சீர்காழியில் ஒரு சிவபக்தை...
- எல்.முருகராஜ்
சில தினங்களுக்கு முன்னால் சீர்காழியில் உள்ள சட்டைநாதர் கோயிலில் நடைபெற்ற திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சிக்கு போயிருந்தேன். எங்கே பார்த்தாலும் சிவனடியார்களின் கூட்டம். அந்த கூட்டத்தில் ஒரு பெண் துறவி கழுத்து கொள்ளாத அளவிற்கு ருத்ராட்ச மாலைகள் அணிந்து கொண்டு தன்னை வந்து வணங்குவோர் நெற்றியில் பட்டை, பட்டையாக திருநீறு பூசிக்கொண்டிருந்தார்.
வாய் கொள்ளாத சிரிப்புடனும், சிவாய நம உச்சரிப்புடனும், ருத்ராட்ச "மாலைகளுக்குள்' காணப்பட்ட அவர் யார் என்பதில் அறிந்து கொள்வதில் ஆர்வம் ஏற்பட்டது.
என் பெயர் பாண்டிய லதா என்று ஆரம்பித்தவர்.
என் பூர்வீகம் எல்லாம் எதுக்கு, அதெல்லாம் வேண்டாம் என்றுதானே இந்தக்கோலம் பூண்டுள்ளேன் என்றவர் பழைய விஷயங்களை பற்றி குறிப்பிடும் போது, கணவர், குழந்தைகள், பெற்றோர், உற்றோர் என்று எல்லோரும் இருக்கிறார்கள், இப்போது என்னைப் பொறுத்தவரை "இருந்தார்கள்' அவ்வளவுதான்.
காதறுந்த ஊசியைக்கூட இந்த உலகத்தைவிட்டு போகும்போது எடுத்துக்கொண்டு போகமுடியாது என்ற பொருளில் ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட " காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே ' என்ற ஒரே ஒரு வார்த்தைதானே பெரும்பணக்காரராக வாழ்ந்த பட்டினத்தாரை, வெறும் கோவணம் மட்டுமே கட்டிய துறவியாக்கியது.
அப்படி ஒரு சம்பவம்தான் என்னையும் இந்த நிலைக்கு கொண்டுவந்துள்ளது, எல்லாம் அருணகிரிநாதரின் அருள்.
நான் தற்போது திருவண்ணாமலையில் அடியார் ஒருவர் கொடுத்த அறையில் தங்கியிருக்கிறேன். என் சொத்து என்பது இந்த ருத்ராட்சத மாலைகளும் சில உடைகளும் ஆன்மிகம் தொடர்பான புத்தகங்களும்தான். என்னிடம் பொருள் இருந்தபோது இல்லாத அருள் பொருளில்லாதபோது நிறைய இருக்கிறது. வீடு, வாசல், நிலம், நகை, வாகனம், வசதிகள் என்று ஓடும் மனிதர்களைப் பார்த்தால் இப்போது எனக்கு பாவமாக இருக்கிறது.
எதுவுமேயில்லாமல் சும்மாயிருப்பது என்பது எவ்வளவு சுகமானது என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
என்னைப்போல அனுபவித்தவர்களுக்கே அது புரியும். அரசனுக்குதான் ஆயிரம் கவலை என்னைப் போல ஆண்டிக்கு ஏது அந்த நிலை என்று பேசிக்கொண்டே இருக்கிறார், பேச்சுக்கு பேச்சு என்னங்கய்யா நான் சொல்றது என்று கேட்டு சிரிக்கிறார்.
என்னைப்போல அனுபவித்தவர்களுக்கே அது புரியும். அரசனுக்குதான் ஆயிரம் கவலை என்னைப் போல ஆண்டிக்கு ஏது அந்த நிலை என்று பேசிக்கொண்டே இருக்கிறார், பேச்சுக்கு பேச்சு என்னங்கய்யா நான் சொல்றது என்று கேட்டு சிரிக்கிறார்.
