காளியாட்டக்கலைஞர் முத்துக்குமார்
- எல்.முருகராஜ்
தேசபக்தி, ஒருமைப்பாடு, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை வெளிப்படுத்தி வந்த கிராமியக் கலைகள் தற்போது மேற்கத்திய கலாச்சாரத்தினாலும், சினிமா மோகத்தினாலும் மங்கி வருகிறது, ஆனாலும் நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பொக்கிஷம் போன்ற கிராமிய கலைகள் முற்றிலும் மறைந்துவிடாமல் காப்பாற்றிவரும் கிராமிய கலைஞர்களில் ஒருவர்தான் சா.முத்துக்குமார்.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தற்போது திருச்சி துறையூர் பகுதியை வசிப்பவர் . காளியாட்டக்கலைஞர் முத்துக்குமார் என்றால் சின்ன பிள்ளைகூட அவரை அடையாளம் காட்டும்,
அந்த அளவிற்கு இந்த காளியாட்டக்கலையில் இருபத்தைந்து வருட அனுபவங்களைக் கொண்டுள்ள இவர் இதற்காகவே தான் பார்த்து வந்த போக்குவரத்துக்கழக வேலையையே தூக்கிப் போட்டவர்.
சிறுவயது முதலே நாட்டியத்தில் ஈடுபாடு கொண்டவர் முதலில் கவனம் செலுத்தியது பரதநாட்டியத்தில்தான், பின் ஒரு முறை காளியாட்டத்தை பார்த்தது முதலே அதில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
காளியாட்டம் என்பது இருப்பதிலேயே சிரமமான ஆட்டமாகும். எட்டு கைகள் மற்றும் உடைகள் அலங்காரங்கள், ஆபரணங்கள் என்று சுமார் பத்து கிலோ எடையை தூக்கிக் கொண்டு ஆட வேண்டும். மூன்று மணி நேரத்திற்கு முன்பாகவே மேக்கப் போட்டுக் கொள்ள ஆரம்பிக்க வேண்டும், ஆடி முடித்த பிறகு மேக்கப்பை கலைக்கவும் இரண்டு மணி நேரமாகும். கண்களுக்கு மேல் கண்மலர் என்ற கண்ணைப்போன்ற வடிவம் கொண்ட இரும்புத் தகடை பொருத்திக் கொள்வோம், இதில் உள்ள ஒரு சிறு ஓட்டையின் மூலம் கிடைக்கும் எழுபது சதவீத பார்வையை வைத்துதான் அரங்கம் முழுவதும் ஆவேசமாக நடனமாடுவோம். எவ்வளவோ பேரை மகிழ்ச்சிபடுத்த நமக்கு கிடைத்த வாய்ப்பு என்று எடுத்துக்கொள்ளும் போது எல்லாம் எளிதாகி விடுகிறது.
இந்த நடனம் என்னை பல்வேறு வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளது, கலைமாமணி விருதினை பெற்றுத் தந்துள்ளது. இப்படி பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ள காளியாட்டத்தை இன்னும் பல தலைமுறைகளுக்கு கொண்டு செல்ல விரும்புகிறேன்.
காளியாட்டக்கலைஞர் முத்துக்குமாருடன் தொடர்பு கொள்ள: 9942533228.
No comments:
Post a Comment