உள்ளது. யாருக்காக இந்த துறை இயங்குகிறதோ அவருக்கு ஊதியம் வெறும் 75 ரூபாய் ஆனால் அவரை வைத்து பிழைக்கும் அலுவலர்களுக்கு, அதிகாரிகளுக்கு மூவாயிரம் ரூபாய் வரை நாள்தோறும் சம்பளம் என்றால் இதைவிட சமூக அவலம், சமூக மோசடி வேறு ஏதாவது இருக்க முடியுமா, வெட்கித் தலை குனிந்தேன்.

இந்த நாட்டில் உள்ள ஏழைமக்களின் கடைசி நம்பிக்கை என்பதாலும், என் இனிய தமிழை வளர்க்கும் ஒரு காரணியாக விளங்குவதாலும் அரசு பள்ளிகள் என்றால் எனக்கு அதிகம் பிரியம் அடிக்கடி அங்கு சென்று படிக்கும் குழந்தைகளிடம் பேசுவேன் காரணம் பெரியவர்களைப் போல அவர்களிடம் பொய் இருக்காது, பொறாமை இருக்காது, சூழ்ச்சி புரியாது.அந்த குழந்தைகளில் ஒன்று பேசும்போது நிறைய சம்பாதிக்க வேண்டும் என்றது உனக்கு எதற்கம்மா நிறைய பணம் என்றபோது அரிசி சோறு சாப்பிட ஆசையாக இருக்கிறது ஆகவே அதற்கு நிறைய சம்பாதிக்க விரும்புகிறேன் என்றது, அப்படியே ஆடிப்போய்விட்டேன். சுதந்திரத்தின் பலனை யார்தான் அனுபவிக்கிறார்கள் என்ற கேள்வி என்முன் பூதாகரமாக எழுந்து நின்றது.

சென்னைக்கு அருகில் உள்ள பன்னாட்டு குளிர்பான நிறுவனமான பெப்சி தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்புகள் பருக அருகதையற்ற பானத்தை தயாரித்தது என்பது தெரிந்ததும் எட்டு பூட்டுகளை போட்டு அந்த நிறுவனத்தை பூட்டினேன், இவ்வளவு துணிச்சல் எங்கு இருந்து வந்தது என்று கேட்டவர்கள் பலர், என் பதில் நேர்மையாய் இருந்து பாருங்கள் இதைவிட அதிக துணிச்சல் வரும் என்பதாகவே இருந்தது.

லஞ்சம் அதிகம் புழங்கும் இடத்தில் ஒன்றான காவல்துறையின் கதை இது. லஞ்சம் வாங்கிக் கொண்டு ஒரு கிராமத்தில் கள்ள சாராயம் விற்பதைக் கண்டு கொள்ளாமல் இருந்தார்கள். பாதிக்கப்பட்டவர்கள் என்னிடம் புகார் செய்தனர். நான் கள ஆய்வு செய்து எனக்கு கீழ் உள்ளவர்களை கண்டித்தேன் அவர்களுக்கும் லஞ்சத்தில் பங்கு உண்டு போலும் காவல்துறைக்கு துணை போக என் மீது எப்ஐஆர் போட்டனர். தப்பை தட்டிக் கேட்பதே தப்பா என்று நினைத்த நான் இதைக்கண்டு பயப்படவில்லை நானும் சட்டம் படித்தவன் என்ற முறையில் துணை கண்காணிப்பாளர் வரை ஒரு சம்மன் அனுப்பினேன் மறுநாள் காலை ஐந்து மணிக்கெல்லாம் தெரியாமல் நடந்துவிட்டது மன்னியுங்கள் என்றனர், மன்னிக்கவேண்டியது நான் அல்ல உங்களால் பாழ்பட்டு கிடக்கும் கிராமமக்கள் என்றேன்.

