Saturday, 29 June 2013

ஆழ்வார்திருநகரியில் ஒரு பொக்கிஷம்; பக்தி சொற்பொழிவாற்றும் பாலகன் சடஜித்...
- எல்.முருகராஜ்


ஆழ்வார்திருநகரி

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் போகும் வழியில் உள்ள புனித ஸ்தலம், நவதிருப்பதிகளில் ஒன்றானதும், நம்மாழ்வார் அவதரித்த பெருமையும் பெற்ற தலமுமாகும்.

இப்போது இந்த தலத்திற்கு பெருமை சேர்த்துக்கொண்டு இருக்கிறான் சிறுவன் சடஜித் என்கின்ற கீதாசசார்யன்.
எட்டு வயதே ஆன சிறுவன் சடஜித் இன்று நாடறிந்த நல்ல பக்தி சொற்பொழிவாளன் என்றால் பலராலும் நம்ப முடியாது, ஆனால் பக்தி ரசம் சொட்டச் சொட்ட அவன் நிகழ்த்திய பஞ்ச கல்யாண உபன்யாசம் கேட்டபிறகு நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

கதை சொல்லும் பாணியும், உப கதைகளை எடுத்துவிடும் சாதுர்யமும், உபன்யாசத்திற்கு உண்டான நகைச்சுவையை அருமையாக கையாளும் வித்தையும், உதாரணத்திற்கு எடுத்துச் சொல்லும் நாலாயிரதிவ்ய பிரபந்தங்களும் அப்படியே மலைக்கவைக்கிறது, வியப்பின் உச்சிக்கு கொண்டு போகிறது.

சென்னையில் செல்வன் சசடஜித்தின் உபன்யாசம் முடிந்ததும், மொத்த பார்வையாளர்களும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டியது இந்த சிறுவன் ஒருவனின் நிகழ்ச்சிக்குதான் என்று பல உபன்யாசங்களை பார்த்தவர் அதிசயித்து சொல்கிறார்.

சடஜித்திற்கு இதெல்லாம் ஒரே இரவில் மாயஜாலம் போல நிகழ்ந்துவிடவில்லை பின்னணியில் பெரிய பாரம்பரியமும், தந்தை ஸ்ரீராம், தாய் பத்மா, தாத்தா ஸ்ரீநிவாச பூவராஹாசாரியரின் ஆசியும், சடஜித்தின் அளவுகடந்த ஆர்வமும் இருக்கிறது.

உபன்யாசம் செய்வதை பகவானின் கைங்கர்யமாக கருதும் இளையவில்லி பராம்பரியத்தில் வந்த சிறுவனே சடஜித். சடஜித்தின் கொள்ளு தாத்தா சடகோபாச்சார்யர், தாத்தா ஸ்ரீநிவாச பூவராஹாசசாரியர், அப்பா ஸ்ரீ ராம் என்று அனைவருமே உபன்யாசம் நிகழ்த்துபவர்கள்தான்.

சடஜித்தின் தாத்தா ஸ்ரீநிவாச பூவராஹாச்சாரியர் சமஸ்கிருதத்தில் தங்க மெடல் வாங்கியவர், பெங்களூருவில் பேராசிரியராக பணியாற்றிவர், பிரமாதமாக உபன்யாசம் செய்பவர், பேராசிரியர் வேலையில் இருந்து ஒய்வு பெற்ற பிறகு பெங்களூரில் தீவிரமாக உபன்யாசம் நிகழ்த்திக் கொண்டு இருந்தார். திடீரென பார்வையில் பிரச்னை ஏற்படவே, மகன் ஸ்ரீராம் தான் பெங்களூருவில் பார்த்துக்கொண்டிருந்த கிராபிக் டிசைனர் வேலையை தூக்கிப்போட்டுவிட்டு தந்தைக்கு "கண்ணாக' இருந்து உதவினார்.

பின்னர் ஸ்ரீநிவாச பூவராஹாச்சாரியர் சொந்த ஊரான ஆழ்வார்திருநகரியில் பெருமாளுக்கு பூஜை காரியங்கள் செய்ய சரியானஆளில்லை என்பதை உணர்ந்ததும், பெங்களூருவில் இருந்து ஆழ்வார் திருநகரிக்கு குடிபெயர்ந்தார்.

இங்குள்ள பெருமாளுக்கு பூஜை காரியங்களையும், மாலை நேரங்களில் உபன்யாசங்களையும் பல ஆண்டுகளாக செய்து கொண்டிருக்கிறார். தந்தையின் நிழலாக இருந்து அவரது விருப்பப்படி கோயில் பூஜை காரியங்கள் செய்வதையும், உபன்யாசம் நிகழ்த்துவதையும் ஸ்ரீராம் ஒரு ஈடுபாட்டுடன் செய்ய ஆரம்பித்தார். இதன் காரணமாக பத்து ஆண்டுகளில் நாடறிந்த நல்லதொரு உபன்யாசகராக புகழ்பெற்று விளங்குகிறார்.

கிராபிக் டிசைனராக இருந்த ஸ்ரீராம் கொஞ்சமும் எதிர்பாராமல் உபன்யாசம் செய்பவராய் மாறியது ஒரு எதிர்பாராத நிகழ்வு என்றால் அவரது மகன் சடஜித் சிறுவயதிலேயே உபன்யாசம் செய்வதில் இறங்கியது அதைவிட கொஞ்சமும் எதிர்பாராதது.

சடஜித் பற்றி ஸ்ரீராம் பேசும்போது மிகவும் பூரித்துபோகிறார், "அப்பா சொல்லும் புராண கதைகளையும், வார்த்தைகளையும் சடஜித் தனது மழலைக்குரலில் தப்பில்லாமல் சொன்ன போது ரொம்பவே ஆச்சர்யப்பட்டு போனோம். சேலத்தில் மூன்று மணி நேரம் உபன்யாசம் செய்ய வேண்டிவந்தது, இடையிடையே ஒரு பத்து நிமிடம் சடஜித் தனக்கு தெரிந்த புராண குட்டிக் கதைகளை சொல்ல ஆரம்பித்தான், அன்று விழுந்த கைதட்டல் மொத்தமும் அவனுக்கே. அப்போது அவனுக்கு வயது மூன்றுதான்.

அதன் பிறகு படிக்கும் நேரம் போக உபன்யாசத்தில் ரொம்பவே ஆர்வம் காண்பிக்க ஆரம்பித்தான், தாத்தாவிடமும், என்னிடமும் நிறைய சந்தேகங்களை கேட்பான். பத்து நிமிடம் பேச ஆரம்பித்தவன், பிறகு கொஞ்சம், கொஞ்சமாக நேரத்தை கூட்டி இப்போது ஒன்றரை மணி நேரம் உபன்யாசம் செய்யக்கூடிய ஆற்றல் பெற்றுள்ளான்'', சென்னை திருவல்லிக்கேணி நம்பிள்ளை கோயிலில் கடந்த ஆண்டு மார்கழி மாதம் முப்பது நாளும் ஆண்டாள் பாடிய திருப்பாவை தொடர் உபன்யாசம் நிகழ்த்தினான், ஏழு வயதில் இப்படி தொடர் உபன்யாசம் நிகழ்த்தியது உலகிலேயே இவன் ஒருவனாகத்தான் இருக்கமுடியும் என்று பெருமையுடன் கூறி முடித்தார் ஸ்ரீராம்.

