Sunday 26 May 2013


முதல் தமிழ் தற்கொலைப் போராளி குயிலி..!
- எல்.முருகராஜ்


பதிவு செய்த நாள் : மே 26,2013,16:36 IST
இலட்சியத்திற்கான பயணத்தில் எதிரிகளை வீழ்த்துவதற்காகவோ, அல்லது சுரணையற்ற சமூகத்தில் ஒரு எழுச்சியை ஏற்படுத்துவதற்காகவோ, ஒருவர் தம் உயிரையே அர்ப்பணிப்பாரெனில் அவரைத் தற்கொலைப்படைப் போராளி என்கிறோம்.

தற்கொலைப் போராளிகளின் தொடக்கம் இரண்டாம் உலகப் போரில்தான் என்கிறது எழுதப்பட்ட வரலாறு. ஜெர்மனிக்கும், ஜப்பானுக்கும் இடையே நீர்மூழ்கிக் கப்பலில் நடைபெற்ற யுத்தத்தில் ஜப்பானிய வீரர்களின் தற்கொலைப் போராட்டமே இதற்கான தொடக்கமாகக் கருதப்படுகிறது.

ஆனால் இரண்டாம் உலகப்போர் நடைபெறுவதற்கு 150 ஆண்டுகளுக்கு முன்னரே, பிரிட்டிஷாரை எதிர்த்துத் தமிழ் மண்ணில் நடைபெற்ற போர்க்களத்தில்தான் முதன்முதலாக 'தற்கொலைப் போராளி' உருவானார் என்பது நாம் அறியாதது.

அந்த போராளி வீரமங்கை யின் பெயர்தான் குயிலி.

1776ம் ஆண்டு

வேலுநாச்சியார், வெள்ளையர் எதிர்ப்பில் தம் கணவர், சிவகங்கைச் சீமையின் மன்னர் முத்து வடுகநாதரைப் பறிகொடுத்து, எட்டாண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த காலம். அப்போது வேலுநாச்சியார் விருப்பாட்சி என்ற ஊரில் தங்கியிருந்தார்.

குயிலி. அதுதான் அவள் பெயர்.

வயது பதினெட்டு. பிறந்த மண்ணையும், வீரத்தாய் வேலு நாச்சியாரையும் உயிரென மதிப்பவள்.

வேலுநாச்சியாரின் சிலம்பு வாத்தியார் வெற்றிவேல்..ஒருநாள். குயிலியிடம் வந்தார்,

"குயிலி! எனக்கொரு உதவி செய்வாயா?"

"சொல்லுங்கள் ஐயா!''

"நீ உன் ஊரான பாசாங்கரைக்கு செல்லும்போது இந்தக் கடிதத்தை, சிவகங்கை அரண்மனைக்கருகில் இருக்கும் வீட்டில், மல்லாரிராயன் என்பவனிடம் சேர்ப்பிக்க வேண்டும். சேர்த்து விடுவாயா...?''

"சரி.'' என்றபடி, குயிலி வாங்கிக் கொண்டாள்.

அன்றிரவு.

குயிலி. குத்தீட்டியைக் கையில் எடுத்துக்கொண்டு சிலம்பு வாத்தியாரின் இருப்பிடம் விரைந்தார். அடுத்த நிமிடம் சிலம்பு வாத்தியாரின் குடிசையிலிருந்து அலறல் சத்தம். இரத்த வெள்ளத்தில் மிதந்துகிடந்த சிலம்புவாத்தியாரின் உடலையும் அருகே ஒரு கையில் குத்தீட்டியோடும் மறு கையில் சிலம்பு வாத்தியாரின் கடிதத்தோடும் கண்கள் சிவக்க தலைவிரி கோலமாக நின்ற குயிலியையும் வேலு நாச்சியார் உள்ளிட்ட அனைவரும் கண்டார்கள்.

குயிலி ஓடிவந்து அவர் காலில் விழுந்து கதறியழுதாள். கடிதத்தை நீட்டினாள். கடிதத்தை வாங்கிப் படித்த வேலுநாச்சியாரின் முகம் உணர்ச்சியில் துடித்தது. கடிதத்தில், வெற்றிவேல் வாத்தியார் மல்லாரிராயன் என்பவனுக்கு வேலு நாச்சியார் குறித்த சில விஷயங்களை எழுதியிருந்தார்.

நம்பிக்கைக்குரியவராக இருந்த சிலம்பு வாத்தியார் தன் காலைச் சுற்றியிருந்த நச்சுப்பாம்பு என அறிந்து வேலுநாச்சியார் அதிர்ச்சியுற்றார். தன் மீதும் நாட்டின் மீதும் கொண்ட பற்றின் காரணமாக ஒரு பெண் துணிச்சலாக மேற்கொண்ட செயலைக் கண்டு அகமகிழ்ந்தார். கூட்டத்தில் பத்தோடு பதினொன்றாகப் பார்க்கப்பட்ட குயிலி அன்றிலிருந்து இராணி வேலுநாச்சியாரின் மெய்க் காப்பாளரானார்.

குயிலி தாழ்த்தப்பட்ட அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவள். இதைக் காரணம் காட்டி ஒரு கும்பல், குயிலியின் மேல் துவேஷத்தை வளர்க்க முனைந்தது. வேலு நாச்சியாரோ குயிலிக்கு தம் ஆதரவுக் கரத்தை இரும்பு அரணாக வைத்து காத்து வந்தார்.

ஒருநாள். நள்ளிரவு.

வேலு நாச்சியார் மஞ்சத்தில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். குயிலி தூக்கம் வராமல் அங்குமிங்கும் நடைபயின்று கொண்டிருந்தாள். வெளியே காலடிச் சத்தம் கேட்டு உஷாரானாள். மறைந்து நின்று கொண்டாள். 

ஒரு உருவம் சாளரத்தின் வழியே குதித்து இறங்கியது. அங்குமிங்கும் பார்த்தபடி வேலுநாச்சியாரின் மஞ்சத்தினருகே மெதுவாகப் போனது. கையை ஓங்கி, கத்தியால் வேலு நாச்சியாரை குத்த முனைய மறைந்திருந்த குயிலி ஓடி வந்து தன் கைகளால் அந்தக் கத்தியை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள். அந்த உருவம் திமிற, கத்தியில் வெட்டுப்பட்ட குயிலியின் கரங்களில் ரத்தம் ஆறாக ஓடியது. சத்தம் கேட்டு வேலு நாச்சியார் எழுந்து கொண்டார். அந்தக் கயவன் சடாரெனத் துள்ளி, சாளரத்தின் வழியே குதித்து ஓடிப் போனான். மயங்கிச்சரிய இருந்த குயிலியை தாங்கிப் பிடித்துக் கொண்டார் வேலுநாச்சியார்.

அன்று முதல் குயிலி, வேலுநாச்சியாரின் நெஞ்சில் பன்மடங்கு உயர்ந்தார். மெய்க்காப்பாளராக விளங்கிய குயிலி பெண்கள் படைக்குத் தளபதியாக்கப்பட்டார்.

நாட்கள் கடந்தன. 8 ஆண்டுகளுக்குப் பிறகு போருக்குத் தேவையான தளவாடங்கள் வந்து சேர்ந்தன. பன்னிரண்டு பீரங்கி வண்டிகள், நூற்றுக் கணக்கான துப்பாக்கிகள் திப்பு சுல்தானால் வேலு நாச்சியாரிடம் ஒப்படைக்கப்பட்டன. 1780ம் ஆண்டு ஐப்பசி மாதம் 5ம் நாள் விருப்பாச்சி பாளையத்திலிருந்து சிவகங்கையை நோக்கி வேலு நாச்சியாரின் படை புறப்பட்டது. உடையாள் பெண்கள் படைக்குத் தலைமையேற்று குயிலி கம்பீரமாக வந்து கொண்டிருந்தார்.