ஒரு அதிகாரி நினைத்தால் மனசாட்சிப்படி நடந்தால் அவரால் எவ்வளவோ இந்த தேசத்திற்கு இந்த மக்களுக்கு நல்லது செய்யமுடியும் ஒரு ஊனமுற்ற இளைஞர் ஒருவர் மூன்று சக்கர சைக்கிள் கேட்டு மனு கொடுத்தார். மனு கொடுத்த அன்று மாலையே அவருக்கு அவர் கேட்ட மூன்று சக்கர சைக்கிளை பெறச்செய்தேன் இது என்னால் மட்டும் முடிந்தது என்று சொல்ல வரவில்லை முயன்றால் எல்லேராலும் முடியும் என்றே சொல்ல வருகிறேன்.
ஊழலின் மொத்த உருவமாக இருந்த என் கீழ் உள்ள அதிகாரியை அசைத்து கூட பார்க்க முடியாது என்று என்னை அச்சுறுத்தினார்கள் காரணம் லஞ்சம் கொடுத்து, கொடுத்து சகலரையும் கெடுத்து வைத்திருந்தார். அவரை அசைத்து மட்டுமல்ல செய்த குற்றத்திற்காக சிறைத்தண்டனையும் பெறவைத்தேன்.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் தப்பு செய்தவர்களின் பெயர், ஊர், காலம் என அனைத்தையும் என்னால் சொல்லமுடியும் ஆனால் இப்போது நான் சொல்லமுடியாது பிறகு ஒரு காலம் வரும்போது சொல்கிறேன் சொல்வதென்ன புத்தகமாகவே போடுகிறேன்.எனது நேர்மைக்கு பரிசாக இதுவரை 22 முறை இட மாற்றம் செய்யப்பட்டு உள்ளேன் என்றார்கள் அதனால் என்ன நான் போகும் ஒவ்வொரு இடத்திலும் லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்துபவர்களின் எண்ணிக்கை என்னோடு சேர்ந்து கூடிக்கொண்டே போகிறதே அதை நினைத்து சந்தோஷம்தான்.

ஒன்று மட்டும் நிச்சயம் லஞ்சத்திற்கும், ஊழலுக்கும் எதிராக என்னைப் போல உள்ளிருந்து போராடுவதை விட உங்களைப்போல வெளியே இருந்து போராடுவது எளிது ஆகவே மகாகவி பாரதி சொன்னபடி துணிச்சலை சூடி எதிரிகளை பந்தாட உன் எதிரே இருக்கும் லஞ்சத்தை, ஊழலை ஒளித்திட முன்வாருங்கள் உங்கள் முயற்சியால் தேசம் வலுப்படும்.

எவ்வித குறிப்புகளும் வைத்துக் கொள்ளாமல், தங்குதடங்கலின்றி பாரதியின் கவிதை வரிகளுடன் தெளிவான தமிழில் தேவைப்பட்ட இடத்தில் ஆங்கிலத்தில் சட்ட நுணுக்கங்களை சொல்லியடி இன்னும் இன்னும் பேசமாட்டாரா என்று எதிர்பார்க்கும் விதமாக சகாயம் பேசி முடித்த போது யாருமே சொல்லாமல் அரங்கத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று நீண்டநேரம் கைதட்டி நல்லதொரு வீரியமிக்க உரைவீச்சை கேட்ட மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

லஞ்சம் தராமல் அரசு சலுகைகளை பெற எண்:7667100100





Sunday, 15 December 2013

எனக்கு ரிலாக்சே போட்டோ எடுப்பதுதான்... ஜெ.ஜெரால்டு பிரசன்னா














கோவையில் உள்ள முன்னணி பத்திரிகை நிறுவனத்தின் ஐடி இன்ஜினியர், போன் மூலம் பேசியே கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் உள்ள பிரச்னைகளை சரிபண்ணக்கூடிய ஆற்றல் மிக்கவர், பழையவர் புதியவர் என்று பார்க்காமல் "டீம்' ஒர்க்குக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இனியவர். இரவு பகல் எப்போது கூப்பிட்டாலும் பதில் தரக்கூடிய குணம் கொண்டவர். நகைச்சுவை உணர்வு கொண்டவர், இதனாலயே இவருக்கு பெரிய நட்பு வட்டம் உண்டு.

மற்றவர்களை பேச்சாலும் தனது தொழில் திறமையாலும் சந்தோஷப்படுத்தும் இவரை சந்தோஷப்படுத்துவது புகைப்படங்களே. மனது ரிலாக்ஸ் தேடும்போது இவர் தஞ்சம் அடைவது கேமிராவிடம்தான். கேமிராவை எடுத்துக் கொண்டு கிளம்பிவிடுவார் திரும்பி வரும்போது படங்களால் கேமிராவும், மனசும் நிறைந்து இருக்கும்.

