கவிஞர் சுரா என்கின்ற சு.ராமச்சந்திரன்.
- எல்.முருகராஜ்
இவரது கவிதைகள் தற்போது பரவலாக வாசிக்கப்படுகிறது , அதன் கருத்து செரிவு காரணமாக நேசிக்கவும் படுகிறது.
சிவகாசி வட்டம் சாமிநத்தம் கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் எம்.பில்., படித்தவர். சிறு வயதிலேயே கவிதை எழுத ஆரம்பித்தவர். கவிஞராக வேண்டும் என்ற லட்சியத்தோடு படித்தவர். அதன்படியே கவிஞராகியிருப்பவர்.
கல்லூரி காலத்தில் இவர் எழுதிய "புரட்சிப்பூக்கள்' மரபு மற்றும் புதுக்கவிதை ஆற்றலுக்கு சிறந்த சான்றாக இன்றைக்கும் வாசிக்கப்படுகிறது. தொடர்ந்து இவர் எழுதிய "ஒற்றை ரோஜா' காதலின் புதிய இலக்கணம் சொல்லும் புதினமாக அமைந்துள்ளது.
தனித்துவம்:
கடந்த பத்து ஆண்டுகளாக சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றி வருகிறார்.
அநேகமாக கவிதை எழுதும், எழுதிக்கொண்டு இருக்கும் எல்லா சராசரி மனிதருக்கும் இவைகள் பொருந்தும்.
இதைத்தவிர இவரிடம் மேலும் சில தனித்துவம் உள்ளது. அந்த விஷயம்தான் அவரைப்பற்றி இங்கே பதிவு போட காரணமாக அமைந்தது.
நான் படிக்கும்போது அனைத்து பாடங்களும் தமிழில் இருந்தது, அறிவியலைக்கூட தமிழில் படித்தேன். அந்த வகையில் மூன்றாம் வகுப்பில் படித்த பாடத்தை கேட்டால் கூட இப்போது நான் சொல்வேன் ஆனால் இப்போது தமிழ் என்ற பாடத்தை தவிர வேறு பாடங்கள் தமிழில் இல்லை.
தமிழ் பாடத்தைக்கூட மதிப்பெண் பெறுவதற்காக படிக்கிறார்களே தவிர மதித்து படிப்பதில்லை. பத்தாவது படித்த மாணவன் பிளஸ் ஒன் வரும்போது தமிழ் படிக்கவேண்டும் என்ற அவசியம் இல்லாததால் அதுவரை படித்த தமிழைக்கூட மறந்துவிடுகிறான். இதுதான் இன்றைய யதார்த்தம், பார்த்து வரும் கசசப்பான உண்மை.
மாணவர்களுக்கு கவிதை ஆற்றல்:
இந்த நிலையை மாற்ற மற்றவர்களை எதிர்பார்க்கவில்லை, தனி மனிதனாக நானே களத்தில் இறங்கியுள்ளேன். எனது வகுப்பில் படிக்கும் மாணவர்களிடம் தமிழின் அத்தனை சுவைகளையும் சாறுபிழிந்து சுவராசியமாக கொடுக்கிறேன். பாடத்தை தாண்டி தமிழுக்கு இருக்கும் சிறப்பை, அழகை, பெருமையை அவன் மனதில் பதியவைக்கிறேன். இதன் எதிரொலியாக மாணவர்கள் பலர் இப்போது கவிதை எழுதும் ஆற்றல் கொண்டுள்ளனர்.
இந்த தாகத்துடனும், வேகத்துடனும் தமிழ் மீது மோகம் கொண்ட மாணவர்கள் பிறகு பிளஸ் டூ போனாலும் அதை தாண்டி இளங்கலை முதுகலை என்று எங்கு போனாலும் என்ன படித்தாலும் தாய்மொழியாம் தம் தமிழை தன் உயிராக வாசிக்கவும், நேசிக்கவும் பழகி விடுகின்றனர்.
படித்து முடித்து வேலை குடும்பம் என்று செட்டிலானபிறகு தங்களது தாகத்தை தமிழ் படிப்பதில் காட்டுகின்றனர். தங்களது தமிழ் அறிவை விசாலப்படுத்தி வருகின்றனர்.