முத்துவடுகநாதரின் படுகொலையில் பெரும்பங்கு வகித்த மல்லாரி ராயன், முதலாவதாக வேலுநாச்சியாரின் படையை மதுரை கோச்சடையில் எதிர்த்து நின்றான். ஒரு மணிநேரப் போரிலேயே மல்லாரி ராயன் குத்திக் கொலை செய்யப்பட்டான். ஆங்கிலத் தளபதி ஜோசப் சுமித் காளையார் கோவிலில் வேலுநாச்சியாரின் படையை எதிர்கொண்டான். அங்கும் தமிழர் படை வெற்றிக்கொடி நாட்டியது. ஆங்கிலப் படைகள் புறமுதுகிட்டு ஓடின.
வேலுநாச்சியாரின் படைகள் சிவகங்கைச் சீமையில் வெற்றி முழக்கத்துடன் நுழைந்தன. ஆனால் அங்குதான் யாரும் எதிர்பாராத ஆபத்து காத்துக்கொண்டிருந்தது.

தனது நயவஞ்சகத்தால் மறைந்திருந்து வேலு நாச்சியாரின் கணவரது உயிரைப் பறித்த கொடுங்கோலன் ஆங்கிலத் தளபதி பாஞ்சோர் காளையார் கோவிலிலிருந்து சிவகங்கை அரண்மனை வரையிலும் அடிக்கு ஒரு போர் வீரனை நிறுத்தி யிருந்தான். அனைவரது கைகளும் துப்பாக்கி ஏந்தி யிருந்தன. பீரங்கிகளும் அரண்மனையைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்தன. ஆயிரக் கணக்கான துப்பாக்கிகளும் வெடிபொருட்களும் அரண்மனைக் கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.

என்னதான் வீரமறவர்கள் வேலுநாச்சியாரின் படையில் இடம்பெற்றிருந்தாலும் ஆங்கிலேயரின் நவீன ஆயுதங்கள் மிகப்பெரிய சவாலாக இருந்தன. விருப்பாச்சியிலிருந்து தொடர் வெற்றிகளைக் குவித்து வந்த வேலுநாச்சியாருக்கு இறுதிப் போரில் தோற்றுவிட்டால் என்ன ஆவது என நினைப்பதற்கே அச்சமாக இருந்தது. இருப்பினும் நம்பிக்கையைக் கைவிடவில்லை.

அந்த நேரம் அங்கே ஒரு தள்ளாத கிழவி ஒருத்தி வந்து கொண்டிருந்தாள்.

சபையின் நடுவே தடுமாறி நடந்து வந்த அவள், வேலுநாச்சியாரை வணங்கிவிட்டு, பேசத் தொடங்கினாள்.
"தளவாய் பெரிய மருது அவர்களே, இப்போது நவராத்திரி விழா நடந்து வருகிறது. நாளை மறுநாள் விஜயதசமி. அன்று சிவகங்கைக் கோட்டையில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் கொலு வைக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்காக அன்று ஒருநாள் காலை மட்டும் மக்களுக்கு, அதுவும் பெண்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதைப் பயன்படுத்தி ராணியாரின் தலைமையில் பெண்கள் படை உள்ளே கோட்டைக்குள் புகுந்துவிடும். பிறகு என்ன? வெற்றி, நமது பக்கம்தான்.''

அவள் மூச்சுவிடாமல் சொல்ல, அத்தனை பேரின் கண்களும் வியப்பில் விரிந்தன.

பெரிய மருதுவின் சந்தேகப் பார்வையைக் கண்டதும் அந்தப் பெண் கடகடவென நகைத்தாள். "பேராண்டி பெரிய மருது, இப்போது என்னைத் தெரிகிறதா?'' என்றபடியே மெல்ல தனது தலையில் கை வைத்து வெள்ளை முடியை விலக்கினாள். அந்த முடி, கையோடு வந்தது. குயிலி புன்னகை மின்ன நின்றிருந்தாள்.

ஆம், சிவகங்கைக் கோட்டையை உளவு பார்க்க ராணியின் உயிர்த்தோழி குயிலி மாறுவேடத்தில் சென்றாள் என்ற உண்மை வெளிச்சமிட்டு நின்றது.

"என்ன பெரிய மருது, உங்கள் சந்தேகம் தீர்ந்ததா? நாளை மறுநாள் நமது படைகள் போர்முரசு கொட்டட்டும், இந்த முறை ஒலிக்கும் முரசு, வெள்ளையரின் அடிமை விலங்கை ஒடித்து, விடுதலை வெளிச்சத்தைக் கொண்டுவரும் முரசாக ஒலிக்கட்டும்!'' ஆணையிட்டுவிட்டு சென்றார் வேலுநாச்சியார்.

ராணி குறித்தது போல படைகள் இரண்டு பிரிவாகப் பிரிந்து, முரசறைந்து போர் முழக்கமிட்டுப் புறப்பட, ராணி வேலுநாச்சியாரின் தலைமையில் பெண்கள்படை சிவகங்கை நகருக்குள் புகுந்தது. அம்மனுக்கு சாத்தி வழிபட அவர்கள் கையில் பூமாலைகளோடு அணிவகுத்தனர்.

பூமாலைக்குள் கத்தியும், வளரியும் பதுங்கி இருந்தது பரங்கியருக்குத் தெரியாது. வேலுநாச்சியாரும் தனது ஆபரணங்களை எல்லாம் களைந்துவிட்டு சாதாரணப் பெண்போல மாறுவேடத்தில் கோயிலுக்குள் புகுந்தார். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவரோடு கோட்டைக்குள் இருந்து வெளியேறிய பிறகு, இன்று தான் மட்டும் தனியே மாறுவேடத்தில் வரவேண்டி வந்துவிட்டதே என்றி எண்ணி வேலு நாச்சியார் ஒரு கணம் கலங்கினார். ஆனால், ஒரே நொடியில் அந்தக் கலக்கம் காலாவதியானது. "எனது கணவரை மாய்த்து நாட்டை அடிமைப்படுத்திய நயவஞ்சகரை ஒழிப்பேன். விடுதலைச் சுடரை நாடு முழுக்க விதைப்பேன்!'' என்ற வீரசபதம் நினைவில் புகுந்தது.

அவரது கண்கள் கோட்டையின் ஒவ்வொரு பகுதியையும் அலச ஆரம்பித்தது. விஜயதசமி என்பதால் ஆயுதங்கள் அனைத்தையும் கோட்டையின் நில முற்றத்தில் வழிபாடு நடத்த குவித்து வைத்திருந்தனர். ஒரு சில வீரர்களின் கையில் மட்டுமே ஆயுதங்கள் இருந்தன.

ராணி கோட்டையை அளவெடுத்தது போலவே குயிலியின் கண்களும் அளவெடுத்தன. நிலா முற்றத்தில் குவிக்கப்பட்டிருந்த ஆயுதங்களைக் கண்டதும், அவளது மனதில் ஒரு மின்னல் யோசனை தோன்றி மறைந்தது.
ஆனால், அந்த யோசனையை வெளியே சொன்னால் செயல்படுத்த அனுமதி கிடைக்காது என்பதை அறிந்திருந்த குயிலி, மெதுவாக ராணி வேலுநாச்சியாரைப் பிரிந்து கூட்டத்தோடு கலந்துகொண்டாள்.

