தங்கவேலு என்ற காந்தி பக்தர்...
- எல்.முருகராஜ்
விடிந்தும் விடியாத காலைப்பொழுது
கதரில் சட்டை, கால்சட்டை அணிந்த பெரியவர் ஒருவர் பளீர் தோற்றத்துடன் நடந்து செல்கிறார்
அவர் கால்கள் சென்று நின்ற இடம் கோவை சரவணம்பட்டியில் உள்ள கோயிலாகும், கால்கள் நின்றவுடன் அவரது கைகள் செயல்பட துவங்குகிறது, கோயிலின் வாசல் மற்றும் சுற்றுப்புறத்தை கூட்டி தண்ணீர் தெளித்து சுத்தம் செய்கிறார்.
பின்னர் பூஜைக்குரிய தேங்காய், பழம், சந்தனம், விபூதி, ஊதுபத்தி போன்ற பொருட்களுடன் கோயிலை திறக்கிறார். உள்ளே இன்னொரு ஆச்சர்யம், எந்த கடவுள் படமும் இல்லை மாறாக மகாத்மா காந்தி உருவச்சிலைதான் இருக்கிறது.
அவரைப்பொறுத்தவரை காந்திதான் கடவுள், காந்திக்கு மாலை அணிவித்து ஊதுபத்தி ஏற்றி, வந்தே மாதரம் பாடல்கள் பாடி, மகாத்மா காந்திக்கு ஜே என்ற கோஷத்தை மந்திரம் போல சத்தம் போட்டு சொன்னபடி கற்பூர ஆரத்தி காட்டுவதற்கும், வெளியே பொதுமக்கள் வந்து நிற்பதற்கும் சரியாக இருக்கிறது.
அவர்களுக்கு ஆரத்திகாட்டுகிறார், விசேஷ தினம் என்றால் இனிப்பு உண்டு .அன்று சுதந்திர தினம் கேட்கவேண்டுமா? ஜிலேபி, கடலை உருண்டை, சாக்லெட் என்று பல்வேறு விதமான இனிப்புகள் வழங்கப்பட்டது, கூடுதலாக அன்று கோயில் முன் கூடிய மாணவ, மாணவியர் உள்பட அனைவருக்கும் காந்தியின் சத்திய சோதனை புத்தகமும், தேசிய கொடியும் வழங்கப்பட்டது.
இது முடிந்ததும் மனிதர் தனது இரண்டு சக்கர வாகனத்தில் ஆயிரக்கணக்கான தேசிய கொடியையும், காந்தி படத்தையும், சத்திய சோதனை புத்தகத்தையும் எடுத்துக்கொண்டு கிளம்பினார், அவரது இருசக்கர வாகனத்தின் பின்னால் சிறிய தேர் போல செய்து அதனுள் காந்தி சிலையை வைத்திருந்தார். அவரது வாகனம் முதலில் போய் நின்ற இடம் கோவையின் பரபரப்பான காந்தி மார்கெட் பகுதியாகும்.
அங்கு போய் மக்கள் பார்க்கும்படியாக நின்று கொண்டு, " நமது நாட்டின் சுதந்திர தினத்தை மகிழ்வோடு கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம், இந்த மகிழ்ச்சிக்கு காரணம் நமது சுதந்திரம்தான், இந்த சுதந்திரத்தை பல்வேறு தேசதலைவர்கள் நமக்காக அரும்பாடுபட்டு வாங்கி தந்துள்ளனர், அவர்களில் முதன்மையானவர் மகாத்மா காந்தியாவார். நாட்டையும் அவரையும் நேசியுங்கள் அவரது சத்திய சோதனையை வாசியுங்கள் என்று சொல்லி தேசிய கொடியையும், காந்தி படத்தையும், சத்திய சோதனை புத்தகத்தையும் வழங்கிவிட்டு அடுத்த இடத்தை நோக்கி செல்கிறார்.
இவர் பெயர் தங்கவேலு, 67 வயதாகும் இவர் கொங்கு மண்ணிலே சுதந்திர கிடைத்த ஆண்டில் பிறந்தவராவார். சுதந்திரம் வாங்குவதற்கு பட்ட கஷ்டங்களை கோவை கணபதி பகுதியில் உள்ள காந்தி மண்டபத்தில் உட்கார்ந்து பெரியவர்கள் பேசுவதை சிறுவனாக இருந்த போது கேட்ட தங்கவேலுவிற்கு காந்தி மீது அளவுகடந்த பாசமும், பக்தியும் ஏற்பட்டது.