கொடைக்கானலை சொந்த ஊராகக் கொண்ட இவரின் உறவினர் ஒருவர் சென்னையில் பிரபல புகைப்படக் கலைஞராக இருக்கிறார். அவர் கொடைக்கானல் வரும்போதெல்லாம் ஊரை சுற்றிப் பார்கப்போகும் போது மறக்காமல் கொண்டு செல்வது கேமிராவையும், உடன் கூட்டிச் செல்வது ஜெரால்டை.

முதல் கேமிரா:


அப்படித்தான் ஜெரால்டுக்கு கேமிராவுடன் நட்பு துளிர்த்தது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இணையதளத்தின் மூலம் கேமிரா அறிவை வளர்த்துக்கொண்டார். ஒரு டிஎஸ்எல்ஆர் கேமிரா வாங்கிய பிறகு இவரது படங்களில் வசீகரமும், தனித்தன்மையும் வந்து சேர்ந்தது.

விடுமுறை நாட்களிலும், ஊருக்கு போயிருக்கும் நாட்களிலும் இவர் ரசித்து எடுத்து படங்கள் நிறைய உண்டு. இயற்கையின் காதலரான இவர் அது தொடர்பான படங்களை எடுப்பதில் தனி ஆர்வத்துடன் செயல்படுகிறார்.

வனவிலங்குகளுக்கான வழித்தடங்களை மறித்து கட்டிடங்கள் கட்டுவதால்தான் ஊருக்குள் யானை வருவது போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனை இயற்கை ஆர்வலர்கள் பலமுறை சொல்லி வருகின்றனர். இந்த பிரச்னை யானைகளுக்கு மட்டுமல்ல எல்லா வனவிலங்குகளுக்கும் பொருந்தும். கொடைக்கானலை பொறுத்தவரை அங்குள்ள காட்டெருமைகள் அதிகம். இவைகள் உணர்வுபூர்வமானவை. மனிதர்களை பார்த்தாலே ஒதுங்கி சென்றுவிடும் குணம் கொண்டவை. பொதுவாக அமைதியான சூழலை விரும்பும் இனம் இது. ஆனால் கொடைக்கானலில் தற்போது அதிகரித்துவரும் மின்வேலிகளாலும், காம்பவுண்டு சுவர்களாலும் வழித்தடங்களை விட்டு ஊருக்குள் ஒரு குழுவாக தண்ணீரைத்தேடி வந்து செல்கிறது. இயற்கைக்கு எதிரான இந்த காட்சியை பதிவு செய்த ஜெரால்டு இதனை மும்பையில் இருந்து வெளிவரும் வனவிலங்கு தொடர்பான பத்திரிகைக்கு அனுப்பி வைக்க அவர்கள் இந்த படத்தை நடுப்பக்கத்தில் வெளியிட்டார்கள்.

மகிழ்வும் உற்சாகமும்:


மேலும் இணையதளத்தில் உள்ள புகைப்பட நண்பர்களுடன் அவ்வப்போது படங்களை பகிர்ந்து கொள்கிறார். இணையதளத்தில் வெளிவரும் புகைப்படம் தொடர்பான போட்டிகளில் பங்கேற்று உற்சாகம் பெறுகிறார்.

உண்மையில் எனது படங்கள் புத்தகங்களில் வருவதிலோ அல்லது இணையதளங்களில் வருவதிலோ பெறும் சந்தோஷத்தை விட அதை படம் எடுத்து பார்ப்பதில்தான் எனக்கு அதிக சந்தோஷம். ஒரு விஷயத்தை நான் எப்படி அணுகவேண்டும், ஆராதிக்க வேண்டும், பார்க்க வேண்டும், பாரட்ட வேண்டும் என்பதை ஒவ்வொரு படம் எடுக்கும் போது பாடமாக படிக்கிறேன். அந்த தருணங்களும் அந்த தருணங்கள் தரும் உணர்வும்தான் மகத்தானவை மகிழ்வானவை.

நான் ஒரு ஐடி இன்ஜினியர் ஆகவே அந்த தொழிலில் தெளிவாகவும், முறையாகவும் இருக்கிறேன் அது என் உணவுக்கும் கூரைக்குமானது.