அதே நேரத்தில் கோட்டையில் பூஜை முடிந்தது. அனைவரும் கோட்டையை விட்டு வெளியேற ஆரம்பித்தனர். பொதுமக்கள் கூட்டமும் மெதுவாக கலையத் தொடங்கியது. வேலுநாச்சியார் தனது போரைத் தொடங்க இதுவே தருணம் என்பதை உணர்ந்தார். அவரது கை மெல்ல தலைக்குமேல் உயர்ந்தது. மனத்திற்குள் ராஜராஜேஸ்வரியை வணங்கியபடியே, "வீரவேல்! வெற்றிவேல்!!'' என்று விண்ணதிர முழங்கினாள்.
அந்த இடிக்குரல் அரண்மனையே கிடுகிடுக்கும் அளவிற்கு முழங்கியது. ராணியின் குரலோசையைக் கேட்டதும் பெண்கள் படை புயலாய்ச் சீறியது. புது வெள்ளமாய்ப் பாய்ந்தது. மந்திர வித்தைபோல பெண்களின் கைகளில் வாளும் வேலும் தோன்றின.

ஆயுதங்கள் அனைத்தையும் மின்னலெனச் சுழற்றி வெள்ளையர்களை சிவகங்கைப் பெண்கள் படை வெட்டிச்சாய்த்தது. இந்தக் காட்சியை மேல்மாடியில் நின்று பார்த்துக் கொண்டிருந்த ஆங்கிலேயன் பான்சோருக்கு இடிவிழுந்தது போலாயிற்று.

"சார்ஜ்!..'' என்று பான்சோர் தொண்டை கிழியக் கத்தியபடியே, தனது இடுப்பில் இருந்த 2 கைத்துப்பாக்கிகளை எடுத்து சரமாரியாகச் சுட ஆரம்பித்தான். வெள்ளைச் சிப்பாய்கள் ஆயுதக் குவியலை நோக்கி ஓடிவர ஆரம்பித்தார்கள்.

வேலு நாச்சியார் பான்சோரைப் பிடிக்க மேல்மாடத்திற்குச் செல்வதற்குள் அங்கிருந்த யாரோ ஒரு பெண் தனது உடல் முழுக்க கொளுந்துவிட்டு எரியும் தீயோடு, "வீரவேல், வெற்றிவேல்'' என்று, அண்டம் பொடிபடக் கத்தியபடியே ஆயுதக்கிடங்கை நோக்கி கீழே குதித்தாள்.

நிலா முற்றத்தில் இருந்த ஆயுதங்கள் அனைத்தும் வெடித்தும், தீ பிடித்தும் எரிந்தன.

ஆயுதக் குவியலில் பற்றிய தீயைக் கண்டதும் பான்சோரும், அவனது வீரர்களும் நிராயுதபாணியாகி பயந்து நின்றனர்.

பான்சோர் தப்பி ஓட முயன்றான். ஆனால் வேலுநாச்சியாரின் வீரவாள் அவனை வளைத்துப் பிடித்தது. தளபதி சரணடைந்தான். கோட்டை மீண்டும் ராணியின் கைக்கு வந்தது.

இதே நேரத்தில் பெரிய மருது வெற்றியோடு வந்தார். திருப்பத்தூர் கோட்டையை வென்ற சின்ன மருதுவும் தனது படைகளோடு வந்து சேர்ந்தார். வெற்றி முழக்கம் எங்கும் ஒலித்தது. ஆனால் வேலுநாச்சியாரின் கண்களோ தன் உயிரான தோழியும், இந்த வெற்றிக்கு வித்திட்ட பெண்கள் படை தளபதியுமான குயிலியைத் தேடியது.
குயிலி என்ன ஆனார்.

போர் தொடங்கிய போது குயிலின் எண்ணம் ஆயுதக் கிடங்கின் மேல் நின்றது. அப்போது அவள் எண்ணினாள், "நமது விடுதலைக்கான இறுதிப்போர் இது. இதில் நாம் தோல்வி அடைந்தால் இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் வெற்றி பெற முடியாது. நான் வெற்றிக்கு வழிகாட்ட ஒளியூட்டப் போகிறேன். என்று கூறியபடியே உடல் முழுவதும் நெய்யை ஊற்றிக்கொண்டு, கோயிலில் இருந்த எரியும் பந்தத்தோடு அரண்மனையின் உப்பரிகையை நோக்கிப் பறந்தாள்.

அரண்மனை உப்பரிகையை அடைந்ததும் தீப்பந்தத்தால் தனது உடலில் தனக்குத்தானே தீவைத்துக்கொண்டு, அந்த ஆயுதக் குவியலில் குதித்து விட்டாள். வெள்ளையர்களை ஆயுதம் அற்றவர்களாக்கி தன் தலைவிக்கு வெற்றியை அள்ளித்தர, தன்னையே பலியிட்டுக்கொண்டாள்.

மானம் காக்கும் மறவர் சீமையின் விடுதலைக்காக குயிலி தன்னையே பலி கொடுத்தார் என்பதை அறிந்ததும் அந்தத் தியாக மறத்திக்காக வேலுநாச்சியாரின் வீர விழிகள் அருவியாய் மாறின. கண்ணீர் வெள்ளம் அவரது உடலை நனைத்தது.

அவர் மட்டுமா அழுதார்? குயிலிக்காக சிவகங்கைச் சீமையே அழுதது. குயிலி போன்ற தியாகச்சுடர்கள் தந்த ஒளியின் ஒட்டுமொத்தக் கூட்டுத்தொகைதான் இந்தியாவிற்கு விடுதலை வழிகாண வைத்தது. தங்கள் உடலையே எரிபொருளாக்கிய எத்தனையோ குயிலிகள் இன்னும் சரித்திரம் ஏறாமலேயே சருகாய்ப் போனார்கள். அவர்களது உன்னத தியாகத்திற்குத் தலைவணங்குவோமாக!

(நடந்து முடிந்த சட்டசசபையில் உறுப்பினர்கள் வேண்டுகோளுக்கிணங்க வேலு நாச்சியாருக்கு மணி மண்டபம் கட்டும் போது அதில் குயிலிக்கும் மண்டபம் கட்டப்படும் என்று முதல்வர் அறிவித்தார், யார் அந்த குயிலி என்ற தேடுதலின் அடிப்படையில் சுருக்கமாக எழுதப்பட்டதே இந்த கட்டுரை, நன்றி- விஜயபாரதம், தமிழ்தேசசம், மகளிர் வரலாறு கட்டுரையாளர்களுக்கு)

Saturday 18 May 2013

மாற்றுத்திறனாளி அல்ல பலரை மாற்றும் திறனாளி கோவை ஜெகதீஷ்..



மாற்றுத்திறனாளி அல்ல பலரை மாற்றும் திறனாளி கோவை ஜெகதீஷ்..

பதிவு செய்த நாள் : மே 18,2013,16:47 I
- எல்.முருகராஜ்


"வணக்கம் அண்ணா''

அன்பும், பாசமும் இழைந்தோட இனிய குரலுடன் அழைத்த அந்த இருபத்தொரு வயது இளைஞரை, பார்த்த மாத்திரத்தில் மனதிற்குள் வேதனையும்,கண்ணீரும் குபுக்கென்று பொங்குகிறது.

காரணம்


சக்கர நாற்காலியில் பத்து வயது சிறுவனை போல, உடல் சூம்பிய நிலையில் காணப்பட்ட அவருக்கு, கழுத்துக்கு கீழே உள்ள பாகங்களில் கைவிரல்களில் மட்டுமே அசைவு உண்டு, அதுவும் லேசாக.

அந்த லேசான அசைவுகளையும், தனக்குள்ளான ஆர்வத்தையும், கம்ப்யூட்டர் அறிவையும் வைத்துக் கொண்டு இன்றைக்கு உலகம் முழுவதும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான நண்பர்களை பெற்றுள்ளார்.

ட்வீட்டரும், பேஸ்புக்கும், பிளாக்கிலும் புழங்குகிறவர்களுக்கு "ஜகூ' என்ற வார்த்தை பிரபலம், "ஜகூ' என்ற வார்தைக்கு பின் இருப்பவர்தான் இந்த கட்டுரையின் நாயகன் கோவை ஜெகதீஷ்.

எல்லோரும்தான் எழுதுகிறார்கள் ஆனால் ஜெகதீஷின் தனித்துவம் அவரது எழுத்தில் இருக்கிறது.
வெட்டி அரட்டை எல்லாம் இல்லை, எந்த ஓரு விஷயத்தையும் தீர்க்கமாகவும், தீவீரமாகவும் விமர்சிக்கிறார்.
இந்திய பொருளை வாங்கு இந்தியனாக இரு என்பதை தீவிரமாக சொல்கிறார்.

தமிழின் மீதான அதீதமான காதலால் நள்ளிரவு நேரம் என்றால் கூட தயங்காது வெளிநாட்டு வாழ் நண்பர்களுக்கு "ஆன் லைனில்' தமிழ் சொல்லிக் கொடுக்கிறார்.

கோவையில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு அனைத்து மாணவர்கள் அபிமானத்தையும் பெற்றவர்.அன்று முதல் இன்று வரை மாணவர் கூட்டமைப்பின் அறிவிக்கப்படாத ஆலோசகராக இருந்துவருகிறார்.

தமிழ் சினிமாவின் தன்மையையே மாற்ற வேண்டும் என்ற துடிப்புடன் அதற்கான நண்பர்களுடன் திரைக்கதை பற்றிய ஆலோசனை ஒரு பக்கம், அரசியல் சாக்கடை என்றால் அதில் இறங்கித்தான் சுத்தம் செய்யவேண்டும் நான் இறங்கத்தயார் அதுவும் உத்தமமான மாணவர் அமைப்போடு என்று அதற்கான தளத்தில் ஒடுவது ஒரு பக்கம், இன்றைய உலகம் இளைஞர்கள் கையில், ஆனால் இளைஞர்கள் கையிலோ கம்ப்யூட்டர், ஐபேடு, ஸ்மார்ட் போன் என்று சுழலுகிறது, நாம் அதற்குள் நுழைந்து தமிழை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் அதற்கான உழைப்போடும், உலகோடும் ஒரு பக்கம், நான் கப்பல் என்ஜீனியர் எனக்கான புராஜக்டை என்னால் முடிக்க முடியவில்லை நீங்கள் உதவமுடியுமா?என்று கேட்ட என்ஜீனியருக்கு ஓ...தாரளமாக என்று முடித்துக்கொடுத்த அறிவு ஜீவிதம் ஓரு பக்கம் என்று மனதால் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் போதவில்லை என்று ஒடிக்கொண்டிருக்கும் ஜெகதீஷ், உண்மையில் இதை எல்லாம் இயலாமை காரணமாக படுத்த படுக்கையில் இருந்தபடிதான் செய்கிறார், செயல்படுகிறார் என்றால் நம்பமுடிகிறதா ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும்.

வலியும்,வேதனையும் நிறைந்ததுதான் இவரது வாழ்க்கை,

வெங்கட்ரமணன், கிரிஜா தம்பதியினரின் ஒரே மகனான ஜெகதீஷ் பிறந்த போது அவனை தூக்கிக் கொஞ்சாதவர்களே இல்லை அத்தனை அழகு, ஆனால் கண்பட்டது போல நடக்க வேண்டிய வயதில் ஜெகதீஷால் நிற்கவே முடியாமல் போனது. மூன்று வயதில் உயரத்தில் இருந்து குழந்தைகள் விளையாட்டாக தள்ளியதில் முகத்தின் பற்கள் சேதமடைந்தது, ஏழு வயதில் நிற்கவைப்பதற்காக செய்யப்பட்ட அறுவை சிகிச்சை தவறாக முடிந்ததில் உட்காரவும் முடியாமல் போனது, மின்சார சிகிச்சை என்ற பெயரில் செய்யப்பட்டது எல்லாம் உயிரை விட்டுவிட்டு உதிரத்தை உறிஞ்சியதில் உடம்பு பாழானது, இப்படி ஆளாளுக்கு செய்த சிகிச்சையால் பசிபோனது, சேமித்த பணம் போனது கடைசியில் பத்தாம் வகுப்போடு படிப்பும் போனது...

தந்தை தனது தொழிலைவிட்டுவிட்டு மகனுக்கு நாள் முழுவதும் தொண்டு செய்யும் தாயுமானவராயிருக்கிறார், ஜெகதீஷ்க்கு உதவுவதற்காக கோவை இந்துஸ்தான் ஹார்டுவேர் நிறுவனம், அந்தக்கால பிகாம் படிப்பாளியான ஜெகதீஷின் தாயாருக்கு அக்கவுண்டன்ட் வேலை கொடுத்து ஜெகதீஷின் குடும்பம் பசி, தாகம் அறியாது காத்து வருகிறது.

இந்த நிலையில் ஜெகதீஷ் தனது ஒரே துணையாக இருந்த மொபைல் போனில் தனது தேடுதலை ஆரம்பித்தவர், நான்கு வருடங்களில் லேப்-டாப், இண்டர்நெட் உதவியுடன் உதவியுடன், மெத்த படித்த கம்ப்யூட்டர் அறிவாளிகளுக்கே கற்றுக்கொடுக்குமளவு அதில் தனது அறிவை பெருக்கிக் கொண்டுள்ளார். கம்ப்யூட்டர் அல்லாத பிற துறைகளிலும் தனது அறிவை வளர்த்துக்கொண்டு வருகிறார்.

யாராவது பார்க்க வருகிறார்கள் என்றால் சிறிது நேரம் விசேஷமாக வடிவமைக்கப்பட்ட நாற்காலியில் உட்கார்ந்து இருப்பார், எங்காவது போவது என்றால் பாட்டி சுப்புலட்சுமி துணையோடு அந்த நாற்காலியில் போய்வருவார், மற்றபடி படுக்கையில் படுத்துக்கொண்டு காதில் இயர் போனை செருகிக்கொண்டு இடது கையின் நடுவிரலை அசைத்து,அசைத்தே, நம்மில் பலராலும் முடியாத பலவித வேலைகளை கம்ப்யூட்டரில் செய்கிறார், இல்லையில்லை செதுக்குகிறார்.

இன்னும் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார், இதைவிட மேலானாது, தான் கற்றதையும், பெற்றதையும் அனைவருக்கும் சொல்லிக்கொடுக்க விரும்புகிறார். தனக்கு அறிவு புகட்டி ஆளாக்கிய கோவை அம்ருத் சிறப்பு பள்ளிக்கு பெருமை சேர்க்க எண்ணுகிறார், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இவரது தலையில் கைவைத்து நீ மாற்றுத்திறனாளியல்ல, பலரை மாற்றும் திறனாளி என்று சொல்லி ஆசீர்வதித்ததை நிஜமாக்க விரும்புகிறார்.