சடஜித்தை செதுக்கியதில் அவனது தாயார் பத்மாவிற்கு பெரும் பங்கு உண்டு, கடவுள் மீதும், கணவர் மீதும் கொண்ட பக்தி காரணமாக சென்னையில் எம்சிஏ படித்தவர், தான் பார்த்துவந்த கார்ப்பரேட் வேலையை தூக்கிப்போட்டுவிட்டு, ஆழ்வார்திருநகரிக்கு சென்றவர் பெண்கள் குல திலகமாக இருந்துவருகிறார்.

எதையும் எதிர்பாராமல், எளிமையும், உண்மையும், பக்தியும், பண்பும், அன்புமே வாழ்க்கையின் பிரதானம் என்று வாழ்ந்து வருபவருக்கு தனது குழந்தை சடஜித் ஒரு ஞானக்குழந்தை என்று தெரிந்ததும், அந்த ஞானத்தை சுடர்விட்டு பிராகாசிக்க செய்து வருகிறார். முப்பது நாள் தொடர்ந்து உபன்யாசம் சொல்லவைத்தல், டி.வி.,களில் பேசவிடுதல், பக்தி மேடைகளில் இடம் பெறச் செய்தல் என்று சடஜித்தைமேலும் மேலும் மெருகேற்றும் வேலையை அற்புதமாக செய்து கொண்டு இருக்கிறார், சடஜித் நான்காவது படிக்கும் பள்ளி மாணவன் என்பதால் அந்த பருவத்து மகிழ்ச்சி, படிப்பு என்று எதையும் இழந்துவிடாமல் முக்கியமாக பார்த்துக் கொள்கிறார். சடஜித் படிப்பிலும் படு சுட்டி, பேச்சு போட்டி விளையாட்டு போட்டிகளில் இன்றைக்கும் பல பரிசுகள் பெறும் சிறந்த மாணவன்.

இவன் படிக்கும் ஆழ்வார்திருநகரி மாளவியா பள்ளிக்கும் சரி, அதன் தாளாளர் எம்.வேலுவிற்கும் சடஜித் என்றால் மிகவும் செல்லம். தனது படிப்பிற்கு இடையூறு இல்லாமல் தனது மனதிற்கும் பிடித்துப்போய் தாத்தா தந்தை தாய் ஆசீர்வாதம் இருந்தால் மட்டுமே எந்த நிகழ்ச்சிக்கு செல்கிறான். இப்படிபட்ட குழந்தையின் அறிவு, ஞானம் உலகமெங்கும் பரவட்டும் என்பதற்காக உபன்யாசம் நிகழ்த்தும் நாட்களிலும், வெளியூர் நிகழ்விலும் கலந்து கொள்ள பள்ளி நிர்வாகம் பெருமையுடன் அனுமதி தருகிறது, இதற்காக நாங்கள் பள்ளிக்கு ரொம்பவே நன்றிக் கடமைபட்டு உள்ளோம் என்கின்றனர் ஸ்ரீராம்-பத்மா தம்பதியினர்.

வட மாநிலங்களில் உபன்யாசம் செய்பவர்களை கொண்டாடுகின்றனர், ஆனால் தமிழகத்தில் இந்த அற்புதமான அரிய ஆன்மிக உபன்யாசத்திற்கு போதுமான வரவேற்பு இல்லாததால், உபன்யாசம் செய்பவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே போய் இன்றைக்கு விரல்விட்டு எண்ணி விடுபவர்கள்தான் உள்ளனர். 

இந்த நிலையில் சிறுவன் சடஜித் தேய்ந்துவரும் உபன்யாச கலையை இன்றைக்கு தாங்கியும், உயர்த்தியும் பிடித்து வருகிறான் என்பதில் பலருக்கும் மகிழ்ச்சியே. தனது தனித்துவமிக்க உபன்யாசத்தின் மூலம் நிகழ்காலத்திலேயே புகழின் உயரங்களை தொட்டுள்ள சடஜித் விரைவில் அதன் சிகரங்களையும் தொடுவார், தொடவேண்டும் என்பது உபன்யாச பிரியர்களின் விருப்பம் மட்டுமல்ல வேண்டுதலுமாகும்.

இளையவில்லி கீதாச்சார்யன் என்ற செல்வன் சடஜித் பேசி, பதிவு செய்யப்பட்ட உபன்யாசம் மற்றும் பஞ்ச கல்யாணம் குறித்த ஆடியோ சிடியின் தேவைக்கும் , சடஜித்தை உபன்யாசம் நிகழ்த்துவதற்கு அழைப்பதற்கும் பெற்றோர்களுடன் தொடர்பு கொள்ளவும்: 9443695147.




ஊர்ல உள்ள எல்லா பய புள்ளைகளும் படிச்சாகணும்...
- எல்.முருகராஜ்







வணக்கம் வாசகர்களே

கடந்த வாரம் நிஜக்கதை பகுதியில் ஏழை மாணவன் கோகுல கிருஷ்ணனின் இரண்டாம் ஆண்டு மெக்கானிகல் என்ஜினியரிங் படிப்பிற்கான செலவினை பகிர்ந்து கொள்ள வாசகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தோம்.
வாசகர்கள் பலரும் தங்களால் முடிந்த அளவு நல்ல மனதோடு பணம் அனுப்பியதுடன், தங்களது மனமார்ந்த வாழ்த்தையும் தெரிவித்திருந்தார்கள், பணம் அனுப்ப முடியாதவர்களும் கூட எப்படியாவது கோகுல கண்ணன் படிப்பை தொடர வேண்டும் என்ற தங்களது பிரார்த்தனையை பதிவு செய்திருந்தனர்.

பிரார்த்தனைகளும், வாழ்த்தும் பலித்துள்ளது. இரண்டாம் வருடம் படிப்பதற்கு தேவைப்பட்ட பணத்தின் (54,500ரூபாய்) பெரும்பகுதியை (44.000) வாசகர்கள் பகிர்ந்து கொள்ள, பத்தும் பத்தாதிற்கு எனது பங்கினையும் போட்டதுடன் அவனது ஒரு வருட தேவைக்கான ஆடைகள் மற்றும் படிப்பு தொடர்பான உபகரணங்களையும் வாங்கிக் கொடுத்துள்ளேன்.

தங்கள் எல்லோருடைய ஆசீர்வாதத்துடன் வருகின்ற ஜூலை மாதம் 3ம்தேதி புதன் கிழமை கல்லூரிக்கு போய் பணம் கட்டிவிடுகிறோம். இது தொடர்பான இதர வேலைகளையும் பார்த்துக் கொள்கிறேன். மாணவன் கோகுல கண்ணனும், தாயார் பிருந்தாவும் மனம் நிறைந்த நன்றிகளை கண்ணிலும், நெஞ்சிலும் ஈரம் பெருக தங்களிடம் தெரிவித்துக் கொள்கிறார்கள்.

என் எழுத்திற்கு இவ்வளவு மதிப்பு கொடுத்த தங்களுக்கு மிக,மிக நன்றி வாசகர்களே!

இந்த வார நிஜக்கதை பகுதியில் இடம் பெற்றிருப்பவர் நல்லாசிரியர் ராமசாமி, 

இவர் தன் கிராமத்தில் மட்டுமின்றி தனது சுற்று வட்டார கிராமத்தில் உள்ள எந்த குழந்தையும் படிக்காமல் இருந்துவிடக்கூடாது என்பதற்காக, தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார், பணம் சார்ந்த இந்த உலகத்தில் குணம் சார்ந்து வாழும் அந்த பெரியவரின் கதை இது.

