Friday, 28 February 2014

இளங்கோவன் 'அரவணைப்பில்' 5917 குழந்தைகள்
- எல்.முருகராஜ்.

இன்றைய திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகில் உள்ள நாகமநாயக்கன்பட்டி கிராமத்தில் வானம் பார்த்த பூமியில் பெரும்பாலும் வறட்சியை மட்டுமே பயிர் செய்துவந்த விவசாய குடும்பத்தில் கு. குழந்தைசசாமி- சுப்புலட்சுமி தம்பதியருக்கு பிறந்தவர்தான் இளங்கோவன்.

இளங்கோவனுக்கு அன்று முதல் இன்று வரை பிடித்த ஒரே விஷயம் படிப்புதான்.

ஆனால் படிப்பதற்காக அவர் பட்ட பாட்டை தெரிந்து கொள்ளும் யாருக்கும் கண்களில் ரத்தம் கசியும்.

பள்ளிப்படிப்பை தொடர்வதற்கே ஏழு கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் செல்லவேண்டிய நிலை. சொந்தமாக 120 ரூபாய் கொடுத்து சைக்கிள் வாங்கமுடியாத சூழல். இதனால் வாடகை சைக்கிளில் சென்று வந்தார். அந்த சைக்கிள் வாடகையை கொடுப்பற்காக வாரவிடுமுறை நாட்களில் பவர்லூம் பேக்டரியில் தார் சுற்றி சைக்கிள் வாடகையை கொடுத்துக் கல்வி கற்று வந்தார்.

கல்லூரி படிப்பை தொடர தேவையான ரூபாய்க்காக உறவினர்கள் வீட்டு படிகளில் தவம் கிடந்தார். தன் பிள்ளை இப்படி வீடு வீடாக போய் கல்வி உதவித்தொகை கேட்கப்போவதை காணமுடியாத இளங்கோவனின் தந்தை, "நமக்கு வேண்டாம்யா இந்த படிப்பெல்லாம், பேசாம பவர்லூம் பேக்டரிக்கு வேலைக்கு போய் விடு'' என்று பிள்ளையிடம் சொல்லியிருக்கிறார்.

"இல்லப்பா எனக்கு தெரிஞ்சதெல்லாம் படிப்பு ஒண்ணுதாம்பா கொஞ்ச ம் பொறுத்துக்கங்கப்பா' 'என்று தந்தையை சமாதானம் செய்து மீண்டும் கிராமத்து வேலைகளை செய்து கடன் வாங்கிக் கொண்டு போய் பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக்கில் பிடிசி கோர்ஸ்ம், கோவை சி.ஐ.டி கல்லூரியில் பொறியியலும் படித்தார்.

ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டும் தூங்கி, படிப்பு படிப்பு என்று படிப்பில் மூழ்கி பி.இ.,மற்றும் எம்.இ.,படித்தார். ஒவ்வொரு கட்டத்தை தாண்டும் போதும் தந்தையின் விவசாய நிலங்களும், தாயின் தாலிக்கொடியும் கூட அடமானமாக சென்றது அதில் பல விஷயங்கள் மீட்க முடியாமலும் போனது.

இவ்வளவு கஷ்டத்திற்கும் ஒரு விடிவு கிடைத்தது.

இளங்கோவன் படித்த கல்லூயிலேயே விரிவுரையாளராக வேலை கிடைத்தது. 12 ஆண்டுகளுக்கு பிறகு குவைத்தில் வேலையும் கிடைத்தது. இடையில் நிறைய வீழ்ச்சி. வீழ்வது தவறில்லை வீழ்ந்தே கிடப்பதுதான் தவறு என கடுமையாக உழைத்து மேன்மை கொண்டார்.

தனக்காக தாய், தந்தை, மனைவி வகையில் இழந்த சொத்துக்களை மீட்க ஒரு யோகி போல மூன்று வருடம் குவைத்தில் குடும்பம், உறவு, தூக்கம் மறந்து கடுமையாக உழைத்தார். நிறைய பேருக்கு குவைத்தில் ட்யூஷன் எடுத்தார். ஒவ்வொரு நிமிடத்தையும் பயன் உள்ள வகையில் பயன்படுத்தினார். இவரது வைராக்கியம் காரணமாக இழந்ததை எல்லாம் மீட்டார் மேலும் பல மடங்கு சம்பாதித்தார். விடா முயற்சியால் அமெரிக்காவில் பிஎச்டி முடித்தார்.

