Friday 28 February 2014

"தெய்வமகன்" ஓம் பிரகாஷ் யாதவ்...
- எல்.முருகராஜ்

தெய்வமகன் சிவாஜி போல வெந்து போன கன்னத்தழும்புகளுடன் நிஜமாகவே ஒரு சிறுவன் உபியில் இருக்கிறான், அவனைப்பற்றிய புகைப்படத்தை பார்த்ததும் ஏனோ அந்தச் சிறுவனைப்பற்றி விசாரிக்க தோன்றியது.

தோன்றியதை செய்துமுடித்தபோது மனதிற்குள் நல்லதொரு சிறுவனை அறிமுகப்படுத்திய மனநிறைவு ஏற்பட்டது.

சிறுவனின் பெயர் ஒம்பிரகாஷ் யாதவ்.

உத்திர பிரதேச மாநில விவசாயி ஒருவரது மகன்.ஏழாவது படிக்கும் சிறுவன்.

சக நண்பர்களுடன் பள்ளிக்கு மாருதி வேனில் சிரித்து பேசியபடி பள்ளிக்கு போய்க்கொண்டு இருந்தான்.

நன்றாக போய்க் கொண்டிருந்த வேன் திடீரென தீபிடித்தது. வேன் டிரைவர் வேனில் இருக்கும் பள்ளி சிறுவர்களைப் பற்றி கவலைப்படாமல் தான் மட்டும் உயிர்பிழைத்தால் போதும் என்ற எண்ணத்துடன் கதவை திறந்து கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

அதே போல வேனில் இன்னொரு புற கதவருகே இருந்த ஓம்பிரகாஷ் நினைத்திருந்தால் டிரைவரைப் போல கதவைத்திறந்து கொண்டு ஓடி தப்பியிருக்கலாம்,ஆனால் அப்படி செய்யவில்லை. பயத்தில் அழுது அரற்றிய நண்பர்களை காப்பாற்ற கதவை உடைத்து திறந்தவன் ஒவ்வொரு மாணவனாக காப்பாற்ற துவங்கினான்.

ஓம் பிரகாஷையும் சேர்த்து மொத்தம் ஒன்பது பேர் பயணித்த அந்த வேனில் இருந்து ஆறு பேர்களை காப்பாற்றிவிட்டான். அதற்கு மேல் தீ மளமளவென பிடித்து எரியத்துவங்கியது, ஆனாலும் கவலைபடாமல் வேனிற்குள் நுழைந்து மீதம் இருந்த இரு சிறுவர்களையும் காப்பாற்றினான்.

இந்த கடைசி நேர முயற்சியின் போது கார் கதவின் ரப்பரில் இருந்த தீ ஓம்பிரகாஷின் கன்னத்திலும், முதுகிலும் பட்டு பயங்கரமாக எரிந்தது, ஆனால் அந்த எரிச்சலையும், வலியையும், வேதனையையும் விட தன் நண்பர்கள் உயிரே பெரிதென நினைத்த ஓம்பிரகாஷ் இருவரையும் காப்பாற்றி வெளியே வரவும், வேன் முழுமையாக எரிந்து நாசமானது.

சில நிமிடங்கள் தாமதித்து ஓம் பிரகாஷ் செயல்பட்டு இருந்தாலோ அல்லது தனக்கு தீக்காயம் ஏற்பட்டவுடன் பயந்து போய் பாதியிலேயே தனது முயற்சியை கைவிட்டு இருந்தாலோ நிச்சயம் ஒன்றிரண்டு மாணவர்களை தீக்கு பலி கொடுக்கவேண்டி இருந்திருக்கும். கேஸ் சிலிண்டரில் ஓடும் வேன் என்பதால் எந்த நேரமும் வெடித்து சிதறும் அபாயமும் இருந்தது.

இதையெல்லாம் பொருட்படுத்தாமல் சிறு காயங்களுடன் தனது நண்பர்களை காப்பாற்றி விட்ட பெருமிதத்துடன் நின்ற ஓம்பிரகாஷ்க்கு அப்போதுதான் முகத்தில் ஏற்பட்ட தீவிபத்தின் கொடூரம் புரிய ஆரம்பித்தது. இதற்குள் அக்கம், பக்கத்தில் இருந்து திரண்டு விட்ட மக்கள் அவனை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.

நீண்ட சிகிச்சைக்கு பிறகு ஓம் பிரகாஷ் உயிருக்கு ஆபத்தின்றி பிழைத்துக்கொண்டாலும், நடந்த சம்பவம் காரணமாக ஏற்பட்ட வடு அழிக்கமுடியாத அளவிற்கு அவனது முகத்தை சிதைத்து இருந்தது.

ஆனால் அதைப்பற்றி கவலைப்படவில்லை தன்னால் உயிர் பிழைத்த நண்பர்களும், அவரது பெற்றோர்களும், உறவினர்களும் மற்றுமுள்ள பள்ளி நண்பர்களும், ஆசிரியர்களும் பூங்கொத்துடன் தன்னை சந்தித்து வாழ்த்து கூறியதையும், கண்ணீருடன் நன்றியை பகிர்ந்து கொண்டதையுமே பெருமையாக நினைத்தான்.

இவனைப் பெற்றவர்கள் பெருமையாக நினைத்தார்கள், இதையும் தாண்டி சிறுவர்களுக்காக வழங்கப்படும் நாட்டின் வீரதீர சாகச செயலுக்கான (நேஷனல் பிரேவரி அவார்டு) விருதினை ஜனாதிபதி வழங்கி கவுரவித்தார்.

இப்போது பள்ளிக்கு வரும் ஓம்பிரகாஷ் யாதவின் முகத்தை பார்க்கும் யாரும் அந்த முகத்தில் உள்ள வடுவை பெருமையாக கருதி அந்த வடு உள்ள முகத்திலேயே முத்தமழை பொழிந்து சந்தோஷப்படுகிறார்கள்.

ஓம் பிரகாஷ் யாதவ் இதெல்லாம் புரிந்தவன் போலவும், புரியாதவன் போலவும் சின்ன புன்னகையுடன் கடந்து செல்கிறான்.


உங்களைத் தேடி இஸ்ரோ...
- எல்.முருகராஜ்

விண்வெளி தொழில்நுட்பத்தில் மேம்பாடுகளை ஆராய்வதற்கும்,அவற்றை நாட்டு நலனிற்கு பயன்படுத்தவும் அமைக்கப்பட்டதுதான் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இந்தியன் ஸ்பேஸ் ரீசர்ச் ஆர்கனைசேஷன்- இஸ்ரோ).

1969ம் வருடம் உருவாக்கப்பட்ட இஸ்ரோவானது பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு நாடு முழுவதும் ஆராய்ச்சி மையங்களையும், ஏவுதளங்களையும் கொண்டுள்ளது. மொத்தத்தில் 16 ஆயிரம் பேர் ஆராய்ச்சி பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். தற்போது இதன் தலைவராக இருப்பவர் கே.ராதாகிருஷ்ணன்.

