சிவகாசி.
வியர்வை சிந்துபவர்களுக்கு உயர்வைதரும் ஊர்.
உழைப்பு எனும் உதிரம் சிந்துபவர்களால் வீட்டிற்கு மட்டுமல்ல நாட்டிற்கே அந்நிய செலவாணி என்ற படியளக்கும் கந்தக பூமி.
மண்தான் வறட்சியானது, மக்களின் மனமோ வளமானது.
தன்னை வளர்த்து ஆளாக்கிய ஊருக்காக முடியாவிட்டாலும், யாருக்காவது நன்மை செய்யவேண்டும் என்ற துடிப்பு கொண்ட மனிதர்களை கொண்ட பூமி,
இப்படிப்பட்ட சிவகாசியை விரும்பி ஏற்றுக்கொண்ட ஒருவரது சேவையால் இன்று இந்தியாவே திரும்பி பார்க்கிறது.
அவர்தான் நாட்டிலேயே அதிக அளவு தனி நபர் கண்களை தானமாக திரட்டி தந்தவரும், தந்து வருபவருமான பட்டாஸ்நகர் அரிமா சங்கத் தலைவர், கண்தானக்குழு பட்டயத் தலைவருமான ஜெ.கணேஷ்.
இதுவரை 2200 பேரிடம் இருந்து கண்களை தானமாக பெற்றதன் மூலம் 4400 பேர் பார்வை பெறுவதற்கு காரணமாக இருந்துள்ளார். தனது இந்த சேவைக்காக டாக்டர் பட்டம் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும், பட்டங்களையும் பெற்றவர்.
ஒருவர் தனது கண்களை தானம் செய்வதாக எழுதி கொடுத்திருந்தால் கூட, இறந்த பிறகு அவரது குடும்ப உறவுகளைத் தாண்டி கண்களை தானமாக பெறுவது என்பது சென்னை போன்ற பெரு நகரங்களிலே அரிதான விஷயமாக இருக்கும் போது, சிவகாசியில் இருந்து கொண்டு இது எப்படி சாத்தியம் என்ற கேள்விக்கு வந்த உற்சாகமான ஒரு வரி பதில், நல்ல மனதோடு முயற்சித்தால் முடியாதது எதுவுமில்லை என்பதுதான்.
இன்னும் கொஞ்சம் விவரமாக என்றவுடன்...
நான் சிவகாசியில் பட்டாசு தொழில் செய்யறேன், இந்த தொழிலைத் தாண்டி ஒரு ஆத்ம திருப்தி வேண்டும் என்பதற்காக 18 வருஷத்துக்கு முன்னாடி சிவகாசி லயன்ஸ் கிளப்பில் சேர்ந்தேன். உறுப்பினரா சேர்ந்த புதுசல தையல் மிஷின் கொடுப்பது, பசங்களுக்கு பாடபுத்தகம் வழங்குவது போன்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்துட்டு ஓடிவந்துட்டு இருந்தேன்.
சங்கத்தோட தலைவர்ங்ற பொறுப்புக்கு வந்ததும், ஏதாவது உருப்படியா செய்யணும்னு தோணுச்சு. அந்த நேரம் மதுரை அரவிந்த் கண் ஆஸ்பத்திரி நிர்வாகியை பார்க்க போயிருந்தேன், அவர் கார்னியா பிளாக்குக்கு கூட்டிட்டு போனார், நாலைஞ்சு வயது குழந்தைங்கள்ல இருந்து வயசானவங்க வரை பலர் தானமா வர்ர கண்ணுக்காக காத்திட்டு இருந்தாங்க..
ஒரு நாள் இரண்டு நாள் அல்ல பல வாரங்கள், மாதங்கள், ஆண்டுகளாக காத்திருப்பவர்களும் அதில் உண்டு.
இன்றைக்கு நமக்கான கண்வந்துரும், நாளைக்கு பார்வை கிடைச்சுடும் என்ற அவர்களது ஏக்கத்தை அருகில் இருந்து பார்த்தேன். அன்று என் தூக்கத்தை தொலைத்தேன்.
எத்தனையோ பேர் தினம், தினம் இறந்து போகிறார்கள். அவர்கள் யாருமே கண்களை தானமாக தரவில்லையா, நடிகர்கள், அரசியல்வாதிகள் பிறந்த நாளின் போது நிறைய பேர் கண்களை தானமாக தருவதாக பதிவு செய்கிறார்களே, அவர்கள் யாரும் இறப்பது இல்லையா என்று மருத்துவரிடம் கேட்டபோது அதெல்லாம் "பப்ளிசிட்டிக்காக' செய்பவை, சுத்த வேஸ்ட் என்றார். எனக்கு ஆச்சர்யத்தைவிட அதிர்ச்சியே மேலோங்கியது.
