Sunday 15 December 2013

எனக்கு ரிலாக்சே போட்டோ எடுப்பதுதான்... ஜெ.ஜெரால்டு பிரசன்னா














கோவையில் உள்ள முன்னணி பத்திரிகை நிறுவனத்தின் ஐடி இன்ஜினியர், போன் மூலம் பேசியே கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் உள்ள பிரச்னைகளை சரிபண்ணக்கூடிய ஆற்றல் மிக்கவர், பழையவர் புதியவர் என்று பார்க்காமல் "டீம்' ஒர்க்குக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இனியவர். இரவு பகல் எப்போது கூப்பிட்டாலும் பதில் தரக்கூடிய குணம் கொண்டவர். நகைச்சுவை உணர்வு கொண்டவர், இதனாலயே இவருக்கு பெரிய நட்பு வட்டம் உண்டு.

மற்றவர்களை பேச்சாலும் தனது தொழில் திறமையாலும் சந்தோஷப்படுத்தும் இவரை சந்தோஷப்படுத்துவது புகைப்படங்களே. மனது ரிலாக்ஸ் தேடும்போது இவர் தஞ்சம் அடைவது கேமிராவிடம்தான். கேமிராவை எடுத்துக் கொண்டு கிளம்பிவிடுவார் திரும்பி வரும்போது படங்களால் கேமிராவும், மனசும் நிறைந்து இருக்கும்.

கொடைக்கானலை சொந்த ஊராகக் கொண்ட இவரின் உறவினர் ஒருவர் சென்னையில் பிரபல புகைப்படக் கலைஞராக இருக்கிறார். அவர் கொடைக்கானல் வரும்போதெல்லாம் ஊரை சுற்றிப் பார்கப்போகும் போது மறக்காமல் கொண்டு செல்வது கேமிராவையும், உடன் கூட்டிச் செல்வது ஜெரால்டை.

முதல் கேமிரா:


அப்படித்தான் ஜெரால்டுக்கு கேமிராவுடன் நட்பு துளிர்த்தது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இணையதளத்தின் மூலம் கேமிரா அறிவை வளர்த்துக்கொண்டார். ஒரு டிஎஸ்எல்ஆர் கேமிரா வாங்கிய பிறகு இவரது படங்களில் வசீகரமும், தனித்தன்மையும் வந்து சேர்ந்தது.

விடுமுறை நாட்களிலும், ஊருக்கு போயிருக்கும் நாட்களிலும் இவர் ரசித்து எடுத்து படங்கள் நிறைய உண்டு. இயற்கையின் காதலரான இவர் அது தொடர்பான படங்களை எடுப்பதில் தனி ஆர்வத்துடன் செயல்படுகிறார்.

வனவிலங்குகளுக்கான வழித்தடங்களை மறித்து கட்டிடங்கள் கட்டுவதால்தான் ஊருக்குள் யானை வருவது போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனை இயற்கை ஆர்வலர்கள் பலமுறை சொல்லி வருகின்றனர். இந்த பிரச்னை யானைகளுக்கு மட்டுமல்ல எல்லா வனவிலங்குகளுக்கும் பொருந்தும். கொடைக்கானலை பொறுத்தவரை அங்குள்ள காட்டெருமைகள் அதிகம். இவைகள் உணர்வுபூர்வமானவை. மனிதர்களை பார்த்தாலே ஒதுங்கி சென்றுவிடும் குணம் கொண்டவை. பொதுவாக அமைதியான சூழலை விரும்பும் இனம் இது. ஆனால் கொடைக்கானலில் தற்போது அதிகரித்துவரும் மின்வேலிகளாலும், காம்பவுண்டு சுவர்களாலும் வழித்தடங்களை விட்டு ஊருக்குள் ஒரு குழுவாக தண்ணீரைத்தேடி வந்து செல்கிறது. இயற்கைக்கு எதிரான இந்த காட்சியை பதிவு செய்த ஜெரால்டு இதனை மும்பையில் இருந்து வெளிவரும் வனவிலங்கு தொடர்பான பத்திரிகைக்கு அனுப்பி வைக்க அவர்கள் இந்த படத்தை நடுப்பக்கத்தில் வெளியிட்டார்கள்.

மகிழ்வும் உற்சாகமும்:


மேலும் இணையதளத்தில் உள்ள புகைப்பட நண்பர்களுடன் அவ்வப்போது படங்களை பகிர்ந்து கொள்கிறார். இணையதளத்தில் வெளிவரும் புகைப்படம் தொடர்பான போட்டிகளில் பங்கேற்று உற்சாகம் பெறுகிறார்.

உண்மையில் எனது படங்கள் புத்தகங்களில் வருவதிலோ அல்லது இணையதளங்களில் வருவதிலோ பெறும் சந்தோஷத்தை விட அதை படம் எடுத்து பார்ப்பதில்தான் எனக்கு அதிக சந்தோஷம். ஒரு விஷயத்தை நான் எப்படி அணுகவேண்டும், ஆராதிக்க வேண்டும், பார்க்க வேண்டும், பாரட்ட வேண்டும் என்பதை ஒவ்வொரு படம் எடுக்கும் போது பாடமாக படிக்கிறேன். அந்த தருணங்களும் அந்த தருணங்கள் தரும் உணர்வும்தான் மகத்தானவை மகிழ்வானவை.

நான் ஒரு ஐடி இன்ஜினியர் ஆகவே அந்த தொழிலில் தெளிவாகவும், முறையாகவும் இருக்கிறேன் அது என் உணவுக்கும் கூரைக்குமானது.

போட்டோகிராபி என்பது உணர்வு, அது என் மகிழ்வுக்கும், புத்துணர்ச்சிக்கும் வழிகாட்டுவது என்று சொல்லும் ஜெரால்டிடம் பேசுவதற்கான எண்: 9894009274.

No comments:

Post a Comment