Monday 10 February 2014

சதீஷ்கரில் சாதனை படைத்திட்ட தமிழ் பெண் கலெக்டர்

- எல்.முருகராஜ்







நக்சசல்பாரிகள்

உள் நாட்டின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பவர்கள் என்று பிரதமராலேயே சொல்லப்படுபவர்கள்.

இவர்களை சமாளிப்பதுதான் மாநிலத்தின் மிகப்பெரிய சவால் என்று மாநில முதல்வரால் விவரிக்கப்படுபவர்கள்.

இவர்களுக்கு ஜனநாயக வழியிலான தேர்தல் முறையில் விருப்பமில்லை. சட்டத்தின் ஆட்சி என்பது பிடித்தமானதல்ல. தேர்தலை புறக்கணிப்போம் என்ற பிரச்சாரத்தை முன் நிறுத்துபவர்கள். தேர்தலுக்கு ஆதரவானவர்களை அடிப்பது உதைப்பது கடத்திச் செல்வது கொடூரமாய் கொல்வது என்பதெல்லாம் இவர்களது வழிமுறைகள்.

வாக்குச்சாவடியை கைப்பற்றுவது, ஓட்டளிக்க வருபவர்களை ஆயுதங்களால் தாக்குவது, ஒட்டுப் பெட்டியை உடைத்து சுக்கு நூறாக்குவது என்பது இவர்களுக்கு பழகிப்போன ஒன்று.

அதிலும் சதீஷ்கர் மாநிலம் கான்கேர் மாவட்டம் என்பது ஐம்பது சதவீதம் அடர்த்தியான காடுகள் நிறைந்த மாவட்டம். இதன் காரணமாக இங்குதான் நக்சல்கள் ஆதிக்கம் அதிகம். இந்த மாவட்டத்தில் தேர்தல் நடத்துவது என்பது ஒரு சவலான விஷயம். இந்த சவாலான விஷயத்தை ஒருவர் கையாண்டு வெற்றிகரமாக தேர்தலை நடத்தி முடித்துள்ளார்.

அவர்தான் கான்கேர் மாவட்டத்தின் கலெக்டர் அலர்மேல் மங்கை, கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்து முதல் முயற்சியிலேயே ஐஏஎஸ் ஆனவர்.

கடந்த 2004ம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணிக்கு தேர்வு செய்யப்பட்ட அலர்மேல் மங்கை வடமாநிலங்களில் பல்வேறு பணிகளில் இருந்துவிட்டு தற்போது கான்கேர் மாவட்டத்தின் கலெக்டராகியுள்ளார்.

கலெக்டரானதும் இவர் முன் வந்து நின்ற சவாலான விஷயம் நக்சல்களின் ஆதிக்கத்தை தாண்டி இங்கு வெற்றிகரமாக தேர்தலை நடத்தவேண்டும் என்பதுதான். அதற்காக பல இரவுகளை பகலாக்கி திட்டமிட்டு வேலை செய்தார். இதற்காக மக்களை சந்தித்து ஓட்டளிப்பதன் அவசியத்தை அவர்கள் மொழியிலேயே சொல்லி ஊக்கப்படுத்தினார்.

 இவரது துணிச்சசலும், திட்டமிடலும், சுறுசுறுப்பும் நக்சல்களை ஓரங்கட்டியது.

இதன் விளைவு யாருமே எதிர்பாராத விதமாக நடந்து முடிந்த தேர்தலில் நக்சல்களின் ஆதிக்கத்தை தாண்டி இங்கு 78 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளது. இது கடந்த முறையைவிட 13 சதவீதம் அதிகமாகும். ஜனநாயக பாதைக்கு மக்கள் மேற்கொண்ட வெற்றிகரமான பயணமாகும்.