போட்டோகிராபி என்பது உணர்வு, அது என் மகிழ்வுக்கும், புத்துணர்ச்சிக்கும் வழிகாட்டுவது என்று சொல்லும் ஜெரால்டிடம் பேசுவதற்கான எண்: 9894009274.

Saturday, 14 December 2013

அந்தத்தமிழ் இன்பத்தமிழ் என் உயிருக்கு நேர்.

கவிஞர் சுரா என்கின்ற சு.ராமச்சந்திரன்.
- எல்.முருகராஜ்



இவரது கவிதைகள் தற்போது பரவலாக வாசிக்கப்படுகிறது , அதன் கருத்து செரிவு காரணமாக நேசிக்கவும் படுகிறது.

சிவகாசி வட்டம் சாமிநத்தம் கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் எம்.பில்., படித்தவர். சிறு வயதிலேயே கவிதை எழுத ஆரம்பித்தவர். கவிஞராக வேண்டும் என்ற லட்சியத்தோடு படித்தவர். அதன்படியே கவிஞராகியிருப்பவர்.

கல்லூரி காலத்தில் இவர் எழுதிய "புரட்சிப்பூக்கள்' மரபு மற்றும் புதுக்கவிதை ஆற்றலுக்கு சிறந்த சான்றாக இன்றைக்கும் வாசிக்கப்படுகிறது. தொடர்ந்து இவர் எழுதிய "ஒற்றை ரோஜா' காதலின் புதிய இலக்கணம் சொல்லும் புதினமாக அமைந்துள்ளது.

தனித்துவம்:


கடந்த பத்து ஆண்டுகளாக சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றி வருகிறார்.

அநேகமாக கவிதை எழுதும், எழுதிக்கொண்டு இருக்கும் எல்லா சராசரி மனிதருக்கும் இவைகள் பொருந்தும்.

இதைத்தவிர இவரிடம் மேலும் சில தனித்துவம் உள்ளது. அந்த விஷயம்தான் அவரைப்பற்றி இங்கே பதிவு போட காரணமாக அமைந்தது.

நான் படிக்கும்போது அனைத்து பாடங்களும் தமிழில் இருந்தது, அறிவியலைக்கூட தமிழில் படித்தேன். அந்த வகையில் மூன்றாம் வகுப்பில் படித்த பாடத்தை கேட்டால் கூட இப்போது நான் சொல்வேன் ஆனால் இப்போது தமிழ் என்ற பாடத்தை தவிர வேறு பாடங்கள் தமிழில் இல்லை.

தமிழ் பாடத்தைக்கூட மதிப்பெண் பெறுவதற்காக படிக்கிறார்களே தவிர மதித்து படிப்பதில்லை. பத்தாவது படித்த மாணவன் பிளஸ் ஒன் வரும்போது தமிழ் படிக்கவேண்டும் என்ற அவசியம் இல்லாததால் அதுவரை படித்த தமிழைக்கூட மறந்துவிடுகிறான். இதுதான் இன்றைய யதார்த்தம், பார்த்து வரும் கசசப்பான உண்மை.

மாணவர்களுக்கு கவிதை ஆற்றல்:


இந்த நிலையை மாற்ற மற்றவர்களை எதிர்பார்க்கவில்லை, தனி மனிதனாக நானே களத்தில் இறங்கியுள்ளேன். எனது வகுப்பில் படிக்கும் மாணவர்களிடம் தமிழின் அத்தனை சுவைகளையும் சாறுபிழிந்து சுவராசியமாக கொடுக்கிறேன். பாடத்தை தாண்டி தமிழுக்கு இருக்கும் சிறப்பை, அழகை, பெருமையை அவன் மனதில் பதியவைக்கிறேன். இதன் எதிரொலியாக மாணவர்கள் பலர் இப்போது கவிதை எழுதும் ஆற்றல் கொண்டுள்ளனர்.

இந்த தாகத்துடனும், வேகத்துடனும் தமிழ் மீது மோகம் கொண்ட மாணவர்கள் பிறகு பிளஸ் டூ போனாலும் அதை தாண்டி இளங்கலை முதுகலை என்று எங்கு போனாலும் என்ன படித்தாலும் தாய்மொழியாம் தம் தமிழை தன் உயிராக வாசிக்கவும், நேசிக்கவும் பழகி விடுகின்றனர்.