உலகில் உள்ள மிகப்பெரும் விண்வெளி ஆய்வு மையங்களில் நமது இஸ்ரோ ஆறாவது இடத்தில் உள்ளது.

கடந்த 1975ம் ஆண்டு இந்தியா தனது முதல் செயற்கை கோளான ஆர்யபட்டாவை சோவியத் நாட்டின் உதவியோடு அங்கு இருந்தே ஏவியது.

1990ம் ஆண்டு எஸ்எல்வி 3 என்ற ரோகிணி ஏவுகலம் (ராக்கெட்) இந்தியாவில் இருந்தே ஏவியது.

அதன்பிறகு பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி போன்ற ஏவுகலங்கள் வெற்றிகரமாக ஏவப்பட்டன.

கடந்த 2008ம் ஆண்டு நிலவை நோக்கி ஏவப்பட்ட சந்திராயன்-1 ஏவுகலம் தற்போது உலக அரங்கில் இந்தியாவை பிரமிப்புடன் பார்க்கும் நிலையை உருவாக்கியுள்ளது.

ஆரம்பத்தில் சோவியத் நாட்டின் உதவியோடு அவர்களது தொழில் நுட்பம் மற்றும் உபகரணங்களுடன் சோவியத் நாட்டின் ஏவுதளத்தில் இருந்தே ஏவுகலத்தை அனுப்பிய இந்தியா, தற்போது இந்தியா தொழில் நுட்பத்தில் இந்திய உபகரணங்களுடன் இந்தியாவில் இருந்தே பல ஏவுகலங்களை ஏவிவிட்டுள்ளது.

இன்னும் சொல்லப்போனால் மற்ற நாட்டின் ஏவுகலங்களையும், துணைக்கோள்களையும் நமது ஏவுகலத்தின் துணையோடு அனுப்பிவைத்து வருகிறது.

கடந்த வாரம் ஒரு பெருமைப்படத் தக்க செய்தி வெளியானது. அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் நமது இஸ்ரோ மையத்துடன் இணைந்து தண்ணீர் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபடப்போகிறது என்பதுதான்.

இப்படி உலக அரங்கில் பெருமையுடன் பீடு நடைபோடும் இஸ்ரோவிற்கு நாடு முழுவதும் உள்ள மையங்களில் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தின் எல்லையில் உள்ள மகேந்திரகிரி மலையடிவாரத்தில் உள்ள மகேந்திரகிரி மையமும் ஒன்றாகும்.

இது திரவ இயக்க அமைப்பு மையமாகும்.

பொதுவாக ராக்கெட்டின் கூரான தலைப்பகுதியில்தான் சேட்டிலைட் எனப்படும் ஆராய்ச்சி செய்யும் கருவிகள் அடங்கி இருக்கும். இந்த சேட்டிலைட்டை கொண்டு செல்ல பயன்படும் ராக்கெட் ஒவ்வொரு கட்டத்திலும் ஒருவிதமான எரிபொருளைக்கொண்டு மேலே உந்தி செல்லும், கடைசி உந்துதல் திரவ எரிபொருளால் செயல்படும்.

இந்த திரவ எரிபொருளின் உந்து சக்தி தொடர்பான ஆராய்ச்சி மற்றும் அது தொடர்பான வேலைகள் மகேந்திரகிரியில் நடைபெறுகின்றது. இங்கு நிரந்தரமாக 600 பேரும் ஒப்பந்த தொழிலாளர்களாக 1000 பேரும் பணியாற்றுகின்றனர்.

இந்த மகேந்திரகிரிக்குள் ஒரு அருமையான கண்காட்சி கூடம் உள்ளது.

இந்த கண்காட்சிக்குள் நுழைந்து வெளியே வரும் போது ராக்கெட்டால் (ஏவுகலம்) மக்களுக்கு என்ன பயன், மகேந்திரகிரியில் நடைபெறும் வேலைகள் என்ன, உங்கள் எடை பூமியில் ஒரு மாதிரியும் மற்ற கிரகங்களில் வேறு மாதிரியும் இருப்பதன் காரணம் என்ன என்பது போன்ற நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கு விடை கிடைக்கிறது. விடைகளுக்கு சான்றாக நிறைய ராக்கெட் மாதிரிகள் அது தொடர்பான சார்ட்டுகள் இடம் பெற்றுள்ளன.

ஒரு சின்ன உதாரணம் கடலுக்குள் மீன் பிடிக்க செசல்லும் மீனவர்கள் முன்பெல்லாம் மனம் போன போக்கில் மீன்களை தேடிப்போவார்கள், இப்போது அப்படி இல்லை விண்ணில் வலம்வரும் இந்திய செயற்கை கோளானது எங்கே மீன்கள் இருக்கிறது என்பதை துல்லியமாக சொல்லிவிடும் மீனவர்கள் நேரடியாக அங்கு சென்றால் போதும். தவிர இன்றைய மொபைல் போன் டெக்னாலாஜி உள்ளிட்ட பல்வேறு தொலை தொடர்பு ஆச்சர்யங்கள் எல்லாம் செயற்கை கோள்களின் துணையால்தான்.

இப்படி நமது ராக்கெட் சாதனைகளை சொல்லிக் கொண்டே போகிறது மகேந்திரகிரி இயக்க அமைப்பு மைய மைய கண்காட்சி கூடம்.

இவ்வளது சிறப்பு வாய்ந்த இந்த கண்காட்சி கூடத்தை மக்கள் இருக்கும் இடத்திற்கே கொண்டு போய் சேர்த்தால் என்ன என்று தினமலர் வழிகாட்டி குழுவினர் எண்ணினர்.

இந்த எண்ணம் முதன் முறையாக இப்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

பிளஸ் டூ முடித்த மாணவ, மாணவியருக்கான வழிகாட்டி நிகழ்ச்சி மதுரையில் வருகின்ற மார்ச் மாதம் 26,27,28; கோவையில் 28,29.30; திண்டுக்கல்லில் 30,31; புதுச்சேரியில் ஏப்ரல் 4,5,6; சென்னையில் 4,5,6; ஆகிய தேதிகளிலும் நடைபெற உள்ளது.

இந்த வழிகாட்டி அரங்கின் வளாகத்தினுள் இஸ்ரோவின் மகேந்திரகிரி மையத்தின் கண்காட்சி அரங்கம் தனியாக இடம் பெற உள்ளது. வழிகாட்டி நடைபெறும் நாட்களில் மையத்தின் விஞ்ஞானிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு கண்காட்சி பற்றி விளக்கங்கள் தர இருக்கின்றனர்.

ஆகவே இந்த முறை மாணவ, மாணவியர் மட்டுமல்லாது அவர்களது பெற்றோர்களும், உறவினர்களும், நண்பர்களும் கூட வழிகாட்டி நிகழ்ச்சிக்கு மறக்காமல் அவசியம் வாருங்கள் ,நமது நாட்டின் பெருமையை பாருங்கள், இதை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

இது தொடர்பாக மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவேண்டிய எண்: 9944309655.











நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்...
- எல்.முருகராஜ்

முகமது ரபி.

கன்னியாகுமரியில் புகைப்பட பிரியன் நடத்திய புகைப்பட கருதரங்கு தொடர்பான போட்டோ வாக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கன்னியாகுமரி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை வித்தியாசமான முறையில் படமாக்கியவர்களில் இவரும் ஒருவர்.

எனது படங்கள் காப்பி ரைட் சட்டத்திற்கு உள்பட்டது என்று சொல்லக்கூடிய இந்தக் காலத்தில் சிரமப்பட்டு பணம் செலவழித்து எடுத்த தனது படங்களை அரசு விரும்பினால் இலவசமாக சுற்றுலா மேம்பாட்டிற்கு உபயோகித்துக் கொள்ளலாம் என்று அறிவித்தவர்.

கலைச்செல்வங்கள் அனைவருக்கும் போய்ச்சேர வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டவர்.

வடலூரில் பிறந்து, நெய்வேலியில் படித்து வளர்ந்தவர். தற்போது புதுச்சேரியில் உள்ள "ஹாங்கர் 17 'என்ற நிறுவனத்தில் கம்ப்யூட்டர் வரைகலை நிபுணராக உள்ளார். இவருக்கு சிறு வயது முதலே புகைப்படங்கள் மீது காதல் உண்டு.

நண்பர்கள் வைத்திருக்கும் கேமிராக்களைக் கொண்டு அவ்வப்போது படங்கள் எடுத்துவந்தார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்தான் சொந்தமாக "கேனன் கேமிரா செட்' வாங்கினார்.

அதன்பிறகு விடுமுறை விட்டால் போதும் கேமிராவை எடுத்துக்கொண்டு படம் எடுக்க கிளம்பி விடுவார். புகைப்படம் எடுப்பது இவருக்கு பொழுதுபோக்கு மட்டுமே.

கொஞ்ச காலம் போட்டோ ஆல்பம் டிசைனராக பணிபுரிந்ததில், வித்தியாசமான புகைப்படங்களைப்பற்றி தெரிந்து கொண்டார், மேலும் "கலர் கரெக்ஷன்' பற்றியும் புரிந்து கொண்டார்.

இதன் காரணமாக இவர் எடுக்கும் படங்களில் தேவைக்கு ஏற்ப, இவர் செய்யும் சின்ன, சின்ன கரெக்ஷன் காரணமாக படங்கள் தனித்துவம் பெற்று நிற்கின்றது.

"புதுச்சேரி போட்டோகிராபி கிளப் 'என்ற அமைப்பின் மூலம் குழுவாக சென்று படம் எடுப்பது, எடுத்த படங்களை பற்றி விவாதிப்பது, பின் அந்த படங்களை "முகநூலில்' பகிர்ந்து கொள்வது என்று எப்போதும் சுறு,சுறுப்பாக இயங்கிக் கொண்டு இருக்கிறார்.

நாம் கண்ணால் காணும் உலகம் வேறு, கேமிராவின் மூலம் காணும் உலகம் வேறு என்பதை புரிந்து கொண்டபின், எனது புகைப்படங்களை எப்படி வித்தியாசப்படுத்துவது என்பதில் தீவிரமாய் இருக்கிறேன்.

சர்வதேச அளவில் புகைப்படம் தொடர்பான சமூக வலைத்தளத்தில் இவரது படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது, இன்னமும் நிறைய படங்கள் எடுக்











கவேண்டும், நிறைய சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ளார், வாழ்த்துக்கள்.

முகமது ரபியுடன் தொடர்பு கொண்டு பேச: 9843576850.
"பரமசிவம்' பார்த்துக்கொள்வார்...
- எல்.முருகராஜ்

கோவை டவுன்ஹால் வீதியில் உள்ள அந்த சின்னஞ்சிறு வீட்டின் முன் விதவைகளும், வயதானவர்களும், எளிய தொழிலாளர்களுமாக ஒரு சிறு கூட்டம் அவர் எப்போது வருவார் என்று கண்களில் கடைசி நம்பிக்கையை வைத்துக் கொண்டு காத்திருக்கிறது.

வரப்போவது யார் மருத்துவரா, கவுன்சிலரா, அதிகாரியா என்றால் அப்படி எல்லாம் கிடையாது. அவர் சாதாரண பேருந்து ஒட்டுனர். மாதம் பத்தாயிரம் ரூபாய் வருமானத்தில மனைவி, குழந்தைகளுடன் வாழும் சராசரி எளிய இந்தியன்.

ஆனால் அந்த இந்தியனுக்குள் அடுத்தவருக்கு உதவுவது ஒன்றே தன் வாழ்க்கையின் லட்சியம் என்று எரியும் ஜோதிதான் அவரைப்பற்றிய இந்த கட்டுரை.

பெயர் பரமசிவம், வயது 47 ஆகிறது. கோவையில் ஏஜேகே கல்லூரியின் பேருந்து ஒட்டுனராக உள்ளார்.

பத்து வருடங்களுக்கு முன் சில ஆவணங்கள் வாங்குவதற்காக அரசு அலுவலகங்களின் படிக்கட்டுகளில் ஏறி இறங்கவேண்டிய நிலை .அப்போது அவருக்கு ஏற்பட்ட அலைச்சலும், மன உளைச்சலும்தான் அவரை புதிய பாதைக்கு திருப்பியது.

நம்மைப் போலவே அன்றாடம் இதே வேலையாக அலையும் பலருக்கு நமது அனுபவத்தை வைத்து உதவினால் என்ன என்று சிந்தித்தார்.அதன்படி விதவைகள் பென்ஷன், வயதானவர்கள் ஒய்வூதியம் போன்றவைகளை வாங்கிக் கொடுத்தார். வாங்கியவர்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீரை பார்த்தார் அதன்பிறகு இதுவே தனது வாழ்க்கை என்பதாகக் கொண்டுவிட்டார்.

உதவியதை எல்லாம் நான் கணக்கு வைத்துக் கொள்ளவில்லை என்றாலும் கடந்த பத்து ஆண்டுகளில் இதுவரை பதினைந்தாயிரம் பேர்களுக்கு உதவியிருப்பேன்.

கல்லூரியில் வாகனம் ஒட்டும் வேலை காலை 8 மணியில் இருந்து 10 மணிவரையிலும்,மாலை 4 மணியில் இருந்து 6 மணிவரையிலும்தான்.இந்த நேரம் போக இடைப்பட்ட நேரங்களில் மக்களுக்கு உதவுவது என்று முடிவு செய்தார். இந்த முடிவை கல்லூரி நிர்வாகத்திடமும் சொல்லி அனுமதியும், ஆசியும் வாங்கிக் கொண்டார்.

பத்து மணிக்கு தனது வீட்டிற்கு வந்ததும் காத்திருக்கும் மக்களிடம் பேசுகிறார். மனுதாரர்கள் பேச்சிலும், தரும் தகவல்களிலும்,வழங்கப்படும் சான்றுகளிலும் பொய்யோ, வில்லங்கமோ இல்லாத மனுக்களை மட்டும் எடுத்துக் கொள்கிறார். அவர்களது பிரச்னைகளை அறிந்து கொள்கிறார்அ வர்களுக்கான மனுக்களை தயார் செய்கிறார். பிறகு அது தொடர்பான அரசு அலுவலகங்களுக்கு சென்று அதிகாரிகளை பார்த்து அவர்களுக்கான காரியங்களை செய்து கொடுக்கிறார்.

இதற்காக பத்து பைசா கூட வாங்கியதும் கிடையாது, வாழ்நாள் முழுவதும் வாங்கப்போவதும் கிடையாது. மனிதனாகப் பிறந்தால் மற்றவர்களுக்கு உதவ வேண்டும். எனக்கு இப்படி ஏழை எளியவர்களுக்கு உதவும் வாய்ப்பு கிடைத்ததை பாக்கியமாகவே கருதுகிறேன். இதனால் என் மனசு நிறைந்து இருக்கிறது. திருப்தியும் சந்தோஷமும் உண்டாகிறது. இன்னும், இன்னும் இவர்களுக்காக உழைக்கத் தோன்றுகிறது.

என்னோட நேர்மை மற்றும் அணுகுமுறை பற்றி அனைவருக்கும் தெரியும் என்பதாலும், நான் நியாயமான காரியமாகத்தான் வருவேன் என்பதாலும் அதிகாரிகளும் எனக்கு உதவுகிறார்கள்.

தன் பிள்ளைகளுக்கு கடந்த 12 வருடமாக சாதிச்சான்றிதழ் கிடைக்காமல் அலைந்த ஒருவருக்கு ஒரே நாளில் சாதி சான்றிதழ் வாங்கிக் கொடுத்தபோது " என் பிள்ளைகள் வாழ வழி காட்டியதற்கு எப்படி நன்றி சொல்வேன்' என்று கைகூப்பி சொன்ன ஒரு பெரியவரின் வாழ்த்தையும், ஆட்டோ ஓட்டிய பிள்ளை இறந்த துக்கத்தில் இருந்த ஒரு குடும்பத்திற்கு அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தின் மூலமாக ஒரு லட்சம் பணம் பெற்றுக் கொடுத்ததும் " இருண்ட வாழ்வில் ஒளி ஏற்றிவைத்த நீ நாங்க பெறாத புள்ளைப்பா நல்லாயிரு' என்று சொல்லப்பட்ட வார்த்தைகளையும் விட பெரிய வாழ்த்தும், வாழ்க்கையும் வேறு என்ன இருக்கப்போகிறது என்று சொல்லும் பரமசிவம் இப்போது இந்த அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தை மக்களிடம் பிரபலப்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார்.

மக்களுக்கான அரசின் சலுகைகள் நிறையவே இருக்கிறது, அதே போல அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்திடமும் நிறைய திட்டங்கள் இருக்கிறது கொஞ்சம் முயற்சித்தால் நியாயமான எதையும் பெற முடியும். நீங்கள் என்னிடம் வாருங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லும் பரமசிவம் , விதவை பென்ஷன் கேட்டு விண்ணப்பம் எழுத வந்த ஒரு பெண்ணிடம் ஒண்ணும் கவலைப்படாதம்மா ,நிச்சயம் கிடைச்சுடும் என்று ஆறுதலாகவும், அன்பாகவும் நம்பிக்கை வார்த்தைகளை விதைக்கிறார்.

சுயநலமே பிரதானமாக போய்விட்ட இன்றைய உலகில் பொதுநலமே தனது வாழ்க்கையின் பிரதானம் என்று வாழும் பரமசிவம் நீடுழி வாழ வாழ்த்துவோம். இவரை நமக்கு அறிமுகம் செய்துவைத்த ஈரநெஞ்சம் மகேந்தினுக்கு நன்றிகள் பல.

பரமசிவத்துடன் தொடர்பு கொள்ள: 9629105471.


இளங்கோவன் 'அரவணைப்பில்' 5917 குழந்தைகள்
- எல்.முருகராஜ்.

இன்றைய திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகில் உள்ள நாகமநாயக்கன்பட்டி கிராமத்தில் வானம் பார்த்த பூமியில் பெரும்பாலும் வறட்சியை மட்டுமே பயிர் செய்துவந்த விவசாய குடும்பத்தில் கு. குழந்தைசசாமி- சுப்புலட்சுமி தம்பதியருக்கு பிறந்தவர்தான் இளங்கோவன்.

இளங்கோவனுக்கு அன்று முதல் இன்று வரை பிடித்த ஒரே விஷயம் படிப்புதான்.

ஆனால் படிப்பதற்காக அவர் பட்ட பாட்டை தெரிந்து கொள்ளும் யாருக்கும் கண்களில் ரத்தம் கசியும்.

பள்ளிப்படிப்பை தொடர்வதற்கே ஏழு கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் செல்லவேண்டிய நிலை. சொந்தமாக 120 ரூபாய் கொடுத்து சைக்கிள் வாங்கமுடியாத சூழல். இதனால் வாடகை சைக்கிளில் சென்று வந்தார். அந்த சைக்கிள் வாடகையை கொடுப்பற்காக வாரவிடுமுறை நாட்களில் பவர்லூம் பேக்டரியில் தார் சுற்றி சைக்கிள் வாடகையை கொடுத்துக் கல்வி கற்று வந்தார்.

கல்லூரி படிப்பை தொடர தேவையான ரூபாய்க்காக உறவினர்கள் வீட்டு படிகளில் தவம் கிடந்தார். தன் பிள்ளை இப்படி வீடு வீடாக போய் கல்வி உதவித்தொகை கேட்கப்போவதை காணமுடியாத இளங்கோவனின் தந்தை, "நமக்கு வேண்டாம்யா இந்த படிப்பெல்லாம், பேசாம பவர்லூம் பேக்டரிக்கு வேலைக்கு போய் விடு'' என்று பிள்ளையிடம் சொல்லியிருக்கிறார்.

"இல்லப்பா எனக்கு தெரிஞ்சதெல்லாம் படிப்பு ஒண்ணுதாம்பா கொஞ்ச ம் பொறுத்துக்கங்கப்பா' 'என்று தந்தையை சமாதானம் செய்து மீண்டும் கிராமத்து வேலைகளை செய்து கடன் வாங்கிக் கொண்டு போய் பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக்கில் பிடிசி கோர்ஸ்ம், கோவை சி.ஐ.டி கல்லூரியில் பொறியியலும் படித்தார்.

ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டும் தூங்கி, படிப்பு படிப்பு என்று படிப்பில் மூழ்கி பி.இ.,மற்றும் எம்.இ.,படித்தார். ஒவ்வொரு கட்டத்தை தாண்டும் போதும் தந்தையின் விவசாய நிலங்களும், தாயின் தாலிக்கொடியும் கூட அடமானமாக சென்றது அதில் பல விஷயங்கள் மீட்க முடியாமலும் போனது.

இவ்வளவு கஷ்டத்திற்கும் ஒரு விடிவு கிடைத்தது.

இளங்கோவன் படித்த கல்லூயிலேயே விரிவுரையாளராக வேலை கிடைத்தது. 12 ஆண்டுகளுக்கு பிறகு குவைத்தில் வேலையும் கிடைத்தது. இடையில் நிறைய வீழ்ச்சி. வீழ்வது தவறில்லை வீழ்ந்தே கிடப்பதுதான் தவறு என கடுமையாக உழைத்து மேன்மை கொண்டார்.

தனக்காக தாய், தந்தை, மனைவி வகையில் இழந்த சொத்துக்களை மீட்க ஒரு யோகி போல மூன்று வருடம் குவைத்தில் குடும்பம், உறவு, தூக்கம் மறந்து கடுமையாக உழைத்தார். நிறைய பேருக்கு குவைத்தில் ட்யூஷன் எடுத்தார். ஒவ்வொரு நிமிடத்தையும் பயன் உள்ள வகையில் பயன்படுத்தினார். இவரது வைராக்கியம் காரணமாக இழந்ததை எல்லாம் மீட்டார் மேலும் பல மடங்கு சம்பாதித்தார். விடா முயற்சியால் அமெரிக்காவில் பிஎச்டி முடித்தார்.

இப்போது ஒரு தன்னிறைவான வாழ்க்கை

இந்த வாழ்க்கை என்பது எனக்கு சுயமானது, நான் என் குடும்பம் என்றானது, என்னை எவ்வளவோ சிரமத்திற்கு நடுவிலும் ஆளாக்கிய என் தேசத்திற்கு நான் என்ன செய்தேன் என்று யோசித்தார், பிறகு தான் என்ன செய்யமுடியும் என்பதை முடிவு செய்தார்.

"கல்வி ஒருவனை உயர்த்துமே தவிர ஒரு காலத்திலும் தாழ்த்தாது. ஆனால் அந்த கல்வியை பெற தான் கஷ்டப்பட்டது போல தாய் நாட்டில் எத்தனையோ பேர் சிரமப்பட்டுக் கொண்டு இருக்கலாம். அவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தேவையான கல்வி உதவியை செய்வோம் என்பதை லட்சியமாகக் கொண்டார்".

இதற்காக தனது வருமானத்தில் ஒரு பகுதியை ஒதுக்கினார். இவரது நண்பர்களும் இவருடன் சேர்ந்து கொள்ள "அரவணைப்பு' அமைப்பு கோவையில் 28.01.2009 ல் தோன்றியது. இந்த அரவணைப்பு இயக்கமானது கடந்த ஆறு ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் இதுவரை 5917 மாணவ, மாணவியரை அடையாளம் கண்டு தந்தை இல்லாத அவர்களை படிக்க ஆதரவளித்து வருகிறது.

எப்போதோ குவைத் வேலையை விட்டுவிட்டு மனைவி, குழந்தைகளோடு கோவை மிதமான வெயிலில் இதமான வாழ்க்கை இவர் மேற்கொண்டு இருக்கலாம், ஆனால் குறைந்த பட்சம் பத்தாயிரம் பேரையாவது படிக்கவைக்கவேண்டும் என்ற லட்சியம் காரணமாக குவைத்தின் சூடான சூழலில் வாழ்ந்து கொண்டு இங்குள்ள ஏழை எளிய மாணவர்களுக்காக உருகுகிறார்.

ஆகவே இதை படிக்கும் அல்லது பார்க்கும் நண்பர்கள் இளங்கோவனின் கல்விச்சேவையில் விருப்பப்பட்டால் உங்களையும் இணைத்துக் கொள்ளலாம். மேலும் கல்வி கட்டணம் செலுத்த முடியாத நிலையில் உள்ள பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர் இதற்கென உள்ள அரவணைப்பு இணையதளத்தினுள் நுழைந்து அதில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

இந்த விண்ணப்பத்தை பல்வேறு முறைகளில் அரவணைப்பு குழுவினர் ஆய்வு செய்து விண்ணப்பம் நியாயமானது, நேர்மையானது என்று முடிவெடுத்த பின் சம்பந்தபட்ட கல்வி நிறுவனங்களுக்கு "செக்" கொடுத்து உதவுகிறார்கள்.

இதை படிக்கும் இணையதள நண்பர்கள் அரவணைப்பு இணையதளத்தினுள் நுழைந்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தந்தை இல்லாத ஏழை மாணவ, மாணவியருக்கு கொடுப்பது கூட ஒரு வகையில் தொண்டுதான்.

இளங்கோவனை மனதார பாராட்ட நினைப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இந்திய எண்: 9597889679. இந்த கட்டுரை வரும்போது அநேகமாக அவர் குவைத்தில் இருக்கலாம். குவைத் எண்: 00965 99239369. குவைத் எண்ணில் பேசினால் உங்களுக்கு ரோமிங் கட்டணம் உண்டு என்பதை நினைவில் கொள்ளவும். அவரது மெயில் மற்றும் அரவணைப்பு இணையதள முகவரி:

mail id :skilangovan01@gmail.com
www.aravanaipu.org

Thursday 13 February 2014

பானுரேகாவின் உன்னத லட்சியங்கள்...
- எல்.முருகராஜ்














ஈரோடு மாவட்டம் தொட்டிப்பாளையம் கிராமத்தின் விடிவெள்ளி

விவசாயம் செய்யும் பெற்றோர்களுக்கு பிறந்தவர், கடுமையான உழைப்பு மற்றும் படிப்பின் காரணமாக அமெரிக்காவின் உச்சம் தொட்டவர்.

தாய் தந்தையர் மீதான பற்றின் காரணமாகவும்,தாய்நாட்டின் மீதான பாசம் காரணமாகவும் அமெரிக்காவில் இருந்து திரும்பியவர் தற்போது சொந்தமாக தொழில் துவங்கும் ஆலோசனையில் உள்ளார்.

தொழில் துவங்குவது பணம் சம்பாதிப்பதற்குதான், ஆனால் அந்த பணத்தை கொண்டு என்ன செய்யப்போகிறேன் என்பதை அவர் சொன்ன விதத்தில்தான் மிகவும் உயர்ந்து போனார்.