ர் டி.கே.ராமசாமி.

கோவை மாவட்டம் சிறுமுகை பேரூராட்சி காரமடை ஊராட்சி ஒன்றியம் திம்மராயன்பாளையத்தைச் சேர்ந்த அமரர்களாகிவிட்ட கொதியப்பா-நஞ்சம்மாள் தம்பதியின் மகனாகப் பிறந்தவர்.

என் அம்மா ஒரு தெய்வமுங்க, அப்போது ஐந்தாம் வகுப்பு படிக்கவேண்டும் என்றாலே பல கிலோ மீட்டர் தூரம் தள்ளி உள்ள பள்ளிக்கூடம் போகவேண்டும், ஆனாலும் போய் நல்லா படி ராசா நான்தான் கைநாட்டா போய்விட்டேன், நீ அப்படி இருக்கக்கூடாது, நல்லா படிக்கணும், நல்லா படிக்கிறது மட்டுமில்ல நாலு பேரை படிக்க வைக்கணும் என்று சொல்லி, சொல்லியே என்னை வளர்த்தார்.

பள்ளிக்கூடம் போவதற்காக 1952ம்வருடம் 52 ரூபாய்க்கு ஒரு சைக்கிள் வாங்கிக் கொடுத்தார், அந்த 52 ரூபாய் கடனை அடைக்க மூணு வருஷம் ரொம்பவே கஷ்டப்பட்டார், அதிகாலை மூணு மணிக்கு எழுந்து மாட்டுத் தீவன புல்லைப் புடுங்கி, அலசி எடுத்துக்கொண்டு, பரிசல் மூலம் ஆற்றைக் கடந்து சென்று மேட்டுப்பாளையம் போய் காலணா, அரையணா காசிற்கு விற்று சம்பாதித்த காசில், சைக்கிள் வாங்கிய கடனை அடைத்தார்.

அந்த கஷ்டத்திலேயும் எனக்கு பிடிச்ச கல்லப்பொரியை வாங்கி மடியில் கட்டிக் கொண்டு வந்து எனக்கு கொடுத்து, நான் சாப்பிடும் அழகை பார்த்து ரசித்த என் அம்மாவிற்கு நான் செலுத்தும் காணிக்கையே தற்போது ஏழை மாணவர்களை தேடிப்பிடித்து படிக்கவைப்பது.

1961ல் பள்ளி ஆசிரியராக சேர்ந்து 1998ல் தலைமையாசிரியராக பணி ஒய்வு பெற்றேன் நான் ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் மாணவ, மாணவியரை என் சொந்த பிள்ளைகளாகத்தான் பார்ப்பேன், பள்ளி கட்டிடங்களை எனது வீடாகவே பாவித்தேன், கிராமத்தில் எந்த குழந்தையும் படிக்காமல் இருக்கக்கூடாது என்பதில் தீவிரமாக இருந்து செயல்பட்டேன்.

பள்ளி மற்றும் அதனைச் சார்ந்த இடங்களில் மரம் வளர்ப்பதில் பெரிதும் ஆர்வம் காட்டினேன், அப்படி நான் சிறுமுகை பள்ளியில் பணியாற்றும் போது வைத்து வளர்த்த தேக்கு மரங்கள் இன்று பல லட்சம் பெறும் என்பதை எண்ணும்போது சந்தோஷமாக இருக்கிறது. விடுமுறை தினங்களில் மாணவர்களை அழைத்துக் கொண்டு ஊரில், தெருவில் மரம் நடக் கிளம்பி விடுவேன் அந்த வகையில் இன்று இலுப்பம்பாளையம் கிராமம் சோலை போல இருக்கிறதே என்றால் நானும் எனது பிள்ளைகளும் அன்று வைத்த மரங்களே காரணம்.

நான் படித்து, பணியாற்றி, ஒய்வு பெற்ற இலுப்பம்பாளையம் அரசு பள்ளி எனக்கு விருப்பமான சொர்க்கமான இடம். அரசு சார்பில் சுற்றுச்சுவர் கட்டிக்கொடுத்த போது அந்த சுற்றுச்சுவரில் தேசிய தலைவர்கள், தேசிய விலங்கு, தேசிய மலர், மழைநீர் சேமிப்பின் அவசியம் மரங்களின் முக்கியம் போன்றவைகளை முப்பாதாயிரம் ரூபாய் செலவழித்து ஓவியமாக வரைந்து வைத்துள்ளேன். இதை தவறாமல் தினமும் பார்க்கும் குழந்தைகள் மனதில் நிச்சயம் ஒரு மாற்றம் உருவாகும்.

98ல் பணி ஒய்வு பெற்ற பிறகு சமூகப்பணியாற்றுவதில் இன்னும் தீவிரமாக இறங்கினேன், எனது பென்ஷன் பணம் 17 ஆயிரத்தில் எனக்கும் என் மனைவிக்குமான குடும்ப செலவிற்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் எடுத்துக்கொண்டு மீதம் 11 ஆயிரம் ரூபாயை பொதுக்காரியத்திற்கு செலவிடுவதை நோக்கமாக கொண்டுள்ளேன்
அதிலும் பெரும்பகுதி பணத்தை கிராமத்து பள்ளி குழந்தைகளின் நோட்டு புத்தகங்கள் எழுது பொருட்கள் சீருடை வாங்குவதற்கு செலவிட்டுவிடுவேன், பள்ளி ஆரம்பிக்கும் போது கொஞ்சம் கூடுதலாக செலவாகும் அதைப்பத்தி கவலைப்படாம கடன் வாங்கி பிள்ளைகளுக்கு செலவழிச்சுடுவேன், அப்புறம் பென்ஷன் பணம் வந்த பிறகு அதில் இருந்து கடனை கொடுத்து சமாளிச்சுடுவேன்.

இது போக ஊரில் உள்ள பிரச்னைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்ப்பது, கோயில் காரியங்களை எடுத்துச் செய்வது, உடம்பிற்கு முடியாதவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெறவைப்பது, சுற்றுச்சுழல், கல்வி, தனிமனித ஒழுக்கம் பற்றி பள்ளிகளில் போய் இலவசமாக பாடங்கள் நடத்துவது, உயர்கல்வி படிப்பதால் பிறந்த மண்ணிற்கும் வீட்டிற்கும் உனக்கும் கிடைக்கும் பெருமைகள் இவை என்று மாணவ, மாணவியரிடம் எடுத்துச் சொல்லி உயர்படிப்பில் நாட்டம் கொள்ளச் செய்வது, நர்சிங், என்ஜினியரிங் போன்ற படிப்பு படிப்பவர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்வது என்று என்னால் முடிந்தவரை இந்த 75 வயதிலும் சுறுசுறுப்பாக இருக்கிறேன்.

நான் பணியில் இருக்கும் போது செய்த காரியங்களை பாராட்டி மத்திய, மாநில அரசுகளின் சார்பில் நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்தார்கள், விருதுக்காக நான் எப்போதும் வேலை செய்ததது இல்லை, என் மனசாட்சிக்காக, "நீயும் நாலு பிள்ளைகளை படிக்க வைக்கணும் என்று என் தாய் சொன்ன சொல்லுக்காக' என்னால் முடிந்தை அப்பவும் செய்தேன், இப்பவும் செய்கிறேன், என் ஆயுள் உள்ளவரை எப்பவும் செய்வேன் என்று பெரிவயவர் ராமசாமி சொல்லி முடிக்கும் போது வானம் இருட்டிக்கொண்டு மழை பெய்ய ஆரம்பித்தது.