படித்து முடித்து வேலை குடும்பம் என்று செட்டிலானபிறகு தங்களது தாகத்தை தமிழ் படிப்பதில் காட்டுகின்றனர். தங்களது தமிழ் அறிவை விசாலப்படுத்தி வருகின்றனர்.

செந்தமிழ் அறக்கட்டளை:


அவர்களை போன்றவர்களுக்கு தீனி போடும் வகையில் செந்தமிழ் அறக்கட்டளையை துவக்கி உள்ள கவிஞர் சுரா, இந்த அறக்கட்டளையின் மூலம் தமிழாய்வும் செய்யும் அறிவார்ந்தவர்களை ஆய்வுக்கட்டுரை எழுதும் அளவிற்கு கொண்டுவந்துள்ளார்.

மேலும் மாணவ, மாணவிகளிடம் இயல், இசை, நாடக வளர்ச்சியை ஊக்கப்படுத்தி அவர்களின் இலக்கியத் திறனை வெளிக் கொணரும் பணியில் ஈடுபட்டுள்ளார். நாட்டுப்புற இயலை கள ஆய்வு செய்து நூலாக வெளிக் கொண்டு வருகிறார். தூசுபட்டு கிடக்கும் தரமான இலக்கிய இலக்கண ஆய்வுகளை தூசு தட்டி புதுப்பித்து வருகிறார், பல்துறை வித்தகர்களை தமிழ்ப்பணி ஆற்றிட தூண்டுகோலாக இருந்துவருகிறார்.

பன்னாட்டு கருத்தரங்கம்:


தற்போது பல்கலைக்கழகங்கள் செய்யும் வேலையை இவர் எடுத்துக் கொண்டு உள்ளார். திருவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில் வி.பி.எம்.எம்.மகளிர் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து பன்னாட்டு கருத்தரங்கம் ஒன்றை நடத்த உள்ளார். வருகின்ற 23ம் தேதி திங்கட்கிழமை நடைபெறும் இந்த கருத்தரங்கில் தற்கால படைப்புகளில் பன்முக ஆளுமை என்ற தலைப்பில் முனைவர்களும், பேராசிரியர்களும், அறிஞர்களும் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

இவர் தேர்வு செய்துள்ள அறிஞர்களில் நெசவு தொழில் செய்து கொண்டே பல புத்தகங்களை எழுதியுள்ள நெசவு தொழிலாளியும் உண்டு, பெயின்டர் வேலை பார்த்துக் கொண்டே கவிதை புத்தகங்கள் பல எழுதியுள்ளவரும் உண்டு. இப்படி எளியவர்களையும், ஏழ்மையானவர்களையும் தமிழின் பெயரால் மேடையேற்றி கவுரவிக்க இருக்கிறார்.

இந்த கருத்தரங்கில் பன்னாட்டு அறிஞர்கள் எழுதிய 120 ஆய்வுக் கட்டுரைகள் கொண்ட செந்தமிழ் ஆய்வுக்கோவை என்ற நூலும் வெளியிடப்படுகிறது. ஆய்வுக்கட்டுரை எழுதிய அறிஞர் பெருமக்கள், படைப்பாளர்கள், இலக்கியம் பயிலும் மாணவ, மாணவியர் என்று பலர் பங்கேற்க உள்ளனர். கருத்தரங்கிற்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் கோ.விசயராகவன் தலைமை தாங்குகிறார். வி.பி.எம்.மகளிர் கல்வி நிறுவனங்கள் தலைவர் டாக்டர் வி.பி.எம்.சங்கர் முன்னிலை வகிக்கிறார்.

இவ்வளவும் செய்ய பொருளாதாரத்தில் கொஞ்சமாவது பெரிய ஆளாக இருக்கவேண்டுமே என்று நீங்கள் எண்ணினால் ஏமாந்து போவீர்கள். சென்னையை பழைய டிவிஎஸ் 50 வாகனத்தில் வலம்வரும் ஒருசிலரில் கவிஞர் சுராவும் ஒருவர் என்பதே இவரது நிலையினை விளக்கும்.

தமிழையும் தமிழர்களையும் தன் உயிராக நேசிப்பவரான இவரை ஊக்கப்படுத்த நினைப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9025058999.



Saturday, 7 December 2013

சென்னைக்கு திருவையாறு வந்த கதை...