இப்போது ஒரு தன்னிறைவான வாழ்க்கை

இந்த வாழ்க்கை என்பது எனக்கு சுயமானது, நான் என் குடும்பம் என்றானது, என்னை எவ்வளவோ சிரமத்திற்கு நடுவிலும் ஆளாக்கிய என் தேசத்திற்கு நான் என்ன செய்தேன் என்று யோசித்தார், பிறகு தான் என்ன செய்யமுடியும் என்பதை முடிவு செய்தார்.

"கல்வி ஒருவனை உயர்த்துமே தவிர ஒரு காலத்திலும் தாழ்த்தாது. ஆனால் அந்த கல்வியை பெற தான் கஷ்டப்பட்டது போல தாய் நாட்டில் எத்தனையோ பேர் சிரமப்பட்டுக் கொண்டு இருக்கலாம். அவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தேவையான கல்வி உதவியை செய்வோம் என்பதை லட்சியமாகக் கொண்டார்".

இதற்காக தனது வருமானத்தில் ஒரு பகுதியை ஒதுக்கினார். இவரது நண்பர்களும் இவருடன் சேர்ந்து கொள்ள "அரவணைப்பு' அமைப்பு கோவையில் 28.01.2009 ல் தோன்றியது. இந்த அரவணைப்பு இயக்கமானது கடந்த ஆறு ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் இதுவரை 5917 மாணவ, மாணவியரை அடையாளம் கண்டு தந்தை இல்லாத அவர்களை படிக்க ஆதரவளித்து வருகிறது.

எப்போதோ குவைத் வேலையை விட்டுவிட்டு மனைவி, குழந்தைகளோடு கோவை மிதமான வெயிலில் இதமான வாழ்க்கை இவர் மேற்கொண்டு இருக்கலாம், ஆனால் குறைந்த பட்சம் பத்தாயிரம் பேரையாவது படிக்கவைக்கவேண்டும் என்ற லட்சியம் காரணமாக குவைத்தின் சூடான சூழலில் வாழ்ந்து கொண்டு இங்குள்ள ஏழை எளிய மாணவர்களுக்காக உருகுகிறார்.

ஆகவே இதை படிக்கும் அல்லது பார்க்கும் நண்பர்கள் இளங்கோவனின் கல்விச்சேவையில் விருப்பப்பட்டால் உங்களையும் இணைத்துக் கொள்ளலாம். மேலும் கல்வி கட்டணம் செலுத்த முடியாத நிலையில் உள்ள பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர் இதற்கென உள்ள அரவணைப்பு இணையதளத்தினுள் நுழைந்து அதில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

இந்த விண்ணப்பத்தை பல்வேறு முறைகளில் அரவணைப்பு குழுவினர் ஆய்வு செய்து விண்ணப்பம் நியாயமானது, நேர்மையானது என்று முடிவெடுத்த பின் சம்பந்தபட்ட கல்வி நிறுவனங்களுக்கு "செக்" கொடுத்து உதவுகிறார்கள்.

இதை படிக்கும் இணையதள நண்பர்கள் அரவணைப்பு இணையதளத்தினுள் நுழைந்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தந்தை இல்லாத ஏழை மாணவ, மாணவியருக்கு கொடுப்பது கூட ஒரு வகையில் தொண்டுதான்.

இளங்கோவனை மனதார பாராட்ட நினைப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இந்திய எண்: 9597889679. இந்த கட்டுரை வரும்போது அநேகமாக அவர் குவைத்தில் இருக்கலாம். குவைத் எண்: 00965 99239369. குவைத் எண்ணில் பேசினால் உங்களுக்கு ரோமிங் கட்டணம் உண்டு என்பதை நினைவில் கொள்ளவும். அவரது மெயில் மற்றும் அரவணைப்பு இணையதள முகவரி:

mail id :skilangovan01@gmail.com
www.aravanaipu.org

No comments:

Post a Comment