Monday 30 September 2013

குற்றாலம் சித்ரசபையில் பேசும் சித்திரங்கள்...

- எல்.முருகராஜ்






குற்றாலத்தின் மெயினருவி போவதற்கான வளைவைத் தாண்டி ஐந்தருவி போகும் வழியில், தேர் நிலைக்கு பக்கத்தில் வலது பக்கத்தில் எந்தவித விளம்பர பலகையும் இல்லாமல் காணப்படுவதுதான் சித்ரசபை.

இந்த இடம் வாகனங்கள் நிறுத்துமிடமாக பயன்படுத்தப்படுவதால் வாகனங்கள் வந்து நின்றவுடன் "அவசரத்திற்கு' ஒதுங்கி இந்த சித்திரசபை கோவிலின் மதில் சுவரை கொஞ்சமும் மனசசாட்சி இல்லாமல் ஈரம் செய்பவர்கள், கொஞ்சம் ஈரமனதுடன் உள்ளே போய் என்னதான் இருக்கிறது என்று எட்டிப்பார்க்கலாம்.

இந்தியாவில் அமைந்துள்ள சிவாலயங்கள் ஐந்து திருச்சபைகளின் பெயரால் அழைக்கபடுகிறது.
சிதம்பரம் நடராசர் ஆலயம் "கனகசபை" என்றும்
திருவாலங்காடு சிவாலயம் "இரத்தினசபை" என்றும்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம் "வெள்ளிசபை" என்றும்
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் "தாமிரசபை" என்றும்
குற்றாலம் குற்றாலநாதர் கோவில் "சித்திரசபை" என்றும் அழைக்கப்படுகிறது.

பொதுவாக கோவில்களில் விக்கிரஹ வழிபாடுதான் பிரதானமாக இருக்கும். ஆனால் சித்திர வடிவில் இறைவனை வழிபடுவது உலகிலேயே இங்கு மட்டும்தான். இங்கு இறைவன் ஓவியமாக காட்சியளிக்கிறார். பலவகை தாண்டவங்களில் ஒன்றாகிய திரிபுரதாண்டவம் இந்த சபையில் நடைபெற்றதாக திருப்பத்தூர் புராணம் கூறுகிறது.

சித்ரசபையில் நடராஜபெருமான் தேவியாருடன் எழுந்தருளியிருக்கிறார். மார்கழி மாதம் திருவாதிரை விழா இங்கு விமர்சையாக நடைபெறும். சபையில் இறைவன் திருநடனம் புரியும் காட்சியைக் கண்டு பிரம்மதேவன் ஆதி சிவனின் சொரூபங்களைச் சுவரில் எழுதிவைத்தார். இதனால் வியாசர் முதலியோர் இதனைச் சித்திரசபை என்று அழைத்ததாக புராணங்கள் கூறுகிறது.

சித்திர சபை, குற்றால நாதர் கோயிலுக்குப் அருகில் தனிக்கோயிலாக உள்ளது.

சபையின் உட்சுவற்றில் துர்க்கையின் பல்வேறு வடிவங்கள், வீரபத்திரர், கஜேந்திரமோட்சம், திருவிளையாடற்புராண வரலாறுகள், அறுபத்துமூவர் உருவங்கள், பத்மநாபரின் கிடந்தகோலம், இரணிய சம்ஹாரம், பைரவரின் பல்வேறு உருவங்கள், சனிபகவான் ஆகியவை வண்ணத்தில் எழுதப்பட்டுள்ளன. பல நூறு வருடங்களுக்கு முன் அழியாத மூலிகை வண்ணத்தில் வரையப்பட்ட இந்த சித்ரசபையின் கும்பாபிஷேகம் சமீபத்தில் நடந்திருப்பதால் இப்போது இன்னும் பொலிவு பெற்று விளங்குகிறது. இனிமேலாவது அந்தப்பக்கம் போனால் எட்டிப்பாருங்கள்.
Click Here

No comments:

Post a Comment