- எல்.முருகராஜ்






உலகின் பொது மொழியும் முதுமொழியுமான இசையே நம்மை நாடு, இனம், மதம், சாதி போன்றவைகளைக் கடந்த பேதமற்ற நிலையை உருவாக்கி வைத்துள்ளது.

பெய்யும் மழைக்கென்று ஒரு பருவம்
மலர்கள் பூப்பதற்கு என்று ஒரு பருவம்
விளையும் பயிர்களுக்கு என்று ஒரு பருவம்
கொட்டும் பனிக்கு என்று ஒரு பருவம்
வீசும் காற்றுக்கு என்று ஒரு பருவம்
இருப்பது போல, இசைக்கு என்று ஒரு பருவம்
இருக்கிறது அதுதான் மார்கழி பருவம்

மாதங்களில் நான் மார்கழி என்று கிருஷ்ணன் புகழ்ந்ததும் இந்த பருவத்தையே
ஆண்டாள் இயற்றிய திருப்பாவை பாடப்படுவதும் இந்த பருவத்திலேதான்
நடராஜர் தில்லை சிதம்பரத்தில் நடனம் புரிந்ததும் இந்த பருவத்தில்தான்
திருவெம்பாவையை மாணிக்கவாசகர் அருளியதும் இந்த பருவத்தில்தான்
இப்படிப்பட்ட இனிய புனிதமான மார்கழி பருவத்தில் நடைபெறும் மகத்தான இசை வைபவமே மார்கழி இசைவிழா.

மார்கழி மாத இசை விழா என்றாலே தியாகராஜர் ஆராதனை விழாதான் அனைவருக்கும் நினைவிற்கு வரும்.
தியாகராஜரை அறிந்தவர்கள் நிச்சயம் திருவையாறை அறிந்திருப்பர், திருவையாறை அறிந்தவர்கள் அங்கு நடைபெறும் தியாகராஜர் ஆராதனை விழாவினை நன்கு அறிவர்.

"எந்தரோ மஹானுபாவலு அந்தரீகி வந்தனமு' பாடல் உள்பட எத்தனையோ சங்கீத உருப்படிகளை கர்நாடக சங்கீதத்தில் இயற்றியுள்ளார். இவர் இயற்றியவற்றில் சிறந்தது பஞ்ச ரத்ன கீர்த்தனைகளாகும். கன ராகங்களாக கருதப்படும் நாட்டை, கவுளை, ஆரபீ, வராளி, மற்றும் ஸ்ரீ ஆகிய ஐந்து ராகங்களில் ராமபிரானை போற்றி பாடிய ஐந்து பாடல்கள் இன்று உலகமெங்கும் உள்ள இசைக்கலைஞர்களால் பாடப்பட்டு வருகிறது.

இசை வாத்தியக் கலைஞர்கள் தங்களது ஹார்மோனியம், வீணை, தவில், கஞ்சிரா, மிருதங்கம், முகர்சிங், தபேலா, புல்லாங்குழல், ஸிதார், ஸாரங்கி, ஸரோட், ஐலதரங்கம், ஸந்தூர், வயலின், மாண்டலின், ஸாக்ஸபோன் போன்ற இசைக்கருவிகளில் இந்த பாடல்களை இசைத்து வருகின்றனர்.

இத்தகைய பெருமை வாய்ந்த பஞ்ச ரத்ன கீர்த்தனைகளை அனைத்து இசைக்கலைஞர்களும் தஞ்சைத்தரணி திருவையாறில் உள்ள தியாக பிரும்மத்தின் நினைவிடத்தில் ஒன்று கூடி பாடுவார்கள். இதுவே தியாகராஜர் ஆராதனை விழாவாக வெகு விமரிசையாக நடந்து வருகிறது. 

இத்தகு சிறப்பு வாய்ந்த தியாராஜர் ஆராதனை விழாவிற்கு எல்லாரும் போய் கலந்து கொள்ள முடியாத நிலையில் அந்த விழாவினை சென்னையிலும் ஏன் நடத்தக்கூடாது என்று லக்ஷ்மன்சுருதி குழுவினர் நினைத்தன் விளைவே சென்னையில் திருவையாறு.

எவ்வித பின்புலமோ, பொருளாதார பலமோ, புகழின் வெளிச்சமோ இல்லாமல் ராம்- லக்ஷ்மன் ஆகிய சகோதரர்கள் தங்களது கடினமான உழைப்பால் உருவாக்கியதுதான் லக்ஷ்மன் சுருதி இன்னிசை குழு.
கடந்த 27 ஆண்டுகளாக கிட்டத்தட்ட 8000க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை உலகமெங்கும் நடத்திய, வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கும் லக்ஷ்மன் ஸ்ருதி இசைக்குழுவினர் இசை தொடர்பான இசைக்கருவிகள், ஆடியோ வீடியோ சி.டி.க்கள், புத்தகங்களைக் கொண்டு லக்ஷ்மன் ஸ்ருதி இசை வளாகத்தையும் நடத்தி வருகின்றனர்.

இப்படி இசைக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள லக்ஷ்மன் ஸ்ருதி குழுவினர் "சென்னையில் திருவையாறு' என்ற பராம்பரிய கலாச்சார இசை திருவிழாவுக்கு கிடைத்த வரவேற்பை வைத்து வருடம் தவறாமல் இதனை ஒரு தவம் போல மேலும், மேலும் மெருகேற்றி நடத்தி வருகின்றனர்.

9வது வருடமாக சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் வருகின்ற 18ம் தேதி முதல் 25ம்தேதி வரை இந்த இசை விழாவினை நடத்துகின்றனர். உலகின் மிகச் சிறந்த நடன, இசை, வாய்ப்பாட்டு கலைஞர்கள் பங்கேற்று பாடஉள்ளனர். காலை 7 மணி துவங்கி இரவு 10 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும். மொத்தம் 53 நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. முதல் நாள் பஞ்ச ரத்ன கீர்த்தனையின் போது மட்டும் 300 பேர் கலந்து கொண்டு பாடஉள்ளனர்.

இந்த இசை நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் நிறைய பேர் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகள் தவிர மற்ற அனைத்து நிகழ்ச்சிகளும் இலவசமே. வாகன பார்க்கிங்கும் இலவசமே. கரும்பு தின்ன கூலி போல இலவசமாக அனுமதிக்கப்படும் பார்வையாளர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகளும் வழங்கப்படும்.

இசை திருவிழாவாக மட்டுமில்லாமல் இந்த வளாகத்தில் அனைத்து உணவுகளும் கிடைக்கும் வகையில் உணவு திருவிழாவும் விமரிசையாக நடைபெற உள்ளது.

எல்லாரும் நினைப்பது போல இது குறிப்பிட்டவர்களுக்கு சொந்தமான இசை கிடையாது எல்லாருக்கும் பொதுவானது கேட்க, கேட்க இனிமையானது, நமது பராம்பரியத்தை கொண்டது, கலாச்சாரத்தை சுமந்து கொண்டு இருப்பது, நாட்டிற்கும் தமிழருக்கும் பெருமை சேர்ப்பது. இங்கே வந்தால்தான் தெரியும் எத்துணை அருமையான தமிழிசையை கேட்கலாம் என்பது.

லக்ஷ்மன் ஸ்ருதி குழுவினரைப் பொறுத்தவரை பல கோடி செலவு செய்து நமது பராம்பரிய இசைக்கு பெருமை சேர்க்கும் வேள்வியாக இதை செய்து வருகின்றனர். அவர்களுக்கு தேவை எல்லாம் பார்வையாளர்கள் மட்டுமே. 

கடந்த வருடங்களில் இந்த "சென்னையில் திருவையாறு' என்ற இனிய அனுபவத்தை பெற்றவர்கள் கடல் கடந்து வர இருக்கின்ற நிலையில் நீங்களும் இந்த இனிய இசை நிகழ்வை தவற விடாமல் அவசியம் கலந்து கொள்ளுங்கள்.

இது தொடர்பான அனைத்து விஷயங்களுக்கும் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: லக்ஷ்மன்- 

9841044521; திவ்யா- 9940437076)

போட்டோ வாக் போவோமா...


- எல்.முருகராஜ்







புகைப்பட பிரியன்...

முகநூலில் மிகவும் பரிச்சயமான பெயர், உறுப்பினர்கள் மட்டுமே இன்றைய தேதிக்கு 7413 பேர் இருக்கின்றனர்.