இந்த மழை ராமசாமி என்ற நல்லோர் ஒருவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்த மழையாகும்.

ராமசாமி தொடர்பான பிற படங்களை போட்டோ கேலரி பகுதியில் பார்க்கவும், அவரது தொடர்பு எண்: 9443779252. அவருடன் பேசுபவர்கள் அவரது கேட்கும், மற்றும் கிரகிக்கும் திறன் சற்று குறைவு என்பதை மனதில் வைத்துக்கொண்டு பேசவும், நன்றி!

Sunday, 23 June 2013


எம் புள்ளை இப்ப என்ஜீனிரிங் படிக்கிறான்யா...
-எல்.முருகராஜ்



நமது தினமலர் இணையதள வாசகர்கள் வெறும் பார்வையாளர்கள் மட்டுமில்லை, நிஜமாகவே உதவி தேவைப்படும்போது, உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கைநீட்டி உதவுவார்கள் என்பதற்கான அடையாளம்தான் கோகுல கண்ணன்.

யார் இந்த கோகுல கண்ணன் என்பதை தெரிந்து கொள்ள கடந்த வருடம் வெளியான கட்டுரையின் சுருக்கத்தை பார்த்துவிடுவது நல்லது.

கோகுல கண்ணனின் தாயார் பெயர் கே.பிருந்தா தேவி

அன்றாடம் வயிற்றுப்பாட்டிற்கே அல்லல்பட்டாலும், தான் பெற்ற பிள்ளைகளை படிக்கவைத்து ஆளாக்க நினைக்கும் கனவுகளுடன் வளம்வரும் ஆயிரக்கணக்கான ஏழை குடும்பத்து தாய்மார்களின் பிரதிநிதி இவர்.
தற்போது சென்னை திநகர், முத்துரங்கன் சாலை, வரதராஜன் தெரு, கதவிலக்கம் 26ல் குடியிருக்கும் இவர் படிப்பதில் ஆர்வமாக இருந்தாலும் சூழ்நிலை காரணமாக சென்னையில் உள்ள ஒரு ஒட்டல் தொழிலாளிக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டவர்.

குடிசை வீட்டில் அன்புக்கு குறைவில்லாமல் குடும்பம் நடத்தியவருக்கு மூன்று குழந்தைகள், தனது குழந்தைகளை நன்கு படிக்கவைக்கவேண்டும் என்பதுதான் இவரது வாழ்நாளின் லட்சியம், ஆசை எல்லாம். இதற்காக தனது கணவரின் ஊதியம் (மாதம் 3 ஆயிரம் ரூபாய்) போதாது என்பதால் நாலைந்து வீடுகளில் வேலை செய்துவரும் சம்பாத்தியம் மூலம் பிள்ளைகளை படிக்க வைக்கிறார், பெற்றவளின் சிரமம்பார்த்து பிள்ளைகளும் நன்கு படித்துவருகின்றனர்.

இதில் மூத்தவன் கோகுல் கடந்த ஆண்டு பிளஸ் டூவில் 938 மார்க்குகள் வாங்கியிருந்தான், கவுன்சிலிங்கில் இவன் கேட்ட சென்னை குன்றத்தூர் ஸ்ரீமுத்துக்குமரன் என்ஜீனியரிங் கல்லூரியே கிடைத்துவிட்டது.

ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் தே‌வை:


எல்லா சலுகையும் போக வருடத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் என்ற நிலை. அவ்வளவு பணத்தை மொத்தமாக பார்த்தேயிராத பிருந்தாவிற்கு என்ன செய்வது என்பது புரியவில்லை. தான் வேலை பார்த்துவரும் வீடுகளில் கடன் கேட்டார். காலை 4 மணிக்கு எழுந்து இரவு 10 மணிவரை இடுப்பொடிய வேலை செய்பவர், "இன்னும் இரவெல்லாம் கூட வேலை செய்கிறேன்' என் புள்ளை படிச்சா போதும் கொஞ்சம் பணம் கொடுங்க என்று கண்கலங்கிய நிலையில்தான் என் வீட்டு கதவையும் தட்டினார்
.
அந்த தாயின் கனவை நிறைவேற்ற நான் என்னால் முடிந்த தொகையை கொடுத்ததுடன் என் கடமை முடிந்ததாக நினைத்துவிடாமல், அவரது நிலமையை நிஜக்கதை பகுதியில் பிரசுரித்து வாசகர்களிடம் முடிந்த உதவியை கேட்டிருந்தோம்.
வாசகர்கள் பலரும் படித்துவிட்டு நல்ல மனதுடன் உதவினார்கள், வாசகர்கள் தங்கள் வியர்வை சிந்தி சம்பாதித்த அனுப்பிய பணத்தின் மதிப்பை அறிந்து கோகுலும் முதல் வருடத்தை நன்றாக படித்து முடித்துள்ளான் அவனது மதிப்பெண்களும் முதல் தரத்திலேயே உள்ளது.

இப்போது இரண்டாம் வருட படிப்பு துவங்க உள்ளது இரண்டாம் வருட படிப்பிற்கான கட்டணம் ரூபாய் ஐம்பத்து நான்காயிரத்து நானூற்று ஐம்பது ரூபாயாகும், இந்த வருடத்திற்காக நான் எனது பங்காக என்னால் முடிந்த பணத்தை கொடுத்து கணக்கை துவங்கியுள்ளேன் வாசகர்கள் தங்களால் முடிந்ததை வழங்கலாம்.மாணவன் கோகுல கண்ணனின் தாயார் கே.பிருந்தாதேவியின் வங்கி கணக்கிற்கே தங்களால் இயன்ற பணத்தை அனுப்பலாம். கே.பிருந்தாதேவி, கணக்கு எண்:1278 155 0000 94707, கரூர் வைஸ்யா பாங்க், அசோக்நகர் கிளை, சென்னை-83. வங்கியின் ஐஎப்எஸ்சி கோட் எண்: கேவிபிஎல்0001278.

பிருந்தாதேவியிடம் பேசுவதற்கான போன் எண்:9444073157. உங்களால் ஒரு ஏழை மாணவன் தானும் படித்து தன் தம்பிகளையும் படிக்கவைப்பான் என்ற நம்பிக்கை வந்துள்ளது மேலும் ,ஒரு ஏழை, எளிய தாயின் கனவும் நனவாகிக்கொண்டு இருக்கிறது. நன்றி வாசகர்களே. நன்றி!

Thursday, 20 June 2013

தன்னம்பிக்கைக்கு இன்னொரு பெயர் சபரி வெங்கட்...
- எல்.முருகராஜ்







உடலுக்கோ, மனதிற்கோ ஒரு சின்ன வலி ஏற்பட்டாலே,என்ன வாழ்க்கை இது?, பேசாம நிம்மதியா போய்ச் சேர்ந்துரலாமா?, என்ற விரக்தியான மனநிலைக்கு தள்ளப்படும் மனிதர்கள் நிறைந்த இந்த உலகத்தில், ஒரு பத்து வயது பார்வையற்ற சிறுவன், எனக்கு பார்வை இல்லைங்றது ஒரு பெரிய விஷயமே இல்லீங்க என்று சொல்லியபடி அடுத்தடுத்த சாதனையை தொடர்வதை பார்க்கும் போது இவன்தான் நம்பிக்கை நாயகன் என்று யாருக்கும் சொல்லத் தோன்றும்.