அவரது கொள்கை கோட்பாட்டின்படி எளிமையும், நேர்மையும் துணை கொண்டு வாழ்ந்தார், திருமணமான பிறகு மும்பை சென்றவர் அங்கு கடுமையாக உழைத்து உயர்ந்தார். வரும் வருமானத்தில் பெரும்பகுதியை சமூக சேவையில் செலவழித்தார். பணத்தை செலவழித்ததை விட பார்வையற்றவர்களுக்கும், உடல் ஊனமுற்றவர்களுக்கும் பக்க பலமாக இருந்து நாள் தவறாமல் செய்த சேவையால் மன நிறைவு கொண்டார். இவரின் அன்பு பாசம் காரணமாக முன்னாள் பிரதமர் மொரார்ஜிதேசாயின் நண்பராகவும் மாறிப்போனார்.
பின்னர் சிவசேனாவின் பால்தாக்கரேக்கு இவரது வளர்ச்சி பிடிக்காமல் போக தமிழன் என்று அடைமொழி கொடுத்து பிரித்தாளும் அரசியலில் இறங்கினார். இந்தியர் யாவரும் ஒரு தாய் மக்கள் அனைவரும் சகோதரர், சகோதரிகள் என்று படித்து அதன்படி வாழும் தங்கவேலுவிற்கு இந்த அரசியல் பிடிக்காமல் போனதால் மும்பையை விட்டு கிளம்பி மீண்டும் கோவை வந்தடைந்தார்.
கோவை வந்தவர் தீவிரமாக காந்திய பிரச்சாரத்தில் இறங்கினார், காந்திக்கு ஒரு கோயில் கட்டவேண்டும் என்று முடிவு செய்து தனது சொத்தைவிற்று கோயில் கட்டியுள்ளார். கட்டிய கோயிலில் தினமும் வழிபாடு உண்டு. பிற்சேர்க்கையாக இவரை ஈர்த்த திருவள்ளுவர் மற்றும் காமராஜரும் தற்போது தெய்வமாக கோயிலுனுள் காந்தி அருகே இருக்கின்றனர்.
உற்றமும், சுற்றமும், நட்பும் இவரை ஆரம்பத்தில் ஒரு மாதிரியாக பார்த்து பேசினாலும் இப்போது இப்படி ஒரு அபூர்வ மனிதர் நம்மிடையே இருக்கிறாரே என்று நிறைய மரியாதையுடன் பார்க்கிறார்கள்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் பள்ளி கல்லூரி மற்றும் பொது இடங்களுக்கு பிரச்சாரம் செய்யப் போய்விடுவார். தனது சமூக சேவைக்கு எந்தவித அங்கீகாரத்தையும் எதிர்பார்ப்பது இல்லை. ஒரு பொன்னாடை போர்த்துகிறோம் என்று கூப்பிட்டால் கூட தயவு செய்து வேண்டாம் என்று தவிர்த்துவிடுகிறார். யாரிடமும் ஒரு பைசா வாங்கியது கிடையாது, வாழ்வாதாரத்திற்கு ஒரு பல்பொருள் கடை வைத்துள்ளார். தன்னால் என்ன முடியுமோ அதைச் செய்து கொண்டு இருக்கிறார். நேர்மையும், எளிமையும், உண்மையும் கொண்ட காந்தியவாதியாகவே திகழ்கிறார்.
கொங்கு மண்ணிற்கே உரிய பிரியமான, பாசமான, மரியாதையான கொங்கு தமிழில், காந்தி கோயில் வாசலில் வைத்து இப்படி கேட்டார், "ஏனுங்க மத்தவங்க பார்வையிலே நான் எப்படியோ இருந்துட்டு போறேன், நீங்க சொல்லுங்க, என்னைய பத்தி என்ன நினைக்கிறீங்க?'' என்றார்.
காந்தியும், காமராஜரும், திருவள்ளுவரும் கோயிலுள் சிலையாக பேசாமல் நின்று கொண்டு இருக்கின்றனர், கோயிலுக்கு வெளியே நீங்கள் பேசிக்கொண்டு இருக்கின்றீர்கள் அது மட்டுமே வித்தியாசம் என்றேன் நான்.
குறிப்பு: காந்தி பக்தர் தங்கவேலுவை எனக்கு அறிமுகம் செசய்திட்ட கோவை ஈரநெஞ்சம் அமைப்பின் நிர்வாகி மகேந்திரனுக்கு நன்றி! காந்தி பக்தர் ஐயா தங்கவேலுவை தொடர்பு கொள்ள : 9042596956.
No comments:
Post a Comment