உலகமெங்கும் உள்ள புகைப்பட பிரியர்களின் பிரியமான தளமாகும். தமிழ் மொழியிலே புகைப்படம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் இந்த தளம் அலசும், போட்டிகள் நடத்தி பரிசு வழங்கி உற்சாகப்படுத்தும், புதிய விஷயங்களை எளிமையாக அறிமுகப்படுத்தும், நீங்கள் எடுக்கும் படங்களை மதிப்பீடு செய்து மேலும் முன்னேற வழிகாட்டும், புகைப்படம் தொடர்பான போட்டிகளில் கலந்து கொள்ள வழிகாட்டும், 

இப்படி புகைப்படம் தொடர்பான பல விஷயங்களை பாசாங்குத்தனம் இல்லாமல் நேர்மையுடனும், இனிமையுடனும், தோழமையுடனும் பகிர்ந்து கொள்ளும், புகைப்பட பிரியனின் தளத்திற்கு பின்னால் இருக்கும் உழைப்பிற்கு சொந்தக்காரர் மெர்வின் ஆவார்.

மெர்வினுக்கு இருபது வருடத்திற்கு முன் புகைப்படம் எடுப்பதில் ஏற்பட்ட காதல் இன்று வரை மெருகு குறையாமல் இருந்து வருகிறது சொல்லப் போனால் வளர்ந்து வருகிறது.

முதலில் தனது பதிவுகளை போடுவதற்காக முகநூல் பக்கம் போனவர் தனது படங்களுக்கு கிடைத்த அங்கீகாரம் மற்றும் புகைப்படம் தொடர்பான பலரின் தேடல் காரணமாக புகைப்பட பிரியன் என்ற தளத்தில் களமிறங்கி கலக்கிக் கொண்டு இருக்கிறார்.

என்னதான் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் எலக்ட்ரானிக் கருவிகளுடன் பேசிக் கொண்டிருந்தாலும், வாசித்துக் கொண்டிருந்தாலும் நேரில் பேசி கலந்துரையாடுவது போல இருக்காது என்று கருதியவர் இதற்காக கடந்த வருடம் ஒரு கருத்துப்பட்டறையை ஏற்பாடு செய்திருந்தார்.

அந்த கருத்துப்பட்டறைக்கு நல்ல வரவேற்பு இருக்கவே இதோ இந்த வருடமும் புகைப்படம் தொடர்பான கருத்துப்பட்டறைக்கு ஏற்பாடு செய்துவிட்டார்.

இந்த வருடம் சில சிறப்பான கூடுதல் ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.

வருகின்ற ஜனவரி(2014) மாதம் 25,26 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கருத்துப் பட்டறையில் முதல் நாள் போட்டோ வாக் என்ற முறையில் கன்னியாகுமரியைச் சுற்றியுள்ள திற்பரப்பு அருவி, தொட்டிப்பாலம், பத்மநாபகோவில், முட்டம் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்கிறார். இரண்டாவது நாள் கன்னியாகுமரியில் புகைப்படம் தொடர்பான கருத்தரங்கு நடைபெறுகிறது.

இந்த கருத்தரங்கில் பெஸ்ட் போட்டோகிராபி எடிட்டர் பழனிக்குமார், சென்னை சென்டியன்ட் பள்ளி முதல்வர் லக்ஷ்மணன், மதுரை ஸ்கூல் ஆப் போட்டோகிராபி நிறுவனர் தனபால், செந்தில்குமரன், வசந்தம் செந்தில் ஆகிய புகைப்பட நிபுணர்கள் கலந்து கொண்டு பயிற்சி வழங்குகின்றனர்.

மேலும் இது தொடர்பாக நடத்தப்பட இருக்கும் புகைப்பட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கருத்தரங்கின் முடிவில் பரிசும் வழங்கப்படுகிறது.

இரண்டு நாள் நடைபெறும் போட்டோ வாக் மற்றும் புகைப்பட கருத்தரங்கில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்களை மட்டுமே பங்கேற்க செய்வது சிறப்பாக இருக்கும் என்று எண்ணியுள்ளனர். ஆகவே விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக மெர்வினுடன் தொடர்பு கொண்டு மற்ற விவரங்களை கேட்டுக்கொண்டு உங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாம்.

மெர்வின் போன் எண்: 9443174284.

Click Here