- எல்.முருகராஜ்
பத்தொன்பதாம் நூற்றாண்டு பல புதிய கண்டுபிடிப்புகளின் காலமாகத் திகழ்ந்தது.அவற்றுள் ஒன்றுதான் புகைப்படக்கலை.
ஓவியர்கள் கண்டும், கற்பனையிலும் வரைந்த ஓவியங்களின் மூலமே முந்தையகால மேதைகளையும், மகான்களையும் நம்மால் உணர நேரிட்டது. ஆனால் புகைப்படக்கலை வந்த பிறகு அந்த மேதைகளின் உருவங்களை உள்ளது உள்ளபடியே காண நம்மால் முடிந்தது.
அந்த வகையில் அப்போது அறிமுகமான புகைப்படக்கலையால் நாட்டின் பெருமைமிகு வீரத்துறவியான விவேகானந்தரின் பல்வேறுவிதமான புகைப்படங்களை காணும் பாக்கியம் கிடைத்துள்ளது.
நாட்டின் பெருமையை உலகிற்கு பறைசாற்றிய அதே வேகத்தில் நாட்டின் சிறுமை கண்டு பொங்கியவர் இவர் ஒருவரே.
விவேகானந்தரின் கண்கள் வறட்டு ஞானியின் கண்களைப்போல அல்லாமல் பக்தனின் கருணைக் கண்களாக உள்ளன என்று அவரது குருவான ராமகிருஷ்ணராலேயே குறிப்பிட்டு பாராட்டப்பட்ட அவருடைய கண்களின் காந்த சக்தியை புகைப்படங்கள் மூலமாகவே உணரலாம்.
வாழ்ந்த காலம் சிறிது (39 வயது) என்றாலும் ஐநூறு வருடங்கள் வாழ்ந்த அனுபவங்களை சொல்லிச் சென்றுள்ளார் அவர்.
விவேகானந்தர் தொடர்பாக கிடைத்த 95 படங்கள்தான் இன்று நம்மை சுற்றி சுற்றி வருகின்றன. படங்கள் யாவும் 1886க்கு பிறகு எடுக்கப்பட்டவை. விவேகானந்தர், இந்தியாவில் எடுக்கப்பட்ட படங்களில் மழித்த தலை, கைத்தடி, கமண்டலத்துடன் ஒரு சாதாரண துறவியாக காட்சி தருகிறார். வெளிநாட்டில் எடுக்கப்பட்ட படங்கள் வகிடு எடுத்து வாரிய தலையுடனும், தலைப்பாகை கோட்டுடன் சீமானுக்குரிய தோற்றத்துடன் காணப்படுகிறார். இந்த படங்களைக் கொண்டும், இவற்றுடன் இவரது வாழ்க்கையிலிருந்து சில சம்பவங்கள், அவரைப் பற்றி மேதைகள் கூறிய கருத்துக்கள்,அவரது சிந்தனைச் சிதறல்கள் ஆகியவற்றை சேர்த்து சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் ஒரு அருமையான தமிழ் நூலை வெளியிட்டுள்ளது.
விவேகானந்தரைப் பற்றி எழுதும்போது நான் ஆனந்தப் பரவசங்களில் ஆழ்கிறேன். அதைத் தடுக்க முடியாது... அவரது ஆளுமை பொலிவு மிக்கது,ஆழமானது, விளைவைப் பற்றி சிந்திக்காத தியாகம், ஓய்வற்ற செயல்பாடு, எல்லையற்ற அன்பு, ஆழமானதும் பரந்து பட்டதுமான அறிவு, பொங்கிப் பெருகும் உணர்ச்சிகள், குழந்தை போல களங்கமற்றவர், நமது உலகில் அபூர்வமானவர். நாடி நரம்புகளில் ரத்தம் கொதித்துப் பாய்கின்ற ஆண்மகன் அவர். எதற்கும் விட்டுக்கொடுக்காமல், சளைக்காமல் போரிடுகின்ற போராளி அவர் என்று வீரர் நேதாஜி போன்றவர்கள் சொல்லிய வார்த்தைகளும் இந்த நூலில் ஆங்காங்கே அழகுற இடம் பெற்றுள்ளன.
சுவாமி ஆசுதோஷானந்தர் தொகுத்துள்ள இந்த புத்தகம் நூறு ரூபாய் விலையில் "சுவாமி விவேகானந்தரின் புகைப்படங்கள்' என்ற தலைப்பில் அருமையாக வெளிவந்துள்ளது. விவேகானந்தரின் 150வது ஆண்டு விழாவினை முன்னிட்டு சிறப்பு விலையில் வெளியிடப்பட்டுள்ள இந்த புத்தகம் விவேகானந்தரை வாசிப்பவர்களிடம் மட்டுமின்றி புகைப்படக்கலையை நேசிப்பவர்களிடம் அவசியம் இருக்கவேண்டிய பொக்கிஷமாகும்.
இன்னும் சுருக்கமாக சொல்வதானால் இது விவேகானந்தர் பற்றிய வெறும் பட புத்தகம் மட்டுமல்ல பல்வேறு தகவல்களையும் படிப்பவருக்கு எளிமையாக சொல்லும் பாட புத்தகமும் கூட.
இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ள சில புகைப்படங்கள் இந்த பொக்கிஷம் பகுதியில் இடம் பெற்றுள்ளது.
சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான வருகின்ற 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை ராமகிருஷ்ண மடத்தில் சிறப்பு விழா நடைபெற உள்ளது. விழாவில் பிரதானமாக விவேகானந்தப் பயிற்சி என்ற புத்தகமும் வெளியிடப்பட உள்ளது. இந்த புத்தகம் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
விவேகானந்தரின் புகைப்படங்கள், விவேகானந்தர் பிறந்த நாள் நிகழ்ச்சி, விவேகானந்தப் பயிற்சி புத்தகம் தொடர்பான கூடுதல் விவரத்திற்கு தொடர்பு கொள்ள வேண்டியவர் திலீப்- 9444696591.
No comments:
Post a Comment