Friday 12 September 2014

மேக்ரோ போட்டோ எடுக்க போறீங்களா?- 
டாக்டர் மயில்வாகனன் சொல்வதை கேளுங்கள்.

–எல்.முருகராஜ்

டாக்டர் மயில்வாகனன்.

சேலத்தை சேர்ந்தவர், பல் சீரமைப்பு நிபுணர்.

பல் மருத்துவம் இவரது தொழில் என்றால் புகைப்படம் எடுப்பது இவரது பொழுது போக்கு.

35 ஆண்டுகளாக புகைப்படம் எடுத்துவரும் இவரின் விருப்பம் மேக்ரோ போட்டோகிராபியாகும். மேக்ரோ போட்டோகிராபி என்பது சிறிய உயிரினங்களை மிக அருகில் சென்று படம் பிடிப்பதாகும்.

இவர் எடுத்த படங்களை வைத்து சமீபத்தில் சென்னையில் உள்ள மெட்ரோஸ் போட்டோகிராபி கிளப்பில் பேசினார், மேக்ரோ போட்டோ எடுக்க விருப்பம் உள்ளவர்களுக்கு தேவையான பல உபயோகமான தகவல்களை அப்போது குறிப்பிட்டார். அதன் சுருக்கமாவது:

முன்பு இருந்ததைவிட இப்போது புகைப்படம் எடுப்பதில் இளைஞர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். என்ன விலை என்றாலும் பராவாயில்லை என்று நவீன கேமிரா மற்றும் லென்ஸ்களை வாங்கிவிடுகின்றனர். ஆனால் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயத்தை விட்டுவிடுகின்றனர்.

காட்டுக்குள் இயற்கையாக இருக்கும் எந்த உயிரினமாக இருந்தாலும் அதனை கொஞ்சம் கூட தொந்திரவு செய்யாமல் அதன் இருப்பில், இயல்பில் படமெடுக்கவேண்டும்.

ஆனால் அப்படி செய்யாமல் பூவை அழகாக எடுப்பதற்காக சுற்றியுள்ள இலைகளை எல்லாம் கிள்ளி எறியக்கூடாது. ஒருவர் ஒரு விஷயத்தை எடுத்தால் ஒட்டு மொத்தமாக எல்லோரும் அதே போல எடுப்பதற்காக குவியும் போதும் தள்ளு முள்ளுவில் ஈடுபடும் போதும் அங்கு இருக்கும் இயற்கை பாழாகிவிடுகிறது, பசுமை துவம்சமாகிவிடுகிறது.

இதே போல உயிரினங்களை அநாவசியமாக கையில் தொடுவது, கூட்டுக்குள் இருக்கும் முட்டைகளை மாற்றுவது, உயிரினங்களின் கண்களுக்கு பக்கத்தில் பிளாஷ் லைட் அடிப்பது, சிறிய ஊயிரினங்களின் மீது மயக்கமருந்து அடித்து பின் அதனை மயக்கநிலையில் எடுப்பது உள்ளிட்ட எந்த தவறுகளையும் செய்துவிடக்கூடாது.

சின்னஞ்சிறிய உயிரினங்களை படம் எடுப்பது என்று முடிவு செய்தபிறகு அந்த உயிரினங்கள் பற்றி நன்றாக தெரிந்துகொண்டு படம் எடுக்க செல்லுங்கள். நிறைய பொறுமையை கற்றுக் கொள்ளுங்கள், இது தொடர்பான கருத்தரங்குகள் மற்றும் நேர்முக பயிற்சிக்கு சில முறையாவது சென்றபிறகு தனியாக மேக்ரோ போட்டோகிராபி பண்ணலாம்.

இப்படி கூறிய டாக்டர் மயில்வாகனன் இதுவரை ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு மேக்ரோ போட்டோகிராபி குறித்து வகுப்புகள் எடுத்துள்ளார் இப்போதும் எடுத்துவருகிறார்.

இவருக்கான தொடர்பு எண்: 9443234990.














நானே எனக்கு வழியானேன்...
ரமேஷ் குமார் வழிகாட்டுகிறார்
–எல்.முருகராஜ்.

பிறந்தது முதலே நடக்கமுடியாத ஒருவர், மற்றவர் சிரமமின்றி நடப்பதற்கான காலணி கடை வைத்து நியாயமான விலையில் விற்பது மட்டுமல்லாமல் யாரையும் சார்ந்திராமல் , யாருக்கும்பாராமாக இல்லாமல் வாழ்ந்து வருகிறார்.

கோவையைச் சேர்ந்த அவர் பெயர் ரமேஷ் குமார், வயது 34.வெங்கடாசலம், பழனியம்மாள் தம்பதியினரின் பிறந்த செல்ல மகன்.

பிறவியிலேயே இவருக்கு காலில் குறைபாடு உண்டு. ஆனால் அந்த குறை தெரியாதபடி பாசம் காட்டி வளர்த்தனர்.

படிக்கப்போன இடத்தில் கேலி கிண்டல் எழவே பள்ளிக்கூடம் போவதை விட்டு விட்டார், பரவாயில்லை என்று குடும்பத்தில் உள்ளவர்களே பாடம் எடுத்தனர். இதனால் தமிழ், கணிதம் ஆகியவை நன்றாக வரும்.

மகிழ்ச்சியாக சென்று கொண்டு இருந்த ரமேஷின் வாழ்க்கையில் முதல் இடி இறங்கியது, இவரது தாயும், தந்தையும் அடுத்தடுத்து இறந்த போதுதான்.

தாயும், தந்தையும் திடீரென இறந்துவிட, முதல் முறையாக தனிமைப்படுத்தப்பட்டார், முதல் முறையாக தவித்துப்போனார், முதல் முறையாக எதிர்காலத்தை எண்ணி மிரண்டு போனார்.
கலங்கி நின்ற இவரை மகேந்தினின் ஈரநெஞ்சம் அமைப்பினர் ஒரு காப்பகத்தில் சேர்த்து விட்டனர்.

காப்பகத்தில் தான் யாருக்கும் பிரயோசனமில்லாமல் இருப்பதும், இலவசமாக உணவு வாங்கி சாப்பிடுவதும் இவருக்கு நெருடலாகவே இருந்தது, நாம் இவர்களுக்கு பாராமாக இருக்கிறோமோ என்ற உணர்வு அடிக்கடி ஏற்பட ஏதாவது சொந்தமாக தொழில் செய்து பிழைக்க வேண்டும் என்று எண்ணினார்.

தந்தை தந்துவிட்டு போன பணத்தையும், உறவினர்கள் மற்றும் ஈர நெஞ்சம் அமைப்பு போன்றவர்கள் கொடுத்து உதவிய நன்கொடைகளையும் கொண்டு கோவை சாய்பாபா காலனி, செந்தில் நகர், கல்பனா திருமண மண்டபம் அருகே ஒரு செருப்பு கடையை துவக்கிவிட்டார். மறைந்த தாயார் பழனியம்மாள் என்றால் இவருக்கு உயிர் ஆகவே அவரது பெயரின் முதல் எழுத்தையும், இவரது பெயரின் முதல் எழுத்தையும் இணைத்து கடைக்கு பிஆர் டிரேடர்ஸ் என்று வைத்துவிட்டார்.

இவருக்கு அதுவரை செருப்பு வியாபாரம் பற்றியும் தெரியாது. ஆனாலும் துணிந்து உழைப்போம், இதைவைத்து பிழைப்போம் என்ற இவரது முயற்சிக்கு இப்போது நல்ல பலன் கிடைத்துள்ளது.

தன்னை கௌரவமாக காப்பாற்றி கொள்வதற்கு ஏற்றவாறு வருமானம் வருகிறது. இன்னும் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் ஊனமுற்ற இவர் கடையில் ஒரு உதவியாளரை வேலைக்கு நியமிக்கலாம் என்ற நிலை வந்தபோது தன்னைப்போலவே ஆதரவில்லாத கருணை இல்லத்து நண்பரையே வேலைக்கு வைத்துள்ளார்.

வாரத்தின் ஏழு நாளும் கடை உண்டு காலை ஏழு மணிக்கு கடைக்கு வந்தால் இரவு 9 மணி வரை கடையில்தான் இருப்பார். இவரது நேர்மையான வியாபாரம் பலருக்கு பிடித்து போனதால் இப்போது நிறைய வாடிக்கையாளர்கள் வருகின்றனர்.

வருகிறவர்கள் ஷூ மற்றும் கொஞ்சம் காஸ்ட்லியான பிராண்டில் காலணிகள் கேட்டால் கொடுக்கமுடியாத சூழ்நிலையில் உள்ளார். பாங்க் உதவி கிடைத்தால் தொழிலையும்,கடையையும் விரிவு பண்ணி வியாபாரத்தை பெருக்க வேண்டும்.

வரும் வருமானத்தை கொண்டு நிறைய தொண்டு செய்யவேண்டும் என்று எண்ணியுள்ளார். இவரது எண்ணம் ஈடேற வாழ்த்துவோம்.

இவரது தொடர்பு எண்: 9944871680.

Tuesday 2 September 2014

மரங்களின் சகோதரி திம்மக்கா–13/11/2011
–எல்.முருகராஜ்



கர்நாடகா மாநிலம் பெங்களுரூவில் இருந்து தும்கூர் போகும் வழியில் 25 வது கிலோமீட்டரில் வருகிறது கூதூர் கிராமம்.
அதுவரை வறண்டு வெப்பமாகக் காணப்பட்ட பூமி குளிர்ந்து காணப்படுகிறது, அதற்கு காரணமான ஆயிரத்திற்கும் அதிகமான ஆலமரங்கள் அழகு காட்டி சாலையின் இருபக்கங்களிலும் இருந்து காற்றை வீசி வரவேற்கிறது. மரங்களில் உள்ள பல்வேறுவித பறவைகள் தங்கள் மொழியால் கீதம் பாடி வரவேற்கின்றன, மொத்தத்தில் மரங்கள் அடர்ந்த அந்த திடீர் சோலைவனம் மனதை சிக்கென பறிக்கிறது.
எங்கும் இல்லாத அளவிற்கு, எங்கு இருந்து வந்தன இத்தனை ஆலமரங்கள், யார் கொண்டுவந்தது நட்டது, அதைவிட யார் இவ்வளவு சிரத்தை எடுத்து பராமரித்தது என்ற பல கேள்விக்கு எல்லாம் விடைதான் , எழுதப்படிக்கத்தெரியாத திம்மக்கா.
யார் இந்த திம்மக்கா என்பதை அறிய சில வருடங்கள் பின்னோக்கி பயணிக்கவேண்டும்
சாதாரண கிராமத்து ஏழைப்பெண்ணான திம்மக்கா வாக்கப்பட்ட கிராமம்தான் கூதூர்.
சிக்கண்ணா என்ற விவசாய தொழிலாளியின் வாழ்க்கைத் துணையான திம்மக்காவிற்கு குழந்தை பாக்கியம் இல்லாது போனது, இதை காரணமாக்காட்டி உற்றமும், சுற்றமும் கொட்டிய வார்த்தைகளால் திம்மக்கா ரொம்பவே காயப்பட்டுவிட்டார். இரவுகளை தூக்கம் இல்லாமலும், பகல்களை உணவு இல்லாமலும் கழித்தார். ஆனாலும் எதுவும் ஆறுதலாக இல்லை மேலும், மேலும் துக்கம் துரத்திட, இப்படியே பத்து வருடங்கள் ஒடிப்போனது. இப்போது 80 வயதாகும் திம்மக்காவிற்கு அப்போது வயது 28.
பெற்று வளர்த்தால்தான் பிள்ளைகளா, உயிரும்,உணர்வும் உள்ள மரங்கள் பிள்ளைகள் இல்லையா, பெற்ற பிள்ளை கூட தாயை மட்டும்தான் கவனிக்கும், ஆனால் பெறாத பிள்ளைகளான மரங்கள், சுயநலமின்றி ஊரையே கவனித்துக்கொள்ளுமே என்றெல்லாம் யோசித்த திம்மக்கா மரம் நடுவது அதுவும் ஆலமரங்களை தொடர்ச்சியாக நடுவது என்று முடிவெடுத்தார்.
இவ்வளவு யோசித்த திம்மக்கா அந்த ஊரின் தண்ணீர் பஞ்சத்தை பற்றி யோசிக்க மறந்துவிட்டார், ஆனாலும் முன்வைத்து காலை பின்வைக்கப்போவது இல்லை என்ற முடிவுடன் நாலு கிலோமீட்டர் தூரம் நடந்துசென்று தண்ணீர் கொண்டுவந்து ஆலமரங்களுக்கு தண்ணீர் விட்டார்.
ஆரம்பத்தில் இது என்ன பைத்தியக்காரத்தனம் என்று கேலி செய்த கணவர் சிக்கண்ணா கூட ஆலமரசெடி இலைகளும், தலைகளும் விட்டு உருவாகி வருவதைப் பார்த்து தானும் திம்மக்காவிற்கு உதவலானார்.
வயல்காட்டில் வேலை செய்த நேரம் போக எப்போதும் ஆலமரம் நடுவது, நட்ட மரங்களை பேணி பாதுகாத்து வளர்ப்பது, வளர்ந்த மரங்களிடம் அன்பும், பாசமுமாகப் பேசுவது என்று மரங்களை தனது குழந்தைகளுக்கும் மேலாக வளர்த்தார்.
மரங்களை வளர்ப்பதற்காக ஊரில் நிறைய குட்டைகளை உருவாக்கினார், அதில் மழைக்காலத்தில் பெய்யும் தண்ணீரை தேக்கிவைத்து வெய்யில் காலத்தில் மரங்களுக்கு ஊற்றி பயன்படுத்தினார்.
அப்படியும் தண்ணீர் பற்றாமல் போகும்போது சிரமம் பாரமால் தலையிலும், இடுப்பிலும் குடங்களை சுமந்துகொண்டு தண்ணீர் சேகரிக்க புறப்பட்டு விடுவார். ஒரு சமயம் நாலுகிலோ மீட்டர் தூரம் போய் தண்ணீர் கொண்டுவந்தவர், மரங்களுக்கு அருகில் வரும்போது கால் தடுக்கி முள்ளில் விழுந்துவிட்டார். கை,கால்களில் ரத்தம். ஒ...வென்று அழுகை.பதறி ஒடிவந்த சிக்கண்ணா,‘ என்னம்மா ரொம்ப வலிக்குதா’ என்று கேட்டபோது, ‘வலிக்காக அழலீங்க...கொண்டுவந்த தண்ணீர் கொட்டிப் போச்சுங்க...அதான் அழறேன்’ என்று கூறியிருக்கிறார்.
இப்படியாக திம்மக்கா மரம் வளர்க்க ஆரம்பித்து 50 ஆண்டுகளுக்கு மேலாகிறது. திம்மக்காவின் பேச்சுப்படி சொல்லப்போனால் அவரது மூத்த பிள்ளைக்கு இப்போது வயது 52 ஆகிறது. விளையாட்டுப்போல வளர்த்த மரங்கள் இன்று கூதூர் மக்களை குளு, குளு என வைத்தபடி திகு, திகுவென வளர்ந்து நாட்டிற்கு பயன்தரும் வகையில் வளர்ந்து நிற்கின்றது.
சுற்றுச்சுழலின் நண்பர் என்ற உயரிய விருதினை அமெரிக்கா அளித்து கவுரவித்தது வரை திம்மக்கா வாங்கியிருக்கும் விருதுகள் பலப்பல.
இன்றைய தேதிக்கு திம்மக்கா வளர்த்துள்ள மரங்களின் மதிப்பு பல கோடி ரூபாயாகும். அத்தனையும் இப்போது அரசாங்கத்தின் சொத்து.பதிலுக்கு அரசாங்கம் திம்மக்காவிற்கு மாதம் 500 ரூபாய் முதியோர் உதவித் தொகையும், வசிப்பதற்கு பெங்களுரூவில் ஒரு வீடும் வழங்கியது.
என் எசமான் (சிக்கண்ணா) இறந்த பிறகு, என் பிள்ளைகள்தான் (மரங்கள்) என் உலகம். இவைளை விட்டு நான் எங்கேயும் வரலை என்று சொல்லிவிட்டு பெங்களுரூ வீட்டை திருப்பிக் கொடுத்து விட்ட திம்மக்கா கூதூரிலேயே 500 ரூபாய் ஒய்வு ஊதியத்தில் தன் ‘பிள்ளைகளுடன் ’வாழ்ந்து வருகிறார். வீட்டில் இருக்கும் நேரத்தைவிட மரங்களுடன் செலவழிக்கும் நேரமே அதிகம்.
எண்பது வயதைத் தாண்டிவிட்ட திம்மக்கா தொடர்ந்து தொலைதூரம் சென்று தண்ணீர் சுமந்துவர முடியாத சூழ்நிலையில், புதிதாக மரமேதும் வளர்க்கவில்லை, ஏற்கனவே வைத்து, வளர்த்த மரங்களை மட்டும் பாதுகாத்து வருகிறார். வளர்ந்த மரங்களும் திம்மக்கா தங்கள் பக்கம்வரும்போது குளிர்ந்த காற்றை வீசியபடியும், ‘அம்மா எங்கள விட்டு எங்கேயும் போயிடாதீங்கம்மா’பேசியபடியும் காணப்படுகின்றன. 