இந்த சாதனையை பாராட்டி கடந்த 25ம்தேதி வாக்களர் தினத்தன்று டில்லி விஞ்ஞான் பவனில் நடந்த விழாவில் அலர்மேல் மங்கைக்கு விருதும்,ஒரு லட்சம் ரூபாய் பணமுடிப்பும் வழங்கி, ஜனாதிபதி கவுரப்படுத்தி உள்ளார். 

இந்த பெருமை, பரிசு அனைத்தும் எனது அணிக்கே சேரும் என்று தன் அணியை பாராட்டி அவர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இரண்டு நாள் தமிழ் மாநிலம் தாண்டி போனாலே "ஹோம் சிக் 'என்று சொல்லக்கூடிய மனிதர்கள் நிறைந்திட்ட காலத்தில் கடந்த பத்து வருடங்களாக யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதற்கேற்ப வடமாநிலங்களில் பணியாற்றும் கலெக்டர் அலர்மேல் மங்கை பெரிதும் பாராட்டப்பட வேண்டியவர்தான்.

எனது (கான்கேர்) மாவட்ட மக்கள் சுகாதாரம் மற்றும் கல்விப்பணியில் பின்தங்கி உள்ளனர். இவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றது, அத்துடன் இவர்களுக்காக உழைப்பதில் மனம் நிறைவாகவும் இருக்கிறது. இங்குள்ள மக்கள் மிகவும் பாசமானவர்கள் அன்பிற்கு கட்டுப்பட்டவர்கள் எனக்கு இங்கு வேலை பார்ப்பது ஒரு உற்சாகமான அனுபவமே என்று கூறினார்.

தனது கலெக்டர் பணியை பெரிதும் நேசித்து செயல்படும் அலர்மேல் மங்கையை போனில் பாராட்டிய போது மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டு நன்றி கூறினார்.

தனது பணிக்கு பெரிதும் உந்துதலாக இருந்து உற்சாகம் தருபவர் தனது கணவர் அன்பழகனும், சகோதரர் ஆனந்தகுமாரும் என்றார். கணவர் அன்பழகன் இதே மாநிலத்தில் ஜாங்கீர் மாவட்ட கலெக்டராக பணியாற்றுகிறார். குழந்தைகளுக்கு அகிலன் நிலவரசு, அமுதினி என்ற அழகான தமிழ் பெயர்களை சூட்டியுள்ளனர். கலெக்டர் அன்பழகன் சிறந்த தமிழ் ஆர்வலரும் கூட.

கலெக்டர் அலர்மேல் மங்கைக்கு தமிழ் ஆங்கிலம் தாண்டி நீண்ட காலம் வடமாநிலங்களில் இருப்பதால் இந்தி மொழியும், இந்தியை கொஞ்சம் திரித்து பேசக்கூடிய சசதீஷ்கரி என்ற மொழியும் நன்கு தெரியும். நக்சல்களின் ஆதிக்கத்தில் உள்ள பழங்குடி மக்களிடம் பேசுவதற்காக அவர்களின் மொழியான கொவுண்டி மொழியும் கொஞ்சம் தெரியும்.

விருது பரிசு பாராட்டு இவைகளை ஒரு புன்னகையோடு ஏற்றுக்கொண்டு அடுத்த கட்ட மக்கள் பணிக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ள கலெக்டர் அலர்மேல் மங்கையின் ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானதுதான் இருந்தாலும் இப்படி ஒரு சாதனை படைத்திட்டவரை குறைந்தபட்ச நேரம் எடுத்துக் கொண்டு பாராட்டினால் அவர் மேலும் சாதனை படைப்பார் என்பதால் முடிந்தவர்கள் குறைந்த பட்ச அவகாசம் எடுத்துக்கொண்டு பாராட்டலாம் அவரது எண்: 09425532380.

இவரை நமது தினமலர்.காம் இணையதளத்திற்கு அறிமுகம் செய்துவைத்த சென்னை ரயில்வே உயரதிகாரி இளங்கோவனுக்கு சிறப்பான நன்றிகள்.


No comments:

Post a Comment