Saturday 20 April 2013

| இது அரவாணிகளின் கதை...- எல்.முருகராஜ் Dinamalar

| இது அரவாணிகளின் கதை..
.- எல்.முருகராஜ் 
இவர்கள் தேவதைகளும் இல்லை,பிசாசுகளும் இல்லை,உங்கள் எல்லோரையும் போல இதயமும்,இரைப்பையும் உள்ள மனிதர்கள்தான். பசி, தூக்கம், கருணை, காதல், காமம், தேடல், உழைப்பு, காயம்,துக்கம்,பெருமிதம் எல்லாம் இவர்களுக்கும் உண்டு,இவர்களும் உங்களைப் போலவே ஒரு தாயின் வயிற்றில் இருந்து உதித்தவர்கள்தான்

சினிமாவால் பாழாய்ப்போனவர்களின் பட்டியலில் முதலில் இருப்பவர்கள்.சினிமா இவர்களை கண்டபடி சித்தரித்து சீரழித்துவிட்டது.பார்ப்பவர்களின் மனதில் விஷத்தை விதைத்ததும் அதுதான்.,விபரீதங்களை உருவாக்கியதும் அதுவேதான்.பஸ்சில் பயணம் செய்யும் போது ஒரு அரவாணியின் பக்கத்து இருக்கை காலியாக இருந்தும் கூட , உட்காரமல் கால் வலியோடு நின்று கொண்டே பயணிக்கும் அளவிற்கு சகமனிதர்களின் மனதை கெடுத்து வைத்திருப்பதும் சாட்சாத் சினிமாதான்.

ஒன்பது என்ற புது வார்த்தையை சூட்டியதன் மூலம் இவர்களை இகழ்ந்து ,அதன்மூலம் மகிழ்ந்து கொண்டதும் இந்த திரைத்துறையே.

இப்படி அரவாணிகள் பற்றி தாங்கமுடியாத அளவிற்கு சினிமா மூலமாக விஷத்தை பரப்பியதன் மூலம் சமூகத்தில் கேலி,கிண்டல்,துரத்தல் என்பது நம்மூர் சிறுவர்களுக்கே கைவந்த கலையாகிவிட்டது.,வேலியில் திரியும் ஒணானை கல்லால் அடிப்பதும் ,இவர்களை சொல்லால் அடிப்பதும் அனிச்சை செயலாகவே மாறிவிட்டது.

அலி,பேடி,ஒன்பது போன்ற வார்த்தைகளால் அன்றாடம் கேலி,கிண்டலால் குதறப்படும் சகோதரிகள், போராடி வாக்காளர் அடையாள அட்டை பெற்ற பிறகு அரவாணி என்றும் திருநங்கை என்றும் அழைக்கப்படுகிறார்கள்,ஒட்டு இருக்கிறதே.

திருநங்கை என்றால் மரியாதைக்குரிய பெண் என்று அர்த்தம்.ஆனால் திருநங்கைகள் தமிழ்நாட்டில் மரியாதைக்குரிய பெண்ணாகவா நடத்தப்படுகிறார்கள்,நிச்சயமாக இல்லை.கடந்த பத்து ஆண்டுகளாக விழுப்புரம் பக்கத்தில் கூவாக திருவிழா என்ற பெயரில் நடைபெறும் விழா கூட, அவர்களை அரைகுறை ஆடையுடன் அழகியாகத்தான் பார்க்க பயன்படுகிறதே தவிர ,அவர்களில் தொழிலில் வென்றவர்களை,படிப்பில் உயர்ந்து நின்றவர்களை ,சமூகத்தில் சாதித்தவர்களை பாராட்டும் விழாவாக நடத்த தவறிவிட்டது.,இவர்களின் பெயரால் நிறைய பணம் சம்பாதிக்கும் தொண்டு நிறுவனங்கள் கூட இவர்களை உச்சி முகர்ந்து பாரட்டுவதில்லை, உயர்ந்த,செம்மையான பார்வை பார்ப்பது இல்லை.

கூத்தாண்டவர் கோயிலில் அன்றைய இரவு, அரவாணிகளுக்கு எதிராக நடக்கும் அக்கிரமங்களை,அநியாயங்களை தடுக்கவோ,தண்டிக்கவோ யாருக்குமே தைரியமுமில்லை,திராணியுமில்லை.இதை எண்ணும் போது உண்மையில் யார் ‘பேடிகள்’ என்றே எண்ணத்தோன்றுகிறது.

