Tuesday 19 November 2013

வழிகாட்டுகிறது வாராப்பூர்...


- எல்.முருகராஜ்




சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ளது அழகிய வாராப்பூர் கிராமம்.

இந்த கிராமத்தில் ஆயிரம் குடும்பங்கள் உள்ளன இதில் இருநூறு குடும்பங்கள் முஸ்லீம் குடும்பங்களாகும்.

இந்த கிராமத்தில் மொகரம் பண்டிகையை முஸ்லீம்கள் மட்டுமல்லாது இந்துக்களும் இணைந்து நடத்துகின்றனர்.

இதற்கான காரணத்திற்கு இருநூறு வருடத்திற்கு முன் செல்லவேண்டும்.

அப்போது கிராமத்தில் மூன்று முஸ்லீம் குடும்பங்கள்தான் இருந்தன

அந்த குடும்பங்களால் தங்களது வாழ்வாதாரத்தையும் பார்த்துக்கொண்டு பண்டிகையையும் கொண்டாடமுடியாமல் தவித்த போது நாங்கள் இருக்கிறோம் வாருங்கள் சேர்ந்து கொண்டாடுவோம் என்று தோள்கொடுத்தனர் அங்கு இருந்து இந்துக்கள். நீங்கள் பண்டிகை கொண்டாடுவதை பார்த்துக்கொள்ளுங்கள், பண்டிகைக்கு தேவையான செலவுகள், உதவிகள், ஒருங்கிணைப்புகள் என்று அனைத்தையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லி அந்த வருட மொகரம் பண்டிகையை ஊர் திருவிழாவாக கொண்டாடினர்.

அன்று தொட்டு இன்றுவரை அந்த அன்பும், பண்பும், பாசமும், உறவும் தொடர்கிறது.

இப்போது இருநூறுக்கும் அதிகமான முஸ்லீம் குடும்பங்கள் இருந்தாலும் அப்போது போலவே தங்களது பண்டிகையில் இந்துக்களின் பங்கு இப்போதும் இருக்கவேண்டும் என்று அனைவரும் விரும்புவதால் அன்று போலவே இன்றும் மொகரம் பண்டிகையை தங்களது உறவினர் போன்ற முஸ்லீம்களுக்காக எடுத்து நடத்துகின்றனர்.

மொகரம் பண்டிகைக்கு முதல் நாள் பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடைபெறும். பூக்குழிக்கு இறங்க தேவையான மூன்றடி பள்ளம் வெட்டுதல், அதில் விறகுகள் இட்டு அக்னி குண்டம் வளர்த்தல், அதற்கான விறகுகளை நன்கொடையாக வழங்குதல், மற்றும் பூக்குண்டத்தை சுற்றி அலங்கரித்தல் என்று பூக்குழியை தயார் செய்வது முழுவதும் இந்துக்களே.

தீன், தீன் என்று சொல்லியபடி முஸ்லீம்கள் பூக்குழி இறங்கும் போது கூடியிருந்து அவர்களை வாழ்த்துவதும் இந்துக்களே. பூ மிதித்தல் பண்டிகையை அங்கு பூ மொழுகல் என்றும் அழைக்கின்றனர். இந்த நிகழ்வில் பங்கேற்பவர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் வழங்குவதற்காக பானகிரகம் எனப்படும் பழச்சசாறு போன்ற நீரை மண்பானையில் வைத்து ஊர்வலமாக கொண்டுவந்து வழங்குவதையும் அங்குள்ள இந்துக்கள் வழக்கமாகவும், பெருமையாகவும் கருதுகின்றனர்.

இந்த விழாவிற்காக பத்து நாட்களுக்கு முன்பிருந்தே நோன்பு துவங்கிவிடும், மொகரம் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் தேரோட்ட நிகழ்ச்சியிலும் இந்துக்களின் பங்கு அதிகம்.

வாராப்பூர் கிராமத்தை பொறுத்தவரை இந்த மொகரம் பண்டிகையை தங்களது கிராம விழாவாக நடத்துவதால் சமூக நல்லிணக்கவிழாவாகவும் நடைபெறுகிறது. இந்த கிராமத்தில் பிறந்தவர்கள் எங்கிருந்தாலும் இந்த விழா சமயத்தில் தவறாது வந்துவிடுவார்கள் அப்படி வருபவர்களில் ஒருவர் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிறுவனரும், அகில இந்திய மூவேந்தர் முன்வேற்ற கழக தலைவருமான டாக்டர் சேதுராமன் ஆவார். இந்த மொகரம் பண்டிகையில் பங்கேற்பதுடன் இந்த பண்டிகை சிறக்க தனது சிறப்பான "பங்களிப்பையும்' வருடந்தவறாமல் தந்து வருகிறார்.

No comments:

Post a Comment