இறந்தவர்களின் நெருங்கிய உறவினர்களிடம் மனமாற்றம் ஏற்பட்டால்தான் இந்த கண்தானம் என்பது நடக்கும், எங்களுக்கு கண்கள் கிடைக்கும் என்றார் இறுதியாகவும், உறுதியாகவும்.
கனத்த இதயத்துடன் சிவகாசி திரும்பியதும் இனி கண்தானங்களை பெறுவதே பிரதான வேலை என்று தீர்மானித்துக்கொண்டேன்.
கண் தானத்தை வலியுறுத்தி ஊர் முழுவதும் டிஜிட்டல் போர்டு, பேனர், பல ஆயிரம் நோட்டீஸ், ஸ்டிக்கர், பஸ் பின்புறம் விளம்பரம் என்று நிறைய செலவழித்தேன் ஆனால் ஒரு கண்கூட தானமாக வரவில்லை
வேறு மாதிரி முயற்சிப்போம்னு கண்தானத்தை வலியுறுத்தி கோயில், சர்ச், மசூதி என்று எல்லா இடங்களிலும் எனது அணியோடு போய் பேசினேன், ம்ஹீம் பிரயோசனமில்லை.
பிறகு மாணவர்களை தயார்படுத்தினேன், அவர்கள் கண்களை பத்து நிமிடம் கட்டிவிட்டு அங்கேயும், இங்கேயும் போகவிட்டு, இந்த பத்து நிமிட பார்வை இல்லாததையே நம்மால் தாங்க முடியவில்லையே, வாழ்க்கை முழுவதும் பார்வை இல்லாமல் இருப்பதை எப்படி தாங்கமுடியும், இறந்த பிறகு புதையுண்டோ, எரிக்கப்பட்ட யாருக்கும் பிரயோசனமில்லாமல் போகக்கூடிய கண்களை தானமாக கொடுத்தால் இரண்டு பேர் கண்தானமாக பெறுவார்களே என்று சொன்னதும் அந்த வார்த்தை நிறையவே பலன் தந்தது.
அவர்கள் வீட்டைச் சேர்ந்தவர்கள் இறந்ததும் அவர்களே பேசி எங்களை வரச் சொல்லி கண்களை எடுத்துக்கொள்ளச் சொன்னார்கள், அப்படிக் கிடைத்த கண்கள் பொருத்தப்பட்ட இருவர் பார்வை கிடைத்த மகிழ்ச்சியை பரவசமாக எங்களிடம் பகிர்ந்து கொண்ட போது, இதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று கண்களை தானமாக பெறுவதில் இன்னும் தீவிரமானேன்.
கண்களை தானமாக பெற்றவர்களை பேசவைப்பது, கண்களை தானமாக தந்தவர் பெயரைப் போட்டு போஸ்டர் அடித்து அவரது குடியிருப்பு பகுதி முழுவதும் நன்றியும், பாராட்டு சொல்லியும் ஒட்டுவது, கண்தானம் செய்தவரின் புகைப்படம் ஒட்டிய ஷீல்டை உள்ளூர் பிரமுகர் கையால் சம்பந்தபட்டவரின் குடும்பத்தாரிடம் கொடுத்து கவுரவிப்பது என்றெல்லாம் செய்தபின் தானமாக கண்கள் கிடைத்தது.
தானமாக கிடைக்கும் கண்கள் தாராளமாக கிடைக்க என்ன செய்வது என்று யோசித்தேன், அப்ப நீங்கதான் எனக்கு உதவ முடியும் என்று சுடுகாட்டில் இருப்பவர்கள், ஆம்புலன்ஸ் ஒட்டுபவர்கள், ஆஸ்பத்திரி எமர்ஜென்சி வார்டில் வேலை செய்பவர்கள் போன்றவர்களிடம் யாசித்தேன்.
இதன் காரணமாக ஊருக்குள் யார் இறந்தாலும் தகவல் வந்துவிடும்.
இறந்தவர்கள் வீட்டில் உள்ள மாணவர்கள் எப்படியும் பேசி வைத்திருப்பார்கள்.
இல்லாவிட்டாலும் கவலை இல்லை என்று மாலையோடு போய் மரியாதை செய்தபிறகு, உரியவர்களிடம் பக்குவமாக பேசி கண்களை தானமாக பெற்றுவிடுவோம். இறந்து போனது பெண்களாக இருந்தால் என் மனைவி பிரேமலதா தலைமையிலானவர்கள் போய் பேசி விடுவார்கள்.
நாங்களே சோகத்துல இருக்கோம், கண்ணை புடுங்க வந்துட்டான்ய்ங்க என்று கோபாவேசமாகத்தான் பேச ஆரம்பிப்பார்கள். ஆனால் அவர்களிடம் பொறுமையாக பேசி, பேசி கண்களை தானமாக பெற்றுவிடுவோம்.
