Saturday 8 February 2014

மறக்கமுடியாத கன்னியாகுமரி..













- எல்.முருகராஜ்

பொதுவாக எனது புகைப்படங்கள் பேசவேண்டும், புகைப்படங்கள் பற்றி மக்கள் பேசவேண்டும் என்று நினைப்பவன் நான். இதற்காக மேடையேறும் வழக்கம் கிடையாது.

இந்த நிலையில் எனது புகைப்படங்கள் குறித்து பேசுவதற்கான ஒரு வாய்ப்பு கன்னியாகுமரியில் புகைப்படக்கலைஞர் மெர்வின் ஆன்டோ தலைமையில் நடைபெற்ற புகைப்பட கருத்தரங்கில் கிடைத்தது.

கருத்தரங்கிற்கு போவதற்கு முன் மெர்வின் ஆன்டோ பற்றி சில வார்த்தைகள்.

தான், தமது, தமக்கு மட்டுமானது என்று சுயநலத்தோடு சுருங்கிவிட்ட உலகத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டவர். தான் கற்ற புகைப்படக்கலையை கொஞ்சமும் வர்த்தக நோக்கமில்லாமல் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டவர். அன்பு மயமானவர். நட்பு பராட்டுபவர். விருந்தோம்பலின் அடையாளம் அவர்.

முகநூலின் பிரபலம். புகைப்பட பிரியன் என்ற பெயரில் இவர் புகைப்படக்கலைக்காக ஆற்றும் பணி மகத்தானது. இந்த தளத்திற்கான உறுப்பினர்கள் மட்டுமே இன்றைய தேதிக்கு 7813 பேர் இருக்கின்றனர். உலகமெங்கும் உள்ள புகைப்பட பிரியர்களின் பிரியமான தளமாகும். 

தமிழ் மொழியிலே புகைப்படம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் இந்த தளம் அலசும், போட்டிகள் நடத்தி பரிசு வழங்கி உற்சாகப்படுத்தும், புதிய விஷயங்களை எளிமையாக அறிமுகப்படுத்தும், நீங்கள் எடுக்கும் படங்களை மதிப்பீடு செய்து மேலும் முன்னேற வழிகாட்டும், புகைப்படம் தொடர்பான போட்டிகளில் கலந்து கொள்ள வழிகாட்டும், இப்படி புகைப்படம் தொடர்பான பல விஷயங்களை பாசாங்குத்தனம் இல்லாமல் நேர்மையுடனும், இனிமையுடனும், தோழமையுடனும் பகிர்ந்து கொள்ளும் தரமான இந்த தளத்தினை புகைப்பட கலைஞர்களும், புகைப்பட ரசிகர்களும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

மெர்வினுக்கு இருபது வருடத்திற்கு முன் புகைப்படம் எடுப்பதில் ஏற்பட்ட காதல் இன்று வரை மெருகு குறையாமல் இருந்து வருகிறது சொல்லப்போனால் வளர்ந்து வருகிறது. முதலில் தனது பதிவுகளை போடுவதற்காக முகநூல் பக்கம் போனவர் தனது படங்களுக்கு கிடைத்த அங்கீகாரம் மற்றும் புகைப்படம் தொடர்பான பலரின் தேடல் காரணமாக புகைப்பட பிரியன் என்ற தளத்தில் களமிறங்கி கலக்கிக் கொண்டு இருக்கிறார்.

என்னதான் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் எலக்ட்ரானிக் கருவிகளுடன் பேசிக் கொண்டிருந்தாலும், வாசித்துக் கொண்டிருந்தாலும் நேரில் பேசி கலந்துரையாடுவது போல இருக்காது என்று கருதியவர் இதற்காக கடந்த வருடம் ஒரு கருத்துப் பட்டறையை ஏற்பாடு செய்திருந்தார்.

அந்த கருத்துப்பட்டறைக்கு நல்ல வரவேற்பு இருக்கவே இரண்டாவது வருட புகைப்பட கருத்தரங்கினை கடந்த 25,26 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் நடத்தினார்.