வெளிநாடுகளில் வயதில் பெரியவர்களை கொண்டாடுகிறார்கள் அவர்களை வாழ்க்கையின் வழிகாட்டுதல்களாக மதிக்கிறார்கள், நாட்டின் மூத்த குடிமக்களாக போற்றுகிறார்கள். இது போலவே பெற்றோர்களாலும்,பொருளாதாரத்தாலும் ஆதரிப்பார் இல்லாதவர்களையும் அங்கே இதயத்தாலும்,இருகரத்தாலும் அரவணைக்கிறார்கள்.

இங்கே இந்த விஷயம் நேர்மாறாக இருக்கிறது,இதில் நான் யாரையும் குறை சொல்லப்போவது இல்லை நான் ஒரு ஆசிரமம் அமைக்கப்போகிறேன். அதை மாதிரி ஆஸ்ரமமாக மாற்றிக்காட்டுவேன். அந்த ஆஸ்ரமம் அமைக்கவும்,அதை வழிநடத்திச்செல்லவும் தேவையான பணம் சம்பாதிக்கவே தொழில் துவங்க இருக்கிறேன்.

மேலும் பசுமை நிறைந்த இந்தியாவை பார்க்க வேண்டும்,நமது விவசாயிகள் கார்ப்ரேட் நிறுவனத்தார் போல மதிக்கப்பட வேண்டும்,அதற்கேற்ற சம்பாதிக்க வேண்டும்,எங்கு பார்த்தாலும் செடிகளும்,கொடிகளும்,மரங்களுமாக இயற்கை பூத்து குலுங்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளது.

இப்படி சின்ன வயதிலேயே எதை நோக்கி போகவேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்தை கொண்டுள்ள பானுரேகாவின் வாழ்க்கையில் புகைப்படம் நுழைந்தது அவரது பள்ளிப்பருவத்தில்தான்.ஒவியராக,தீவிர புத்தக வாசிப்பாளராக இருந்தாலும் மனதில் தனி இடம் பிடித்தது புகைப்படக்கலையே.

பள்ளிப்பருவத்தில் புகைப்படங்களை ரசிக்க ஆரம்பித்தவர் கல்லுõரி காலகட்டத்தில் தோழிகளின் கேமிரா உதவியோடு படம் எடுக்க துவங்கினார்,பின்னர் அமெரிக்காவில் இருக்கும் போது சொந்தமாக டிஜிட்டல் எஸ்எல்ஆர் கேமிரா வாங்கிய பிறகு புகைப்படக்கலையில் சிறகு விரித்து பறக்கத்துவங்கினார்.தான் எடுக்கும் படங்கள் படங்கள் தனக்கு மட்டும் சந்தோஷத்தை தராமல் அதைப்பார்ப்பவர்கள் மனதிலும் சந்தோஷத்தை வரவழைக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்,நகைச்சுவை உணர்வு நிரம்பியவர்.நட்பை மதிப்பவர்.ஒரு வார்த்தையில் சொல்வதானால் சந்தோஷ மனுஷி.

இணையதளம்,புத்தகங்கள்,நண்பர்கள் உதவியுடன் கற்றுக்கொண்ட புகைப்படங்களை முகநுõலில் போட்ட பிறகு இவருக்கு உலகமெங்கும் நல்ல வரவேற்பு நிறைய பாராட்டுக்கள்.
ஆனாலும் இந்த புகைப்படக்கலையை இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்,காடுகளுக்குள் சென்று கானுயிர்களை படம் எடுத்து அந்த திரில்லை அனுபவிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் புகைப்பட கருத்தரங்குகளில் கலந்து கொண்டு இப்போதும் கற்றுக்கொண்டு வருகிறார்.

அப்படி கடந்த சில தினங்களுக்கு முன் புகைப்பட பிரியன் மெர்வின் ஆண்டோ கன்னியாகுமரியில் நடத்திய புகைப்பட கருத்தரங்கில் கலந்து கொண்டார்.
அப்போது இவருடன் நடத்திய கலந்துரையாடலின் போதுதான் இவரது புகைப்பட ஆர்வம் வெளிப்பட்டது அதன் தொடர்ச்சியாக அவரது படங்களும்,அவரைப்பற்றிய விவரங்களும் இங்கே இடம் பெற்றுள்ளது.

இவரது படங்களை சிவப்பு பட்டையில் உள்ள போட்டோ கேலரி பகுதியை கிளிக் செய்து பார்க்கலாம்.

பானுரேகாவின் மேலும் பல படங்கள் பற்றி தெரிந்து கொள்ள அவரது பெயரில் உள்ள முகநூலின் தனிப்பகுதிக்கு செல்லவும்.

https://www.facebook.com/banu.dsm

https://www.facebook.com/pages/AB-Photography/794174007265771?ref=hl

mail id : tr.banureka@gmail.com

Monday 10 February 2014

சதீஷ்கரில் சாதனை படைத்திட்ட தமிழ் பெண் கலெக்டர்

- எல்.முருகராஜ்







நக்சசல்பாரிகள்

உள் நாட்டின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பவர்கள் என்று பிரதமராலேயே சொல்லப்படுபவர்கள்.

இவர்களை சமாளிப்பதுதான் மாநிலத்தின் மிகப்பெரிய சவால் என்று மாநில முதல்வரால் விவரிக்கப்படுபவர்கள்.

இவர்களுக்கு ஜனநாயக வழியிலான தேர்தல் முறையில் விருப்பமில்லை. சட்டத்தின் ஆட்சி என்பது பிடித்தமானதல்ல. தேர்தலை புறக்கணிப்போம் என்ற பிரச்சாரத்தை முன் நிறுத்துபவர்கள். தேர்தலுக்கு ஆதரவானவர்களை அடிப்பது உதைப்பது கடத்திச் செல்வது கொடூரமாய் கொல்வது என்பதெல்லாம் இவர்களது வழிமுறைகள்.

வாக்குச்சாவடியை கைப்பற்றுவது, ஓட்டளிக்க வருபவர்களை ஆயுதங்களால் தாக்குவது, ஒட்டுப் பெட்டியை உடைத்து சுக்கு நூறாக்குவது என்பது இவர்களுக்கு பழகிப்போன ஒன்று.

அதிலும் சதீஷ்கர் மாநிலம் கான்கேர் மாவட்டம் என்பது ஐம்பது சதவீதம் அடர்த்தியான காடுகள் நிறைந்த மாவட்டம். இதன் காரணமாக இங்குதான் நக்சல்கள் ஆதிக்கம் அதிகம். இந்த மாவட்டத்தில் தேர்தல் நடத்துவது என்பது ஒரு சவலான விஷயம். இந்த சவாலான விஷயத்தை ஒருவர் கையாண்டு வெற்றிகரமாக தேர்தலை நடத்தி முடித்துள்ளார்.

அவர்தான் கான்கேர் மாவட்டத்தின் கலெக்டர் அலர்மேல் மங்கை, கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்து முதல் முயற்சியிலேயே ஐஏஎஸ் ஆனவர்.