இப்படி ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக கண்களை தானமாக தரும் முதல் மாவட்டம் என்ற பெயரை இவர் சார்ந்த விருதுநகர் மாவட்டம் பெற்றுள்ளது. இப்போது சிவகாசி மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி, மதுரை, தேனி, கன்னியாகுமரி, ஈரோடு, கோவை வரை பிரச்சாரத்திற்கு செல்கிறார். அங்குள்ள பள்ளி, கல்லாரி மாணவர்களிடம் மட்டும் இதற்காகவே இதுவரை 585 கருத்தரங்குகள் நடத்தியுள்ளார்.
கருத்தரங்கு என்பது கேள்வி, பதிலாக. பதிலுக்கு ஒரு பரிசாக நடக்கும், முடிவில் மாணவ, மாணவியரின் இதயத்தில் கண்தானம் குறித்து ஆழமாக பதிவு செய்வதாக இருக்கும்.
இது எனக்கு கிடைத்த வெற்றி அல்ல மக்களின் விழிப்புணர்வுக்கு கிடைத்த வெற்றி எனது அணியைச் சேர்ந்த டாக்டர் ராமன், ஒரு பைசா கூட வாங்கிக் கொள்ளாமல், இதுவரை 800 பேரின் கண்களை எடுத்து தந்துள்ளார். நள்ளிரவில் போன் வந்தால் கூட நானாச்சு என்று ஒடோடி சென்று உரிய வேலைகளை பார்க்கும் நண்பர்கள் ராமர், தனசேகரன், கணேசன், ராம்தாஸ், நர்ஸ் ராணி மற்றும் என் மனதை புரிந்து கொண்டு எனக்கு பக்கபலமாக இருக்கும் மகன் கோபி அவர்களின் ஒத்துழைப்பால் கிடைத்த வெற்றி.
ஆனாலும் இதனை வெற்றி என்று சொல்ல முடியாது காரணம் பார்வையில்லாதவர்கள் இந்த பாரத தேசத்தில் பல ஆயிரம் உள்ளனர். கண்களை தானமாக தருபவர்கள் வெறும் சில நூறு பேர்களாகவே இருக்கின்றனர், அதுவும் இப்போதுதான்.இந்த கண்தானம் என்ற இயக்கம் அனைவருக்கும் பரவி, பெருகி நாட்டில் பார்வையற்றவர்களே இல்லை என்ற நிலை வரவேண்டும், அதுவரை எனது கைகளும்,இதயமும் கண்களை தானமாக கேட்கும் இல்லையில்லை கெஞ்சும்...
இது குறித்து மேலும் விளக்கம் பெற தொடர்பு கொள்ளவும் ஜெ.கணேஷ் போன் எண்: 9843088828.
பெட்டிச் செய்தி ஒன்று...
பார்வையற்றோரே இல்லையெனும் பாரதம் படைப்போம்.
ஒருவர் கண்தானம் இருவர் வாழ்வில் பிரகாசம்.
மண்ணுக்கும், நெருப்புக்கும் கொடுப்பதை மனிதர்க்கும் கொடுப்போம்.
இறந்தும் இறவாப்புகழுடன் வாழ இருவர் வாழ்வில் ஒளியேற்ற கண்தானம் செய்வோம்.
முயற்சி செய்யுங்கள், முடியும் உங்களால்.
பெட்டிச் செய்தி இரண்டு:
* ஒருவர் இறந்த பிறகே கண்களை தானமாக வழங்கமுடியும்.
* இறந்த நான்கு மணி நேரம் முதல் ஆறு மணி நேரத்திற்குள்ளாக கண்கள் அகற்றப்பட வேண்டும்.
* போன் செய்தால் போதும் கண்தானம் பெறுவோம் நேரில் வந்து கண்களை எடுத்துச்செல்வர்.
* கண்களை எடுக்க தனி அறையோ, இடமோ தேவையில்லை.
* பத்து நிமிடத்தில் கண்கள் எடுக்கப்பட்டுவிடும்.
* கண்தானம் பெறுவோர் வரும்வரை மின்விசிறியை நிறுத்திவிட்டு கண்களின் மீது ஈரமான பஞ்சை வைக்கவும். குளிர்சாதன வசதியிருந்தால் அதனை ஒடவிடவும்
* ஆண், பெண் இருபாலர்களும் எந்த வயதினரும் கண்களை தானம் செய்யலாம்.
* மஞ்சள் காமாலை, எய்ட்ஸ், மூளைக்காய்ச்சசல், வெறிநாய்கடியால் இறந்தவர்கள் மட்டும் கண்களை தானம் செய்யமுடியாது.
* கண்தானம் செய்ய முடிவு செய்தவர்கள் உள்ளூர் கண்மருத்துவமனையை உடனடியாக தொடர்பு கொள்ளவும். சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி என்றால் 9842120908, 9442627556, 0462-2337103 போன்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment