Thursday, 3 October 2013

நான் கடவுள் இல்லை - நீதிபதி சந்துரு

- எல்.முருகராஜ்






நான் கடவுள் இல்லை அப்புறம் எதற்கு மாலை போடுகிறீர்கள்.

எனக்கு குளிரவில்லை அப்புறம் எதற்கு சால்வை போற்றுகிறீர்கள்.

எனக்கு பசியில்லை அப்புறம் எதற்கு பழங்கள் கொண்டுவருகிறீர்கள்.

இப்படி இந்த நாட்டில் இன்றைய தினம் ஒருவரால் "தில்'லாக பேசமுடியும் என்றால் அது முன்னாள் ஐகோர்ட் நீதிபதி சந்துரு ஓருவரால்தான் முடியும்.

அவரை பேட்டிக்காக சந்திக்க சென்றபோது அசந்துவிட்டேன், காரணம் பலரது வீட்டிற்குள் நூலகம் இருக்கும், ஆனால் அவரது வீடே நூலகத்திற்குள்தான் இருந்தது, அந்த அளவிற்கு வீட்டில் திரும்பிய திசைகளில் எல்லாம் புத்தகங்கள், புத்தகங்கள், புத்தகங்கள்தான். அந்த புத்தகங்களில் பெரும்பாலானவை சட்டம் சம்பந்தபட்ட புத்தகங்களே.

எத்தனையோ நீதிபதிகள் ஓய்வு பெறுகிறார்கள் ஆனால் இப்படி ஒரு நீதிபதி ஓய்வு பெறப்போகிறாரே என்ற ஆத்மார்த்தமான கவலையுடன் ஒருவரது ஓய்வு நாளை ஊடகங்கள் பெரிதாக படம்பிடித்தன என்றால் அது இவர் ஒருவரது ஓய்வு நாளாகத்தான் இருக்கும்.

ஓய்வு பெறும் நாளன்றும் வேலை பார்த்தார், வழியனுப்பு விழா என்ற சம்பிரதாயம் எல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு அன்று மாலையே அரசாங்கம் தனக்கு வழங்கிய காரை ஒப்படைத்துவிட்டு, மின்சார ரயிலேறி வீட்டிற்கு வந்தவர். முன்கூட்டியே தனது சொத்து விவரங்களை தலைமை நீதிபதியிடம் ஒப்படைத்தார்.

எளிமையும், நேர்மையும் பலரிடம் இருக்கும் இத்துடன் திறமையும் இவர் ஒருவரிடம்தான் கொட்டிக்கிடக்கிறது, அத்துடன் யாரிடமும், எதையும் எதிர்பார்க்காத தன்மை கொண்டவர்.

இவர் வழங்கிய தீர்ப்புகள்தான் இனி வருங்காலத்தின் சட்ட மேற்கோளாக காட்டப்பட இருக்கின்றது, அந்த அளவு ஆழமான சட்ட அறிவுடனும், சமூக சிந்தனையுடனும், அற்புதமான மேற்கோள்களுடனும் கூறப்பட்டவையாகும்.

பெண் கடவுளாக இருக்கும்போது ஒரு பெண் பூசாரியாக இருக்கக்கூடாதா? எந்த ஆகம விதிகளிலும், புத்தகத்திலும் அப்படி பெண் பூசாரி கூடாது என்று கூறப்படவில்லை என்பதை ஆதாரமாக பூர்வமாக சொல்லி பெண் பூசாரிகள் நியமனத்திற்கு வழிகண்டவர்.

தலித் பெண் சமைத்து சாப்பிடுவதா என்று அவரை வேலையைவிட்டு ஒரு பள்ளி நிர்வாகம் தூக்கியது. சம்பந்தபட்ட பெண்ணின் வழக்கு இவரிடம் வந்தது. பல்வேறு உதாரணங்களுடன் இவருக்கு வேலை வழங்கவேண்டும் என்று இவர் வழங்கிய தீர்ப்பு காரணமாக அவசர அரசாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டு இவரால் தமிழகத்தில் இன்று 22 ஆயிரம் தலித் பெண்கள் சமையல் வேலை பார்த்து வருகின்றனர்.

கதர் உடை அணிந்து வந்ததற்காக வேலை நீக்கம் செய்யப்பட்ட விமானநிலைய பெண் அதிகாரியின் வழக்கில் இவர் சொன்ன தீர்ப்பு காரணமாக இழந்த வேலை கிடைத்ததுடன் கதர் குறித்த பார்வையே மாற்றி அமைத்தது.
தனி சுடுகாடு வேண்டும் என்று கேட்டு வந்த வழக்கில் இவர் தீர்ப்பு அளிக்கும்போது சொன்ன மேற்கொள்களால் தமிழக சுடுகாடுகளில் இப்போது சமரசம் உலாவுகிறது.

மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று சொல்லி வேலையை விட்டு நீக்கப்பட்ட ஒருவருக்கான வழக்கில் தீர்ப்பு சொல்லும் பொறுப்பில் இருந்தபோது அவர் மனநலம் சரியாக இருக்கிறது என்பதை அழகாக நிரூபித்தது மட்டுமின்றி அரசாங்க வேலை பார்ப்போருக்கு உரிய பணிப் பாதுகாப்பு குறித்தும் ஒரு வரையறை செய்தவர்.

எதைப்பற்றி பேசினாலும் அதற்கான ஆதாரத்தை எடுத்துகாட்டுகிறார். நான் போனபோது அவருக்கு என்று எந்த உதவியாளரும் இல்லை, அவரே ஒவ்வொரு அறையாக போய் அதற்கான புத்தகங்கள், கோப்புகளை எடுத்துவந்து புள்ளிவிவரங்களை தந்தார். இடையிடையே பிளாஸ்கில் கொண்டு வந்திருக்கும் காபி மற்றும் சுண்டல் போன்றவைகளை சாப்பிடுகிறார் மறக்காமல் நமக்கும் கொடுக்கிறார்.

சட்டத்தின்படியான ஆட்சி நடக்கும் நம்நாட்டில் சட்ட அறிவு என்பது மக்களிடம் குறைவாக இருப்பது வருத்தத்தை தருகிறது, ஒன்று தெரியுமா எனக்கு சட்டம் தெரியாது என்று சொல்லி எந்த குற்றத்தில் இருந்தும் தப்பமுடியாது, சட்டத்தில் இருந்து விலக்கும் பெறமுடியாது என்கிறார்.

ஆயுள் தண்டனை பற்றிய கேள்விக்கு அது பதினான்கு ஆண்டுகளுக்கான தண்டனை என்று இங்கும், மேற்குவங்கத்தில் அது இருபது ஆண்டுகள் என்றும் வைத்திருக்கிறார்கள் உண்மையில் ஆயுள் தண்டனை என்றால் அது ஆயுளுக்குமான தண்டனைதான். கைதியின் நன்னடத்தை அரசாங்க விதி, சலுகை, கொள்கை என்று சொல்லி முன்கூட்டியே விடுவிப்பது வேறுவிஷயம்.

பொதுவாக வழக்குகள் தாமதப்படுகிறது என்ற கேள்விக்கு அழுத பிள்ளைக்குதான் பால் என்ற கதை கோர்ட்களிலும் இருப்பது வேதனைதான் வரக்கூடிய நெருக்கடிகளின் அடிப்படையில்தான் வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன இந்த நிலைமாறிட வேண்டும்தான் என்றார்.

இப்போது சினிமா பார்த்துவிட்டு என்கவுன்டரில் குற்றவாளி துப்பாக்கியால் சுட்டுக்கொல்வதை நியாயப்படுத்துகிறார்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் மூலமாகவே தண்டிக்கப்பட வேண்டும்.
ஹெல்மெட்டை அணியாமல் வாகனம் ஓட்டுவது, சில ஊர்களில் குற்றம் என்கிறார்கள் சில ஊர்களில் குற்றம் இல்லை என்கிறார்கள் என்ற கேள்விக்கு அது குற்றமா இல்லையா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும் உங்கள் மனதின் பக்கத்தில் நின்று அது பாதுகாப்பானாதா இல்லையா என்று பதில் தேடுங்கள் விடைகிடைக்கும் என்கிறார்.

இப்படி பல்வேறு வழக்குகளின் தீர்ப்புகள் குறித்து ஆழஅகலத்துடன் விவரித்து எந்த கேள்விக்கும் சட்டத்தின் வாயிலாக அவர் சொன்னவிதம் பல நாட்களுக்கு மனதில் நிற்கும். இங்கே சுருக்கமாக சொல்லியிருக்கிறோம் மற்றபடி ஒவ்வொரு தீர்ப்பு மற்றும் அதன் பின்னணியை வைத்து ஒரு புத்தகமே போடலாம்.

விடைபெறும்போது வாசல்வரை வந்து வழியனுப்பி வைத்த விதம் அவரது உயரத்தை இன்னும் கூட்டியது.



No comments:

Post a Comment