முதல் நாள் நடந்த போட்டோ வாக்கில் கன்னியாகுமரியைச் சுற்றியுள்ள திற்பரப்பு அருவி, தொட்டிப்பாலம், பத்மநாபகோவில், முட்டம் போன்ற இடங்களுக்கு புகைப்படக்கலைஞர்கள் அழைத்துச் செல்லப்பட்டு படங்கள் தொடர்பான பகிர்தல்கள் நடைபெற்றன.

போட்டோ வாக்கில் கலந்து கொண்ட புகைப்படக்கலைஞர்களின் புகைப்படங்களை பார்த்த போது ஆச்சசர்யமாகவும்,மிரட்டலாகவும் இருந்தது.பலரது புகைப்பட மொழி புதுமையாக இருந்தது, மனதிற்குள் சந்தோஷத்தை அருவி போல கொட்டியது, திரும்ப, திரும்ப அந்த படங்களை பார்க்கவேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தியது, மொத்தத்தில் வரவேற்கும் படியாகவும், பாராட்டும்படியாகவும் இருந்தது.

இரண்டாவது நாள் கன்னியாகுமரியில் புகைப்படம் தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது. தினமலர்.காம் நிர்வாக இயக்குனர் எல்.ஆதிமூலம் அனுமதியோடும்,ஆசியோடும் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டேன்.

இந்த கருத்தரங்கில் பெஸ்ட் போட்டோகிராபி எடிட்டர் பழனிக்குமார், சென்னை சென்டியன்ட் பள்ளி முதல்வர் லக்ஷ்மணன், மதுரை ஸ்கூல் ஆப் போட்டோகிராபி நிறுவனர் தனபால், வசந்தம் செந்தில் ஆகிய புகைப்பட நிபுணர்கள் கலந்து கொண்டு பயிற்சி வழங்கினர். இவர்களுடன் நானும் கலந்து கொண்டு " பத்திரிகையில் புகைப்படத்தின் பங்கு' என்ற தலைப்பில் பேசினேன்.

கிட்டத்தட்ட முப்பது வருட காலம் போட்டோகிராபராக இருந்திருக்கிறேன் என்பதைவிட முப்பது வருடங்களும் புகைப்படங்களுடன் வாழ்ந்திருக்கிறேன் என்பதே சரியான வார்த்தையாக இருக்கும். படங்களை எடுக்கும் போது எடுக்கும் போது ஏற்பட்ட பாதிப்பு இன்னமும் குறையாமல் இருப்பதன் காரணமாக எனது உரை உணர்வுபூர்வமாகவே இருந்தது என்பதை என்னால் உணரமுடிந்தது.

தமிழகம் முழுவதிலும் இருந்து வந்து இந்த புகைப்பட கருத்தரங்கில் கலந்து கொண்டு எனது உரையை கேட்ட அனைத்து புகைப்படக்கலைஞர்களுக்கும் மிகவும் நன்றி.இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு புகைப்பட கலைஞர்கள் கேட்ட சந்தேகங்களும், கேள்விகளும் என்னை சந்தோஷப்படுத்தியது. இதற்காகவே நிறைய கருத்தரங்குகளில் கலந்து கொள்ள வேண்டும் என்ற வேட்கை எழுந்துள்ளது.

என்னை சந்தோஷப்படுத்திய, பெருமைப்படுத்திய உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். 

எனது நன்றிகளை உங்களது புகைப்படங்களை பிரசுரிப்பதன் மூலமாக வெளிப்படுத்துவேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இது புகைப்பட பிரியன் ரசிகர்களுக்கான சிறப்பு அறிவிப்பு.

நீங்கள் எடுத்த படங்களில் சிறந்த பத்து படங்களையும், உங்களது படங்களையும் மற்றும் உங்களைப் பற்றிய குறிப்புகளையும் murugaraj@dinamalar.inன் என்ற மெயிலுக்கு அனுப்பி வையுங்கள்.

இனி புகைப்படபிரியன் சார்பில் நடைபெறும் போட்டோ வாக் மற்றும் கருத்தரங்கினை தவறவிடாதீர்கள். இது பற்றி மேலும் தகவல் அறிய தொடர்பு கொள்ள வேண்டியவர் மெர்வின் ஆண்டோ: 9443174284, 9677755846.
Click Here

No comments:

Post a Comment