இவரிடம் கம்ப்யூட்டர் திறமை நிறைய இருக்கிறது, தமிழில் வளமையான அறிவு இருக்கிறது, எதற்காகவும் நியாயத்தை விட்டுக் கொடுக்காத கம்பீரமும் இருக்கிறது, எந்த சூழ்நிலையிலும் நேர்மையை கைவிடாத மனத்துணிவு இருக்கிறது.

இல்லாதது, நிரந்தர வருமானம். என்னைப்பெற்ற அவர்களது மனதிலும்,கண்ணிலும் மகிழ்ச்சியை பார்க்க விரும்புகிறேன்,அதற்காக உழைத்து சம்பாதிக்க விரும்புகிறேன், இனியும் இவன் சுமை அல்ல, சுகமானவனே என என்னைச் சார்ந்தவர்களை அனைவரும் எண்ணும்படி மாறவேண்டும், அதற்கு உழைக்க தயராக இருக்கிறேன். ஆனால் என் தகுதி அறிந்து வேலை தருபவர் யாரும் உண்டா? என்பதை தினமலர் இணையதளம் மூலம் அறிய விரும்புகிறேன்.

வறுமையும், திறமையும் ஒன்றாகத்தான் இருக்கவேண்டுமா வாசகர்களே

உங்களது தகுதிக்கும், திறமைக்கும் ஏற்ற வேலையை,தொழிலை தர எங்கள் வாசகர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள், அவர்கள் உங்கள் எண்ணில் தொடர்பு (9791497906) கொள்வார்கள் என்ற நம்பிக்கையை அவருள் விதைத்துவிட்டு விடைபெற்றேன்.

(வேலை தருவதற்காக இல்லாவிட்டாலும் பராவாயில்லை இவருடன் நேரம் கிடைக்கும் போது பேசிப்பாருங்கள், கொங்கு மண்ணின் மரியாதை என்றால் என்ன என்பது தெரியவரும், இவரது ஆளுமை புரியவரும்.)

விடைபெறும் போது பாசமும், அன்பும் இழையோட ஜெகதீஷிடம் இருந்து குரல் வந்தது

"நன்றி!அண்ணா''!




Tuesday 14 May 2013





தொடரட்டும் இவரது சாதனை, அதில் தொலையட்டும் பார்வையற்றோர் வேதனை: - எல்.முருகராஜ்


சிவகாசி.

வியர்வை சிந்துபவர்களுக்கு உயர்வைதரும் ஊர்.

உழைப்பு எனும் உதிரம் சிந்துபவர்களால் வீட்டிற்கு மட்டுமல்ல நாட்டிற்கே அந்நிய செலவாணி என்ற படியளக்கும் கந்தக பூமி.

மண்தான் வறட்சியானது, மக்களின் மனமோ வளமானது.

தன்னை வளர்த்து ஆளாக்கிய ஊருக்காக முடியாவிட்டாலும், யாருக்காவது நன்மை செய்யவேண்டும் என்ற துடிப்பு கொண்ட மனிதர்களை கொண்ட பூமி,

இப்படிப்பட்ட சிவகாசியை விரும்பி ஏற்றுக்கொண்ட ஒருவரது சேவையால் இன்று இந்தியாவே திரும்பி பார்க்கிறது.

அவர்தான் நாட்டிலேயே அதிக அளவு தனி நபர் கண்களை தானமாக திரட்டி தந்தவரும், தந்து வருபவருமான பட்டாஸ்நகர் அரிமா சங்கத் தலைவர், கண்தானக்குழு பட்டயத் தலைவருமான ஜெ.கணேஷ்.
இதுவரை 2200 பேரிடம் இருந்து கண்களை தானமாக பெற்றதன் மூலம் 4400 பேர் பார்வை பெறுவதற்கு காரணமாக இருந்துள்ளார். தனது இந்த சேவைக்காக டாக்டர் பட்டம் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும், பட்டங்களையும் பெற்றவர்.

ஒருவர் தனது கண்களை தானம் செய்வதாக எழுதி கொடுத்திருந்தால் கூட, இறந்த பிறகு அவரது குடும்ப உறவுகளைத் தாண்டி கண்களை தானமாக பெறுவது என்பது சென்னை போன்ற பெரு நகரங்களிலே அரிதான விஷயமாக இருக்கும் போது, சிவகாசியில் இருந்து கொண்டு இது எப்படி சாத்தியம் என்ற கேள்விக்கு வந்த உற்சாகமான ஒரு வரி பதில், நல்ல மனதோடு முயற்சித்தால் முடியாதது எதுவுமில்லை என்பதுதான்.
இன்னும் கொஞ்சம் விவரமாக என்றவுடன்...

நான் சிவகாசியில் பட்டாசு தொழில் செய்யறேன், இந்த தொழிலைத் தாண்டி ஒரு ஆத்ம திருப்தி வேண்டும் என்பதற்காக 18 வருஷத்துக்கு முன்னாடி சிவகாசி லயன்ஸ் கிளப்பில் சேர்ந்தேன். உறுப்பினரா சேர்ந்த புதுசல தையல் மிஷின் கொடுப்பது, பசங்களுக்கு பாடபுத்தகம் வழங்குவது போன்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்துட்டு ஓடிவந்துட்டு இருந்தேன்.

சங்கத்தோட தலைவர்ங்ற பொறுப்புக்கு வந்ததும், ஏதாவது உருப்படியா செய்யணும்னு தோணுச்சு. அந்த நேரம் மதுரை அரவிந்த் கண் ஆஸ்பத்திரி நிர்வாகியை பார்க்க போயிருந்தேன், அவர் கார்னியா பிளாக்குக்கு கூட்டிட்டு போனார், நாலைஞ்சு வயது குழந்தைங்கள்ல இருந்து வயசானவங்க வரை பலர் தானமா வர்ர கண்ணுக்காக காத்திட்டு இருந்தாங்க..

ஒரு நாள் இரண்டு நாள் அல்ல பல வாரங்கள், மாதங்கள், ஆண்டுகளாக காத்திருப்பவர்களும் அதில் உண்டு.
இன்றைக்கு நமக்கான கண்வந்துரும், நாளைக்கு பார்வை கிடைச்சுடும் என்ற அவர்களது ஏக்கத்தை அருகில் இருந்து பார்த்தேன். அன்று என் தூக்கத்தை தொலைத்தேன்.

எத்தனையோ பேர் தினம், தினம் இறந்து போகிறார்கள். அவர்கள் யாருமே கண்களை தானமாக தரவில்லையா, நடிகர்கள், அரசியல்வாதிகள் பிறந்த நாளின் போது நிறைய பேர் கண்களை தானமாக தருவதாக பதிவு செய்கிறார்களே, அவர்கள் யாரும் இறப்பது இல்லையா என்று மருத்துவரிடம் கேட்டபோது அதெல்லாம் "பப்ளிசிட்டிக்காக' செய்பவை, சுத்த வேஸ்ட் என்றார். எனக்கு ஆச்சர்யத்தைவிட அதிர்ச்சியே மேலோங்கியது.
இறந்தவர்களின் நெருங்கிய உறவினர்களிடம் மனமாற்றம் ஏற்பட்டால்தான் இந்த கண்தானம் என்பது நடக்கும், எங்களுக்கு கண்கள் கிடைக்கும் என்றார் இறுதியாகவும், உறுதியாகவும்.