அந்த சிறுவனின் பெயர் சபரி வெங்கட்

கோவை பெரிய நாயக்கன் பாளையத்தில் அந்த சிறுவன் வசிக்கும் சின்ன வாடகை வீட்டை அடையும் முன், சிறுவனைப் பற்றிய ஆரம்ப வரலாறை கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

கோவை- பாலக்காடு எல்லைப் பகுதியில் உள்ள வடகாடு என்ற இடத்தில் விவசாயம் பார்த்துக் கொண்டிருந்த சீனிவாஸ்- நீலவேணி தம்பதிக்கு திருமணம் முடிந்து 12 வருடம் கழித்து பிறந்த ஒரே மகன் சபரி வெங்கட்.
பிறந்த போதே பார்வைக் குறைபாடுடன் பிறந்தான்.

பார்வைக் குறைபாட்டிற்கு சிகிச்சை பெறவும், அவனுக்கான கல்வியை தேடவும் வேண்டி, விவசாயம் பார்த்த பூமியை வந்த விலைக்கு விற்று விட்டு கோவை பெரிய நாயக்கன் பாளையத்திற்கு மாறிவந்தனர்.

பார்வைக் குறைபாடு சிகிச்சைக்காக பலரையும் பார்த்ததில் கையிலிருந்த பணம்தான் பெருமளவில் குறைந்ததே தவிர பலனேதும் இல்லை முழுமையாக பார்வை இழந்தவனானான் சபரி வெங்கட்.

பெரிய நாயக்கன் பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ண வித்யாலய பள்ளியில் சேர்கப்பட்டபின் ஒரு மாற்றமாக சபரி அபரிமிதமான ஆற்றலுடன் படிக்க ஆரம்பித்தான்.

அங்குள்ள பார்வையுள்ள மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து பார்வை இல்லாத சபரியும் படித்தான், தற்போது ஆறாம் வகுப்பு படித்து வருகிறான், எப்போதும் முதல் ஐந்து ரேங்கில் வந்துகொண்டு இருக்கிறான்
.
கூடுதலாக புத்தகம் படிக்க வேண்டும் என்பதற்காக பள்ளிவிட்டு வந்ததும், மாலையில் இரண்டு மணி நேரம் பிரெய்லி முறையில் படிக்க எழுத கற்றுக்கொண்டு இருக்கிறான்.

இதெல்லாம் சராசரியாக பார்வை உள்ள,பார்வை இல்லாத மாணவர்கள் யாருமே செய்யக் கூடியதுதான், ஆனால் யாரும் செய்யாததை செய்யும்போதுதான் அவர்கள் வித்தியாசப்படுகிறார்கள்.

ராமகிருஷ்ணா வித்யாலயம் என்பதாலோ என்னவோ சுவாமி விவேகானந்தர் பற்றி நிறைய படித்து, கேள்விப்பட்டு அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, சின்ன வயது விவேகானந்தராக தன்னை மாற்றிக்கொண்டு விட்டான்.

அவரைப் போலவே உடை, தலைப்பாகை அணிந்து அவரது புகழ் பெற்ற அமெரிக்காவின் சிகாகோ பேச்சை இவன் தன் மழலைக்குரலில் பேசுவதை கேட்பவர்கள் யாராக இருந்தாலும் எழுந்து நின்று கைதட்டாமல் இருக்கமாட்டார்கள்.

விவேகானந்தர் விழாவினை முன்னிட்டு நடைபெற்ற பேச்சு போட்டியில் முதல் இடத்தை பிடித்த சபரிக்கு முதல்வர் கையால் பதக்கம் அணிவித்து பாராட்டும் கிடைத்துள்ளது.

அப்போது நடந்த சம்பவம் சுவராசியமானது, தனது சுருங்கிய வலது கண்ணும், அதற்கு தொடர்பில்லாமல் விரிந்து கிடக்கும் இடது கண்ணும் பார்ப்பவர் முகத்தை கோணச் செய்துவிடக் கூடாதே என்பதற்காக பேருக்கு ஓரு கண்ணாடி அணிந்திருப்பான்
.
இந்த தோற்றத்தில் இருந்த சபரியை முதல்வர் முதலில் கண்டுகொள்ளவில்லை, பின்னர் அவனைப் பற்றி கேள்விப்பட்ட பிறகுதான் அட..இப்படி ஒரு சிறுவனா என வியந்தார். பின்னர் விருது வாங்க வந்த போது உச்சி முகர்ந்து பாராட்டினார்.

கோவையில் ஒரு விழாவில் சபரியின் பேச்சை கேட்ட விழா அமைப்பினர், "உனக்கு என்ன வேண்டும் சொல் கட்டாயம் செய்கிறோம்'' என்றனர். பணம், பொருள், மருத்துவம் என்று எதைக் கேட்டிருந்தாலும் செய்திருப்பார்கள், ஆனால் சபரி கேட்டதோ முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமை சந்தித்து பேச ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதுதான்.

சபரியின் ஆசை, அப்துல் கலாமிடம் தெரிவிக்கப்பட்டது,அவர் அடுத்தமுறை கோவை வரும்போது முதலாவதாக சந்தித்தது சபரியைத்தான்..சில நிமிடம் சபரியிடம் சந்தோஷமாக பேசிக்கொண்டிருந்துவிட்டு, சபரி என்னுடைய கோவைத்தோழன் என்று எல்லோரிடமும் சொல்லி சந்தோஷப்பட்டுக் கொண்டார்.

இன்னொரு விழாவில் இந்த பத்து வயது சிறுவன் என்ன பேசிவிடப்போகிறான் என்று இருந்தவர்கள், இவன் பேசி முடித்ததும் நாங்கள் கட்டாயம் ஒரு வார்த்தையாவது சபரியிடம் பேசவேண்டும் என்று மைக்கை கேட்டு வாங்கியவர்கள் பலர், அவர்களில் ஒருவர், "ஆமாம் சபரி, உன் முன் கடவுள் தோன்றி, ஒரே ஓரு வரம் தருகிறேன் என்றால் என்ன வரம் கேட்பாய்'' என்று கேட்டிருக்கிறார்.

எனக்கு பார்வை கிடைக்கவேண்டும் என்றுதான் பதில் சொல்வான் என எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்க, "நாடு நல்லாயிருக்கணும்' என்ற வரம் கேட்பேன் என்றதும் "என்னப்பா இப்படி சொல்றே', நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன், உனக்கு பார்வை வேண்டும் என்று கேட்கமாட்டாயா'? என்றதும், "பார்வை இல்லாதது எல்லாம் எனக்கு ஒரு பிரச்னையே இல்லை, எளிதில் சமாளித்து விடுவேன், நாடு நல்லாயிருக்கணும், நாட்டில் உள்ள நல்லவங்க நல்லாயிருக்கணும் அதான் முக்கியம்'' என்று திரும்பவும், தெளிவாக கூறியதும் மீண்டும் அரங்கில் எழுந்த கரவொலி அடங்க ரொம்ப நேரமாயிற்று.

சுவாமி விவேகானந்தரைப் போல உடையணிந்து கம்பீரமாக அவரது கருத்துக்களை பேசும் போது கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் போல தோன்றும்., ஒரு விஷயத்தை ஒரு முறை கேட்டாலே போதும் அழகாக கற்றுக்கொள்கிறான். வீட்டில் நிழலுக்கு ஒதுங்கிய ஒரு பாட்டி சொல்லிக் கொடுத்த பகவத்கீதையின் ஸ்லோகத்தை அச்சுப்பிசகாமல் அப்படியே சொல்கிறான். 

