Saturday, 7 December 2013

சென்னைக்கு திருவையாறு வந்த கதை...

- எல்.முருகராஜ்






உலகின் பொது மொழியும் முதுமொழியுமான இசையே நம்மை நாடு, இனம், மதம், சாதி போன்றவைகளைக் கடந்த பேதமற்ற நிலையை உருவாக்கி வைத்துள்ளது.

பெய்யும் மழைக்கென்று ஒரு பருவம்
மலர்கள் பூப்பதற்கு என்று ஒரு பருவம்
விளையும் பயிர்களுக்கு என்று ஒரு பருவம்
கொட்டும் பனிக்கு என்று ஒரு பருவம்
வீசும் காற்றுக்கு என்று ஒரு பருவம்
இருப்பது போல, இசைக்கு என்று ஒரு பருவம்
இருக்கிறது அதுதான் மார்கழி பருவம்

மாதங்களில் நான் மார்கழி என்று கிருஷ்ணன் புகழ்ந்ததும் இந்த பருவத்தையே
ஆண்டாள் இயற்றிய திருப்பாவை பாடப்படுவதும் இந்த பருவத்திலேதான்
நடராஜர் தில்லை சிதம்பரத்தில் நடனம் புரிந்ததும் இந்த பருவத்தில்தான்
திருவெம்பாவையை மாணிக்கவாசகர் அருளியதும் இந்த பருவத்தில்தான்
இப்படிப்பட்ட இனிய புனிதமான மார்கழி பருவத்தில் நடைபெறும் மகத்தான இசை வைபவமே மார்கழி இசைவிழா.

மார்கழி மாத இசை விழா என்றாலே தியாகராஜர் ஆராதனை விழாதான் அனைவருக்கும் நினைவிற்கு வரும்.
தியாகராஜரை அறிந்தவர்கள் நிச்சயம் திருவையாறை அறிந்திருப்பர், திருவையாறை அறிந்தவர்கள் அங்கு நடைபெறும் தியாகராஜர் ஆராதனை விழாவினை நன்கு அறிவர்.

"எந்தரோ மஹானுபாவலு அந்தரீகி வந்தனமு' பாடல் உள்பட எத்தனையோ சங்கீத உருப்படிகளை கர்நாடக சங்கீதத்தில் இயற்றியுள்ளார். இவர் இயற்றியவற்றில் சிறந்தது பஞ்ச ரத்ன கீர்த்தனைகளாகும். கன ராகங்களாக கருதப்படும் நாட்டை, கவுளை, ஆரபீ, வராளி, மற்றும் ஸ்ரீ ஆகிய ஐந்து ராகங்களில் ராமபிரானை போற்றி பாடிய ஐந்து பாடல்கள் இன்று உலகமெங்கும் உள்ள இசைக்கலைஞர்களால் பாடப்பட்டு வருகிறது.

இசை வாத்தியக் கலைஞர்கள் தங்களது ஹார்மோனியம், வீணை, தவில், கஞ்சிரா, மிருதங்கம், முகர்சிங், தபேலா, புல்லாங்குழல், ஸிதார், ஸாரங்கி, ஸரோட், ஐலதரங்கம், ஸந்தூர், வயலின், மாண்டலின், ஸாக்ஸபோன் போன்ற இசைக்கருவிகளில் இந்த பாடல்களை இசைத்து வருகின்றனர்.

இத்தகைய பெருமை வாய்ந்த பஞ்ச ரத்ன கீர்த்தனைகளை அனைத்து இசைக்கலைஞர்களும் தஞ்சைத்தரணி திருவையாறில் உள்ள தியாக பிரும்மத்தின் நினைவிடத்தில் ஒன்று கூடி பாடுவார்கள். இதுவே தியாகராஜர் ஆராதனை விழாவாக வெகு விமரிசையாக நடந்து வருகிறது. 

இத்தகு சிறப்பு வாய்ந்த தியாராஜர் ஆராதனை விழாவிற்கு எல்லாரும் போய் கலந்து கொள்ள முடியாத நிலையில் அந்த விழாவினை சென்னையிலும் ஏன் நடத்தக்கூடாது என்று லக்ஷ்மன்சுருதி குழுவினர் நினைத்தன் விளைவே சென்னையில் திருவையாறு.

