Monday 26 August 2013

இரக்கமுள்ள மனசுக்காரன்டா...


இரக்கமுள்ள மனசுக்காரன்டா.
- எல்.முருகராஜ்



பட்டப்படிப்பு படித்துவிட்டு பல்வேறு வேலைகளை பார்த்த ஒருவர் தற்போது மதுரை மக்களின் அன்பைப் பெற்ற ஆட்டோ ஒட்டுனராக உள்ளார்.
அவர் பெயர் டி.மதன்

மதுரை வக்பு கல்லூரியில் வரலாறு பட்டப்படிப்பு எடுத்து படிக்கும் போது இதை படித்தால் வேலை கிடைக்காது என்று நண்பர்கள் சிலர் சொல்ல,"நான் வேலைக்காக படிக்கவில்லை என் அறிவை விருத்தி செய்து கொள்ளவே படிக்கிறேன், மேலும் வரலாறு என்பது எனக்கு பிடித்த விஷயம், நாட்டோட வரலாறும் நகரத்தோட வரலாறும் தெரியாமல் யாரும் இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் நானே வரலாறு படிக்காவிட்டால் எப்படி'' என்று சொல்லிவிட்டு வரலாறு படித்தவர். தொடர்ந்து வரலாற்று பாடத்தில் முதுகலை படிக்கலாம் என்று எண்ணியபோது வேலை பார்க்கவேண்டிய குடும்ப சூழ்நிலை.

சென்னையிலும், திருப்பூரிலும் பல்வேறு வேலை பார்த்தார் எதுவுமே அவருக்கு மனது பிடிக்கவில்லை சொந்த ஊரான மதுரைக்கே திரும்பினார். பொழுது போக்காக "கிளாரினட் 'எனும் இசைக் கருவியை வாசிக்கப் பழகியிருந்ததால் உள்ளூர் பேண்டு வாத்திய குழுவில் கிளாரினட் இசைக் கலைஞராக கொஞ்ச நாள் இருந்தார்.அதில் பணம் வரவில்லை ஆனால் புகழ் கிடைத்தது.


இதிலும் நிரந்தர வருமானம் இல்லாத நிலையில் இவரது சகோதரர் "கொஞ்ச நாளைக்கு ஆட்டோ ஒட்டிப்பாருப்பா உனக்கு பிடிக்கும்' என்று சொல்லி வழிகாட்ட மதன் ஆட்டோ ஒட்ட துவங்கினார்.


எதைச் செய்தாலும் அதில் ஒரு நேர்த்தி, நேர்மை, உழைப்பை வெளிப்படுத்தும் மதன் ஆட்டோ ஒட்டுவதிலும் தனது நல்ல குணங்களை வெளிப்படுத்தினார், படித்த பட்டப்படிப்பும் இவரது அணுகுமுறையில் பண்பாட்டினை வெளிப்படுத்தியது. இவர் கிளாரினட் வாசித்ததன் மூலம் கிடைத்த புகழும் எளிதில் மக்களை அணுகவைத்தது.

நியாயமான கட்டணம், ஒரு எஸ்எம்எஸ் கொடுத்தால் போதும் உடனே தொடர்பு கொள்வது எந்நேரம் அழைத்தாலும் செல்வது என்பது போன்ற காரணங்களால் மதுரை திருப்பாலை பகுதி மக்களின் அன்பிற்கு பாத்திரமானார், அந்த பகுதி பெண்களுக்கு கூடப்பிறக்காத அண்ணன் போல அக்கறை எடுத்து செயல்படுவார். இதன் காரணமாக எங்கே போகவேண்டும் என்றாலும் கூப்பிடு மதனை என்று சொல்லுமளவிற்கு பிரபலமாகிவிட்டார்.


இது மட்டுமின்றி தனது ஆட்டோ சவாரி இல்லாமல் போகும் போது வழியில் யாராவது முதியவர்களை பார்த்தால் இலவசமாக ஏற்றிச் சென்று விட்டுவிடுவார், பிரசவத்திற்கு இலவசம், ஆள் இல்லாத பெரியவர்களை ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கொண்டு போய் திரும்ப கூட்டிக்கொண்டு வருவது, நள்ளிரவு நேரமானாலும் ரயில் பெட்டிக்கே வந்து வாடிக்கையாளர்களை வரவேற்று வீட்டில் கொண்டு போய்விடுவது, அதே போல ஏற்றிவிடுவது என்று தனது ஆட்டோ பணியை பாசத்துடனும், நேசத்துடனும் செய்வதன் காரணமாக, வருடத்தில் 365 நாளும் ஒய்வு ஒழிவின்றி, நேரம் காலம் பார்க்காமல் இரக்கமுள்ள மனசுக்காரனாக ஆட்டோ ஒட்டிக்கொண்டு இருக்கிறார்.

ஆட்டோ ஓட்ட ஆரம்பித்து எட்டு வருடமாகிறது.வாடகைக்கு ஆட்டோ எடுத்து ஒட்டியவர் இன்னும் கொஞ்ச நாளில் சொந்த ஆட்டோ ஒட்டுனராகப்போகிறார்.

ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களை போன் மூலம் அழைத்தால் அழைத்தவர்கள் தேவைக்கு ஏற்ப ஆட்டோ ஏற்பாடு செய்துவிடுகிறார். ஒன்றுக்கு மேற்பட்ட ஆட்டோ வேண்டும் என்றாலும் அமைத்து தருகிறார்.

கல்லூரியில் வரலாறு படித்தவர் என்பதால் மதுரையின் வரலாறை முழுமையாக தெரிந்து வைத்திருப்பதால் தெரியாதவர்கள் ஆட்டோவில் ஏறும்போது மதுரையின் வரலாறை சுவராசியமாக சொல்கிறார். விரும்புபவர்களுக்கு சம்பந்தபட்ட இடத்தை கூட்டிப்போய் காண்பிக்கிறார்.


வரலாறு முதுகலை படிக்கவேண்டும் என்ற ஆசையை தற்போது தபால் மூலம் படித்து நிறைவேற்றிக் கொண்டு வருகிறார்.

என் தேவைக்கு ஏற்ற வருமானம் கிடைக்கிறது எனக்கு அது போதும் வேறு எந்த வேலைக்கு போயிருந்தாலும் இந்த அளவு நிம்மதியும், உறவும், நட்பும், பாசமும் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே என்று சொல்லும் ஆட்டோ மதன் உண்மையின் அனைவரின் அன்பை பெற்ற மதன்.


செய்யும் தொழில் எதுவானாலும் அதில் திறமைதான் நமது செல்வம் என்ற பொன்மொழியின் இலக்கணமாக திகழும் மதனுடன் பேச விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9367792728.

No comments:

Post a Comment