கனத்த இதயத்துடன் சிவகாசி திரும்பியதும் இனி கண்தானங்களை பெறுவதே பிரதான வேலை என்று தீர்மானித்துக்கொண்டேன்.

கண் தானத்தை வலியுறுத்தி ஊர் முழுவதும் டிஜிட்டல் போர்டு, பேனர், பல ஆயிரம் நோட்டீஸ், ஸ்டிக்கர், பஸ் பின்புறம் விளம்பரம் என்று நிறைய செலவழித்தேன் ஆனால் ஒரு கண்கூட தானமாக வரவில்லை

வேறு மாதிரி முயற்சிப்போம்னு கண்தானத்தை வலியுறுத்தி கோயில், சர்ச், மசூதி என்று எல்லா இடங்களிலும் எனது அணியோடு போய் பேசினேன், ம்ஹீம் பிரயோசனமில்லை.

பிறகு மாணவர்களை தயார்படுத்தினேன், அவர்கள் கண்களை பத்து நிமிடம் கட்டிவிட்டு அங்கேயும், இங்கேயும் போகவிட்டு, இந்த பத்து நிமிட பார்வை இல்லாததையே நம்மால் தாங்க முடியவில்லையே, வாழ்க்கை முழுவதும் பார்வை இல்லாமல் இருப்பதை எப்படி தாங்கமுடியும், இறந்த பிறகு புதையுண்டோ, எரிக்கப்பட்ட யாருக்கும் பிரயோசனமில்லாமல் போகக்கூடிய கண்களை தானமாக கொடுத்தால் இரண்டு பேர் கண்தானமாக பெறுவார்களே என்று சொன்னதும் அந்த வார்த்தை நிறையவே பலன் தந்தது.

அவர்கள் வீட்டைச் சேர்ந்தவர்கள் இறந்ததும் அவர்களே பேசி எங்களை வரச் சொல்லி கண்களை எடுத்துக்கொள்ளச் சொன்னார்கள், அப்படிக் கிடைத்த கண்கள் பொருத்தப்பட்ட இருவர் பார்வை கிடைத்த மகிழ்ச்சியை பரவசமாக எங்களிடம் பகிர்ந்து கொண்ட போது, இதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று கண்களை தானமாக பெறுவதில் இன்னும் தீவிரமானேன்.

கண்களை தானமாக பெற்றவர்களை பேசவைப்பது, கண்களை தானமாக தந்தவர் பெயரைப் போட்டு போஸ்டர் அடித்து அவரது குடியிருப்பு பகுதி முழுவதும் நன்றியும், பாராட்டு சொல்லியும் ஒட்டுவது, கண்தானம் செய்தவரின் புகைப்படம் ஒட்டிய ஷீல்டை உள்ளூர் பிரமுகர் கையால் சம்பந்தபட்டவரின் குடும்பத்தாரிடம் கொடுத்து கவுரவிப்பது என்றெல்லாம் செய்தபின் தானமாக கண்கள் கிடைத்தது.

தானமாக கிடைக்கும் கண்கள் தாராளமாக கிடைக்க என்ன செய்வது என்று யோசித்தேன், அப்ப நீங்கதான் எனக்கு உதவ முடியும் என்று சுடுகாட்டில் இருப்பவர்கள், ஆம்புலன்ஸ் ஒட்டுபவர்கள், ஆஸ்பத்திரி எமர்ஜென்சி வார்டில் வேலை செய்பவர்கள் போன்றவர்களிடம் யாசித்தேன்.

இதன் காரணமாக ஊருக்குள் யார் இறந்தாலும் தகவல் வந்துவிடும்.
இறந்தவர்கள் வீட்டில் உள்ள மாணவர்கள் எப்படியும் பேசி வைத்திருப்பார்கள்.
இல்லாவிட்டாலும் கவலை இல்லை என்று மாலையோடு போய் மரியாதை செய்தபிறகு, உரியவர்களிடம் பக்குவமாக பேசி கண்களை தானமாக பெற்றுவிடுவோம். இறந்து போனது பெண்களாக இருந்தால் என் மனைவி பிரேமலதா தலைமையிலானவர்கள் போய் பேசி விடுவார்கள்.

நாங்களே சோகத்துல இருக்கோம், கண்ணை புடுங்க வந்துட்டான்ய்ங்க என்று கோபாவேசமாகத்தான் பேச ஆரம்பிப்பார்கள். ஆனால் அவர்களிடம் பொறுமையாக பேசி, பேசி கண்களை தானமாக பெற்றுவிடுவோம்.

இப்படி ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக கண்களை தானமாக தரும் முதல் மாவட்டம் என்ற பெயரை இவர் சார்ந்த விருதுநகர் மாவட்டம் பெற்றுள்ளது. இப்போது சிவகாசி மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி, மதுரை, தேனி, கன்னியாகுமரி, ஈரோடு, கோவை வரை பிரச்சாரத்திற்கு செல்கிறார். அங்குள்ள பள்ளி, கல்லாரி மாணவர்களிடம் மட்டும் இதற்காகவே இதுவரை 585 கருத்தரங்குகள் நடத்தியுள்ளார்.
கருத்தரங்கு என்பது கேள்வி, பதிலாக. பதிலுக்கு ஒரு பரிசாக நடக்கும், முடிவில் மாணவ, மாணவியரின் இதயத்தில் கண்தானம் குறித்து ஆழமாக பதிவு செய்வதாக இருக்கும்.
இது எனக்கு கிடைத்த வெற்றி அல்ல மக்களின் விழிப்புணர்வுக்கு கிடைத்த வெற்றி எனது அணியைச் சேர்ந்த டாக்டர் ராமன், ஒரு பைசா கூட வாங்கிக் கொள்ளாமல், இதுவரை 800 பேரின் கண்களை எடுத்து தந்துள்ளார். நள்ளிரவில் போன் வந்தால் கூட நானாச்சு என்று ஒடோடி சென்று உரிய வேலைகளை பார்க்கும் நண்பர்கள் ராமர், தனசேகரன், கணேசன், ராம்தாஸ், நர்ஸ் ராணி மற்றும் என் மனதை புரிந்து கொண்டு எனக்கு பக்கபலமாக இருக்கும் மகன் கோபி அவர்களின் ஒத்துழைப்பால் கிடைத்த வெற்றி.

ஆனாலும் இதனை வெற்றி என்று சொல்ல முடியாது காரணம் பார்வையில்லாதவர்கள் இந்த பாரத தேசத்தில் பல ஆயிரம் உள்ளனர். கண்களை தானமாக தருபவர்கள் வெறும் சில நூறு பேர்களாகவே இருக்கின்றனர், அதுவும் இப்போதுதான்.இந்த கண்தானம் என்ற இயக்கம் அனைவருக்கும் பரவி, பெருகி நாட்டில் பார்வையற்றவர்களே இல்லை என்ற நிலை வரவேண்டும், அதுவரை எனது கைகளும்,இதயமும் கண்களை தானமாக கேட்கும் இல்லையில்லை கெஞ்சும்...

இது குறித்து மேலும் விளக்கம் பெற தொடர்பு கொள்ளவும் ஜெ.கணேஷ் போன் எண்: 9843088828.

பெட்டிச் செய்தி ஒன்று...
 பார்வையற்றோரே இல்லையெனும் பாரதம் படைப்போம். 

ஒருவர் கண்தானம் இருவர் வாழ்வில் பிரகாசம்.

மண்ணுக்கும், நெருப்புக்கும் கொடுப்பதை மனிதர்க்கும் கொடுப்போம்.
இறந்தும் இறவாப்புகழுடன் வாழ இருவர் வாழ்வில் ஒளியேற்ற கண்தானம் செய்வோம்.