கடந்த 2004ம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணிக்கு தேர்வு செய்யப்பட்ட அலர்மேல் மங்கை வடமாநிலங்களில் பல்வேறு பணிகளில் இருந்துவிட்டு தற்போது கான்கேர் மாவட்டத்தின் கலெக்டராகியுள்ளார்.

கலெக்டரானதும் இவர் முன் வந்து நின்ற சவாலான விஷயம் நக்சல்களின் ஆதிக்கத்தை தாண்டி இங்கு வெற்றிகரமாக தேர்தலை நடத்தவேண்டும் என்பதுதான். அதற்காக பல இரவுகளை பகலாக்கி திட்டமிட்டு வேலை செய்தார். இதற்காக மக்களை சந்தித்து ஓட்டளிப்பதன் அவசியத்தை அவர்கள் மொழியிலேயே சொல்லி ஊக்கப்படுத்தினார்.

 இவரது துணிச்சசலும், திட்டமிடலும், சுறுசுறுப்பும் நக்சல்களை ஓரங்கட்டியது.

இதன் விளைவு யாருமே எதிர்பாராத விதமாக நடந்து முடிந்த தேர்தலில் நக்சல்களின் ஆதிக்கத்தை தாண்டி இங்கு 78 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளது. இது கடந்த முறையைவிட 13 சதவீதம் அதிகமாகும். ஜனநாயக பாதைக்கு மக்கள் மேற்கொண்ட வெற்றிகரமான பயணமாகும்.

இந்த சாதனையை பாராட்டி கடந்த 25ம்தேதி வாக்களர் தினத்தன்று டில்லி விஞ்ஞான் பவனில் நடந்த விழாவில் அலர்மேல் மங்கைக்கு விருதும்,ஒரு லட்சம் ரூபாய் பணமுடிப்பும் வழங்கி, ஜனாதிபதி கவுரப்படுத்தி உள்ளார். 

இந்த பெருமை, பரிசு அனைத்தும் எனது அணிக்கே சேரும் என்று தன் அணியை பாராட்டி அவர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இரண்டு நாள் தமிழ் மாநிலம் தாண்டி போனாலே "ஹோம் சிக் 'என்று சொல்லக்கூடிய மனிதர்கள் நிறைந்திட்ட காலத்தில் கடந்த பத்து வருடங்களாக யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதற்கேற்ப வடமாநிலங்களில் பணியாற்றும் கலெக்டர் அலர்மேல் மங்கை பெரிதும் பாராட்டப்பட வேண்டியவர்தான்.

எனது (கான்கேர்) மாவட்ட மக்கள் சுகாதாரம் மற்றும் கல்விப்பணியில் பின்தங்கி உள்ளனர். இவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றது, அத்துடன் இவர்களுக்காக உழைப்பதில் மனம் நிறைவாகவும் இருக்கிறது. இங்குள்ள மக்கள் மிகவும் பாசமானவர்கள் அன்பிற்கு கட்டுப்பட்டவர்கள் எனக்கு இங்கு வேலை பார்ப்பது ஒரு உற்சாகமான அனுபவமே என்று கூறினார்.

தனது கலெக்டர் பணியை பெரிதும் நேசித்து செயல்படும் அலர்மேல் மங்கையை போனில் பாராட்டிய போது மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டு நன்றி கூறினார்.

தனது பணிக்கு பெரிதும் உந்துதலாக இருந்து உற்சாகம் தருபவர் தனது கணவர் அன்பழகனும், சகோதரர் ஆனந்தகுமாரும் என்றார். கணவர் அன்பழகன் இதே மாநிலத்தில் ஜாங்கீர் மாவட்ட கலெக்டராக பணியாற்றுகிறார். குழந்தைகளுக்கு அகிலன் நிலவரசு, அமுதினி என்ற அழகான தமிழ் பெயர்களை சூட்டியுள்ளனர். கலெக்டர் அன்பழகன் சிறந்த தமிழ் ஆர்வலரும் கூட.

கலெக்டர் அலர்மேல் மங்கைக்கு தமிழ் ஆங்கிலம் தாண்டி நீண்ட காலம் வடமாநிலங்களில் இருப்பதால் இந்தி மொழியும், இந்தியை கொஞ்சம் திரித்து பேசக்கூடிய சசதீஷ்கரி என்ற மொழியும் நன்கு தெரியும். நக்சல்களின் ஆதிக்கத்தில் உள்ள பழங்குடி மக்களிடம் பேசுவதற்காக அவர்களின் மொழியான கொவுண்டி மொழியும் கொஞ்சம் தெரியும்.

விருது பரிசு பாராட்டு இவைகளை ஒரு புன்னகையோடு ஏற்றுக்கொண்டு அடுத்த கட்ட மக்கள் பணிக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ள கலெக்டர் அலர்மேல் மங்கையின் ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானதுதான் இருந்தாலும் இப்படி ஒரு சாதனை படைத்திட்டவரை குறைந்தபட்ச நேரம் எடுத்துக் கொண்டு பாராட்டினால் அவர் மேலும் சாதனை படைப்பார் என்பதால் முடிந்தவர்கள் குறைந்த பட்ச அவகாசம் எடுத்துக்கொண்டு பாராட்டலாம் அவரது எண்: 09425532380.

இவரை நமது தினமலர்.காம் இணையதளத்திற்கு அறிமுகம் செய்துவைத்த சென்னை ரயில்வே உயரதிகாரி இளங்கோவனுக்கு சிறப்பான நன்றிகள்.


Saturday 8 February 2014

மறக்கமுடியாத கன்னியாகுமரி..













- எல்.முருகராஜ்

பொதுவாக எனது புகைப்படங்கள் பேசவேண்டும், புகைப்படங்கள் பற்றி மக்கள் பேசவேண்டும் என்று நினைப்பவன் நான். இதற்காக மேடையேறும் வழக்கம் கிடையாது.

இந்த நிலையில் எனது புகைப்படங்கள் குறித்து பேசுவதற்கான ஒரு வாய்ப்பு கன்னியாகுமரியில் புகைப்படக்கலைஞர் மெர்வின் ஆன்டோ தலைமையில் நடைபெற்ற புகைப்பட கருத்தரங்கில் கிடைத்தது.

கருத்தரங்கிற்கு போவதற்கு முன் மெர்வின் ஆன்டோ பற்றி சில வார்த்தைகள்.

தான், தமது, தமக்கு மட்டுமானது என்று சுயநலத்தோடு சுருங்கிவிட்ட உலகத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டவர். தான் கற்ற புகைப்படக்கலையை கொஞ்சமும் வர்த்தக நோக்கமில்லாமல் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டவர். அன்பு மயமானவர். நட்பு பராட்டுபவர். விருந்தோம்பலின் அடையாளம் அவர்.