எவ்வித பின்புலமோ, பொருளாதார பலமோ, புகழின் வெளிச்சமோ இல்லாமல் ராம்- லக்ஷ்மன் ஆகிய சகோதரர்கள் தங்களது கடினமான உழைப்பால் உருவாக்கியதுதான் லக்ஷ்மன் சுருதி இன்னிசை குழு.
கடந்த 27 ஆண்டுகளாக கிட்டத்தட்ட 8000க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை உலகமெங்கும் நடத்திய, வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கும் லக்ஷ்மன் ஸ்ருதி இசைக்குழுவினர் இசை தொடர்பான இசைக்கருவிகள், ஆடியோ வீடியோ சி.டி.க்கள், புத்தகங்களைக் கொண்டு லக்ஷ்மன் ஸ்ருதி இசை வளாகத்தையும் நடத்தி வருகின்றனர்.

இப்படி இசைக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள லக்ஷ்மன் ஸ்ருதி குழுவினர் "சென்னையில் திருவையாறு' என்ற பராம்பரிய கலாச்சார இசை திருவிழாவுக்கு கிடைத்த வரவேற்பை வைத்து வருடம் தவறாமல் இதனை ஒரு தவம் போல மேலும், மேலும் மெருகேற்றி நடத்தி வருகின்றனர்.

9வது வருடமாக சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் வருகின்ற 18ம் தேதி முதல் 25ம்தேதி வரை இந்த இசை விழாவினை நடத்துகின்றனர். உலகின் மிகச் சிறந்த நடன, இசை, வாய்ப்பாட்டு கலைஞர்கள் பங்கேற்று பாடஉள்ளனர். காலை 7 மணி துவங்கி இரவு 10 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும். மொத்தம் 53 நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. முதல் நாள் பஞ்ச ரத்ன கீர்த்தனையின் போது மட்டும் 300 பேர் கலந்து கொண்டு பாடஉள்ளனர்.

இந்த இசை நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் நிறைய பேர் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகள் தவிர மற்ற அனைத்து நிகழ்ச்சிகளும் இலவசமே. வாகன பார்க்கிங்கும் இலவசமே. கரும்பு தின்ன கூலி போல இலவசமாக அனுமதிக்கப்படும் பார்வையாளர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகளும் வழங்கப்படும்.

இசை திருவிழாவாக மட்டுமில்லாமல் இந்த வளாகத்தில் அனைத்து உணவுகளும் கிடைக்கும் வகையில் உணவு திருவிழாவும் விமரிசையாக நடைபெற உள்ளது.

எல்லாரும் நினைப்பது போல இது குறிப்பிட்டவர்களுக்கு சொந்தமான இசை கிடையாது எல்லாருக்கும் பொதுவானது கேட்க, கேட்க இனிமையானது, நமது பராம்பரியத்தை கொண்டது, கலாச்சாரத்தை சுமந்து கொண்டு இருப்பது, நாட்டிற்கும் தமிழருக்கும் பெருமை சேர்ப்பது. இங்கே வந்தால்தான் தெரியும் எத்துணை அருமையான தமிழிசையை கேட்கலாம் என்பது.

லக்ஷ்மன் ஸ்ருதி குழுவினரைப் பொறுத்தவரை பல கோடி செலவு செய்து நமது பராம்பரிய இசைக்கு பெருமை சேர்க்கும் வேள்வியாக இதை செய்து வருகின்றனர். அவர்களுக்கு தேவை எல்லாம் பார்வையாளர்கள் மட்டுமே. 

கடந்த வருடங்களில் இந்த "சென்னையில் திருவையாறு' என்ற இனிய அனுபவத்தை பெற்றவர்கள் கடல் கடந்து வர இருக்கின்ற நிலையில் நீங்களும் இந்த இனிய இசை நிகழ்வை தவற விடாமல் அவசியம் கலந்து கொள்ளுங்கள்.

இது தொடர்பான அனைத்து விஷயங்களுக்கும் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: லக்ஷ்மன்- 

9841044521; திவ்யா- 9940437076)

No comments:

Post a Comment