நிறைய சிவன் பாட்டு கேட்கலாம் என்று என்மீது அன்பு கொண்ட ஓருவர் சிவன் பாடல்களை நிரப்பி ஒரு மொபைல் போனை கொடுத்தார். இதில் பேசவும் முடியும் என்றாலும், நான் யாரிடமும் பேசப் போகிறேன் என்னிடம் யார் பேசப் போகிறார்கள். இந்த மொபைல் வாங்கிய பிறகு இதன் எண் என்ன? என்று கேட்டு பேசியவர் நீங்கள்தான். (நீங்களும் கூட பேசலாம் எண்: 9894839579)
திருவண்ணாமலையில் இருந்தால் நாள்தவறாமல் அண்ணாமலையார் கோயிலுக்கு போய் அங்குள்ள முருகன் சன்னதியருகே சிவமே தவம், தவமே சிவம் என்ற நிலையை மனதில் நிறுத்தி தியானத்தில் அமர்ந்திருப்பேன், இரவில் பள்ளியறை பூஜையின் போது சிவனை தரிசிப்பேன்.
உணவு உடைக்காக பெரிய தேடுதல் கிடையாது கோவிலுக்கு வரும் பக்தர்களே கொண்டுவந்து கொடுத்து விடுகிறார்கள், என் செலவிற்கு வேண்டிய பணத்தையும் அண்ணாமலையார் யார் மூலமாவது கொடுத்து விடுகிறார்.
நினைத்தபோதெல்லாம் கிரிவலம் வருவேன், ஏழு முறை காசிக்கு போய்விட்டு வந்துவிட்டேன் ஒரு முறை அமர்நாத்தும் போய்விட்டுவந்துவிட்டேன், வெள்ளியங்கிரி, சதுரகிரி மலை, கொல்லி மலையெல்லாம் நினைத்தபோதெல்லாம் போய்விட்டு வருவேன். அதிலும் சதுரகிரி மலையில் பதஞ்சலி சித்தரின் தரிசனம் கிடைத்தது என் பாக்கியம்.
இவ்வளவு ருத்ராட்ச மாலைகள் போடவேண்டும் என்பது என் விருப்பம் அல்ல எப்படியோ அது நிகழ்ந்து விட்டது. இப்போது அது நிலைத்துவிட்டது. தூங்கும்போது குளிக்கும் போதும் தவிர மற்றபடி எப்போதும் இந்த மாலைகள் என் கழுத்தில்தான் இருக்கும் இதனால் எனக்கு எதுவும் பிரச்னை இல்லை பஸ், ரயிலில் பயணம் செய்யும் போது மட்டும் நடத்துனர் மற்றும் சில பயணிகள் வித்தியாசமாக பார்ப்பார்கள். யார் பார்க்கிறார்கள் என்ன பேசுகிறார்கள் என்றெல்லாம் நினைத்து அதற்கேற்ப மாற்றிக் கொள்ளும் நிலயை நான் கடந்துவிட்டேன், எனக்கு பிடித்த வாழ்க்கையை நான் வாழ்கிறேன்.
நாட்டில் உள்ள அனைத்து சிவ தலத்தையும் பார்க்கவேண்டும் என்று எண்ணியுள்ளேன், பாதி வரை பார்த்தும் விட்டேன் மீதியை பார்க்கவும் நினைத்துள்ளேன், நான் நினைத்து என்ன செய்ய அந்த சிவன் நினைக்கவேண்டும். என் நினைப்பை நிறைவேற்றி வைக்கவேண்டும்.
தியானம், மவுனம், போன்றவைகள் எல்லாம் இன்னும் எனக்கு நான் நினைத்தபடி கைகூடவில்லை, மரணமாவது நான் நினைத்தபடி கூடிவர வேண்டும்.
தன் உடம்பின் பாதியை கரையான் அரித்தது கூட தெரியாமல் தியானத்தில் இருந்த ரமணர் நடனமாடிய புண்ணிய திருவண்ணாமலையில் அவரைப்போல இல்லாவிட்டாலும் அவருக்கு ஒரு துளி நெருக்கமாகவேனும் எனக்கு தியானம் கைகூடவேண்டும், அந்த தியானத்தின் போதே காம்பில் இருந்து பூ உதிர்வது போல என் உயிர் போய்விட வேண்டும். இது என் வேண்டுகோள் மட்டுமல்ல வேண்டுதலும்கூட.