செந்தமிழ் அறக்கட்டளை:
அவர்களை போன்றவர்களுக்கு தீனி போடும் வகையில் செந்தமிழ் அறக்கட்டளையை துவக்கி உள்ள கவிஞர் சுரா, இந்த அறக்கட்டளையின் மூலம் தமிழாய்வும் செய்யும் அறிவார்ந்தவர்களை ஆய்வுக்கட்டுரை எழுதும் அளவிற்கு கொண்டுவந்துள்ளார்.
மேலும் மாணவ, மாணவிகளிடம் இயல், இசை, நாடக வளர்ச்சியை ஊக்கப்படுத்தி அவர்களின் இலக்கியத் திறனை வெளிக் கொணரும் பணியில் ஈடுபட்டுள்ளார். நாட்டுப்புற இயலை கள ஆய்வு செய்து நூலாக வெளிக் கொண்டு வருகிறார். தூசுபட்டு கிடக்கும் தரமான இலக்கிய இலக்கண ஆய்வுகளை தூசு தட்டி புதுப்பித்து வருகிறார், பல்துறை வித்தகர்களை தமிழ்ப்பணி ஆற்றிட தூண்டுகோலாக இருந்துவருகிறார்.
பன்னாட்டு கருத்தரங்கம்:
தற்போது பல்கலைக்கழகங்கள் செய்யும் வேலையை இவர் எடுத்துக் கொண்டு உள்ளார். திருவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில் வி.பி.எம்.எம்.மகளிர் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து பன்னாட்டு கருத்தரங்கம் ஒன்றை நடத்த உள்ளார். வருகின்ற 23ம் தேதி திங்கட்கிழமை நடைபெறும் இந்த கருத்தரங்கில் தற்கால படைப்புகளில் பன்முக ஆளுமை என்ற தலைப்பில் முனைவர்களும், பேராசிரியர்களும், அறிஞர்களும் கலந்து கொண்டு பேசுகின்றனர்.
இவர் தேர்வு செய்துள்ள அறிஞர்களில் நெசவு தொழில் செய்து கொண்டே பல புத்தகங்களை எழுதியுள்ள நெசவு தொழிலாளியும் உண்டு, பெயின்டர் வேலை பார்த்துக் கொண்டே கவிதை புத்தகங்கள் பல எழுதியுள்ளவரும் உண்டு. இப்படி எளியவர்களையும், ஏழ்மையானவர்களையும் தமிழின் பெயரால் மேடையேற்றி கவுரவிக்க இருக்கிறார்.
இந்த கருத்தரங்கில் பன்னாட்டு அறிஞர்கள் எழுதிய 120 ஆய்வுக் கட்டுரைகள் கொண்ட செந்தமிழ் ஆய்வுக்கோவை என்ற நூலும் வெளியிடப்படுகிறது. ஆய்வுக்கட்டுரை எழுதிய அறிஞர் பெருமக்கள், படைப்பாளர்கள், இலக்கியம் பயிலும் மாணவ, மாணவியர் என்று பலர் பங்கேற்க உள்ளனர். கருத்தரங்கிற்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் கோ.விசயராகவன் தலைமை தாங்குகிறார். வி.பி.எம்.மகளிர் கல்வி நிறுவனங்கள் தலைவர் டாக்டர் வி.பி.எம்.சங்கர் முன்னிலை வகிக்கிறார்.
இவ்வளவும் செய்ய பொருளாதாரத்தில் கொஞ்சமாவது பெரிய ஆளாக இருக்கவேண்டுமே என்று நீங்கள் எண்ணினால் ஏமாந்து போவீர்கள். சென்னையை பழைய டிவிஎஸ் 50 வாகனத்தில் வலம்வரும் ஒருசிலரில் கவிஞர் சுராவும் ஒருவர் என்பதே இவரது நிலையினை விளக்கும்.
தமிழையும் தமிழர்களையும் தன் உயிராக நேசிப்பவரான இவரை ஊக்கப்படுத்த நினைப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9025058999.
No comments:
Post a Comment