-எல்.முருகராஜ். 
நான் வாழணும்,வாழ்ந்தே ஆகணும்...
- வானவன் மாதேவி
 
- எல்.முருகராஜ்




சென்னையில் மத்திய அரசு அலுவலகம் ஒன்றின் உயரதிகாரியாக இருப்பவர் கீதா இளங்கோவன். 'மாதவிடாய்' என்ற குறும்படத்தை எடுத்து பலரது மனதில் உயர்ந்த இடத்தை பிடித்தவர்.

இவரது வாழ்க்கையும்,வார்த்தையும், எழுத்தும், எண்ணமும் எப்போதும் ஏழை, எளிய பெண்களின் முன்னேற்றம் குறித்தே இருக்கும்.

சமீபத்தில் இவரை சந்தித்து 'மாதவிடாய்' படத்திற்கு கிடைத்த விருது குறித்து பாராட்டிய போது நான் ஒண்ணுமே செய்யலீங்க, சேலத்தில் தசைச்சிதைவு என்ற உயிர்கொல்லி நோயுடன் போராடிக்கொண்டே வானவன் மாதேவி என்ற பெண் செய்துவரும் சேவைகளுக்கு முன் நானெல்லாம் மிகச்சாதாரணம் ஆகவே அவரைப்பற்றிய ஒரு பதிவு போடுங்கள் என்றார்.

வானவன் மாதேவியைப்பற்றி சொல்வதற்கு முன் தசைச்சிதைவு நோய் பற்றி தெரியாதவர்களுக்கு ஒரு சில வார்த்தை 'மஸ்குலர் டிஸ்ட்ரோபி' என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த தசைச்சிதைவு நோய் யாருக்கும் எந்த வயதிலும் வரலாம்.

எல்லா மனிதர்களுக்கும் உடலில் உள்ள செல்கள் அழிந்து புதிய செல்கள் உருவாகும். ஆனால், தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பழைய செல்கள் அழியும். புதிய செல்கள் உருவாகாது. அதன் காரணமாக உடலில் உள்ள தசைகள், மெள்ள மெள்ளத் தனது செயல்பாட்டை இழக்கத் தொடங்கும். அதாவது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழக்கத் துவங்கி அவர்கள் உடல் முடங்கிவிடும், முடிவில் ஒரு நாள் இதயமும் செயல் இழந்து விடும்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டுவிட்டார்கள் என்று தெரிந்ததும், இதற்கு மருந்து கிடையாது அதிக பட்சம் பத்து வருடங்கள் வாழலாம். ஆனால் அந்த வாழ்க்கையே பெரும் சுமையாகவும் வலியாகவும் போராட்டமாகவும் இருக்கும் என்று சொல்லி நிஜம் சொல்கிறோம் என்ற பெயரில் அவர்களை பாதி நடைப்பிணமாக்கி வருகின்றன மருத்துவமனைகள்.

சேலத்தை சேர்ந்த வெகு சாதாரண குடும்பத்தில் பிறந்த வானவன் மாதேவிக்கு பள்ளிக்கு போகும் போது நடப்பதில், படிஏறுவதில் சிரமம் ஏற்பட்டது. மருத்துவர்களிடம் சென்ற போது வானவன் மாதேவிக்கு தசைச்சிதைவு நோய் என்று சொல்லிவிட்டனர்.

கொஞ்சம் கொஞ்சமாக தசைச்சிதைவு நோய்க்கு தன்னை தின்னக்கொடுத்ததன் காரணமாக மழையில் நனைந்த கோழிக்குஞ்சு போலானது உடம்பு, விடாமல் படிக்க நினைத்தாலும் உடல் ஒத்துழைக்காததால் டிப்ளமோவோடு நிறுத்திக்கொண்டார்.