மிருகங்களைவிட கேவலமான,மோசமான ஆண்களை அங்குதான் பார்க்க முடியும். பண்பாடு, கலாச்சாரம் என்று எல்லாவற்றையும் குழிதோண்டி புதைத்துவிட்டு, காட்டுமிராண்டி காலத்தையும் தோற்கடிக்கும் வேகத்தோடும், வெறியோடும், வன்மத்தோடும், காமத்தோடும், போதையோடும், வேட்டையாட வரும் ஆண்களிடம் இருந்து தப்பிக்க அரவாணிகள் ,அந்த இரவில் நடத்தும் போராட்டம் கண்களில் ரத்தத்தை வரவழைக்கும் .
உண்மையைச் சொல்லப்போனால் அன்று ஒரு நாள்தான் வருடமெல்லாம் சுமந்த சோகங்களை இறக்கிவைக்கவும்,அடக்கிவைத்திருந்த ஆற்றாமையை வெளிப்படுத்தவும்,மனம்விட்டு சக அரவாணிகளிடம் பேசி வேதனையை பகிர்ந்து கொள்ளவும், கட்டிப்பிடித்து அழுகையாக வெளிப்படுத்தவும், அரவான் களப்பலியை காரணம்வைத்து கூடுகிறார்கள்,அங்கே இந்த வக்கிரம் பிடித்த, மனித உருவிலான மிருகங்கள் தரும் வேதனையால், முன்கூட்டியே வெளியேறும் கண்ணீரின் அடர்த்தியும்,ஆழமும் அதிகமானதால் , களப்பலியின் போது அழக்கூட சக்தியும்,கண்ணீருமின்றி வற்றி,வறண்டு போன கண்களுடன்தான் இருப்பார்கள்.

உலகத்திலேயே மிகவும் வேதனை நிறைந்த சமூகம் என்பது நிச்சயமாக அரவாணிகளின் சமூகம்தான்.,ஆனால் அதை உணர்ந்து கொள்ளத்தான் ஆளில்லை.

அரவாணிகள் யாரும் தாங்கள் அரவாணியாக பிறக்கவேண்டும் என்று விரும்பி பிறக்கவில்லை,எவரும் விரும்பி பெற்றெடுக்கவும் இல்லை., இது இயற்கையின் குற்றம் .எக்ஸ்,ஒய் குரோமோசோம்களின் குளறுபடி,உலகம் முழுவதும் ஒப்புக்கொள்ளப்பட்ட மூன்றாவது பாலினம்,நம்மால் மட்டும் ஒதுக்கிவைக்கப்பட்ட பரிதாப இனம்.


குடிகாரனைக்கூட வீட்டில் வைத்து சோறு போட்டு பாசம் காட்டும் பெற்றோர்கள் தங்கள், குழந்தை அரவாணி என்று அறிந்த மாத்திரத்தில் துரத்திவிடுவது ஏன்.,பெற்ற பிள்ளையைவிட அவர்களுக்கு சமூக,கலாச்சார அந்தஸ்து பெரிதாகப்போய்விட்டது.கூடப்பிறந்த சகோதரிக்கு,சகோதரனுக்கு திருமணம் நடக்காது என்று பொய்க்காரணங்களை சொல்லி ஒரு சின்ன மனதில் நெருப்பை முதலில் அள்ளிப்போடுபவர்கள் பெற்றோர்கள்தான்.

அன்பு,அரவனைப்புடன் வளரும் அரவானி ஒருநாளும் சமூகத்திற்கு சுமையாக இருக்கமாட்டார் ,இது சத்தியம் என்கிறார் திருநங்கைகளுக்கான திருமண வெப்சைட் நடத்தும் திருநங்கை கல்கி.ஊனமுற்ற,மனநோயாளியான குழந்தையை போலத்தான் அரவாணியும்.எட்டு வயதில் இருந்து பதிமூன்று வயதிற்குள் தனக்குள் நடக்கும் கொந்தளிப்பான சூழலால் சுருண்டும்,மருண்டும் போய்கிடக்கும் பிஞ்சு மனது அது.கூடுதலான அன்பிர்க்கும்,பாசத்திர்க்கும்,அரவனைப்பிற்கும் ஏங்கி தவிக்கும் நேரமது.அப்போது போய் ‘எங்களுக்கு ஏன்தான் இப்பிடி வந்து பிறந்தியோ’என்று வார்த்தைகளாலும்,நெருப்பாலும் மனதிலும்,உடலிலும் சூடுபோடும் போது அந்த குழந்தை எங்குதான் போகும்.

ஆணோட உடம்புக்குள்ளாற சிறைப்பட்டு இருக்கிற பெண்ணோட மனசு அது.அதை மாத்த முடியாது.அது புரியாமல் “ஏண்டா இப்படி நடந்துக்கிற”, என்று பெற்றோர்களும்,பள்ளி ஆசிரியர்களும் கொடுக்கும் டார்ச்சர் தவறானதாகும்.ஏற்கனவே நாம் ஆண்தானே ,நமக்கு ஏன் பொட்டு வச்சுக்கணும்,மை பூசணும்ணு தோணுது என்று ஏற்கனவே மனதிற்குள் போராடிக்கொண்டு இருக்கும் பத்து,பனிரெண்டு வயது குழந்தைக்கு, வீட்டிலும்,பள்ளியிலும் நடக்கும் கொடுமைதான் வீட்டைவிட்டே ஒடவைக்கிறது. நாய்க்கு குளிப்பாட்டி கொஞ்சியபடி சோறு போடும் சமூகம், ரத்தமும்,சதையும்,உணர்வும் கொண்ட பிள்ளையை வீட்டைவிட்டே , ஊரைவிட்டே துரத்துவதை எப்படி ஏற்றுக்கொள்வது.எல்லாவற்றையும் சமூகம்,அந்தஸ்து என்ற தராசில் வைத்து நிறுப்பதால் ஏற்படும் பிரச்னை இது.

இது ஊனம் கிடையாது,பரம்பரையாகவோ அல்லது பரவும் நோயோ கிடையது.,அப்படி இருந்தும் ஏன் இந்த உலகம் இவர்களை விளிம்பு நிலை வரை துரத்துகிறது என்பதுதான் தெரியவில்லை.

பள்ளி இறுதியாண்டு படிக்கவேண்டிய வயதில் பெற்றோர்களால் துரத்தப்பட்டு,இளைஞர்களால் விரட்டப்பட்டு,வறுமைக்கும்,பசிக்கும் வாழ்க்கைப்பட்டு ,சமூகத்தின் கேலி,கிண்டலுடன் விரட்டப்பட்டு அரவாணியானவள் என்னதான் செய்வாள் பிச்சை எடுப்பாள்,பாலியியல் தொழிலில் ஈடுபடுவாள்,கெட்ட வார்த்தை பேசுவாள்,ரயிலில் பணம் கேட்டு வன்முறையில் இறங்குவாள்
இதற்கெல்லாம் காரணம் இவர்களல்ல நாமும் நாம் சார்ந்த சமூகமும்தான்.

அரவாணிகளுக்கு வாடகைக்கு வீடு கொடுக்கமாட்டோம்,வேலை கொடுக்கமாட்டோம்,படிக்கவிடமாட்டோம்,சமமாய் உட்காரவைத்து பழகமாட்டோம்,சுயதொழில் செய்து பிழைக்க வழி செய்துதரமாட்டோம் அவ்வளவு ஏன் அவசரத்திற்கு ஒதுங்க அவர்களுக்கு பெண்களுக்கான பாத்ரூமைக்கூட ஒதுக்கிதரமாட்டோம்.,நாமெல்லாம் அருட்பெருஞ்ஜோதியின் தனிப்பெரும் கருணையை படித்து வளர்ந்தவர்கள் என்பதை சொல்லிக்கொள்ளவே வெட்கமாக இருக்கிறது.
இந்நாட்டில் குடிப்பது அவமானமில்லை,பல பெண்களுடன் கூத்தடிப்பது அவமானமில்லை,திருடுவது அவமானமில்லை,ஆனால் அரவாணியாக யாராவது மாறினால் அது மட்டும் அவமானமாம்,வெட்கக்கேடு.

இதில் இருந்து மீண்டு வர ஒரு பெரும் பேராட்டம் நடத்தவேண்டி உள்ளது
திருநங்கைளான ஆஷாபாரதியிடம் பேசி பார்த்தால் பாசம்,பண்பு என்றால் என்ன என்பதை உணரலாம். ப்ரியா பாபுவிடம் பழகிப்பார்த்தால் உழைப்பு என்றால் என்ன என்பதையும் உணரலாம். ‘சகோதரி’கல்கியின் கட்டுரைகளை வாசித்து பார்த்தால் நம்பிக்கையின் இலக்கணத்தை உணரலாம்

இப்படி எத்தனை,எத்தனையோ அரவாணி சகோதரிகள் தங்கள் அரவாணி சமூகத்தை புரட்டிப்போட போர்ப்பரணிபாடி கிளம்பியுள்ளார்கள

வாக்காளர் அடையாள அட்டை,மூன்றாம் பாலினமாக பதிவு செய்யும் உரிமை,கல்வி வேலை வாய்ப்பு,வீடு ,மனை ஒதுக்கீடு இதற்கெல்லாம் இவர்கள் தகுதியானவர்கள்தான் என்று அதிகாரத்தில் உள்ளவர்களை யோசிக்க வைத்துள்ளனர்.

இன்னும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் தங்கள் எண்ணிக்கை தனியாக காட்ட வேண்டும்,அந்த எண்ணிக்கையின் அடிப்படையில் இடஒதுக்கீடு,தேர்தலில் போட்டியிடும் உரிமை,திருமணம் செய்யும் உரிமை,குழந்தையை தத்தெடுக்கும் உரிமை என்று தங்களின் உரிமைகளை பட்டியலிடுகிறார்கள்,இவை எல்லாம் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கு அல்ல, இந்த சமூகத்தில் சம அந்தஸ்துடன் வாழும் உரிமைக்குதான்.

அந்தஸ்து,கவுரம் எதிலும் குறைவின்றி அரவாணிகள் இந்த சமூகத்தில் மக்களோடு மக்களாக வாழவேண்டும் என்பது அரவாணிகளின் கருத்து மட்டுமல்ல நம் கருத்தும் கூட.
தொட்டுவிடும் துõரத்தில் உள்ள தங்கள் லட்சியங்களை இவர்கள் நிச்சயம் ஒரு நாள் எட்டிவிடுவார்கள் அவர்களது ஒட்டத்திற்கு உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமாலிருந்தாலே உத்தமம்.

ஆணும் பெண்ணுமாய் தோன்றும் அர்த்தநாரீஸ்வரரை கையெடுத்து கும்பிடும் கைகள் அதே குணாதிசயத்துடன் கூடிய அரவாணிகளை கும்பிடவேண்டியதில்லை,ஆனால் வெறுத்து ஒதுக்கவேண்டாம்

ஒரு மழைக்கால ஈசலைப் போல வாரிசுகளின்றி வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் அரவாணிகளை உங்கள் மகளாக,தங்கையாக,அக்காவாக கருதுங்கள்,கையொலி எழுப்பியபடி உங்களை கடந்து செல்பவர்களுக்கு நம்மால் எப்படி உதவ முடியும் என இனி கருணையோடு பாருங்கள் .

Wednesday 10 April 2013

பார்வையற்ற முதல் திரை இசை அமைப்பாளர் கார்த்திக் -எல்.முருகராஜ்.பார்வை இழந்த ஒருவர், யாரும் செய்யாத உலகச் சாதனையை செய்து விட்டு அந்தச் சாதனையைக்கூட வெளியே சொல்லாமல் இருக்கிறார். அப்படிப்பட்ட சாதனையாளர் தான் கிரியோன் கார்த்திக்.

தற்போது தியேட்டர்களில் ஒடிக்கொண்டிருக்கும் "கருட பார்வை' என்ற திகில் படத்தின் இசை அமைப்பாளர்தான் இந்த கிரியோன் கார்த்திக். ஒரு பாட்டை "கம்போஸ்' செய்யும் பார்வையற்ற கலைஞர்கள் உண்டு.,ஆனால் மவுனமாக திரையில் ஒடும் திரைப்படத்திற்கு "ரீரிக்கார்டிங்' எனும் உயிர் கொடுக்கும் வேலையை செய்ய அவர்களில் யாரும் இல்லை.

காரணம் நிமிடத்திற்கு நிமிடம் காட்சிகள் மாறிக்கொண்டே இருக்கும், மழை பெய்யும்,கார் ஒடும்,கதாநாயகன் வில்லனை புரட்டி எடுப்பார்,பறவைகள் சத்தமிடும்,வாகனங்கள் அலறும் இவை அனைத்தையும் கண்கொண்டு பார்த்து பிறகே, ரீரிக்கார்டிங் செய்ய முடியும்.

அதிலும் திகில் படம் என்றால் இசைதான் பிரதானம். ரசிகர்ளை நாற்காலியின் நுனியில் உட்கார வைப்பதும், பிடரியில் வியர்வையை சுரக்க வைப்பதும், மயிர்கால்களை நிற்கச் செய்வதும், சிலீர் என உடலுக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்துவதும், மனதிற்குள் அடுத்து என்ன,அடுத்து என்ன என்ற பட்டாம்பூச்சியை பறக்கவைப்பதும், படபடவென கண் இமைகளை துடிக்கவைப்பதும் திகில் பட இசையின் இலக்கணமாகும். இந்த இலக்கணத்தை வெகு கச்சிதமாக செய்திருக்கிறார் கார்த்திக்.

படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் இதை எப்படி செய்தேன் ,ஏன் செய்தேன் என்பதை அருகிலிருந்து அவர் விளக்கம் கொடுத்த போது படத்தின் இசையில் இன்னும் சுவராசியம் கூடியது. இதெல்லாம் எப்படி சாத்தியம் என்ற உங்களது கேள்விக்கு பதில் தருவதற்கு முன் கொஞ்சம் கார்த்திக்கின் வலி மிகுந்த ஆரம்பகால வாழ்க்கையை பார்த்துவிடுவோம்.

கார்த்திக்கின் தந்தை பொன்ராம் ஒரு ராணுவ வீரர். இந்தியா -பாக்கிஸ்தான் யுத்தத்தின் போது குண்டு பாய்ந்து கால் பாதிக்கப்பட்டவர். அதன் பிறகு கஸ்டம்ஸ் பிரிவில் சேர்ந்தார். நேர்மை மிகுந்த கஸ்டம்ஸ் அதிகாரியாக பணியாற்றிய இவரை எதிரிகள் நடுக்கடலில் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவத்தால் நிலை குலைந்து போனவர் கார்த்திக்கின் தாயார் சாவித்திரி தான். வெளி உலகம் தெரியாமல் இருந்தவர் கணவரின் இழப்பீட்டு தொகையைக் கொண்டு பிள்ளைகளை படிக்கவைத்தார்.

மூன்று வயதான போது இடது கண்ணில் ஒரு சின்ன பிரச்னைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார் கார்த்திக். பயிற்சி டாக்டர்கள் செய்த தவறான ஆபரேஷனால் இடது கண் பார்வையை இழந்தார்.,பிறகு மூத்த டாக்டர்கள் பார்த்துவிட்டு வருத்தம் தெரிவித்தவர்கள், கூடுதலாக ஒரு அதிச்சி தகவலையும் தந்தார்கள். யாராவது கன்னத்திலோ, தலையிலோ அடித்தால் வலது கண்ணும் பாதிக்கப்படலாம் என்பதுதான் அந்த தகவல்.

இது நடந்துவிடக்கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தபோதும், விதி வலியது என்பது போல, அந்த கொடுமையும் ஆசிரியை ஒருவர் கோபங்கொண்டு தலையில் அடித்ததன் மூலம் நடந்து விட்டது.

அடித்த ஒரு மணி நேரத்தில் வலது கண் பார்வையும் போய்விட எதிரே இருந்தவை மட்டுமல்ல ,எதிர்காலமே இருண்டதைப் போல இவரது குடும்பத்தார் உணர்ந்தனர்.

இழந்த பார்வையை பெறுவதற்காக போராடியதில் இருந்த பணத்தையும் இழந்ததுதான் கண்ட பலனாக இருந்தது. வறுமையும்,வாழ்க்கையும் துரத்த சென்னை பார்வையற்றோர் பள்ளியில் சேர்ந்தார் கார்த்திக். இவர் தன் வேதனைக்கான வடிகாலாக இசையை தேர்ந்து எடுத்தார். எதிலும் வேகத்துடனும்,விவேகத்துடனும் செயல்படும் இவரது திறமையால் சிறந்த பியானோ கலைஞரானார்., 1800 பேர் கலந்து கொண்ட இசைப்போட்டியில் முதலாவதாக வந்தார்.

இசை,இசை என்று எந்த நேரமும் இசைக்காக அலைந்தார், நல்ல பாடல்களை பல ராகங்களில் இசைப்பதற்காக,தேடித்தேடி நிறைய கற்றார், ரத்ததானம் செய்தும், இசைக்கருவிகளை அடகு வைத்தும் கூட இசை பயின்றிருக்கிறார். சாப்பாடு இல்லாமல் கூட இருக்கமுடியும் ஆனால் இசை இல்லாமல் இவரால் இருக்கமுடியாது. அதன் பிறகு மதுரையில் நல்லதொரு மியூசிக் ஸ்டூடியோவை அமைத்து நிறைய இசை ஆல்பங்கள் தயாரித்து வருகிறார். சென்னையில் இவருக்கு பெரிதும் உதவுபவர் உறவினர் தில்லைநாயகன்.

இந்த நிலையில்தான் சினிமாவில் ரீரிக்கார்டிங் செய்வது என்பது நம்மால் முடியாது என்று பார்வையற்ற நண்பர் ஒருவர் கூற, ஏன் முடியாது நம்மால் முடியும், அதுவும் நானே இதை நிகழ்த்திக்காட்டுவேன் என்று சபதமும் செய்தார்.

சபதத்தின்படி ,முழுக்க மாற்றுத்திறனாளிகளால், மாற்றுத்திறனாளிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட "மா' படத்திற்கு இசை அமைத்தார், பலராலும் பாராட்டப்பெற்றது.

என்னைப்பற்றி கேள்விப்பட்ட "கருட பார்வை' இயக்குனர் விவேகானந்தன்,"" நான் ஒரு திகில் படம் எடுக்கிறேன் இதற்கு இசை அமைக்கமுடியுமா?'' என்று கேட்டார்,அவருக்கு சில "நோட்ஸ்' போட்டுக் காண்பித்தேன்,நம்பிக்கையுடன் என்னை இசைஅமைப்பாளராக்கினார்.

சுமார் 48 நாட்கள் இரவு பகலாக உட்கார்ந்து படத்திற்கு ரீரிக்கார்டிங் செய்தேன். நான் ஒரு பார்வையுள்ள உதவியாளரை மட்டும் வைத்துக்கொண்டேன். நிறைய சங்கேத வார்த்தைகள் வைத்துக்கொண்டு ,படத்தோடு எனது ரீரிக்கார்டிங் இசையை கலவை செய்தேன். இயக்குனர் பார்த்துவிட்டு பாராட்டினார். இப்போது வெகுஜனங்கள் திரையில் பார்த்துவிட்டு பாராட்டுகிறார்கள்.

சினிமா மூலம் என்னுடைய இசை இன்னும் நிறைய பேரை சென்றடைய வேண்டும், சென்றடைய வாழ்த்துங்கள், வளர்கிறேன் என்று கூறி விடைபெற்ற கார்த்திக்கின் தொடர்பு எண்: 9976916847.

நான் இப்போ விருதுக்காரி....-- எல்.முருகராஜ்

மலர்வதி
மலர்வதி


"தூப்புக்காரி' என்ற நாவல் எழுதியதன் மூலம் இந்தியாவில் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் உயர்ந்த விருதான இளம் சாகித்திய அகதமி விருதைப்பெற்றவர்.

இந்த பக்கம் துப்புரவு தொழிலாளியாக கருதப்படுபவர்கள்தான் நாகர்கோவில் வட்டார வழக்கில் "தூப்புக்காரி' என அழைக்கப்படுகின்றனர்.


ஆஸ்பத்திரியில் தூப்புக்காரியாக வேலை பார்க்கும் பெண் ஒருவர், கழிப்பறை கழிவுகள், தீட்டுத்துணிகள், சாக்கடை கழிவுகளுடன், பெற்ற மகளின் அழுகையைக்கூட ஆற்ற முடியாத துயரத்துடன் வாழ்ந்த கதையே இந்த தூப்புக்காரியின் கதையாகும்.

இந்த கதை கடந்த 2012ம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் நாவலுக்கான விருதாக அறிவிக்கப்பட்டபோது, கதாசிரியை மலர்வதிக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி இருந்தாலும் இன்னொரு பக்கம் நேரில் போய் வாங்க முடியுமா? என்ற வருத்தமும் இருந்தது. 

வருத்ததிற்கு காரணம், அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெறும் விருது வழங்கும் விழாவிற்கு நேரில் போய்வர போக்குவரத்து செலவிற்கு பணம் இல்லாத பொருளாதார நிலமையே.

இவரது நிலை குறித்து தினமலர் இணையதளத்தில் செய்தி வந்ததும், உள்ளூர் முதல் கடல் கடந்துள்ள தமிழர்கள் வரை நான், நான் என்று போட்டியிட்டு உதவிக்கரம் நீட்டினர். தேடிப்போய் நேரில் கொடுத்தும் வாழ்த்தினர்.

அதன் பிறகு விஷயங்கள் மள,மளவென்று நடந்தேறியது.


கடந்த 22ம் தேதி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு விருது பெற்று திரும்பியதும், தான் பெற்ற விருதுகளை முதலில் தினமலரோடு பகிர்ந்துகொள்கிறேன் என்று சொல்லி தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

தூப்புக்காரி என்ற நாவல் என் தாயின் கதையே, கழிப்பறை கழிவுகளுடனும், கவலைகளுடனுமே சர்வகாலமும் காணப்பட்ட, என் தாயின் வேதனையை இனியும் யாரும் அனுபவிக்கக்கூடாது, மனித மலத்தை மனிதர்களே அள்ளும் அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்ற வேதனையில், ஆவேசத்தில் பிறந்ததுதான் அந்த கதை.


கதைக்கு கிடைத்த விருதை விட, கதாசிரியையான நான் இந்த விருதைப்பெற வேண்டும் என்ற தினமலர் வாசகர்களின் அன்புதான் என்னை இன்னும், இப்போதும் திக்குமுக்காட வைத்துள்ளது.

தந்தை இல்லாத எனக்கு இப்போது எத்தனை அப்பாக்கள், அம்மாக்கள் மற்றும் பல உறவுகள்.
விருது அறிவித்தது முதல் அதனை பெற்று திரும்பியது வரை என் மீது அன்பு கொண்டு உதவியர்கள் நிறைய பேர், ஒருவர் பெயரைச் சொல்லி ஒருவர் பெயரை விட்டால் அது மரியாதையாக இருக்காது ஆகவே அனைவருக்குமே நன்றி.

எனது தந்தையைப் போல என்னை வளர்த்துவரும் அண்ணன் ஸ்டீபன், எனக்காக வழிகாட்ட என்கூடவே விடுமுறை எடுத்து வருகை தந்த குமரிதோழன்,அசாம் மாநில தமிழ் சங்கத்தைச் சேர்ந்த கண்ணன், தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோருக்கு சிறப்பு நன்றிகள்.


அசாம் மாநிலம் கவுகாத்தியில் எழுபது தமிழர் குடும்பங்கள் உள்ளன, அவர்கள் அனைவருக்குமே தமிழக செய்திகளை எடுத்துச் சொல்வது தினமலர் இணையதளமே. அவர்களில் நாற்பது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் செய்தி படித்துவிட்டு விழா நாளன்று என்னை பார்க்கவும், பாராட்டவும் விழா மண்டபத்திற்கு கூடிவிட்டார்கள், மேலும் என்னை மேடையேற்றி தாமிர பட்டயம், பணமுடிப்பு போன்றவைகளை வழங்கியபோது எழுந்த அதிக கைதட்டலுக்கு சொந்தக்காரர்களும் அவர்களே,

 அது மட்டுமின்றி விழா மண்டபத்திலேயே எனக்கு அசாம் மாநில கலாச்சார தொப்பி மற்றும் துண்டு போன்ற உடையணிவித்து கவுரவப்படுத்தினார்கள், இது அங்கு வந்திருந்த வேறு எந்த மாநில எழுத்தாளருக்கும் கிடைக்காத சிறப்பான பரிசாகும். நான் தமிழில் கொடுத்த ஏற்புரைக்கும் அரங்கத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த வரவேற்பை தமிழுக்கு கிடைத்த வரவேற்பாகவே எண்ணிப் பெருமிதம் கொண்டேன்.

பின்னரும் அன்பு குறையாமல், மறுநாள் தங்களது வீடுகளுக்கு அழைத்துப்போய் விருந்தும் வெகுமதியும் வழங்கியதுடன், விமான நிலையம் வரைவந்து வழியனுப்பிவைத்த அவர்களின் அன்பிற்கு ஈடே இல்லைதான்.
உழப்பட்ட நிலத்தில்தான் விளைச்சல் வரும், உரசப்பட்ட கல்லில்தான் சிற்பம் வெளிப்படும், ஆகவே துன்பம் எனும் பயிற்சி களம்தான் ஒருவரை மேம்படுத்தும் ஆகவே எனது வாழ்க்கையில் வலி ஏற்படுத்தியவர்களே எனது வழிகாட்டியவர்கள், எனக்கு ஏற்பட்ட காயங்கள் எல்லாம் அனுபவங்களே, அந்த அனுபவங்கள் பெற்று தந்ததே இந்த விருது. ஆகவே அவர்களுக்கு என் சிறப்பு நன்றிகள்.

ஆங்கில கலப்பு இன்றி தமிழிலேயே பேசக்கூடிய, தனது நியாயமான செலவிற்கு தேவைப்பட்ட பணம் வந்தபிறகு, இணையதள வாசகர்கள் அனைவரிடமும் வாழ்த்து மட்டும் போதும் இனி பணம் அனுப்பவேண்டாம் என்று சொன்ன, என் சொந்த விஷயம் அலுவலக நேரத்தில் வேண்டாமே என்று சொல்லி அலுவலக நேரத்தில் போன் பேசாத, இப்படி பல பண்பாடுகளை சுமந்து கொண்டிருக்கம் மலர்வதி முத்தாய்ப்பாக கூறும்போது, விருதுக்காக நான் எழுதவில்லை ஆனால் இப்போது இந்த விருது என்னை இன்னும் நிறைய எழுத தூண்டியுள்ளது. மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் நன்றி என்று கூறி முடித்தார். மலர்வதியின் தொடர்பு எண்: 9791700646.


Monday 8 April 2013

மயானத்தில் ஒரு மனுஷி....


-- எல்.முருகராஜ்
பெண்ணாகப்பட்டவர்கள், இன்றைக்கும் சுடுகாட்டின் சூழலை தாங்கக்கூடிய பக்குவம் இல்லாதவர்கள், அங்கு எரியூட்டப்படும் அல்லது புதைக்கப்படும் பிணத்தை பார்க்கும் சக்தி கொண்டவர்கள் கிடையாது.

இப்படி சொல்லப்படும் காரணங்களினால்... எவ்வளவுதான் தனக்கு பிரியப்பட்ட கணவர், தந்தை, தனயன் என்ற உறவாக இருந்தாலும், மரணம் என்ற பிரிவு வரும்போது, வீட்டு வாசலோடு நின்று, இறந்த உறவுகளை வழியனுப்பி வைக்க வேண்டிய நிலையில்தான் இருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், இரவு நேரங்களில் வரும் பிணத்தைக்கூட எரிக்கும், புதைக்கும் பக்குவத்துடன் ஒரு பெண் இருக்கிறார் என்றால் ஆச்சரியம்தானே.
ஆச்சரியமூட்டும் அந்த பெண்ணின் பெயர் வைரமணி, கோவை சொக்கம்புதூர் சுடுகாட்டில் வெட்டியான்(ள்) வேலை பார்த்து வருகிறார்.

இரவு பத்து மணியளவில் சுடுகாட்டில் எரிந்து கொண்டு இருக்கும் ஒரு பிணத்தை சரிவர எரிகிறதா என்று அருகே இருந்த பார்த்தபடியும், அவ்வப்போது நெருப்பை தூண்டிவிட்டபடியும் தன்னந்தனியாக நிற்கிறார்.
பிணத்தை எரித்து முடித்த பிறகே பேசத்துவங்குகிறார்.

என் அப்பா கருப்பசாமிதான் இந்த வெட்டியான் வேலை பார்த்துக் கொண்டிருந்தார், எனக்கு எழுதப் படிக்க தெரியாது, ரொம்ப சின்ன வயசிலேயே எனக்கு கல்யாணமாகிருச்சு, மூணு குழந்தைகள் இருக்காங்க, வீட்டுக்காரருக்கு போதுமான வருமானம் இல்லை, இந்த நிலையில் திடீர்னு அப்பா இறந்துட்டாரு, அவர் பார்த்த வெட்டியான் வேலையை எடுத்துப் பார்க்க யாரும் முன்வரலை, குடும்ப சுமையை குறைச்சுக்கலாம், பிள்ளைகள நல்லா படிக்க வைக்கலாம் அப்படிங்ற எண்ணத்துல இந்த வெட்டியான் வேலையை நான் எடுத்துக்கிட்டேன்.

அப்பா பக்கத்துலயே இருந்து இந்த வேலைய பல நாள் பார்த்ததுனால, எனக்கு எந்த பயமோ, தயக்கமும் இல்லை, இந்த பேய், பிசாசு மேலே துளியும் நம்பிக்கை இல்லை, உண்மைய சொல்லப் போனா இந்த சுடுகாட்டை சிவன் வாசம் செய்யும் கோயிலாத்தான் நான் பார்க்கிறேன்., இந்த தொழிலுக்கு வந்து இப்ப பதினைந்து வருஷமாகப் போகுது.,

பிணத்தை புதைக்கணும்னாலும் சரி, எரிக்கணும்னாலும் சரி இரண்டாயிரம் ரூபாய் கூலி வாங்குகிறேன். இதுல விறகு மற்றும் உதவியாள் கூலி போக எனக்கு ஐநூறு ரூபாய் மிஞ்சுனா அதிகம்.
ஒரு பிணத்தை எரிக்கணும்னாலும் சரி, புதைக்கணும்னாலும் சரி ஆறு மணி நேரம் எங்களுக்கு வேலை எடுக்கும். சாயந்திரம் பிணத்தை கொண்டுவர்ரோம், எரிக்கணும், எல்லா ஏற்பாடும் செஞ்சு வையுங்க என்று சொல்லி முன்பணம் கொடுத்து செல்பவர்கள், திடீர்னு நள்ளிரவு நேரத்திற்கு பிணத்தை கொண்டு வந்து கொள்ளிவச்சுட்டு போயிடுவாங்க, நான் தனியாள நின்னு எரிச்சு முடிப்பேன்.
செத்தது கோடீசுவரான இருக்கும், ஆன எனக்கு கொடுக்கவேண்டிய கூலியை கொடுக்க ரொம்பவே பேரம் பேசுவாங்க, "கொடுக்கிறத கொடுங்கப்பான்னு கேட்டு வாங்கிப்பேன்'. குழந்தைகள் பிணத்தை பார்க்கும் போது மட்டும் மனசு வேதனையா இருக்கும், மற்றபடி பிணங்களை பார்த்து, பார்த்து பழகிப்போச்சு.
பிணத்தை எரிக்கும் போது நூல் கயிறு கூட இருக்காது, ஆனாலும் அந்த பிணத்தின் கையில இருந்து கழட்டின கால் பவுன் மோதிரத்தை யாரு எடுத்துக்கிறதுன்னு சுடுகாட்டிலேயே சண்டைபோட்டு மண்டைய ஒடைச்சுக்குவாங்க, போகும் போது எதையும் கொண்டு போகமுடியாதுங்கிறத கண் எதிரே பார்த்துக்கிட்டே, இந்த ஜனங்க கால் பவுனுக்கு சண்டை போடுறத பார்க்கும் போது வேடிக்கையாத்தான் இருக்கும்.

உலகம் ரொம்ப அவசரமாயிடுச்சு இப்ப யாருக்கும் ஆற அமர சுடுகாட்டில் நின்று பிணத்தை எரிக்கவோ, புதைக்கவோ பொறுமையில்லை, அதுனால மின் மயானத்திற்கு போய் பத்து நிமிடத்துல வேலையை முடிக்கத்தான் விரும்புறாங்க, இதன் காரணமா இப்ப எனக்கு கொஞ்சம் தொழில் "டல்' தாங்க...மாதத்திற்கு நாலோ, ஐந்தோ பிணங்கள் வர்றதே அதிகம் என்று கூறிய வைரமணியை மூன்று விஷயத்திற்காக பாராட்டியே ஆக வேண்டும்.
முதல் விஷயம் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள எந்த வெட்டியானை எடுத்துப் பார்த்தாலும் குடிப்பழக்கம் இருக்கும், கேட்டால் பிணத்தோடு கிடக்கிறோம் அதுனால குடியை விடமுடியாதுங்க என்பார்கள்"அதற்கும்' தனியாக பணம் கேட்டு வாங்கிக் கொள்வார்கள்,ஆனால் வைரமணிக்கு அப்படி பழக்கம் எதுவும் கிடையாது,எல்லாம் மனசு தாங்க காரணம் என்கிறார் எளிமையாக., ஒன்று, ஆதரவில்லாமல் அனாதையாக இறந்து போனவர்களின் பிணங்களை, கூலி கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி, பணத்திற்கு முக்கியத்துவம் தராமல், இறந்து போன பிணத்திற்கு முக்கியத்துவம் தந்து, உறவினர்கள் செய்வது போல காரியம் எல்லாம் செய்து உரிய மரியாதையுடன் பிணத்தை புதைக்கிறார்.

இரண்டாவதாக, குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த தொழிலை செய்து வருகிறார், இருந்தாலும் இதற்கென நிர்ணயம் செய்த தொகையைத் தவிர கூடுதலாக வாங்குவதில்லை, உழைக்காமல் மற்றவர்கள் பணத்தை உதவியாக பெறுவதிலும் விருப்பமில்லை, ஆகவே என்னைப் பற்றி எழுதுங்க, ஆனா நான் ரொம்ப கஷ்டப்படுறேன் யாராவது உதவுங்களேன் என்றெல்லாம் அர்த்தம் வரும்படியா எழுதிராதீங்க என்றவர் இதனாலேயே தனது தொடர்பு எண் வேண்டாம் என்று தவிர்த்துவிட்டார்.

எவ்வளவு இருந்தாலும் இன்னும் யாராவது,ஏதாவது கொடுப்பார்களா என்று ஏங்கித் தவிக்கும் இந்த உலகத்தில் தனக்கு சிரமம் என்ற போதிலும், தனது உழைப்பில் கிடைக்கும் பணம் மட்டுமே போதும் என்ற வைராக்கியத்துடன் வாழும் வைரமணி சந்தேகமே இல்லாமல் ஒரு வித்தியாசமான நம்பிக்கை மனுஷிதான்.