பாட்டுப் பாடுவது என்றால் மிகவும் பிரியம் முறைப்படி சங்கீதம் கற்றுக் கொள்ளவில்லை ஆனால் சபரி பாடி கேட்டால்... கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

திருமுருகன் பூண்டியில் உள்ள விவேகானந்தா சேவாலய செந்தில்நாதன்தான் தற்போது சபரியின் பேச்சுத்திறமையை பலரும் கேட்கவேண்டும் என்ற ஆர்வமுடன்,அவனை பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று வருகிறார். இது போல அவிநாசிக்கு அழைத்து வந்த போது அங்குள்ள தினமலர் நிருபர் மகேஷ் சபரியை பார்த்துவிட்டு, அவனது பேச்சை கேட்டுவிட்டு என்னிடம் தொடர்புகொண்டு, சபரிபற்றி நமது நிஜக்கதை பகுதியில் வெளியிடுங்கள் என்று சபரி பற்றி எழுதுவதற்கு வழி அமைத்துக்கொடுத்தார்.

....''சுவாமி விவேகானந்தர் வாழ்ந்தது குறுகிய காலமாக இருக்கலாம் ஆனால் தனது கருத்துக்களால், நம்மிடம் வாழப்போவதும், இனிவரும் இளைய சமுதாயத்தின் மனங்களை ஆளப்போவதும், பல காலத்திற்கு இனி அவர்தான். நாலணா கையில் இல்லாததால் கன்னியாகுமரியில் படகில் பயணிக்க இயலாமல் நீந்திச்சென்று பாறையின் மீது தியானம் செய்தவர், சில நாளில் பத்தாயிரம் மைல் கடந்து சென்று அமெரிக்கா மக்களை திரும்பி பார்க்கவும், விரும்பி ஏற்கவும் செய்யும் வல்லமை கொண்டிருந்தார் என்றால், அவரிடம் குடியிருந்த அந்த மகா சக்தி எது? சொல்லட்டுமா?'' என்று சபரியின் மழலை மாறாத கணீர் குரலை முழுதாகக் கேட்க நேரில் அழையுங்கள்,கொஞ்சமாய் கேட்க போனில் அழையுங்கள்... சபரியின் அப்பா சீனிவாஸ்தான் போனில் பேசுவார், அவரிடமும், சபரியின் தாயார் நீலவேணியிடமும் முதலில் இந்த தெய்வீகக்குழந்தையை பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சொல்லுங்கள், பின்னர் அவர்களே சபரியின் படிப்பு, பள்ளிக்கு இடையூறு இல்லாத நேரத்தில் பேசுவதற்கு ஏற்பாடு செய்வார்கள். தொடர்புக்கு: 9942146558.
- எல்.முருகராஜ்

Saturday, 8 June 2013

"புகைப்படம் எடுப்பது டானிக் சாப்பிடுவது போல''- சொல்கிறார் விவேகானந்தன்


- எல்.முருகராஜ்









அந்த பாலைவனத்தின் நடுவே ஒவியம் வரைந்தது போல ஒட்டகங்களை மனிதர்கள் நடத்திச் செல்கிறார்கள். அதனை புகைப்படமாக பலரும் பலவித கோணங்களில் எடுக்கிறார்கள். அதில் ஒருவர் தலையும், தாடியும் நரைத்த நிலையில் மூன்று கேமிராக்களை தொங்கவிட்டுக்கொண்டு ஒரு இளைஞரின் விறு,விறுப்போடும், விவேகத்தோடும் வித்தியாசமாக படம் எடுக்கிறார்.

அனைவரது படங்களும் அன்று மாலை போட்டுக் காண்பிக்கப்பட்டு விவாதிக்கப்படுகிறது. அந்த படங்களில் வித்தியாசமானதாக இருந்ததாக பலராலும் பராட்டப்பெற்ற படங்கள் அந்த பெரியவர் எடுத்ததுதான்.

புகைப்பட பிரியர்களால் விவி என்று மரியாதையுடன் அழைக்கப்படும், அனைவரையும் "காட் பிளஸ் யு' என்று வாழ்த்தக்கூடிய அந்த பெரியவரின் பெயர் பி.ஏ.விவேகானந்தன்.

‌சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர், கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த கையோடு ஸ்டேப் பாங்க் ஆப் இந்தியாவில் வேலைக்கு சேர்ந்தவர், முதல் சம்பளத்தில் வாங்கிய முதல் பொருளே கேமிராதான்.

இப்போது 72 வயதாகும் விவேகானந்தனுக்கு புகைப்படங்கள் எடுப்பது என்றால் உயிர், அதுதான் என்னை "டானிக்' போல செயல்பட்டு உற்சாகமூட்டிக் கொண்டு இருக்கிறது, சந்தோஷம் கொடுக்கிறது. கேமிராவைக் கையில் எடுத்துவிட்டால் எனது எல்லா கவலைகளையும் மறந்துவிட்டு உல்லாச பறவையாகி விடுகிறேன்.

கிட்டத்தட்ட அரை நூற்றாண்டாக எனது தோளில் தொங்கும் கேமிரா எடுக்காத படங்களே இல்லை. நான் போகாத ஊரும் இல்லை. நான் ஒரு பயணக்காதலன். விடுமுறை கிடைத்தால் போதும் கேமிராவோடு ஏதாவது ஒரு வட மாநிலத்திற்கு போய்விடுவேன்.

இதுதான் ஏரியா என்று வைத்துக் கொள்வது இல்லை, எந்த படமாக இருந்தாலும் அதை அழகாக, வித்தியாசமாக உயிரோட்டமாக வெளிக்கொணர முயற்சிப்பேன், இருந்தாலும் "டேபிள் டாப்' படங்கள் எடுப்பது என்பது எனக்கு அத்துபடியான விஷயம் என்கிறார். இவரது படங்களை நிறைய பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது.

இவரது படங்கள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிற்கு சொந்தமான முக்கிய அலுவலகங்களில் இப்போதும் நிரந்தர புகைப்பட கண்காட்சியாக அலங்கரித்துக் கொண்டு உள்ளது.

பாங்க் வேலையில் இருந்து ஒய்வு பெற்றபிறகு இப்போது இன்னும் தனது பயணத்தை விரிவுபடுத்திக் கொண்டுள்ளார், சமீபத்தில் அமெரிக்கா போய் அங்கும் நிறைய புகைப்படங்களை எடுத்துக்கொண்டு வந்திருக்கிறார்.

இவ்வளவு புகைப்படம் எடுக்கிறாரே ஆனால் இதை எப்போதுமே காசாக்க முயன்றதில்லை, இது எல்லாமே எனது தனிப்பட்ட சந்தோஷத்திற்காக மட்டுமே என்கிறார். இங்கே துவங்கி அமெரிக்கா வரை உள்ள பல புகைப்பட கழகங்களில் உறுப்பினராவார்.

இவர் தனது படங்களை, தனது கலையை, தனக்குள் முடக்கிக் கொள்ளவில்லை, புகைப்படம் கற்றுக்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு இலவசமாக பாடம் சொல்லிக் கொடுக்கிறார். புகைப்படம் தொடர்பான போட்டிகளுக்கு நீதிபதியாக சென்று வருகிறார், புகைப்பட பயிற்சி முகாமில் கலந்து கொண்டு தற்போதைய நவீனம் பற்றி பகிர்ந்து கொள்கிறார்.