முகநூலின் பிரபலம். புகைப்பட பிரியன் என்ற பெயரில் இவர் புகைப்படக்கலைக்காக ஆற்றும் பணி மகத்தானது. இந்த தளத்திற்கான உறுப்பினர்கள் மட்டுமே இன்றைய தேதிக்கு 7813 பேர் இருக்கின்றனர். உலகமெங்கும் உள்ள புகைப்பட பிரியர்களின் பிரியமான தளமாகும். 

தமிழ் மொழியிலே புகைப்படம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் இந்த தளம் அலசும், போட்டிகள் நடத்தி பரிசு வழங்கி உற்சாகப்படுத்தும், புதிய விஷயங்களை எளிமையாக அறிமுகப்படுத்தும், நீங்கள் எடுக்கும் படங்களை மதிப்பீடு செய்து மேலும் முன்னேற வழிகாட்டும், புகைப்படம் தொடர்பான போட்டிகளில் கலந்து கொள்ள வழிகாட்டும், இப்படி புகைப்படம் தொடர்பான பல விஷயங்களை பாசாங்குத்தனம் இல்லாமல் நேர்மையுடனும், இனிமையுடனும், தோழமையுடனும் பகிர்ந்து கொள்ளும் தரமான இந்த தளத்தினை புகைப்பட கலைஞர்களும், புகைப்பட ரசிகர்களும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

மெர்வினுக்கு இருபது வருடத்திற்கு முன் புகைப்படம் எடுப்பதில் ஏற்பட்ட காதல் இன்று வரை மெருகு குறையாமல் இருந்து வருகிறது சொல்லப்போனால் வளர்ந்து வருகிறது. முதலில் தனது பதிவுகளை போடுவதற்காக முகநூல் பக்கம் போனவர் தனது படங்களுக்கு கிடைத்த அங்கீகாரம் மற்றும் புகைப்படம் தொடர்பான பலரின் தேடல் காரணமாக புகைப்பட பிரியன் என்ற தளத்தில் களமிறங்கி கலக்கிக் கொண்டு இருக்கிறார்.

என்னதான் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் எலக்ட்ரானிக் கருவிகளுடன் பேசிக் கொண்டிருந்தாலும், வாசித்துக் கொண்டிருந்தாலும் நேரில் பேசி கலந்துரையாடுவது போல இருக்காது என்று கருதியவர் இதற்காக கடந்த வருடம் ஒரு கருத்துப் பட்டறையை ஏற்பாடு செய்திருந்தார்.

அந்த கருத்துப்பட்டறைக்கு நல்ல வரவேற்பு இருக்கவே இரண்டாவது வருட புகைப்பட கருத்தரங்கினை கடந்த 25,26 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் நடத்தினார்.

முதல் நாள் நடந்த போட்டோ வாக்கில் கன்னியாகுமரியைச் சுற்றியுள்ள திற்பரப்பு அருவி, தொட்டிப்பாலம், பத்மநாபகோவில், முட்டம் போன்ற இடங்களுக்கு புகைப்படக்கலைஞர்கள் அழைத்துச் செல்லப்பட்டு படங்கள் தொடர்பான பகிர்தல்கள் நடைபெற்றன.

போட்டோ வாக்கில் கலந்து கொண்ட புகைப்படக்கலைஞர்களின் புகைப்படங்களை பார்த்த போது ஆச்சசர்யமாகவும்,மிரட்டலாகவும் இருந்தது.பலரது புகைப்பட மொழி புதுமையாக இருந்தது, மனதிற்குள் சந்தோஷத்தை அருவி போல கொட்டியது, திரும்ப, திரும்ப அந்த படங்களை பார்க்கவேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தியது, மொத்தத்தில் வரவேற்கும் படியாகவும், பாராட்டும்படியாகவும் இருந்தது.

இரண்டாவது நாள் கன்னியாகுமரியில் புகைப்படம் தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது. தினமலர்.காம் நிர்வாக இயக்குனர் எல்.ஆதிமூலம் அனுமதியோடும்,ஆசியோடும் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டேன்.

இந்த கருத்தரங்கில் பெஸ்ட் போட்டோகிராபி எடிட்டர் பழனிக்குமார், சென்னை சென்டியன்ட் பள்ளி முதல்வர் லக்ஷ்மணன், மதுரை ஸ்கூல் ஆப் போட்டோகிராபி நிறுவனர் தனபால், வசந்தம் செந்தில் ஆகிய புகைப்பட நிபுணர்கள் கலந்து கொண்டு பயிற்சி வழங்கினர். இவர்களுடன் நானும் கலந்து கொண்டு " பத்திரிகையில் புகைப்படத்தின் பங்கு' என்ற தலைப்பில் பேசினேன்.

கிட்டத்தட்ட முப்பது வருட காலம் போட்டோகிராபராக இருந்திருக்கிறேன் என்பதைவிட முப்பது வருடங்களும் புகைப்படங்களுடன் வாழ்ந்திருக்கிறேன் என்பதே சரியான வார்த்தையாக இருக்கும். படங்களை எடுக்கும் போது எடுக்கும் போது ஏற்பட்ட பாதிப்பு இன்னமும் குறையாமல் இருப்பதன் காரணமாக எனது உரை உணர்வுபூர்வமாகவே இருந்தது என்பதை என்னால் உணரமுடிந்தது.

தமிழகம் முழுவதிலும் இருந்து வந்து இந்த புகைப்பட கருத்தரங்கில் கலந்து கொண்டு எனது உரையை கேட்ட அனைத்து புகைப்படக்கலைஞர்களுக்கும் மிகவும் நன்றி.இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு புகைப்பட கலைஞர்கள் கேட்ட சந்தேகங்களும், கேள்விகளும் என்னை சந்தோஷப்படுத்தியது. இதற்காகவே நிறைய கருத்தரங்குகளில் கலந்து கொள்ள வேண்டும் என்ற வேட்கை எழுந்துள்ளது.

என்னை சந்தோஷப்படுத்திய, பெருமைப்படுத்திய உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். 

எனது நன்றிகளை உங்களது புகைப்படங்களை பிரசுரிப்பதன் மூலமாக வெளிப்படுத்துவேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இது புகைப்பட பிரியன் ரசிகர்களுக்கான சிறப்பு அறிவிப்பு.

நீங்கள் எடுத்த படங்களில் சிறந்த பத்து படங்களையும், உங்களது படங்களையும் மற்றும் உங்களைப் பற்றிய குறிப்புகளையும் murugaraj@dinamalar.inன் என்ற மெயிலுக்கு அனுப்பி வையுங்கள்.

இனி புகைப்படபிரியன் சார்பில் நடைபெறும் போட்டோ வாக் மற்றும் கருத்தரங்கினை தவறவிடாதீர்கள். இது பற்றி மேலும் தகவல் அறிய தொடர்பு கொள்ள வேண்டியவர் மெர்வின் ஆண்டோ: 9443174284, 9677755846.
Click Here