முயற்சி செய்யுங்கள், முடியும் உங்களால்.


பெட்டிச் செய்தி இரண்டு:

* ஒருவர் இறந்த பிறகே கண்களை தானமாக வழங்கமுடியும்.

* இறந்த நான்கு மணி நேரம் முதல் ஆறு மணி நேரத்திற்குள்ளாக கண்கள் அகற்றப்பட வேண்டும்.

* போன் செய்தால் போதும் கண்தானம் பெறுவோம் நேரில் வந்து கண்களை எடுத்துச்செல்வர்.

* கண்களை எடுக்க தனி அறையோ, இடமோ தேவையில்லை.

* பத்து நிமிடத்தில் கண்கள் எடுக்கப்பட்டுவிடும்.

* கண்தானம் பெறுவோர் வரும்வரை மின்விசிறியை நிறுத்திவிட்டு கண்களின் மீது ஈரமான பஞ்சை வைக்கவும். குளிர்சாதன வசதியிருந்தால் அதனை ஒடவிடவும்

* ஆண், பெண் இருபாலர்களும் எந்த வயதினரும் கண்களை தானம் செய்யலாம்.

* மஞ்சள் காமாலை, எய்ட்ஸ், மூளைக்காய்ச்சசல், வெறிநாய்கடியால் இறந்தவர்கள் மட்டும் கண்களை தானம் செய்யமுடியாது.

* கண்தானம் செய்ய முடிவு செய்தவர்கள் உள்ளூர் கண்மருத்துவமனையை உடனடியாக தொடர்பு கொள்ளவும். சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி என்றால் 9842120908, 9442627556, 0462-2337103 போன்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.


என் பெயர் பாப்பாத்தி...
- எல்.முருகராஜ்


சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து பண்ணைவாடி கிராமத்திற்கு போகும் வழியில், கொளத்தூரின் நுழைவு பகுதியில் உள்ள செக்போஸ்ட் அருகே இருக்கிறது அந்த கம்பங்கூழ் விற்கும் தள்ளுவண்டி கடை.

வெயிலுக்கு ஏற்ற உணவான கம்பங்கூழை அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டுனர்களும் மற்றவர்களும் ஓரு சொம்பில் வாங்கிக் குடித்து செல்கின்றனர்.

நடுத்தர வயது பெண் ஒருவர் சிரித்த முகத்துடன் சுறு,சுறுப்பாக அந்த கம்பங்கூழ் கடையில் இயங்கிக் கொண்டு இருந்தார். வாடிக்கையாளரின் தேவைக்கு ஏற்ப பார்த்து, பார்த்து கொடுத்துக் கொண்டு இருந்தார்
.
கம்பங்கூழ் கொடுத்த சொம்பின் சுத்தம், மற்றும் பானைகளின் பளபளப்பு, கம்பங்கூழும் அதற்கு துணை உணவான மிளகாய் வத்தல், மிதுக்கு வத்தல், மாங்காய் போன்றவைகளின் அருமையான ருசி காரணமாக ஒன்றுக்கு மூன்று சொம்பாக (ஒரு சொம்பின் விலை பத்து ரூபாய்) கம்பங்கூழை குடித்துவிட்டு, அந்த கம்பங்கூழ் உணவு தந்த திருப்தியில் ஐம்பது ரூபாயை கொடுத்து விட்டு, மீதம் ரூபாயை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று கடையின் உரிமையாளரான அந்த பெண்ணிடம் சொன்னபோது, "வேணாங்கய்யா... உழைச்சு சம்பாதிக்கிற காசே போதும் ''என்று கூழின் விலைக்கு மேல் கூடுதலாக வாங்க மறுத்து திரும்ப இருபது ரூபாயை கொடுத்துவிட்டார். 

இந்த வார்த்தை மட்டுமல்ல இவரது வாழ்க்கையே பலருக்கு படிப்பினைதான்.

எவ்வளவு சோதனை வந்தாலும் அதை சாதனையாக மாற்றிக் கொள்ளாவிட்டாலும் வேதனையாக நினைத்து வருந்தாதவர் இவர்.

பெயர் பாப்பாத்தி...

சின்ன மேட்டூர் கோழிப்பண்ணை பகுதியில் பிறந்தவர், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை தினங்களில் மட்டுமே இட்லி, பூரி போன்ற "வசதியான' உணவை சாப்பிடக்கூடிய குடும்பத்தை சேர்ந்தவர்.

வீட்டின் பிரதான உணவு கம்பங்கூழ்தான்.

ஏழாவது வரை படித்தார் அதற்கு மேல் படிக்க வசதிப்படவில்லை, அம்மா, அப்பாவுடன் கூலி வேலைகளை செய்ய ஆரம்பித்தார்.

சிறு வயதிலேயே மரமேறும் தொழிலாளியான மாதப்பன் என்பவருடன் திருமணம், அடுத்த இரண்டு ஆண்டுகளில் குழந்தையைப் போன்ற இவருக்கு இரண்டு குழந்தைகள்.

நன்றாக போய்க் கொண்டிருந்த குடும்பத்தில் திடீர் சோதனை, இவரும் சம்பாதித்தால்தான் குடும்பம் நடக்கும் என்ற நிலை.

யாரையும் தெரியாது, எதுவும் புரியாது ஆனாலும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற சூழ்நிலையில் இவருக்கு தெரிந்த கம்பங்கூழ் தயாரிப்பு இவருக்கு கை கொடுத்தது.

வீட்டில் கம்பங்கூழ் தயாரித்து ரோட்டில் கொண்டுவந்து விற்பனை செய்தார். கம்பங்கூழ் விற்றே தனது மகளுக்கு திருமணம் செய்துவைத்தார், முப்பத்தியேழு வயதாகும் இவர், இப்போது இரண்டு பெண் குழந்தைகளுக்கு பாட்டியாவார்
.
பேரப்பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும், நல்ல வேலைக்கு அனுப்ப வேண்டும் என்று அவர்கள் மீது தனி அக்கறை கொண்டுள்ளார்.

இதற்காக காலை 4 மணிக்கு ஆரம்பிக்கும் இவரது உழைப்பு இரவு 11 மணி வரை தொடர்கிறது. இடையில் குட்டித்தூக்கம், வாரவிடுமுறை பொதுவிடுமுறை என்று எதுவும் கிடையாது.எந்த நேரமும் உழைப்பு, உழைப்புதான்.

இவ்வளது உழைக்கும் இவருக்கு ஒரு நாள் வருமானமாக முன்னூறு ரூபாயில் இருந்து ஐநூறு ரூபாய் வரை கிடைக்குமாம்.

இன்னும் நிறைய சம்பாதிக்கணும், கடையை பெரிசாக்கணும் என்பது போன்ற எந்த எண்ணமும் இல்லாமல், "இந்த பொழப்பு இப்படியே போனால் போதுமுங்க' என்று வெள்ளந்தியாக பேசுகிறார்.

பத்து ரூபாய் கொடுத்து கூழ் குடிக்கிறவங்க மனசும், வயிறும் நிறைஞ்சா போதும் அதுவே எனக்கு பரம சந்தோஷம் என்கிறார்.


நேற்று மாநகராட்சி பள்ளி மாணவி, இன்று நாடு பாராட்டும் ஆடிட்டர் பிரேமா..
- எல்.முருகராஜ்




கடந்த வாரத்தில் ஒரு நாள்.

சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள இந்தியன் பாங்க் அரங்கம்.

அரங்கத்தில் குழுமியிருந்த மொத்த பார்வையாளர்களும் மேடையேறப்போகும் அன்றைய விழாவின் கவுரவ இளம் விருந்தினரைக்காண ஆவலுடன் காத்திருந்தது.

நாட்டிலேயே கடினமான படிப்பான கணக்காயர் (ஆடிட்டர்) படிப்பில் தகுதி பெற்றாலே போதும் என்று அந்த தேர்வை எழுதும் கணக்கிலடங்காத பலர் நினைத்திருக்க, அதில் முதன்மை பெற்றவர் இவர். முதல் கட்டத்தில் தேர்வாவதே கடினம் என்ற நிலையில் உள்ள சி.ஏ.,தேர்வில், அகில இந்திய அளவில் முதல் மாணவியாக தேர்வான, மும்பை வாழ் ஆட்டோ டிரைவரின் மகளும், தமிழ்ப் பொண்ணுமான பிரேமாதான் அந்த இளம் விருந்தினர்.

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அடுத்த பெரிய கொள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார், ஊரில் விவசாயம் பார்க்க வழியில்லாமல் வறுமை விரட்ட, மும்பைக்கு பிழைப்பு தேடி மனைவி லிங்கம்மாள் மற்றும் மகள் பிரேமா, மகன் தன்ராஜ் ஆகியோருடன் சென்றார். அப்பாவுடன் சென்ற பிரேமாவுக்கு அப்போது வயது இரண்டு. இப்போது வயது 24.

மும்பை மாலாட் பகுதியில் ஆட்டோ ஒட்டி பிள்ளைகள் இரண்டையும் படிக்கவைத்தார்.

இரண்டு வயதில் மும்பைக்கு சென்ற பிரேமா அங்குள்ள மாநகராட்சி பள்ளியில்தான் பிளஸ் டூ வரை படித்தார். பின்னர் பி.காம் படிப்பை மும்பை பல்கலைக்கழகத்தில் முடித்த போது பல்கலைக் கழக அளவில் இரண்டாவது இடத்தை பிடித்தார், பின்னர் அனைவரும் படிக்கத் தயங்கிய சார்ட்டர்ட் அக்கவுண்ட் எனப்படும் சி.ஏ.,படிப்பை படித்தார். ஒரு பக்கம் சி.ஏ., படித்துக் கொண்டே இன்னொரு பக்கம் எம்.காம் படித்தார். எம்.காம் படிப்பில் பல்கலைக்கழக அளவில் முதல் மாணவி என்ற பட்டத்தை பெற்றார்.

பின்னர் நடந்த சி.ஏ., தேர்வில் அகில இந்திய அளவில் 800க்கு 607 மார்க்குகள் வாங்கி அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தார்.

குவிந்த ஊடகங்கள் முன் சுருக்கமாக பேசினார்.

என் தந்தை இருபது வருடமாக ஆட்டோ ஒட்டிவருகிறார், எங்கள் வாடகை வீடானது மாலாட் பகுதியில் 325 சதுர அடி கொண்டதுதான். அதில் நானும் என் தம்பியும் படிப்பதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கி கொடுத்த என் தந்தை எந்த சூழ்நிலையிலும் எங்கள் படிப்பு பாதிக்காத அளவில் எங்களுக்காக உழைத்தார்.

நாங்களும் எங்கள் கவனத்தை சிதறவிடாமல் படித்தோம், நல்லதொரு ரேங்க் வாங்குவேன் என்று எதிர்பார்த்தேன், ஆனால் அகில இந்திய அளவில் முதல் மாணவியாக வருவேன் என்று எதிர்பார்க்கவில்லை, இந்த வெற்றியை என் பெற்றோர்களின் பாதத்தில் சமர்ப்பிக்கிறேன், என்றார்.

வெற்றி பெற்ற மாணவிக்கு பலரும் பரிசு வழங்கி கவுரவித்தனர். தமிழக முதல்வர் பத்து லட்சமும், மத்திய அமைச்சர் வாசசன் ஐந்து லட்சமும், திமுக தலைவர் கருணாநிதி ஒரு லட்சமும் வழங்கியதும் அதில் அடக்கமாகும்.

அது மட்டுமல்லாமல் அவருக்கு வேலை தர பல முன்னணி நிறுவனங்களும் போட்டிபோட்டு முன் வந்தன.
அந்த நிறுவனங்களில் இந்தியன் பாங்கும் ஒன்று.

கடைசியில் இந்தியன் பாங்க் அதிகாரியாக அவருக்கு பொறுப்பு வழங்கும் விழாவையும், அவரை பாராட்டி கவுரவிக்கும் விழாவினையும் ஒரு சேர நடத்தியது.

விழா மேடை ஏறி பொறுப்பையும், கவுரவத்தையும் பிரேமா ஏற்றுக்கொண்ட போது மொத்த பார்வையாளர்களும் கைதட்டியதில் அரங்கம் அதிர்ந்தது.

ஏற்புரையில் பிரேமா பேசியதுதான் முக்கியமானதாகும்...

எனது இந்த நிலைக்கு காரணம் என் பெற்றோர்கள்தான், என் தந்தை ஜெயக்குமார் என்னை படிக்க வைப்பதற்காக தனது எல்லா மகிழ்ச்சியையும் தியாகம் செய்தவர் அவர், எந்த விடுமுறையும் எடுக்காமல் ஆட்டோ ஒட்டி உழைத்து, உழைத்து எனக்காக தனது நலனையும், உழைப்பையும், பணத்தையும் செலவழித்தவர்.

அதே போல என் தாய், வீட்டில் நான் விடிய, விடிய படிக்கும் போது கூடவே விழித்திருந்தவர், வீட்டில் இருந்த டி.வி.,யை துண்டித்தவர்.

நான் மும்பையில் படித்தாலும் அங்குள்ள தமிழ் பள்ளியில், தமிழ்தான் வேண்டும் என்று கேட்டு படித்தேன். ஏழாவது வரை எல்லா பாடங்களையும் தமிழில்தான் கற்றேன், அதன்பிறகுதான் தமிழ் தவிர மற்ற பாடங்களை ஆங்கிலத்தில் படித்தேன்.

எனக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தபோது அக்கவுண்ட படிப்பில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற எண் எண்ணத்தை தெரிவித்தபோது, மறுப்பேதும் சொல்லாமல் என் உணர்வை புரிந்துகொண்ட என் பெற்றோர்களுக்கு வாழ்நாளெல்லாம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

இனி அவர்களை வீட்டில் உட்காரவைத்து நல்ல ஒய்வையும், சந்தோஷத்தையும் தருவதே என் முதல் கடமை, மேலும் சூழ்நிலை எப்படி இருந்தாலும் சரியான முறையில் முயன்றால் வெற்றி கிடைக்கும் என்ற என் அனுபவத்தை, இப்படிப்பை தேர்வு செய்து படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன், படிக்க ஆர்வம் இருந்தும் பணமின்றி கஷ்டப்படும் மாணவர்களுக்கு வாழ்நாளெல்லாம் முடிந்தவரை உதவிட எண்ணியுள்ளேன்.
கடின உழைப்பும், நம்பிக்கையும், விடாமுயற்சியும் இருந்தால் யாருமே உயரத்தை மட்டுமல்ல சிகரத்தையும் தொடலாம், என்று பிரேமா கூறி முடித்த போது இரண்டாவது முறையாக கைதட்டலால் அரங்கம் அதிர்ந்தது.