பலருக்கு குருவாக இருந்தாலும் இவர் தனது குருவாக பாக்கியதுரை, சாய்நாத், வாசுதேவன் உள்ளிட்டோரை கருதுகிறார். பிர்லா குழுமத்தைச் சேர்ந்த கே.ஜி.மகேஷ்வரி, மற்றும் டி.என்.ஏ.பெருமாள், கே.பொன்னுசாமி ஆகியோர்களுடன் அமர்ந்து புகைப்பட நீதிபதியாக செயல்பட்டதையும், மதுரை புகைப்பட கருத்தரங்கில் பலர் முன்னிலையில் தினமலர் வெளியீட்டாளர் டாக்டர் ஆர்.லட்சுமிபதியால் கவுரவிக்கப்பட்டதையும் பெருமையாக கருதுகிறார்.

யாரும் எனது படத்தை உபயோகிக்ககூடாது "காப்பி ரைட்' இருக்கு என்று சொல்லும் இந்தக் காலத்தில், பிளிக்கர்.காமில், விவி1942 என்று பிரவுஸ் செய்தால் நான் எடுத்த படங்கள் அனைத்தும் வரும், எனது எந்த படங்களை வேண்டுமானாலும் யாரும் எடுத்து இலவசமாக கையாளலாம் என்று சொல்லக்கூடியவர் இவர்.
விவேகானந்தனுடன் தொடர்பு கொள்ள: 9790970221.

முக்கிய குறிப்பு: இவர் எடுத்த சில படங்களை சிவப்பு பட்டையில் உள்ள போட்டோ கேலரி பகுதியில் பார்க்கவும்.


போளி விற்கும் நிஜமனிதர் ...

போளி விற்கும் நிஜமனிதர் ...
- எல்.முருகராஜ்


சுட்டெரிக்கும் பகல் 12 மணியின் போது தஞ்சாவூர் கடைத்தெரு வழியாக, ஒரு பெரியவர் வெயிலில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள தலையில் ஒரு துண்டோ அல்லது தொப்பியோ கூட அணியாமல் சைக்கிளில் போளி வியாபாரம் செய்தபடி சென்று கொண்டிருந்தார்.

அவரைப்பார்த்த மாத்திரத்திலேயே, அவருக்கு பின்னால் ஒரு சுவராசியமான தகவல் இருக்கும் என்று தஞ்சாவூர் தினமலர் புகைப்படக்காரர் மணிகண்டனின் மனதில் பட, அதற்கான தேடலை தொடங்கினார்.

57 வருடங்களாக தெருவில் போளி வியாபாரம் செய்தே பத்து வீடு வாங்கி, தனது ஏழு பிள்ளைகளையும் திருமணம் செய்து கொடுத்த அந்த பெரியவரைப் பற்றி சுருக்கமான கதை இது.

விருதுநகரைச் சேர்ந்த பாண்டிக்கு இப்போது 76 வயதாகிறது. மூன்றாம் வகுப்பிற்கு மேல் படிப்பு ஏறவில்லை, பதிலுக்கு இவரது அப்பாவிடம் இருந்து போளி போடும் வித்தையை தனது 12 வயதிலேயே கற்றுக்கொண்டவர், தனியாகவே பிழைத்துக் கொள்ளும் நோக்குடன் விருதுநகரில் இருந்து தஞ்சாவூருக்கு குடிபெயர்ந்தார்.

சுவையாக இவர் தயார் செய்யும் போளிக்கு தஞ்சாவூர் மக்கள் நல்ல வரவேற்பு தரவே இங்கேயே தங்கிவிட்டார். 25 வயதில் செல்லபாக்கியம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மூன்று பையன்கள், நான்கு பெண்கள்.

அதிகாலையில் தயார் செய்யும் போளியை கண்ணாடி பெட்டியில் அடுக்கிக்கொண்டு தலைச் சுமையாக (சமீப நாட்களாகத்தான் சைக்கிள்) விற்பனைக்கு கிளம்பிவிடுவார். கடுமையான உழைப்பாளி ஆனால் அதே நேரம் அதிகம் ஆசைப்படாதவர். ஒரு நாளைக்கு இரண்டு தெருக்களில் இரண்டு மணி நேரம் மட்டுமே தலைச்சுமையாக விற்கும் அளவிற்குதான் போளிகள் தயார் செய்வார், அது விற்று முடித்ததும் வீட்டிற்கு திரும்பிவிடுவார். பெரிதாக ஆர்டர் கிடைத்தாலும் வேண்டாம். இதில் கிடைக்கும் வருமானமே போதும் என்று இருந்தவர், இருப்பவர்.

கிடைத்த வருமானத்தை சிறுகச் சிறுகச் சேர்த்து தான் குடியிருந்த தெருவில் இருந்த லயன் வீடுகள் என்று சொல்லப்படும் வரிசையாக அமைந்த பத்து சின்ன, சின்ன வீடுகளை ஒன்று, ஒன்றாக விலைக்கு வாங்கினார்.

தன்னுடைய பிள்ளைகளை படிக்க விரும்பினால் படிக்க வைத்தார், படிக்காத பிள்ளைகளை வியாபாரம் செய்ய வைத்தார், பெண் குழந்தைகளை திருமணம் செய்துவைத்தார். அந்த வகையில் பிள்ளைகள் அனைவரையும் நல்லபடியாக கரைசேர்ப்பதற்காக, அனைத்து வீடுகளையும் விற்றவர், தற்போது குடியிருப்பது பஞ்சசவர்ணம் காலனி,அல்லாகோயில் சந்தில் உள்ள ஐநூறு சதுரஅடியில் அமைந்த வாடகை வீட்டில்தான்.

ஒரு பிள்ளை என்ஜினியர் மற்ற பிள்ளைகள் மளிகை கடை வியாபாரம், பெண் பிள்ளைகள் நல்லபடியாக அவரவர் குடும்பத்துடன் பல்வேறு ஊர்களில் வாழ்கின்றனர், 22 பேரக்குழந்தைகள் இருக்கின்றனர். இவ்வளவு பேர் இருந்தாலும் யாரையும் சிரமப்படுத்த விரும்பாமல், எவருடைய உதவியையும் எதிர்பாராமல், திருமணமான புதிதில் எப்படி வாழ்க்கையை துவங்கினாரோ, அதே போல தற்போது இவரும் இவரது மனைவியும் மட்டும் போளி வியாபாரம் செய்து வாழ்க்கையை மகிழ்ச்சியோடு நடத்திக் கொண்டுள்ளனர்.

 இவரது குடும்பத்தில் இவரைத் தவிர யாரும் இந்த போளி வியாபாரம் பக்கம் திரும்பவில்லை, அதைப்பற்றி இவருக்கு கவலையும் இல்லை, அவரவர் வாழ்க்கை அவரவர் கையில் என்பது இவரது கொள்கை.

மழை, வெயில், காற்று என்று எதுவும் இவரது போளி வியாபாரத்தை பாதித்தது இல்லை. வாரத்தில் ஏழு நாள், வருடத்தில் 365 நாளும் இவரது போளி வியாபாரம் உண்டு. ஒரு நாளைக்கு சராசரியாக 900 ரூபாய்க்கு போளி வியாபாரம் செய்து வருகிறார். ஆரம்பத்தில் ஒரு போளி காலணாவிற்கு விற்றவர், தற்போது பத்து ரூபாய்க்கு மூன்று என்று விற்கிறார்.

