Thursday 23 January 2014

வானம் எனக்கு ஒரு போதிமரம்...பாடல்களாக மட்டுமல்ல படங்களாகவும்&இளையராஜாவின் புகைப்பட கண்காட்சி

- எல்.முருகராஜ்


















இசைஞானி இளையராஜா.

பல ஆயிரம் சாகவாரம் பெற்ற பாடல்களை தந்தவர், தந்து வருபவர்.

பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கும் காற்றையும், கேட்கும் காதுகளையும் சங்கீதத்தால் அல்ல சந்தோஷத்தால் நிரப்புவர்.

விதையாய் இருந்த எத்தனையோ கவிஞர்களை விருட்சமாக்கியவர்.

குடத்தினுள் இருந்த பாடகர்கள் பலரை குன்றின் மேல் வைத்தவர்.

தனது மெட்டுக்களால் நாற்று நடும் பெண்களையும் "ஆயிரம் தாமரை மொட்டுக்களே' என் முணுமுணுக்கச் செசய்தவர்.

"வானம் எனக்கு ஒரு போதிமரம்' என்று இசையால் சொன்னவர், இப்போது அதே வார்த்தைகளுக்கு தனது புகைப்படங்களால் உயிர்கொடுத்து இருக்கிறார்.

ஆம்....இளையராஜாவின் இன்னனொரு இனிய முகம் புகைப்படக்கலைஞராகும்.

முதன் முறையாக சென்னை போயஸ் தோட்டத்தை அடுத்துள்ள கஸ்தூரி ரங்கன் சாலை ஆர்ட் ஹவுசில் இளையராஜாவின் 101 புகைப்படங்கள் கொண்டு "நான் பார்த்தபடி' என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சி நடந்துவருகிறது.

இளையராஜா தனது புகைப்பட கண்காட்சியின் துவக்கவிழாவில் உற்சாகமாக கலந்து கொண்டதுடன், ஊடக நண்பர்களிடம் தான் எடுத்த புகைப்படங்கள் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

" எல்லோருக்கும் எனது பாடல்கள் ரிலாக்ஸ் தரும் என்றால் எனக்கு ரிலாக்ஸ் தருவது புகைப்படங்கள் எடுப்பதே.
" கடந்த 1978ம் ஆண்டு முதல் படமெடுத்து வருகிறேன் ஆனால் போட்டோகிராபி எப்போது டிஜிட்டலுக்கு மாறியதோ அப்போது முதல் படமெடுப்பதை விட்டுவிட்டேன், காரணம் பிலிமில் படமெடுத்த போது இருந்த ஆழம், நிறம் போன்றவை டிஜிட்டலில் இல்லை என்பது எனது கருத்து. ஆகவே பிலிமில் எடுத்து பிரின்ட் போட்ட படங்கள் தரும் உணர்வை டிஜிட்டல் தரவில்லை என்பதே உண்மை.

" ஆனால் இப்போது சினிமாவே டிஜிட்டலில்தான் எடுக்கப்படுகிறது, என்ன செய்வது கைநழுவிப்போகும் எத்தனையோ நல்ல விஷயங்களில் இதுவும் ஒன்று என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

" இதுவரை 5000 படங்கள் எடுத்து இருப்பேன் அதில் இருந்து 101 படங்களை மட்டும் இங்கே கண்காட்சியாக வைத்துள்ளேன். இதில் வைக்கப்பட்டுள்ள படங்கள் எல்லாம் சிறந்த படங்களா என்றால் இல்லை என்றே சொல்வேன் அப்படியானால் எது சிறந்த படங்கள் என்றால் நான் எடுக்க தவறிய படங்களே சிறந்த படங்கள்.

" என் சூழல் அப்படி ஒரு பிரபலமாக இருப்பதால் காட்சியை ரசித்து படமெடுக்க முடியாது காரைவிட்டு இறங்கினாலே கூட்டம் கூடிவிடும் பிறகு எங்கே படமெடுப்பது ஆகவே காருக்குள் இருந்தபடி எனக்கு பிடித்த காட்சிகளை மட்டும் படமாக்கியுள்ளேன்.

" இவை பெரும்பாலும் வானம், மரம், கடல் போன்ற இயற்கை காட்சிகளே

" நான் எடுத்த படங்களை கலர் கரெக்ஷன் செய்யாமல், படத்தின் ஆழ அகலத்தை குறைக்காமல் (கிராப் செய்யாமல்) அப்படியே பிரின்ட் செய்யவேண்டும் என்பது என்னுடைய விருப்பம் அதன்படியே இங்குள்ள படங்கள் பிரின்ட் செய்யப்பட்டு உள்ளன.

" கர்நாடகா மாநிலத்தில் பயணம் செய்த போது தெருவில் பிச்சை கேட்ட குழந்தை ஒன்று மனதை பாதித்தது, அந்த குழந்தையை இரண்டு படமெடுத்தேன். காரை கொஞ்சம் தள்ளி நிறுத்தச் சொல்லி விட்டு அந்த குழந்தைக்கு பணம் கொடுக்கலாம் என்று திரும்பி பார்த்தால் அந்த குழந்தையை அங்கு காணோம். நானும் எனது உதவியாளர்களும் அந்த பகுதியில் நீண்ட நேரம் தேடியும் அந்த குழந்தையை கண்டுபிடிக்கமுடியவில்லை. முதலில் அந்த குழந்தைக்கு பண உதவி செய்திருக்கலாமோ என்று என் மனதில் இப்போதும் அந்த வலி உண்டு."

இப்படி தன் மனதில் பட்டதை இளையராஜா பேசியது போலவே படங்களும் அவர் மனதில் பட்டபடியே பதிவாகியுள்ளது. இந்த படங்கள் சிறப்பானதா?, பார்க்கும்படி இருக்குமா?, நம் மனதை பாதிக்கும்படி இருக்குமா? என்ற கேள்விகளுக்கு எல்லாம் விடை அவரவர் பார்க்கும் பார்வையில்தான் இருக்கிறது.

இளையராஜா என்ற மிகப்பெரிய இசை ஆளுமை புகைப்படக்கலையின் மீது காதல் கொண்டதும், அதற்காக நேரம் செலவிட்டு படங்கள் எடுத்ததும், அதனை தொகுத்ததும், இது குறித்து பெருமைப்பட பேசுவதும் உண்மையிலேயே புகைப்படக்கலைக்கும் புகைப்படக் கலைஞர்களுக்கும் பெருமை சேர்க்கும் செயலே.

வருகின்ற 26ம்தேதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் இளையராஜாவின் புகைப்பட கண்காட்சி தொடர்பாக மேலும் விவரம் தேவை எனில் தொடர்பு கொள்ளவும்: 9092861461.


No comments:

Post a Comment