"என்னால் எதையும் தன்னிச்சையாக செய்ய முடியாது, என்னை ஒருவர் தூக்கி உட்கார வைக்க வேண்டும், நடக்க முடியாது. நடந்தால் விழுந்து விடுவேன். விழுந்தால் எழ முடியாது, டாய்லெட் போவதற்கு ஒருவர் துணை வேண்டும்.போன் பேச வேண்டும் என்றால் கூட யாராவது காதருகே போனை வைக்க வேண்டும். பேசிக் கொண்டிருக்கும் போது கழுத்து சாய்ந்து பின்பக்கமாக போய்விடும், உடம்பு என்னுடையதுதான் ஆனால் அதன் கட்டுபாடு என்னுடையதல்ல", நோயின் தாக்கம் குறித்து சிரித்துக்கொண்டே விவரிக்கிறார்.

ஆனால் இதெல்லாவற்றையும் விட எனக்கு வலியை தந்தது இந்த நோய் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் நிறைய சின்ன சின்ன குழந்தைகள் எல்லாம் இதன் பாதிப்பிற்கு உள்ளாகிவருவதுதான்.

இரண்டாவதாக இவர்களை பார்க்க முடியாமல் பராமரிக்க முடியாமல் ஏழை எளிய பெற்றோர்கள் படும் வேதனை

இந்த இரண்டிற்கு யாராவது தீர்வு காண்பார்களா என்று தேடுவதைவிட நாமே ஏன் தீர்வு காணக்கூடாது என்று முடிவு செய்து களத்தில் இறங்கினேன்.

நீண்ட வலியான பயணத்தின் நிறைவாக நண்பர்கள் நல்ல இதயம் உள்ளவர்கள் ஆதரவுடன் சேலத்தில் 'ஆதவ் அறக்கட்டளை' துவங்கினேன்.அதன் சார்பாக தசைசிதைவு நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கான இல்லம் நடத்திவருகிறேன்.இங்கு அவர்களுக்கு மருந்து மாத்திரைகளை விட அன்பும் ஆதரவும் தரப்படுகிறது, ஒத்த கருத்தோடு கூடியவர்களுடன் அவர்களால் பேசமுடிகிறது, தொலைந்து போன சிரிப்பை தேடிக்கண்டுபிடித்து தரமுடிகிறது , எப்போது சாவோம் என்ற மனநிலையில் இருந்து இன்னும் கொஞ்ச நாள்தான் வாழ்வோமே என்று நம்பிக்கை கீற்று வெளிப்படுகிறது.

ஆரம்பத்திலேயே இந்த நோய் பற்றி தெரிந்து கொண்டால் சிகிச்சை எளிது என்பதால் ஊர் ஊராக போய் மருத்துவ முகாம் நடத்திவருகிறேன்.உங்களால் பார்க்க முடியாத பராமரிக்க முடியாதவர்களை என்னிடம் அனுப்புங்கள் என்று வரவழைத்து பார்த்து வருகிறேன்.

இந்த ஆதரவு இல்லத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டும் வெறும் மருத்துவமனையாக இல்லாமல் ஆராய்ச்சி மருத்துவமனையாக மாற்றவேண்டும். இந்த தசைச்சிதைவு நோய் வராமல் தடுக்கப்பட வேண்டும், வந்தவர்களை முற்றாக குணப்படுத்த வேண்டும்.

எனக்கு டாக்டர்கள் கொடுத்த கெடுவை தாண்டி பத்து வருடமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். கிட்டத்தட்ட என் உடலின் எல்லா தசைகளுமே தன் செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டுவிட்டது என்றே சொல்லலாம், எப்போது வேண்டுமானாலும் இதயம் அதன் செயல்பாடை நிறுத்திக்கொள்ளலாம். ஆனால் அப்படி நிகழ்ந்துவிடக்கூடாது, தான் வாழணும் இந்த தசைசிதைவு நோய்க்கு ஒரு முடிவு காணும்வரை வாழ்ந்தே ஆகணும் என்ற உறுதி கொண்டுள்ள வானவன் மாதேவியின் தொடர்பு எண் : 99763 99403.

( போனை எடுத்து, அருகில் இருந்து பொறுமையாக பிடித்துக்கொள்ள ஆள் இல்லாத போது வானவன் மாதேவிக்கு உங்களுடன் பேசுவதில் சிறிது இடையூறு ஏற்படலாம், பொறுமை காத்துக் கொள்ளுங்கள் நன்றி)

நன்றி:தினமலர்.காம்/நிஜக்கதை
http://www.dinamalar.com/news_detail.asp?id=1058971
 — with Vanavan Madevi.