தினமும் பசியோடு எதிர்படும் ஓருவருக்கு இரண்டு போளிகள் இலவசமாக கொடுப்பதையும், கர்ப்பினி பெண்கள், ஏழைக்குழந்தைகள் என்றால் விலையில் சலுகைகாட்டுவதையும் அன்றாட வழக்கமாக கொண்டுள்ளார்.

எதைப்பற்றியும் கவலை இல்லை, யாரையும் சார்ந்து இல்லை, யாருடைய உதவியையும் எதிர்பார்ப்பதும் இல்லை, தன் உழைப்பை மட்டுமே நம்பி மகிழ்வுடனும், திருப்தியுடனும் வாழும் இவரைப் போன்றவர்கள் பலருக்கு உதாரணமானவர்களே.

- எல்.முருகராஜ்

Sunday, 2 June 2013


சல்யூட் மனோகருக்கு...- எல்.முருகராஜ்













சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் திடீரென்று முளைத்திருந்தது ஒரு போர்டு. ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த அந்த போர்டில் ஒரு புறநகர் மின்சார ரயில் ஒட்டுனர் படம் இடம் பெற்றிருந்தது.

கடைசி மூச்சு வரை கடமையே கண்ணாக கருதிய தங்கள் ஊழியருக்கு, ரயில்வே நிர்வாகம் மனம் நெகிழ்ந்து அஞ்சலியையும், ராயல் சல்யூட்டையும் செலுத்துவதாக எழுதியிருந்தது.

யார் அவர், அஞ்சலிக்கான காரணம் என்ன?

தேடலை தொடங்கினோம்.

எஸ்.மனோகர்(48).

சென்னையைச் சேர்ந்தவர், 1991ம் ஆண்டு ரயில்வேயில் சேர்ந்தவர், உண்மையும், நேர்மையும் கொண்ட கடுமையான உழைப்பாளி, புறநகருக்கான மின்சார ரயில் ஒட்டுனராக நீண்ட காலம் அப்பழுக்கின்றி பணியாற்றிவருகிறார்.

சம்பவ நாளான கடந்த 23ம்தேதி பகல் 3.40க்கு கும்மிடிப்பூண்டி- சென்னை மார்க்கத்தில் ஓடும் மின்சார ரயிலை வழக்கம் போல இயக்க துவங்கினார்.

ரயில் நகரத் துவங்கியது, இவரது உடலுக்குள் என்றுமில்லாத ஒரு மாற்றம் உருவாவதை உணர்ந்தார்.
தலைசுற்றலும், மயக்கமும் துவங்கி வியர்க்கத் துவங்கியது, ஏதோ பிரச்னை என்று உணர்ந்தார், ரயிலில் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்துக் கொண்டு இருந்தனர்.

ரயில் கவரப்பேட்டை என்ற இடத்தை அப்போதுதான் கடந்திருந்தது. அடுத்த நிலையம் வருவதற்கு இன்னும் சில நிமிடங்ளாகும். சமாளித்து ரயிலை ஒட்டிவிடலாம் என்று ஒரு பக்கம் மனசு சொன்னாலும், அதிக எண்ணிக்கையிலான பயணிகளை வைத்துக்கொண்டு "ரிஸ்க்' எடுக்கவேண்டாம் என்ற தனது மனசாட்சியின் கூற்றுப்படி செயல்பட முடிவு செய்தார், அதே நேரம் மொத்த உடலும் தன் செயலை இழக்கத் துவங்கியது.

அந்த கடைசி வினாடியிலும் மனந்தளராது ரயிலை பத்திரமாக நிறுத்தி விட்டு, ரயில் பிரச்னையில் இருக்கிறது என்பதை எச்சரிக்கும் விதமாக முகப்பில் உள்ள "பிளாஷ் லைட்டை' எரியவிட்டவர், அப்படியே கண்கள் இருண்டு பொத்தென்று விழுந்துவிட்டார்.

இதைச் செய்ய அவர் ஒரு வினாடி தவறியிருந்தாலும் கட்டுப்பாடற்ற ரயில் எங்காவது மோதி மிகப் பெரிய விபத்தையும், கணக்கற்ற உயிர்களையும் பலி வாங்கியிருக்கும்.

ரயில் சம்பந்தமில்லாமல் ஒரு இடத்தில் நிற்பதையும், பிரச்னையில் இருப்பதை அறிவிக்கும் விளக்கு எரிவதையும், எதிரே வந்த மின்சார ரயிலின் ஒட்டுனர் பார்த்து விட்டு உடனே அனைவரையும் எச்சரிக்கை செய்தார்.

உடனடியாக பலரும் என்ஜினில் போய் பார்த்தபோது, அங்கே மனோகர் பேச்சு மூச்சு இல்லாமல் விழுந்து கிடப்பதை கண்டனர், உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து அவசர, அவசரமாக ஆஸ்பத்திரி கொண்டு போய் சேர்த்த போதும் எல்லாம் முடிந்திருந்தது.

ஆம்... பயணிகள் அனைவரையும் பத்திரமாக காப்பாற்றிய மனோகர் பரிதாபமாக, கடுமையான மாரடைப்பின் காரணமாக இறந்து போயிருந்தார்.

அலறியடித்து ஆஸ்பத்திரிக்கு ஒடிவந்த மனைவியால் அவரது உயிரற்ற சடலத்தைதான் பார்க்க முடிந்தது, "அடப்பாவி மனுஷா... எப்போது பார்த்தாலும் வேலை, வேலைன்னு ரயில் ஒட்டுறதே கதின்னு இருப்பியே, கடைசியில ரயில்லையே உயிரைவிட்டுட்டியேய்யா''... என்று கதறி அழுதபோது சுற்றியிருந்தவர் பலரது கண்களிலும் கண்ணீர்.

இறந்த மனோகருக்கு கொஞ்சம் கடன் பிரச்னை உண்டு, அதன் காரணமாக கூடுதல் வேலை பார்த்து (ஒவர் டைம்) கிடைக்கும் பணத்தை வைத்து கடனை அடைப்பது , வட்டி கொடுப்பது போன்ற விஷயங்களில் ஈடுபட்டுவந்தார். அதிகமான வேலைப்பளு, உடம்பை கவனிக்காமல் விட்டது என்று எல்லாமும் சேர்ந்து அவரது உயிரை அநியாயமாக பறித்துவிட்டது.

உயிர் போகப்போகிறது என்பது தெரிந்தும், தனது உயிரைவிட தன்னை நம்பி ரயிலில் பயணிக்கும் பயணிகள் உயிர் பெரிதென கடைசி வினாடியில் செயல்பட்ட மனோகருக்கு ரயில்வே நிர்வாகம் மனதார பாராட்டி, மக்கள் பார்வையில்படும்படி அஞ்சலி செலுத்த வைத்திருந்ததே அந்த போர்டு.

வெறும் போர்டு மட்டுமே அஞ்சலியாகிவிடாது, இவரது குடும்பத்தில் ஒருவருக்கு உடனடி வேலை, கடன் சுமையை துடைத்து அவரது குடும்பத்தை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதும்தான் உண்மையான அஞ்சலியாகும்.

மேலும் மனோகரின் தியாகம், உழைப்பு, வேலையில் காட்டிய விசுவாசம், பொதுமக்கள் மீது காட்டிய அக்கறை என அனைத்திற்கும் ஊரறிய நாடறிய பெருமை சேர்க்க வேண்டும்.